இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் ஏற்பாட்டில் வவுனியா – நுவரேலியா மாவட்ட மாணவர்களுக்கு உதவி


அவுஸ்திரேலியாவில் கடந்த 35 வருடங்களுக்கும் மேலாக இயங்கும் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் உதவிகளைப்பெறும் வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை  ஆகிய மாவட்டங்களிலும் மற்றும் மலையகத்தில் நுவரேலியா மாவட்டத்தில் வதியும்  வறுமைக்கோட்டின் கீழ்  வதியும்  தமிழ் மாணவர்களுக்கான நிதிக்கொடுப்பனவுகள் அண்மையில் வவுனியாவிலும் நுவரேலியாவிலும்  வழங்கப்பட்டன.

வவுனியாவில் சூசைப்பிள்ளையார் குளம் பகுதியில் இயங்கும்


இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் தொடர்பாளர் அமைப்பான நலிவுற்ற அபிவிருத்திக்கான தன்னார்வ அமைப்பின் ( Voluntary Organization for Vulnerable Community Development (VOVCOD)  அலுவலகத்தில்  அண்மையில் இந்நிகழ்வு நடைபெற்றது.

நிறுவன முகாமைத்துவ பணிப்பாளர் திரு. தர்மலிங்கம் கணேஷ் தலைமையில் நடந்த   இந்நிகழ்வில் நிறுவன இணைப்பாளர் திருமதி, கிருஷாந்தி, நிதி இணைப்பாளர் திருமதி சுகன்யா, முகாமைக்குழு உறுப்பினர்கள் திருமதி தனிஷா, திரு. திருஞானம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில்  2023 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டுக்கான நிதிக்கொடுப்பனவு  மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. குறிப்பிட்ட மாணவர்களும், அவர்களின் தாய்மாரும் பாதுகாவலர்களும்  கலந்துகொண்டனர்.

மாணவர்களுக்கான தகவல் அமர்வும் இடம்பெற்றது.

அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டத்தில் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் உதவியைப் பெறும் மாணவர்களின் அரையாண்டு கல்வி உதவிப்பணமும் அவர்களின் வங்கி கணக்கில் வைப்பு செய்யப்பட்டது.

 மலையகத்தில்

கல்வி நிதியத்தின் மலையக தொடர்பாளர் அமைப்பான மலையக சமூக அபிவிருத்தி நிறுவனத்தின்  (Plantation Community Development Organization) கண்காணிப்பில் உதவி வழங்கப்படும் மாணவர்களுக்கும் அண்மையில் இந்த ஆண்டிற்கான முதல் கட்ட நிதியுதவி வழங்கப்பட்டது.

குறிப்பிட்ட அமைப்பின் தலைவர் திரு. அரியமுத்துவின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்விலும்  உதவிபெறும் மாணவர்களின் தாய்மாரும், ஆசிரியர்களும் கலந்துகொண்டனர்.

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மாவட்ட மாணவர்களுக்கும்  கடந்த மாதம் நிதியுதவி யாழ். சிறுவர் அபிவிருத்தி நிலையத்தினால் வழங்கப்பட்டது.


இம்மாவட்டங்களின் மாணவர் கண்காணிப்பு நிறுவனமாக யாழ்ப்பாணம் அரியாலையில் இயங்கும் சிறுவர் அபிவிருத்தி நிலையம் (Centre for Child Development) இயங்குகிறது.

இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் ஜூலை மாதம் முதல் வாரத்தில் யாழ்ப்பாணத்திலும்  முல்லைத்தீவிலும், வவுனியாவிலும் கிழக்கு மாகாணத்திலும் மலையகத்திலும் மாணவர் ஒன்றுகூடலுக்கான நிகழ்ச்சிகள் நடைபெறவிருக்கின்றன.

 




















































No comments: