சிங்கப்பூர் தமிழ் மொழி விழாவில் தமிழின் அழகை ஆய்வு செய்து அறிந்து கொண்ட மாணவர்கள்



‘தமிழை
நேசிப்போம் தமிழில் பேசுவோம்’ என்ற முழக்க வரியோடு வளர்தமிழ் இயக்கம் மற்றும் தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவின் ஆதரவோடு தொடங்கப்பட்ட தமிழ்மொழி விழா 2023 தன்னுடைய பதினேழாவது ஆண்டு விழாவை இவ்வாண்டு சிங்கப்பூரில் மிகச் சிறப்பாகக் கொண்டாடி வருகிறது. இந்த விழாவின் ஓர் அங்கமாக

அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் (சிங்கப்பூர்) பத்தாவது ஆண்டு நிகழ்வு உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் ஏப்ரல் 9ஆம் தேதி மாலை மிகச் சிறப்பாக நடந்தேறியது. இவ்வாண்டு தமிழ் மொழி விழாவின் கருப்பொருள் ‘அழகு’ என்பதால் அதனை ஒட்டி ‘தமிழின் அழகே அழகு’ என்ற தலைப்பில் நிகழ்ச்சி அரங்கேற்றம் கண்டது.

நிகழ்ச்சியின் முதல் அங்கமாக ‘வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி’ என்ற தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலை மிக அழகாகப் பாடி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார் செல்வி. கிருத்திகா பாலாஜி. அடுத்ததாக, நிகழ்வுக்கு வந்திருந்தவர்களை வரவேற்று வரவேற்புரை ஆற்றினார் சங்கத்தின் தலைவர் திரு. கருணாநிதி அவர்கள். தமிழ்ப் பணி, நூலகப் பணி, கலைப் பணி என்று பல்வேறு பணிகளை 24 ஆண்டுகளாகத் தொடர்ந்து ஆற்றி வரும் அமைப்பின் செயல்பாடுகளைப் பற்றியும், தமிழை வருங்காலத் தலைமுறையினரிடம் கொண்டு சேர்ப்பதற்காகத் தொடர்ந்து முயன்று வருவதையும் எடுத்துரைத்ததோடு முடிந்த அளவில் பிறமொழிகலவாமல் தமிழைப் பேச வேண்டும் என்ற சிந்தனையையும் அவர் பகிர்ந்துக்கொண்டார். இதனையடுத்து, தமிழுக்கும் தமிழ் சமூகத்துக்கும் பல்வேறு செயல்களை முன்னெடுத்து முனைப்புடன் தொடர்ந்து பங்காற்றி வரும் சங்கத்தின் நெடிய பயணத்தின் காணொளித் தொகுப்பு கண்டவரின்கண்களுக்குக் காட்சி விருந்தாக அமைந்தது.

சிங்கப்பூரில் தமிழ் மொழியை வாழும் மொழியாக நிலைப் பெற செய்வதோடு மாணவர்களிடையே தமிழ்ப்புழக்கத்தை அதிகரிக்கச் செய்வதே தமிழ் மொழி விழாவின் முக்கிய நோக்கமாகும். அந்த வகையில் அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்கமும் மாணவர்களிடையே தமிழ் ஆர்வத்தைத் தூண்டும் வகையிலும், தமிழில் உள்ள இலக்கியங்களின் சுவையை அறிந்து கொள்ளும் வகையிலும் ஒவ்வொரு ஆண்டும் வெவ்வேறு கருப்பொருளில் மாணவர்களுக்கான போட்டிகளை மிகவும் சிறப்பாக நடத்தி வருகின்றது. அந்த வகையில் இந்த ஆண்டும் ‘தமிழின் அழகே அழகு’ என்ற தலைப்பில் ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தில் உள்ள அழகியல் கூறுகளை ஆய்வு செய்து கட்டுரை படைக்க உயர்நிலைப் பள்ளி மற்றும் தொடக்கக் கல்லூரி மாணவர்களிடையே போட்டி நடத்தப்பட்டது. இப்போட்டியில் பன்னிரண்டு பள்ளிகளைச் சேர்ந்த மொத்தம் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள்கலந்துக்கொண்டு தங்களது பங்களிப்பினைவழங்கினர்.


இப்போட்டியில் பங்கெடுத்துக் கொண்டமாணவர்களுக்கு விழா மேடையில் பரிசளிக்கப்பட்டது. மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் அவர்களிடம் ஆர்வத்தைத் தூண்டி கட்டுரை எழுதுவதற்கு ஊக்கப்படுத்திய அவர்களின் ஆசிரியர்களுக்கும், போட்டிக்கட்டுரைகளில் சிறந்த கட்டுரைகளைத் தேர்ந்தெடுக்க உதவிய நடுவர்களுக்கும் நினைவுப் பரிசு வழங்கி சிறப்பிக்கப்பட்டது. இதனைச்சிறப்புப் பேச்சாளர் திரு ஜோமல்லூரி அவர்கள் வழங்கினார். அத்துடன், விழா சிறப்பாக நடைபெற உறுதுணையாகயிருந்த ஆதரவாளர்களுக்கும் நினைவுப் பரிசு வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இப்போட்டியில் ஒவ்வொரு நிலையிலும்


முதல் இரண்டு இடங்களைப் பிடித்த மாணவர்களுடனான கலந்துரையாடல் அங்கம் நிகழ்ந்தேறியது. இந்த மாணவர்களுடன் ஏற்பாட்டுக் குழு உறுப்பினரான திரு கல்யாண்குமாரும், சங்கத்தின் மேனாள் செயலாளரும், தலைவருமான திரு நெடுஞ்செழியன் அவர்களும் இணைந்துக்கொண்டனர். இதனைதேசிய கல்விக் கழகத்தின் மேனாள் தலைவர் திரு ஆ.ரா.சிவகுமாரன் அவர்கள் வழி நடத்தினார்.


நம்பி அகப்பொருள்
என்ற இலக்கண நூலுக்குரிய முழுமையான இலக்கியமான தஞ்சைவாணன் கோவை என்ற அக இலக்கியத்தின் வழியாகத் தமிழின்அழகையும் அதன் இலக்கியநயத்தையும் சுவை குன்றாமல் எடுத்துரைத்து கலந்துரையாடலைத் தொடங்கி வைத்தார் திரு ஆ.ரா.சிவகுமாரன் அவர்கள்.

தமிழுக்கு எது அழகு?தமிழ்மொழி அன்றாட வாழ்வில் பயன்படுத்துவதுஎளிதா? கடினமா?அடுத்தத் தலைமுறையினரிடம் தமிழ்மொழியின் நிலை என்ன? தமிழ்மொழி உயர்ந்த நிலையை அடைய உங்கள் கருத்து என்ன? என்று கேள்வி - பதில் வாயிலாகக் கலந்துரையாடல் நடத்தப்பட்டது.

‘தமிழ் மொழி என்றும் அழகு

என் தமிழுக்கு என்றும்

தெவிட்டாதமுத்தமிழே அழகு’

என்று தமிழின் அழகையெல்லாம் ஒரு சேர கவிதையாகவடித்துப் பதில் அளித்தார் மாணவர் ரமேஷ் குமார்ஸ்ரீவிகாஷ். அத்துடன், சரியான வாக்கியஅமைப்பையும், ‘லகர, ளகர, ழகர’ வேறுபாடுகளையும் பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுத்தாலே போதும் தமிழ் மொழியை அன்றாட வாழ்வில் பயன்படுத்துவது மிகவும் எளிது என்பதையும் அவர் பகிர்ந்துக்கொண்டார்

எது கேட்கக் கேட்க இன்பம் பயக்கிறதோ அதுதான் அழகு என்றதோடு, தமிழைத் தாகம் தீர்க்கும் அமுதமாகப் பருகி நமது வேட்கையைத் தணித்துக் கொள்வதோடு அறிவை வளர்க்கும் ஆயுதமாகவும் அதனைப் பயன்படுத்த வேண்டும். அதுமட்டுமல்லாமல். நம் அன்றாட வாழ்வில் கேட்பது, படிப்பது, எழுதுவது தமிழ் என்பதைப் பழக்கப் படுத்திக் கொண்டாலே போதும் தமிழைப் பேசுவது எளிது. அதற்கு நானே ஒரு முன்னுதாரணம் என்ற கருத்தைப் பகிர்ந்துக் கொண்டார் மாணவர் நிதிஷ் செல்வகுமார்.

தொன்மையும், இனிமையும் இணைந்து என்றும் இளமையாய் இருக்கும் தமிழில் உள்ள ‘ழ’கரமே அதன் சிறப்பு என்றதோடு, தமிழ் மொழியை நாம் உச்சரிக்கும் முறை மிக எளிமையான ஒன்று என்ற அறிவியல் பூர்வமான உண்மையை எடுத்துரைத்தார் மாணவி சித்வியா சிதம்பரம்

ஒவ்வொரு நாளும் ஐந்து நிமிடங்கள் பிற மொழி கலக்காமல் தமிழைப் பேசி பழகினாலே போதும் தமிழில் பேசுவது எளிது. மேலும், கருத்து வளமும், சொல்வளமும் நிரம்பியதால் தான் இன்றும் காலத்தை வென்று நிற்கும் மொழியாகத் தமிழ் மொழி திகழ்கிறது என்றார் மாணவி அனிகா சுரேஷ்.

அன்றாட வாழ்வில் தமிழைப் பயன்படுத்தக் கூடிய இளைஞர்களை ஒன்றிணைக்கும் பாலமாகத் தமிழ் மொழி விளங்கும் அதே வேளையில் தமிழைப் பயன்படுத்தாத மாணவர்கள் அதனைப் பேச இயலாத நிலையை எதிர்நோக்குகிறார்கள் என்று இன்றைய தலைமுறையினரின் சிக்கலை எடுத்துரைத்தார் மாணவி ஷிவானி ரமேஷ் கண்ணா. அத்துடன் நெகிழ்வுத் தன்மையுடன் இருப்பதால் தான் தமிழ் தகவல் தொழில் நுட்பக்காலத்திலும் தனித்து இயங்க முடிகிறது என்ற கருத்தைப் பகிர்ந்துக் கொண்டார்.

கவிதை, பாடல், அடுக்கு மொழி என்று காலத்திற்கேற்ப தமிழின் வடிவம் மாறினாலும் அதன் சுவை மாறாமல் இன்றும் அழகாய் ஒலிக்கின்றது. பேசும் மொழி மட்டுமே வாழும் மொழியாக இருக்கும். அதற்கு வீட்டில் தமிழில் பேச வேண்டும். அத்துடன் மாணவர்களுக்குத் தேர்வு நோக்கில் இல்லாமல் முத்தமிழின் சுவையை உணரும் வகையில் பாடத்திட்டம் அமைய வேண்டும் என்ற சிந்தனையை முன் வைத்தார் மாணவர் சுமுகன் கபிலன்.

வீடு, சமூகம், தொழில்நுட்பம் இவற்றில் தமிழ் இருந்திட வேண்டும். அத்துடன் தமிழில் பேச தயக்கம் காட்டுபவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் தமிழ் நடவடிக்கைகள் அமைய வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தார் திரு கல்யாண்குமார் அவர்கள். மேலும் நம் அடையாளம் என்பது பொருளாதாரமா? அல்லது மொழியா? என்ற அவரின் கேள்வி அனைவரையும் சிந்திக்க வைத்தது.

இவரைத் தொடர்ந்து, பிறமொழிகளவாமல் தமிழ் பேசுவது என்பது கடினமான சூழ்நிலை. ஆனால், அதையும் குறைத்துக் கொள்ளலாம் என்ற கருத்தை முன் வைத்தார் திரு நெடுஞ்செழியன். தனித் தமிழை மீட்டுருவாக்கம் செய்ய வேண்டும்: அறிவியல் மற்றும் தகவல் தொழில் நுட்பத்தில் உள்ள கலைச் சொற்களைப் பொதுவுடமை ஆக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர் முன் வைத்தார்.

தனித் தமிழ் என்றில்லாமல் எளிய தமிழை அடுத்தத்தலை முறையினரிடம் பேச வைத்தாலே போதும் தமிழ் வளரும் என்று கூறி கலந்துரையாடலை நிறைவுச் செய்தார் முனைவர் ஆ .ரா.சிவக்குமாரன் அவர்கள்.

இதனைத் தொடர்ந்து விருந்தினர்களைச் சிறப்பிக்கும் வகையில் திருஜோமல்லூரி அவர்களுக்கு சங்கத்தின் முன்னாள் தலைவரும் ஆலோசகருமான திரு. சேது நாராயணன் அவர்கள்  சிறப்புச் செய்தார். இதனைத் தொடர்ந்து வளர் தமிழ் இயக்கத்தின் துணைத் தலைவர் திரு ஜோதி மாணிக்கவாசகம் அவர்களுக்கு சங்கத்தின் முன்னாள் துணைத் தலைவரான திரு முத்துமாணிக்கம் அவர்கள் பொன்னாடை போர்த்திச்சிறப்புச் செய்தார். கலந்துரையாடல் அங்கத்தை வழி நடத்திய முனைவர் ஆ.ரா.சிவகுமாரன் அவர்களுக்கு திரு ஜோதி மாணிக்கவாசகம் அவர்கள் நினைவுப்பரிசினை வழங்கிச்சிறப்பித்தார்.

அடுத்ததாக நன்றியுரை ஆற்றினார் சங்கத்தின் செயலாளர் திரு குமரேசன் அவர்கள். ஏற்பாட்டுக் குழுவினர், ஆதரவாளவர்கள், சிறப்புப் பேச்சாளர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள். நிதியாதரவு அளித்தவர்கள் என்று இந்நிகழ்வு சிறப்பாக நடைபெற ஆதரவாக நின்ற அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். இந்த நிகழ்வின் நெறியாளராக நின்று நிகழ்ச்சியை மிகச் சிறப்பாக வழி நடத்தினார் திருமதி ஷோபாகுமரேசன் அவர்கள். இந்த நிகழ்விற்குத் தலைமை பொறுப்பேற்று அல்லும் பகலும் பாடுபட்டு இந்நிகழ்வை வெற்றிகரமாக வழி நடத்தியவர் ஏற்பாட்டுக் குழுதலைவர் திரு ராம்ஜி அவர்கள்.

அடுத்த அங்கமாக அனைவரும் எதிர்பார்த்த சிறப்புப் பேச்சாளரின் அங்கத்தை சங்கத்தின் துணைத் தலைவர் திரு செந்தில் சம்பந்தம் அவர்கள் அறிமுகப்படுத்தினார். கவிஞர், பேச்சாளர், நடிகர், கலை இயக்குநர் என்று பல்வேறு பரிமாணங்களைக் கொண்ட திரு ஜோ மல்லூரி அவர்கள் ‘தமிழின் அழகே அழகு’ என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.

‘எந்தன் நாவசைக்கும் நற்றமிழ்நங்காய் வாழி

முத்தம் தந்து முகம் தழுவும் முத்தமிழ் மங்காய் வாழி’

என்று தமிழ் அன்னைக்கு வாழ்த்துக் கூறி தொடங்கிய இவரின் தமிழ்  உரை முடியும் வரை சற்றும் தொய்வில்லாமல் தொடர்ந்தபடி இருந்தது. இரண்டாம் உலகப்போரின் போது யூதர்கள் சிதறடிக்கப்பட்டாலும் கூட அவர்கள் இஸ்ரேல் என்ற நாட்டை உருவாக்கியதோடு, ஹிப்ரு மொழியைப் பேசக் கூடியயூதர்களை எல்லாம் ஒன்று திரட்டி அந்த நாட்டைக் கட்டமைத்தார்கள். இன்று உலக வரலாற்றில் யூதர்கள் முதலிடத்தில் திகழ்வதற்குக் காரணம் தாய் மொழிதான் ஒரு இனத்தின் கட்டுமானம் என்பதை உணர்ந்ததால்தான் என்பதை எடுத்துரைத்து தாய்மொழி சிந்தனை மட்டுமே ஒரு மனிதனை உயர்த்திப் பிடிக்கும் என்ற கருத்தை அவர் பகிர்ந்துக்கொண்டார்.

பண்பாடு, நாகரிகம், கலை, கல்வி, பண்பு என்று பல நிலைகளில் ஒரு பண்பட்ட சமூகம் உருவாக வேண்டுமானால் அதற்கு அடித்தளமாக இருப்பது அச்சமூகத்தின் மொழி மட்டுமே. எனவே ஒரு மொழியின்சிறப்பைப் பொறுத்துதான் அச்சமூகத்தின் வரலாறு உலகறிப்படுகிறது. தமிழ்மொழி மக்கள் மொழியாக இருந்ததால் மட்டுமே அது உயர் தனிச் செம்மொழியாக உருவெடுத்தது. வாழ்வியல் விழுமியங்களைக் கற்று தருகின்ற மொழியாகவும், வாழ்க்கையைச் சொன்ன மொழியாகவும், வாழச் சொன்ன மொழியாகவும் தமிழ் திகழ்கிறது. தாய்மொழியில் சிறந்து விளங்குகின்றவன் எல்லாத் துறைகளிலும் தலைச் சிறந்துவாழ்வான் என்ற சிந்தனையை இன்றைய தலைமுறையினரிடம் விதைக்க வேண்டும். தமிழுக்கு நிகர் தமிழ் மட்டுமே என்ற சிந்தனையை அடுத்தத் தலைமுறையினருக்கு எடுத்துச் சொல்லி அவர்களைத் தமிழின்பால் ஆர்வத்தை உருவாக்கினால் தமிழால் உலகை வெல்ல முடியும் என்ற சீரிய கருத்துகளைத் தெளிந்த நடையில் அள்ளி வழங்கினார். அவரிடமிருந்து சிதறிய முத்துக்(சொற்)குவியலில் எதை எடுப்பது, எதைக் கோர்ப்பது என்று புரியாது அரங்கத்தில் நிறைந் திருந்தோர் திணறிப் போயினர். மடை திறந்த வெள்ளம்போல் பொழிந்த இவரின் தமிழ் பெருக்கில் அரங்கமே தமிழால் மூழ்கித்திளைத்தது. சில மணித்துளிகளில் பொழிந்த தமிழ் மழையில் நனைந்த உள்ளங்கள் தமிழால் குளிர்ந்தன என்றால் அது மிகையாகாது. சொற்தூரிகையால் சொல்லோவியம் தீட்டிய இவரின் தமிழுரை கேட்டோர் செவிகளில் இன்னும் சில நாட்கள் ஒலித்துக்கொண்டே இருக்கும். இவரின் கன்னித்தமிழ் கேட்டவரின்காதுமடல்களின் வழியே நுழைந்து அவர் தம் இதயத்தில் இளைப்பாறியது என்று தான் சொல்ல வேண்டும். தமிழன்னை இவரின் நாவிலே நடனம் புரிந்துநர்த்தனமாடிய அழகை இடைவிடாது ஒலித்தகரவொலிவோசையின் மூலம் உணர முடிந்தது. திரு ஜோமல்லூரி அவர்கள் தன் அடுக்கு மொழியால், அழகு தமிழால், இனிய குரலால் கேட்பவர் செவியில் நுழைந்து தமிழால் இதயங்களை வென்றார் என்றால் அது மிகையாது. பத்தாவது ஆண்டாக நிகழ்ந்த இந்நிகழ்வைக் கண்டு ரசித்தவர்களின் உள்ள மெல்லாம் தமிழால் நிறைந்தது என்றால் அதுதான் தமிழுக்கே உரிய அழகு எனலாம். அத்துடன்

தாய் மொழியைப் போற்றி வீழ்ந்தவரும் எவருமில்லை

தாய் மொழியைப் புறக்கணித்துச் சிறப்புற்றவரும் எவருமில்லை’ என்பதையும்

மொழியை அணிகலன்களாய் மட்டும் கொண்டு அடையாளம் காண்பவன் மூடன்

தத்தம் துறையில் தனித்துவம் படைத்து உலகின் முன் நம் மொழியை நிறுத்து பவனே தமிழன்’

என்று கலந்துரையாடலின் போது இன்றைய தலைமுறையினரின் குரலாய் ஒலித்தமாணவர்களின் கருத்தை ஒவ்வொரு தமிழரும் உணர்ந்தாலே போதும் தமிழ் என்றென்றும் வாழும் மொழியாகத்திகழும் என்பது வெள்ளிடை மலை.

 

செய்தி : பிரதீபா வீரபாண்டியன், சிங்கப்பூர்

புகைப்படம் : அன்பரசன், சிங்கப்பூர்

 

 

No comments: