உழைப்பவர் உயர்வை உரைத்திடும் தினம் !


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் … அவுஸ்திரேலியா 
உழைத்துமே உயர்ந்திடு வோமே 


உதிரமே உழைப்பவர் பலமே 
உலகமே ஏத்திடு தினமே
உயர்வுடை மே தினமே 

உண்ணும் உணவும் உழைப்பே
ஓடும் காரும் உழைப்பே
விண்ணில் பறக்கும் யாவும்
எண்ணி லடங்கா உழைப்பே 

விருந்தும் மருந்தும் உழைப்பே
விளக்கின் வரவும் உழைப்பே 
அருந்தும் அனைத்தும் உழைப்பே 
அனைவரும் மதிப்போம் உழைப்பை 

வானுயர் கட்டடங்கள் உழைப்பே


வான்வெளிப் பயணங்கள் உழைப்பே 
நீள்கடல் ஆராய்ச்சி உழைப்பே
நிம்மதி தருவதும் உழைப்பே 

முத்தினை எடுப்பதும் உழைப்பே
முடியினில் வைப்பதும் உழைப்பே 
சொத்தினைக் குவிப்பதும் உழைப்பே
சுகத்தினைக் கொடுப்பதும் உழைப்பே 

ஆடைகள் அனைத்தும் உழைப்பே
ஆலைகள் பெருக்கம்  உழைப்பே 
வீடுகள் அனைத்தும் உழைப்பே
வீதிகள் பெருக்கம் உழைப்பே 

உழைத்திடும் கரங்கள் ஓங்கிட வேண்டும்
உழைத்திடும் வர்க்கம் விழித்தெழ  வேண்டும் 
உழைப்பவர் உரிமை காத்திட வேண்டும்
உழைப்பவர் தினத்தைப் போற்றிடல் உயர்வே 

முதலாளி சிறக்கத் தொழிலாளி உழைப்பார்
தொழிலாளி சிறக்க வழியெதும் உண்டா 
முதலாளி நினைத்தால் தொழிலாளி சிரிப்பார்
தொழிலாளி முதலாளி தோழமை வேண்டும்

மேதினம் என்பது   விழித்தெழு தினமே
மேதினம் என்பது   வியர்வையின் தினமே 
உழைப்பவர் உயர்வை உரைத்திடும் தினமே 

உரத்துரைப் போமே உழைப்பவர் நலமே  No comments: