கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2022 ஆம் ஆண்டிற்கான இயல்விருது பெறும் எழுத்தாளர் லெ. முருகபூபதி ! செங்கதிரோன்


கனடா  ‘ தமிழ் இலக்கியத்தோட்டம் ’ (TAMIL LITERARY GARDEN) 2001 இலிருந்து ஆரம்பிக்கப்பட்டு,  வருடா வருடம் வழங்கிவரும் வாழ்நாள் சாதனையாளர் இயல்விருது (2022ஆம் ஆண்டிற்கானது) இம்முறை அவுஸ்திரேலியாவில் வதியும் எழுத்தாளர் லெ.முருகபூபதி அவர்களுக்கு வழங்கத்                               தீர்மானிக்கப் பெற்றுள்ளது.

உலகெங்கும் பரந்துபட வாழ்கின்ற தமிழ் இலக்கிய                        நெஞ்சங்களிலெல்லாம் மகிழ்ச்சிப் பிரவாகம்                   பொங்கியெழச்செய்கின்ற செய்தி இது. 

காரணம் முருகபூபதி அவர்கள் ஒரு சர்வதேச தமிழ் இலக்கிய சமூகச்


செயற்பாட்டாளர். சர்வதேசமும் அறிந்ததோர் ஆளுமை.                   மிகமிகப்பொருத்தமானவருக்கே இவ்விருது வழங்கப் பெறுதலால் முருகபூபதி மட்டுமல்ல முருகபூபதியுடன் இணைந்து இவ்விருதும் பெருமை பெறுகிறது என்பது மிகைப்பட்ட கூற்றல்ல.

அரைநூற்றாண்டு காலத்திற்கும் மேலாக எழுத்தூழியத்தில்        இயங்கிக் கொண்டிருப்பவர். ஊடகவியலாளராக – பத்திரிகை எழுத்தாளராக – படைப்பிலக்கியவாதியாக என்று பல தளங்களில் தடம் பதித்தவர். கலை, இலக்கிய, ஊடகச் செயற்பாடுகளுக்கும் அப்பால் சமூகசேவையிலும் நாட்டம் கொண்டு செயற்படுவர். 

அரசியலைப் பொறுத்தவரை தேர்தல் அரசியலிலும் கட்சி அரசியலிலும் ஈடுபடாமலே,  இடதுசாரிச்   சித்தாந்தங்களின்பால் ஈர்ப்புக்கொண்டு இயங்கிய ஓர்             அரசியல் போராளி.

இலங்கையின் வடமேல் மாகாணத்தின் கடலும் கடல்சார்ந்த  பிரதேசமுமான நீர்கொழும்பில் 13.07.1951 இல் பிறந்து – நீர்கொழும்பு விவேகானந்தா வித்தியாலயத்தில்   (தற்போதுவிஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி) ஆரம்பக்           கல்வி பெற்று – யாழ்ப்பாணம் ஸ்ரான்லி கல்லூரியிலும் (தற்போது கனகரத்தினம் மத்திய கல்லூரி) மற்றும் நீர்கொழும்பு அல்கிலால் மகா வித்தியாலயத்திலும் கல்வியைத் தொடர்ந்தார்.

‘வீரகேசரி’ப் பத்திரிகையில் 1977இல் ஒப்புநோக்குனராக இணைந்த இவர்,  தனது உழைப்பினாலும், எழுத்துத் திறமையினாலும் அப்பத்திரிகையின் ஆசிரிய பீடத்திலும் அமர்ந்தார்.

இலக்கிய உலகிற்குத் தன்னை அறிமுகப்படுத்தியதோடு          தொடர்ந்தும் இவரது ஆக்கங்களுக்கும் களம் கொடுத்த ‘மல்லிகை’ சஞ்சிகையையும் அதன் ஆசிரியர் டொமினிக் ஜீவாவையும் இன்றளவும் நன்றியுடனும் பெருமையுடனும் நினைவுகூருபவர்.

1972 ஆம் ஆண்டு ‘மல்லிகை’ யின் நீர்கொழும்புப் பிரதேச சிறப்பிதழிலேயே இவரது முதலாவது ஆக்கம்                வெளிவந்தது.


இவரது எழுத்தூழியம் இலக்கியப் பத்தி – சிறுகதை –                       இலக்கியக் கட்டுரை – நாவல் – நேர்காணல்- பயணக்கட்டுரை – சிறுவர் இலக்கியம் – கடிதங்கள் எனப் பரந்துபட்டது. 

வீரகேசரிப்பத்திரிகையில் பணியாற்றிய காலத்தில் அதன்  ஞாயிறு வார வெளியீட்டில் ‘ரஸஞானி’ என்ற பெயரில் ‘இலக்கியப்பலகணி’ என்ற மகுடத்தின் கீழ் இவர் எழுதிய இலக்கியப்பத்தி இன்றும்கூட இலக்கிய வட்டாரங்களில் சிலாகித்துப்                                                           பேசப்படுமொன்றாகும். இலங்கை வானொலியில் ‘கலைக்கோலம்’ நிகழ்ச்சியும் நடத்தியுள்ளார்.

வீரகேசரிப் பத்திரிகையில் பணியாற்றத்தொடங்கிய 1977


இற்கு முன்னரே 1972 இல் எழுத்தாளராக அறிமுகமான இவரின் ‘சுமையின் பங்காளிகள்’ எனும்                 சிறுகதைத் தொகுதிக்கு 1976 ஆம் ஆண்டு சிறந்த சிறுகதைத் தொகுதிக்கான இலங்கை அரசின் தேசிய சாகித்திய விருது கிடைத்தது.

2002ஆம் ஆண்டு சிறந்த நாவலுக்கான இலங்கை அரசின்             தேசிய சாகித்திய விருதினை இவரது நாவல் ‘பறவைகள்’ பெற்றுக் கொண்டது.

1987 இல் அவுஸ்திரேலியா நாட்டுக்குப் புலம்பெயர்ந்துவிட்ட         பின்பும் தனது தாய்மண்ணையும் மக்களையும் மறக்காமல் எழுத்துப் பணியும் கல்வி மற்றும்           சமூகப்பணியும் ஆற்றிவருகிறார். ஓய்வின்றி ஊருக்கு                 உழைத்து வருகிறார். உழைப்பும் உற்சாகமும் இவரோடு              உடன்பிறந்தவை.


அவுஸ்திரேலியாவில் 1988 இல் இவர் முன்னின்று ஆரம்பித்த ‘இலங்கை மாணவர் கல்வி நிதியம்’ எனும் தன்னார்வத் தொண்டு நிறுவனம்,                                 இலங்கையில் நாடளாவியரீதியில் பல ஏழை மாணவர்களுக்குக் கல்விவசதியளித்துக்                                                  கைதூக்கிவிட்டுள்ளது. இப்போதும் இயங்கிவரும் இவ்வமைப்பின் செயற்பாடுகளுக்கான களவேலைகளை             ஆற்றுவதற்காகவே அடிக்கடி இலங்கைப் பயணம் மேற்கொள்கிறார்.

 “புதிய தலைமுறை எழுத்தாளர்களில் முருகபூபதிக்குரிய இடம் முதல்


 ஐந்துக்குள் அமைந்துவிடுவது                              சாத்தியமாகிறது.“   என 1988 இலேயே எழுத்தாளர் செங்கைஆழியான் அவர்களால் சிலாகிக்கப்பெற்றவர் முருகபூபதி.

இன- மத – சாதி – நிற – பால் – வர்க்க வேறுபாடற்ற மானுட  நேயமும் சமூக நல்லிணக்கமுமே இவரது எழுத்துக்களின் இலக்காகும். சமூகப்பிரக்ஞையுள்ள             ஒரு முற்போக்கு எழுத்தாளனாகவே எழுத்துலகில் தன்னை இவர் இனங்காட்டியுள்ளார்.


2001 ஆம் ஆண்டிலிருந்து அவுஸ்திரேலியாவில் தமிழ் எழுத்தாளர் விழாவை ஆண்டுதோறும் ஏற்பாடு செய்து நடாத்திவரும் இவர்,  2004 ஆம் ஆண்டுமுதல் அவுஸ்திரேலியா மெல்பனில் இயங்கிவரும் அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய                                          கலைச்சங்கத்தின் ஆரம்பகால உறுப்பினர் மட்டுமல்ல,

 அவ்வமைப்பின் தலைவர் மற்றும் செயலாளர் , நிதிச்செயலாளர் பதவிகளை வகித்துப் பாரிய இலக்கியப்பணிகளை                    முன்னெடுத்தவர்.

தனது கலை – இலக்கிய எழுத்து மற்றும் தன்னார்வத்                         தொண்டு நிறுவனப் பணிகளுடன் எழுத்தாளர்- கலைஞர் இலக்கியவாதிகள் – ஊடகவியலாளருடனான தொடர்புகள் அறுந்து விடாமல் உறவைத் தொடர்ந்து பேணிவருபவரும்கூட. 

எல்லோருடனும் இனிமையாகப்பழகும் சுபாவமும் பாடறிந்து ஒழுகும் பண்பும் பலபேரை இவருக்கு                                       நண்பர்களாக்கியுள்ளன. எழுத்தாளர், கலைஞர்- இலக்கியவாதிகள் – ஊடகவியலாளர்களுடன் மட்டுமல்லாமல்                           அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களுடனும் உறவையும் ஊடாட்டத்தையும்                   ஒழுங்காகப் பேணும் உயர்ந்த பண்பினர். 


ஒருஇலக்கியவாதிக்கு எழுத்துத்திறமை மட்டுமல்ல,  இலக்கிய நெஞ்சமும் இலக்கிய நடத்தையும் இருக்கவேண்டும். அப்போதுதான் அவருடைய எழுத்திற்கு             ஒரு அர்த்தமும் பெறுமதியும் உண்டு. அந்தவகையில்                       முருகபூபதியை முதல்தரத்தில் வைக்கலாம். 

                                       “ சமூகத்தைப் பற்றிப்பேசுவதும் அச்சமூகத்தைப் பேசவைப்பதும்தான் எழுத்தூழியத்தின்          இலக்கு.  “  எனக் கூறும் முருகபூபதி,  அதனை அச்சொட்டாகக் கடைப்பிடித்தும் வருகிறார்.                                             உலகநாடுகளெங்கும் உள்ள எழுத்தாளர் – கலைஞர்- இலக்கியவாதிகள் – ஊடகவியலாளர்களில் முருகபூபதியை அறியாதவர்களும் இல்லை!  அதுபோல் முருகபூபதி அறியாதவர்களு  மில்லை. அந்த அளவுக்குப் பலரையும் அறிந்த பலரும் அறிந்த ஆளுமை.

கலை இலக்கியப் படைப்பாளிகளை அவர்கள் வாழும்போதே வாழ்த்திக் கட்டுரைகள் எழுதுவதிலும் மறைந்த கலை இலக்கியப் படைப்பாளிகளுக்கு அஞ்சலி/ இரங்கல்/நினைவுக்கட்டுரைகள் எழுதுவதிலும் முன்னோடியாகவும் முன்னுதாரணமாகவும்             முருகபூபதி உள்ளார். எழுத்துலகில் தன்னை இனம்காட்டி ஏற்றி வைத்த ‘மல்லிகை’ டொமினிக்           ஜீவாவை இன்னமும் உள்ளத்தில் வைத்துப் பூசிக்கும் பெருந்தகையர். 

முருகபூபதியின் வாழ்வையும் பணிகளையும் சித்தரிக்கும்


‘ரஸஞானி’ எனும் ஆவணப்படமொன்று  2017 இல் மெல்பனில் வெளியிடப்பெற்றது. எழுத்தாளர்                                   எஸ்.கிருஸ்ணமூர்த்தியும் வீடியோ கலைஞர் மூர்த்தியும் இணைந்து தயாரித்து இதனை                        வெளியிட்டனர்.

வீரகேசரிப் பத்திரிகையின் ஆசிரிய பீடத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த காலத்தில்,  சோவியத்ஒன்றியத்தின்                     அழைப்பின் பேரில் உலக இளைஞர்- மாணவர் விழாவில் (1985) இவர் கலந்துகொண்டமையும், 2011 ஜனவரி மாதம் கொழும்புத் தமிழ்ச்சங்கத்தில் நடைபெற்ற சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டின் பிரதம அமைப்பாளராக இவரது            செயற்பாடும் இவரது திறமை வெளிப்பாட்டின் மேலதிக பரிமாணங்களாகும். 

இவரது எழுத்தூழியத்தின் வெளிப்பாடுகளாக ஏழு சிறுகதைத் தொகுதிகளும் ஒரு நாவலும் ஒரு சிறுவர் இலக்கிய நூலும் ஒரு பயண இலக்கியமும் ஒருகடித இலக்கியமும் ஒரு நேர்காணல் தொகுதியும் கட்டுரை நூல்கள் பதினெட்டும் என மொத்தம் முப்பது  நூல்கள் வெளிவந்துள்ளன.

எழுத்தும் வாழ்க்கையும்’ என்ற தொடரை 2020 ஜூலை மாதம் ஆரம்பித்து ‘அக்கினிக்குஞ்சு’  மற்றும் அவுஸ்திரேலியா தமிழ் முரசுமின்னிதழ்களில்  பதிவேற்றி வருகின்றார். 

இந்தத் தொடரின் முதற் பாகம் முற்றுப்பெற்றுத் தற்போது அதன் இரண்டாம் பாகத்தை எழுதிக்கொண்டிருக்கிறார்.           அவையும் நூலாக வெளிவரும் காலம் துரத்தில் இல்லை. 

ஏற்கெனவே இவரைத் தேடிவந்த விருதுகள்:

• அவுஸ்திரேலிய தினத்தின்போது விக்ரோரியா மாநில          டெறபின் மாநகரசபை வழங்கிய சிறந்தபிரஜைக்கான                விருது (2002)

• அவுஸ்திரேலிய விக்ரோரியா மாநில பல்தேசிய கலாசார ஆணையத்தின் விருது (2011)

•‘அக்கினிக்குஞ்சு‘ இணை இதழ் வழங்கிய வாழ்நாள்              இலக்கிய சாதனையாளர் விருது (2018)

Australia Tamil TV (Tamil Linguistics Award) விருது (2022)

விருதுகளுடன் இவருடைய இலக்கிய, ஊடகத்துறை மற்றும்     தனனார்வத்தொண்டு நிறுவனமான ‘இலங்கை மாணவர் கல்வி நிதியம்’ சம்பந்தமான சேவையைப் பாராட்டி 2022 ஆம் ஆண்டுக்கான இயல்விருதினை இப்போது கனடா ‘தமிழ் இலக்கியத் தோட்டம்’ வழங்கிப் பெருமை கொள்கிறது. 

இவ்விருது இந்த (  2023) ஆண்டு யூன் மாதம் 4 ஆம்   திகதி கனடா ரொறொன்ரோவில் நடைபெறவுள்ள விருதளிப்பு நிகழ்வில் முருகபூபதி அவர்களிடம் நேரில்              கையளிக்கப்படவுள்ளது.

 விருதாளர்முருகபூபதி அவர்களை மனம் நிறைய                           வாழ்த்திப் பாராட்டுவதுடன் அவர் இன்னும் பல்லாண்டுகாலம் நோய்நொடியில்லாமல் வாழ்ந்து                      பணிபுரியவும் பிரார்த்திக்கின்றேன்.

( நன்றி: அரங்கம்  இதழ் )

---0---

 

 

No comments: