இலங்கைச் செய்திகள்

ஆறுதல் தருகின்ற புதுவருடமாக இப்புத்தாண்டு மலரட்டும் 

தமிழ், சிங்கள புத்தாண்டு தேசத்தின் மாபெரும் கலாசார விழாவாகும்

இந்திய உயர் ஸ்தானிகரால் இப்தார் வைபவம்

வேகமாக பரவும் காய்ச்சல் இதுவரை 15 பேர் மரணம்

அரசின் நிலைப்பாடுகள் குறித்து சர்வதேசத்துக்கு அமைச்சர் விளக்கம்


ஆறுதல் தருகின்ற புதுவருடமாக இப்புத்தாண்டு மலரட்டும் 

Friday, April 14, 2023 - 6:00am

- ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க புதுவருட வாழ்த்து

இன, மத, கட்சி, நிற பேதங்களை புறந்தள்ளிவிட்டு புதிய நோக்குடன் முன்னோக்கிப் பயணிக்க இந்த சித்திரைப் புத்தாண்டில் திடசங்கற்பம் கொண்டால் இந்த புத்தாண்டு மட்டுமன்றி, எதிர்காலத்தையும் நலம் மிக்கதாக அமைத்துக்கொள்ள முடியுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

சூரியன் மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு பெயர்ச்சி அடைவதைத் தொடர்ந்து உதயமாகும் தமிழ்,  சிங்களப் புத்தாண்டு இந்நாட்டின் தமிழ், சிங்கள மக்களுக்கு மிகவும் சிறப்பும், மகிழ்வும் நிறைந்ததாகும். சௌபாக்கியத்தையும் சுபீட்சத்தையும் வேண்டியே அனைவரும் சம்பிரதாயங்களை செய்கின்றனர்.

கடந்த வருடம் சித்திரைப் புத்தாண்டு உதயமான போது நாம் அனைவரும் மிகப்பெரிய நெருக்கடிக்குள் சிக்கியிருந்தோம். புத்தாண்டு கொண்டாட்டம் ஒருபுறமிருக்க, அன்றாட வாழ்க்கையைக் கொண்டு நடத்துவதே மிகப் பெரிய சவாலாக இருந்தது. ஆனால் இப்புத்தாண்டில் அனைவருக்கும் சிறு ஆறுதல் தருகின்ற சூழல் உருவாக்கியுள்ளது.

அடுத்த புத்தாண்டில், இதனை விடவும் சௌபாக்கியத்தையும் செழிப்பையும் ஏற்படுத்திக் கொள்ளவே நாம் முயற்சிக்க வேண்டும். நாம் அனைவரும் ஒருதாய் மக்களாக ஒரே பாதையில் பயணித்தால் அந்த இலக்கு சாத்தியமாகும். அனைவருக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் என்றும் ஜனாதிபதி தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.   நன்றி தினகரன் 


 







தமிழ், சிங்கள புத்தாண்டு தேசத்தின் மாபெரும் கலாசார விழாவாகும்

ஒரே சுபநேரத்தில், தனித்துவமான பல்வேறு பாரம்பரியங்களை மரபுரிமையாகக் கொண்ட தினமாக சிங்கள- தமிழ் சித்திரைப் புத்தாண்டு திகழ்வதாக பிரதமர் தினேஷ்குணவர்தன தெரிவித்துள்ளார். அச்செய்தியில் அவர் தெரிவித்துள்ளதாவது,

இம்முறை நாடு எதிர்கொண்ட உணவு மற்றும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளுக்கு மத்தியில், புத்தாண்டின் எதிர்பார்ப்பை நிறைவேற்றி, விளைச்சலினால் நாட்டை செழிப்படையச் செய்வதற்காக எமது விவசாய சமூகத்தினர் மேற்கொண்ட சவால்மிக்க பணிகளை இந்தப் புத்தாண்டில் நன்றியுடன் நினைவுகூர வேண்டும்.

இயற்கையோடு உறவாடிய எமது முன்னோர்கள் புத்தாண்டில் அதனை இன்னும் நிஜமாக்கினர்.  அவர்களின் வாரிசுகளான எமக்கு உணவுப் பாதுகாப்பு, சிக்கனம், எமது பாரம்பரியம் மற்றும் ஒற்றுமை பற்றி மீண்டும் மீண்டும் கூற வேண்டிய தேவையில்லை. செயற்படுதலே எமக்கு முன்னுள்ள தேவையாகும்.

கடந்த காலங்கள் எமக்கு சிந்திப்பதற்காக பல விடயங்களை விட்டுச் சென்றுள்ளன. தொற்றுநோய் அனர்த்தம், பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிகள் போன்றன அண்மைக்கால வரலாற்றில் நாம் காணாத விடயங்களாகும். அவற்றை மீண்டும் சந்திக்காதிருப்பதற்கும் அடுத்த தலைமுறைக்கு அவற்றை விட்டுச் செல்லாதிருப்பதற்கும் புதிய சிந்தனைகளால் வளம்பெற்ற இனியதோர் புத்தாண்டு இன்றிலிருந்து மலரட்டும்.   நன்றி தினகரன் 








இந்திய உயர் ஸ்தானிகரால் இப்தார் வைபவம்

இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே கடந்த செவ்வாய்க்கிழமை (11) கொழும்பில் இப்தார் விருந்துபசாரம் ஒன்றை ஒழுங்கு செய்திருந்தார்.

இந்நிகழ்வில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.

அத்துடன் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க, கிராமியப் பொருளாதார இராஜாங்க அமைச்சர் கே. காதர் மஸ்தான் மற்றும் ஆளும் கட்சி எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் இராஜதந்திரிகள் உள்ளிட்ட பிரமுகர்களுடன் வர்த்தகத்துறை, ஊடகத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளையும் சார்ந்த விருந்தினர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.   நன்றி தினகரன் 









வேகமாக பரவும் காய்ச்சல் இதுவரை 15 பேர் மரணம்

நாடு முழுவதும் இன்புளுவன்சா காய்ச்சல் மீண்டும் வேகமாக பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கர்ப்பிணிப் பெண்கள், சிறு குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் சுவாசப் பிரச்சினை உள்ளவர்கள் இந்த நோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

அதிக காய்ச்சல், தசைவலி, மூக்கில் நீர் வடிதல், தொண்டை புண் மற்றும் சளி போன்றவை இதன் அடிப்படை அறிகுறிகளாகுமென விசேட வைத்தியர் பிரியங்கர ஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.  நன்றி தினகரன் 

இதேவேளை, காலி மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இந்த வருடத்தின் கடந்த மூன்றரை மாதங்களில் எலிக்காய்ச்சல் காரணமாக 15 பேர் உயிரிழந்துள்ளதாக காலி மாவட்ட தொற்றுநோய் நிபுணர் எரந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.   நன்றி தினகரன் 









அரசின் நிலைப்பாடுகள் குறித்து சர்வதேசத்துக்கு அமைச்சர் விளக்கம்

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டம் மற்றும் முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் தொடர்பில், அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து சர்வதேச சமூகத்துக்கு வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி விளக்கமளித்துள்ளார்.  கொழும்பைத் தளமாகக் கொண்டுள்ள இராஜதந்திரிகளுக்கு இலங்கையின் தற்போதைய முன்னேற்றங்கள் குறித்து விளக்கமளிக்கும் கூட்டம் வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தலைமையில் நடைபெற்றது.

இதில்,பொருளாதார மீட்சிக்கு இலங்கைக்கு ஆதரவு வழங்கிய சர்வதேச சமூகத்தினருக்கு அமைச்சர் நன்றி தெரிவித்தார். இது தொடர்பான முன்னேற்றம் குறித்தும் அவர் விளக்கமளித்தார்.

சுற்றுலாப் பயணிகளின் வருகையை மேலும் ஊக்குவிப்பதற்காக நாட்டின் ஸ்திரத்தன்மையை பிரதிபலிக்கும் வகையில், நாடுகளின் பயண ஆலோசனைகளை மறுபரிசீலனை செய்யுமாறும் அமைச்சர் அலிசப்ரி கோரியதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதியினால் சர்வகட்சி மாநாடு நடத்தப்பட்டமை மற்றும் நல்லிணக்கத்துக்கான அமைச்சரவை உபகுழு நியமிக்கப்பட்டமை உள்ளிட்ட நல்லிணக்கத்துக்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள முயற்சிகளையும் அமைச்சர் எடுத்துரைத்துள்ளார்.

உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறையை அமைப்பதற்கான தற்போதைய முயற்சிகள் குறித்த மேலதிக தகவல்களையும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி வழங்கியதாக வெளிவிவகார அமைச்சு அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பில் சுட்டிக்காட்டியுள்ளது.   நன்றி தினகரன் 






No comments: