ரமணா பகீரதனின் மிருதங்க அரங்கேற்றம் - நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர்

 . 

உயர்ந்த இசையே எம்மை எல்லாம் தெய்வீகத்தை உணர வைப்பது. நாதம் நம்மை கட்டிப்போட்ட ஒரு இசையின் உன்னதத்தில் எம்மை இழந்தோம். சென்ற சனிக்கிழமை 15.04.2022 அன்று Sydney Reverside theater ல் இடம்பெற்ற அரங்கேற்றம் தான் அது.

இது என்ன ஒரு அரங்கேற்றமா. மிருதங்கத்தை இசைத்த இளம் கலைஞன் ஒரு தேர்ந்த வித்துவானாக அங்கு விளங்கினான். மிருதங்க சக்கரவர்த்தியாக திகழ்ந்த பாலக்காட்டு மணி அவர்கள் பாரம்பரியத்திலே "கலைமாமணி" ரி ஆர் சுந்தரேசனை குருவாகப் பெற்றான். பல சாதனைகளை படைத்த குருவின் பூரண ஆசியை பெற்று கலையை கற்றான் இளைஞன். அவர் ஆசியுரை வழங்கும் போது மன நிறைவுடன் "அவன் திறமையை அவனது வாசிப்பு பேசியது" என்று கூறி மகிழ்ந்தார்.

அரங்கேற்றத்திற்கு இசை கலைஞராக வந்தவரோ நம்மையெல்லாம் தன் நாதத்தால் மகிழ்வித்த ரி எம் கிருஷ்ணாவின் சிஷ்யர். இன்று உயர்ந்த இளம் கலைஞராக மிளிரும் விக்னேஷ் ஈஸ்வர். எடுத்த எடுப்பிலேயே கச்சேரி களை கட்டியது. வயலின் இசை வழங்கியவர் மதன் மோகன். இளைஞரான இவர் பல உயர்ந்த இசை கலைஞர் பலருக்கு அணிசெய் கலைஞராக விளங்கி வருபவர். கஞ்சிரா கலைஞர் அனிருத் ஆதி ஹேயா மிகப்பெரிய பாரம்பரியத்தில் தோன்றிய இளவல். பாரம்பரியம் பற்றி பேச தேவையில்லை. இந்த சின்ன வயதிலேயே நான் ஒரு பெரும் கலைஞன், அதை என் விரல்கள் பேசும் என, தன் வாசிப்பால் பல சாதனைகள் படைத்தவர். ரமணாவின் சகோதரி மதுவந்தி மிக அழகாக தம்புரா மீட்டினார்.




தாள வாத்திய கலைஞனின் அரங்கேற்றம் அல்லவா, அதனால் தாள வாத்திய கச்சேரி இசைக்கு தகுந்த இடம் அளிக்கப்பட்டது. ரமணாவும் அனிருத்தும் அபாரமாக வாசிக்க சபையில் இருந்த கலைஞர்கள் தாளம் போட்டு அற்புதமாக ரசித்தனர். பல தாள வாத்திய கலைஞர்களும் தாள நுணுக்கங்களை மெய்மறந்து ரசிப்பதை காண முடிந்தது.

ஒரு கலைஞன் உருவாக வேண்டுமானால் அதற்கான குடும்ப பின்னணி அமைய வேண்டும். சிறந்த பெற்றோர். மாதா பிதா அவர்களே வழிநடத்த சிறந்த குருவிடம் சிறுவனை ஒப்புவிப்பவர். குருவானவர் அவனை முறையாக வழிநடத்தி உன்னத நிலைக்கு எடுத்து செல்பவர். இசை மூலம் தெய்வீக தன்மையை உணர வைப்பவர். இதுவே மாதா பிதா குரு தெய்வம். ரமணாவின் மாதா சிறந்த இசைக் கலைஞர் கேதீஸ்வரி பகிரதன், அவரது தாயாரோ திருமதி தனலட்சுமி சண்முகராஜா இலங்கையிலே உன்னத கலைஞராக ஒளிர்ந்தது மட்டுமல்லாது பல இளம் கலைஞர் களை உருவாக்கியவர். அவரது சகோதரி நாகேஸ்வரி பிரமானந்தா உயர்ந்த கலைஞராக போற்றப்பட்டவர். மாபெரும் வித்துவான்களாக விளங்கிய பி பத்மநாபன், எஸ் கரிகரன், சித்தூர் சுப்ரமணியம், டி கே பட்டம்மாள், மகாராஜபுரம் சந்தானம் என பலரிடம் இசை நுணுக்கங்களை கற்று தன் பங்கிற்கு இசை மேதையாக எம்மை மயக்கியவர்.



அத்தனைக்கும் மேல் இசை அரங்கேற்றம் கண்டு தன் குரலால் எம்மைக் கவரும் இளம் கலைஞரை அக்காவாக பெற்றவர் ரமணா. அக்கா மதுவந்தி மிருதங்க மேதை பாலக்காட்டு மணியின் மகளும், டி கே பட்டம்மாளின் மருமகளுமான லலிதா சிவக்குமார் அவர்களை குருவாக கொண்டவர். லலிதா சிவக்குமாரின் மகளே இன்று இசை உலகில் பிரபலமான நித்யஸ்ரீ மகாதேவன். நித்யஸ்ரீயை உருவாக்கிய லலிதா சிவகுமாரே இன்று நமது கலைஞர் ஆன மதுவந்தியை மாபெரும் கலைஞராக உருவாக்குவார். நாம் எல்லாம் பெருமைப்பட சென்னை சபாக்களிலே மதுவந்தி இசைக்கச்சேரிக்கு தம்பி ரமணா மிருதங்கம் வாசிக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை.






No comments: