எழுத்தும் வாழ்க்கையும் ( இரண்டாம் பாகம் ) அங்கம் 63 மலேசியா சுற்றுலாவில் சந்தித்த எழுத்தாளர்கள் பத்துமலையில் அம்மாவுக்காக தரிசனம் ! முருகபூபதி

வௌிநாடுகளுக்குப் புறப்பட்ட வேளைகளில் மலேசியாவுக்கு மேலாக


பறந்திருக்கின்றேன்.
1990 ஆம் ஆண்டு ஏப்ரில் மாதம் சென்னைக்கு செல்லும் மார்க்கத்தில் மலேசியா கோலாலம்பூர் விமான நிலையத்தில் சுமார் ஒரு மணிநேரம் Transit இற்காக நின்றிருக்கின்றேன்.

ஆனால், மலேசியாவுக்குள் சென்றதில்லை. அதற்கான சந்தர்ப்பம் 2006 ஆம் ஆண்டுதான்  கிடைத்தது.  மனைவியின் தம்பி விக்னேஸ்வரன், என்னை மலேசியாவுக்குச்  செல்லும் பேரூந்தில் ஏற்றிவிட்டார்.


பேரூந்தில் பயணித்தால் வீதியின் இருமருங்கும்  காட்சிகளை தரிசிக்கலாம். மலேசியா கோலாலம்பூர் என்றவுடன் எனக்கு முதலில் நினைவுக்கு வருபவர் அருட்திரு தனிநாயகம் அடிகளார்தான்.  ஆனால், பின்னாளில் மலேசியன் ஏர் லைன்
370 உம் நினைவுக்கு வருகின்றது.

2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 14 ஆம் திகதி வானில் பறந்துகொண்டிருந்தபோது, 227 பயணிகளுடனும் விமான ஓட்டுநர்கள் உட்பட 12 ஊழியர்களுடனும் மாயமாகிய அந்த விமானம் குறித்து இதுவரையில் ஊகங்கள்தான் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.

ஒவ்வொரு தடவையும் விமானத்தில் பயணிக்கும் எவருக்கும் மாயமான அந்த மலேசியன் ஏர்லைன் 370 விமானம் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியாது !

உலகத் தமிழ் ஆராய்ச்சிக்கு கால்கோள் நாட்டிய மண் கோலாலம்பூர். பிற்காலத்தில் இந்த ஆராய்ச்சி மாநாடுகள் அரசியல் மயமாகி, தமிழக அரசியல்வாதிகளினால் கேலிக்கூத்துக்களை அரங்கமாக்கியதும் தஞ்சாவூரில் ஜெயலலிதாவின் பதவிக்காலத்தில் நடந்தபோது இலங்கை ஆய்வாளர்களுக்கு கதவடைக்கப்பட்டு, அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டதும்  நாம் அறிந்த செய்திகள்தான்.

தஞ்சாவூர் மாநாட்டு மண்டபத்திற்கு முதலவர் ஜெயலலிதா வந்து அமர்வதற்குத்  தேவைப்பட்ட சிம்மாசனம் பலத்த பாதுகாப்புடன் சென்னையிலிருந்து எடுத்து வரப்பட்டது.  அன்றைய ஆளுநர் மங்கலவிளக்கேற்றவேண்டிய பெரிய குத்துவிளக்கை மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் எடுத்துவருவதற்கு மறந்துவிட்டார்கள்.

இறுதியில் ஒரு சிறிய குத்துவிளக்கை எங்கேயோ தேடி எடுத்து மங்கல விளக்கேற்றினார்கள். முதல்வர் ஜெயலலிதாவின் முகம் இறுக்கமானது. தனது அதிகாரிகளை அவர் கடிந்துகொண்டார்.

தமிழாராய்ச்சி மாநாட்டை கலைஞர் பதவிக்காலத்தில் நடத்த முடியாதுபோய்விட்டது. அதனால் அவர் செம்மொழி மாநாடு நடத்தினார். இங்கு  தனிநாயகம் அடிகளார் மறக்கப்பட்டார்.

யாழ்ப்பாணத்தில் 1974 ஆம் ஆண்டு நடந்த நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின்போது நடந்த அநர்த்தங்களும் இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை கூர்மையடைந்து இனவிடுதலைப்போராட்டம் உக்கிரமடைவதற்கு காரணமாகியது.


கலையும் இலக்கியமும் தமிழ் ஆராய்ச்சியும் அரசியல்வாதிகளிடம் சிக்கும்போது, என்ன நடக்கும் என்பதற்கு உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு சிறந்த உதாரணம்.

சிங்கப்பூரிலிருந்து புறப்படுவதற்கு முன்னர் மலேசியா எழுத்தாளர் சை. பீர் முகம்மது அவர்களுடன் தொலைபேசியில் உரையாடி எனது வருகையை தெரிவித்திருந்தேன்.

அவர் எனக்கு முதல் முதலில் மெல்பனில்தான் அறிமுகமானார். இங்கு நடந்த பட்டிமன்றத்திற்கு ஒரு குழுவினருடன் வந்திருந்தார். இந்த நிகழ்ச்சியின் ஏற்பாட்டில் சிட்னியில் வதியும் எழுத்தாளர் மாத்தளை சோமுவுக்கும் முக்கிய பங்கிருக்கிறது.

அந்த பட்டிமன்றத்தில் ஒரு பேச்சாளர், பீர்முகம்மதுவை


விளித்துப்பேசும்போது,  “ சபையோர்களே… இவரது பெயரில் பீரும் மதுவும் இருக்கிறது  “ என்றார்.

           பீர்முகம்மது, வெண்மணல் ( சிறுகதை ) பெண் குதிரை              ( நாவல் ) கைதிகள் கண்ட கண்டம், மண்ணும் மனிதர்களும்            ( பயண இலக்கியம் ) முதலான நூல்களையும் வேரும் வாழ்வும் என்ற தலைப்பில் மூன்று பாகங்களில் மலேசியா எழுத்தாளர்களின் கதைகளின் தொகுப்பு நூல்களையும் மலேசியத்தமிழர்களின் வாழ்வும் இலக்கியமும் கட்டுரைத் தொகுப்பு நூலையும் வரவாக்கியிருப்பவர்.

நண்பர் பீர்முகம்மது கோலாலம்பூர் பிரதான பஸ் நிலையத்திற்கு வந்து என்னை அழைத்துச்சென்றார்.  ஊர் சுற்றிப்பார்ப்பதைவிட, அங்கிருக்கும் எழுத்தாளர்கள் , பத்திரிகையாளர்களை சந்திப்பதற்கே நான் பெரிதும் விரும்பினேன். 


ஈழத்து இலக்கிய வளர்ச்சிக்கு ஒரு நெடிய வரலாறு இருப்பதுபோன்று,  மலேசியா இலக்கிய உலகம் பற்றியும் விரிவான வரலற்றுச்செய்திகள் இருக்கின்றன.

தமிழக எழுத்தாளர் ( அமரர் ) கு. அழகிரிசாமி பணியாற்றிய தமிழ்நேசன் பத்திரிகை அங்கே 1924 ஆம் ஆண்டு முதல் வெளியானது. 95 வருடங்களின் பின்னர் 2019 ஆம் ஆண்டு தனது மூச்சை நிறுத்திக்கொண்டது.

இலங்கையில் ஈழகேசரி, ஈழநாடு, வீரகேசரி, தினகரன், சுதந்திரன் ஆகியன வெளிவருவதற்கு முன்பே  அங்கு வெளியான நாளேடு மலேசியா தமிழ் நேசன்.  சுதந்திரன் தவிர்ந்து,  ஏனைய பத்திரிகைகளுடன் மேலும் பல நாளேடுகள், வாரப்பத்திரிகைகள் இலங்கையில்  இன்றும் வெளிவருகின்றன.

நண்பர் பூபாலசிங்கம் ஶ்ரீதரசிங், தினமும் எனது வாட்ஸ் அப்பிற்கு பல


பத்திரிகைகளை அனுப்பிக்கொண்டிருக்கிறார்.  அவற்றில் சில அச்சுப்பதிப்பில்லாமல், இணைய இதழாகியிருக்கின்றன.

ஒரு காலத்தில் விநியோகத்தில் உச்சம் பெற்றிருந்த வீரகேசரி தற்போது அந்த எண்ணிக்கையில் சரிவைக்கண்டுள்ளது.

சமகாலத்தில் இலங்கையில் காகிதாதிகளின் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதனால், அவற்றில் எழுதும் எழுத்தாளர்களும் சொற்களை எண்ணி எண்ணி எழுத நேர்ந்துள்ளது. 


500
சொற்களுக்குள் எழுதி அனுப்பினால் பத்திரிகை ஆசிரியர் மகிழ்ச்சியடைகிறார்.  கட்டுரைகளை எழுதிவிடலாம். சிறுகதைகளை எழுதுவதற்கு நமது படைப்பாளிகள் கடும் பிரயத்தனம் மேற்கொள்ளவேண்டும் !

பீர்முகம்மது எனக்கு மலேசியாவில் சில எழுத்தாளர்களையும் பத்திரிகையாளர்களையும் அறிமுகப்படுத்தினர்.  எனது நினைவில் தங்கியிருக்கும் பெயர்கள்: மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் பெ. இராஜேந்திரன் ( பிரதம ஆசிரியர் -  மக்கள் ஓசை ) பத்திரிகையாளர் தேவேந்திரன், தென்றல்  வார இதழ் ஆசிரியர் வித்தியாசாகர், சூரியா பதிப்பகம் கிருஷ்ணசாமி, தமிழ்நேசன் வார இதழ் ஆசிரியர் சந்திரகாந்தன் ஆகியோர்.

மலேசியாவில் தமிழ் எழுத்தாளர்கள் என்ற விபர நூல், அங்கே


இலக்கியப்பணியாற்றிய படைப்பாளிகளைப்பற்றிய தகவல்களை பதிவுசெய்துள்ளது.

மலேசியத் தமிழ் இலக்கியம் – ஓர் அறிமுகம், மலேசியத் தமிழர்களின் வாழ்வும் இலக்கியமும் ஆகிய நூல்கள் அந்த நாட்டின் தமிழ் கலை, இலக்கியம், பத்திரிகை உலகம் பற்றிய விரிவான அறிமுகத்தை தருகிறது.

பின்னாளில் மலேசியா தமிழ் இலக்கிய முயற்சிகள் பற்றி அங்கு வதியும் எழுத்தாளர் நவீன் (வல்லினம் இணைய இதழ் ஆசிரியர் )  லண்டனில் வதியும் நூலகர் என். செல்வராஜா , ஜெயபாலன் ஆகியோர் விரிவான பதிவுகளை வரவாக்கியுள்ளனர்.

மலேசியாவுடன் தொடர்புகளைப்பேணும் எழுத்தாளர் மாத்தளை சோமு, 1995 இல் தொகுத்து வெளியிட்ட மலேசியத் தமிழ் உலகச் சிறுகதைகள் அங்குள்ள 14 எழுத்தாளர்களின் சிறுகதைகளைக்கொண்டது.

பீர்முகம்மது தொகுத்த ( மூன்று பாகங்களில் ) வேரும் வாழ்வும் 93 சிறுகதைகளைக்கொண்டது. தமிழ் இலக்கியப்பரப்பில் இத்தொகுப்புகள் மிகுந்த கவனத்தை பெறல்வேண்டும்.


மலேசியாவில் ஆளுமையுடனும் வீரியத்துடனும் இயங்கிய ஆதி. குமணன் அவர்களின் மறைவு மலேசியா பத்திரிகை உலகிற்கு பெரும் இழப்பு என்று அங்கு என்னைச்சந்தித்த இலக்கியவாதிகள் குறிப்பிட்டனர்.

நான் அங்கு சென்றிருந்த அக்காலப்பகுதியில் ( 2006 இல் ) தமிழ்நேசன், மலேசியா நண்பன், மக்கள் ஓசை, தமிழ் குரல் முதலான செய்தி ஏடுகளும் தென்றல், செம்பருத்தி, காதல் முதலான சிற்றிதழ்களும் வெளியாகிக்கொண்டிருந்தன.

நான் மலேசியாவில் நின்ற அச்சமயம், நீர்கொழும்பிலிருக்கும் எனது சகோதரிகளுக்கு ஒரு கவலை வந்துவிட்டது. எனக்கு அவசரமாக ஒரு தகவல் சொல்வதற்கு முயன்றிருக்கிறார்கள். எனது அம்மாவின் இறந்த நினைவு தின – வருடாந்த திதியின் திகதியை எனக்குத் தெரியப்படுத்தி, ஏதாவது ஒரு கோயிலுக்கு செல்லுமாறும் அன்றைய தினத்தில் மச்சம் மாமிசத்தை புசிக்காமல் தவிர்க்குமாறு சொல்வதற்கும் அவர்கள் முயன்றிருக்கிறார்கள்.

சிங்கப்பூரிலிருந்த எனது மனைவிக்கு தகவல் அனுப்பியுள்ளனர்.

ஒருநாள் இரவு மலேசியாவில்  நண்பர் பீர்முகம்மதுவின் குடும்பத்தினருடன் நான் பேசிக்கொண்டிருந்தபோது, மனைவி அழைப்பு எடுத்து அம்மாவின் திதியை நினைவுபடுத்தினார். மாமியார் மெச்சிய மருமகளின் கட்டளையை நிறைவேற்றவேண்டியிருந்தது.

மறுநாள் பீர்முகம்மது மலேசியாவில் பிரசித்திபெற்ற பத்துமலை முருகன் கோவிலுக்கு அழைத்துச்சென்றார்.

அன்றுதான் அம்மாவின் திதி.

எங்கள் பாட்டி சொல்வார்: கோயிலுக்குப்போனால் பய பக்தி இருக்கவேண்டும்.

எனக்கு இவை இரண்டும் என்றைக்கும் இல்லை.

ஆனால், அன்று பீர்முகம்மது அழைத்துச்சென்ற அந்த குகைக்கோயிலின் படிக்கட்டுகளில் ஏறும்போதும் உட்பிரகாரத்துள் பிரவேசித்தபோதும் எனக்கு இனம்புரியாத பயம் வந்தது.

பீர்முகம்மதுவுக்கு ஒரு விபத்தில் கால் முறிந்து சிகிச்சை பெற்றிருந்தார்.  அவரால் அந்தப் படிகளில் ஏறுவது சிரமம்.

அவர் மலையடிவாரத்தில் காரிலிருந்துகொண்டு என்னை அனுப்பினார். மேல்மூச்சு, கீழ் மூச்சு வாங்க மலையேறினேன். முகப்பில் 140 அடி உயரமான முருகனின் பொன்னிற உருவச்சிலை.

அந்த பத்துமலை திருத்தலத்துக்கு உலகின் பல பாகங்களிலிருந்தும் தினமும் மக்கள் வந்துகொண்டிருக்கின்றனர்.

மலையேறி அம்மாவுக்காக பிரார்த்தனை செய்தேன்.  அந்திம காலத்தில் அம்மாவின் அருகிலிருந்து பணிவிடை செய்யவும், அவர்களின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ளவும், தாய்க்குத் தலைமகனாக இருந்தபோதிலும், அவர்களின் பூதவுடலுக்கு கொள்ளிவைக்கவும் பாக்கியம் அற்றவனாக புலம்பெயர் வாழ்வில் சோகமான அத்தியாயங்களை கடந்து வந்திருக்கும் நான், அம்மாவுக்காக அன்று மலையேறினேன். இறங்கி வந்து பீர்முகம்மதுவின் கையைப்பற்றி நன்றி தெரிவித்தேன்.

எனது பெயரில்  முருகன் இருக்கிறார். அவரது பெயரில் முகம்மது இருக்கிறார்.

நாம் இலக்கியத்தில் இணைந்திருக்கின்றோம்.

( தொடரும் )

letchumanam@gmail.com

 

No comments: