Thursday, May 4, 2023 - 6:00am
தமிழ் சினிமா கடந்த 5 மாதங்களில் இரு நகைச்சுவை ஜாம்பவான்களை இழந்து விட்டது. முதலில் மயில்சாமி, நேற்று மனோபாலா காலமானார். சினிமாவில் வில்லன், கதாநாயகன், குணச்சித்திரம் உள்ளிட்ட பாத்திரங்களை யார் வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் நகைச்சுவை என்றால் அது ஆசீர்வதிக்கப்பட்டவர்களால் மட்டுமே முடியும். அழுகை காட்சியில் கூட நடித்துவிடலாம். ஆனால் ஒருவரை சிரிக்க வைப்பது என்பது கடினமானது.
அந்த வகையில் இந்திய சினிமாவில் எத்தனையோ நகைச்சுவை ஜாம்பவான்கள் உள்ளனர். அந்த வகையில் தமிழ் சினிமாவில் எத்தனையோ பேர் வந்தாலும் நாகேஷ், பாலையா, கவுண்டமணி, செந்தில், விவேக், வடிவேல், சந்தானம், மயில்சாமி, மனோபாலா உள்ளிட்டோரின் நகைச்சுவைக்கு நிகரில்லை.
இவர்களால் நிறையப் படங்களில் கதையே இல்லாவிட்டாலும் அப்படங்கள் ஓடிய காலங்கள் உள்ளன. அந்த வகையில் ஏற்கனவே நாகேஷ், பாலையா, சந்திரபாபு, விவேக், மயில்சாமி உள்ளிட்டோரை சினிமா உலகம் இழந்து விட்டது. நேற்று மனோபாலா காலமானார்.
எத்தனையோ படங்களில் நகைச்சுவையில் கலக்கிய இவரது இழப்பு சினிமா உலகத்தை மட்டுமல்லாமல் ரசிகர்களையும் மிகவும் வேதனையடையச் செய்துவிட்டது. கடந்த 15 நாட்களாக மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த மனோபாலா நேற்று காலமானார். நடிகர், தயாரிப்பாளர், நகைச்சுவை நடிகர் என்ற பன்முகத் திறமை கொண்டவர் அவர். நிறைய படங்களில் நடித்துள்ளார். இயக்கியும் உள்ளார்.
இவரது முதல் படம் ஆகாயகங்கை. ஊர்க்காவலன், பிள்ளை நிலா, மல்லு வேட்டி மைனர் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். சதுரங்க வேட்டை என்ற படம் இவரது தயாரிப்பில் உருவானது. நகைச்சுவை என வந்துவிட்டால் தன்னை விட வயதில் சிறியவர்கள் கிண்டல் செய்தாலும் அதை பெரிதுபடுத்தாமல் நடித்து மக்களை சிரிக்க வைப்பார்.
சந்தானம் அவருடைய உடல் அமைப்பை எத்தனையோ முறை கிண்டல் செய்து நகைச்சுவை காட்சிகளை வைப்பார். ஆனால் எதற்கும் அசராத கலைஞனாக மனோபாலா இருந்தார். அது போல் சினிமாத்துறையில் யார் மறைந்தாலும் அந்த இறப்புக்கு இரங்கல் தெரிவிக்க முதல் ஆளாக மனோபாலா வந்துவிடுவார். இறுதியாக மயில்சாமியின் மறைவுக்கு வந்த மனோபாலா கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்.
இந்த ஆண்டு பிறந்து 5 மாதங்களில் இரு நகைச்சுவை நடிகர்களை சினிமா உலகம் இழந்து விட்டது. இது உண்மையில் சினிமாத் துறைக்குக்கு மட்டுமல்ல ரசிகர்களுக்கும் பேரிழப்பாக இருக்கும். இது சினிமா துறைக்கு சாபக்கேடா என்று நடிகர் மதன்பாப் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். நன்றி தினகரன்
No comments:
Post a Comment