அன்னை இல்லம் - ஸ்வீட் சிக்ஸ்டி - ச சுந்தரதாஸ்

 தன்னுடைய தந்தை, தாய், சகோதரர்கள் எல்லோருடனும் கூட்டு


குடும்பமாக ஒரே வீட்டில் வாழ்ந்து வந்த சிவாஜி கணேசன் அந்த வீட்டிற்கு அன்னை இல்லம் என்று பேர் சூட்டி மகிழ்ந்திருந்தார். அதே சமயம் தன்னுடைய நண்பர்களை படத் தயாரிப்பாளர்களாக மாற்றி அவர்களுக்கு நிதியுதவியும் வழங்கி படங்களை தயாரிக்க செய்து அவற்றில் நடித்தும் வந்தார்.


இதன் காரணமாக சிவாஜியின் தாயின் பேரில் ராஜாமணி பிச்சர்ஸ் ,

பிள்ளைகள் பேரில் பிரபுராம் பிச்சர்ஸ், மகளின் பேரில் சாந்தி பிலிம்ஸ் , என்று திடீர் திடீர் என்று பட நிறுவனங்கள் தலை தூக்கின. அவ்வாறு 63ம் ஆண்டு உருவான பட நிறுவனத்துக்கு சிவாஜியின் மனைவி கமலாவின் பேர் வைக்கப்பட்டது. கமலா பிலிம்ஸ் தயாரித்த படத்துக்கு சிவாஜியின் வீட்டின் பேரான அன்னை இல்லம் என்று பேர் வைக்கப்பட்டது. இதில் இருந்து இது ஒரு குடும்பப் படம் என்பதும் உறுதியானது!

வசதி இருந்த காலத்தில் ஊருக்கு வாரி கொடுத்த தனவந்தர் பரமசிவம் அதன் காரணத்தால் ஓட்டாண்டி ஆகிறார். போதாக குறைக்கு கொலைக் குற்றமும் அவர் மீது சுமத்தப் பட்டு தலை மறைவாக வாழ்கிறார். அவருடைய மூத்த மகன் குமார் அவருடனும், இளைய மகன் சண்முகம் தாய் கௌரியுடனும் வாழ்கிறார்கள். பரமசிவத்தின் இயலாமையை நயவஞ்சகனான ரத்னம் பயன்படுத்தி அவரை அடக்கி ஆள்கிறான். குமாருக்கும் வக்கீல் ராமநாதனின் மகள் கீதாவுக்கும் இடையே காதல் மலர்கிறது. அதே சமயம் பரமசிவம் மீது ரத்னத்தின் சதியால் கொலைப் பழி விழுகிறது. தூக்கு மேடை ஏற அவர் காத்திருக்க அவரை காப்பாற்ற குமார் பாடுபடுகிறான். குடும்பம் மீண்டும் அன்னை இல்லத்தில் மகிழ்வுடன் இணைந்ததா என்பதே மீதிக் கதை.

படத்தின் கதையை தாதாமிராசி எழுத , திரைக் கதையை ஜி பாலசுப்ரமணியம் உருவாக்க ஆரூர்தாஸ் வசனங்களை தீட்டினார். அவரின் வசனங்கள் அர்த்தபுஷ்டியுடன் அமைந்தன. பாடல்களை கவிஞர் கண்ணதாசன் இயற்ற திரை இசைத் திலகம் கே வி மகாதேவன் சூப்பராக இசையமைத்திருந்தார். மடி மீது தலை வைத்து விடியும் வரை பேசுவோம் பாடல் சுசிலா டி எம் எஸ் குரலில் சுகமாக ஒலித்தது. எண்ணிரெண்டு பதினாறு வயது பாடல் காதல் சுவையுடன் அமைந்தது.

இந்தப் படத்தில் அமைத்த நடையா இது நடையா ஒரு நாடகம் அன்றோ நடக்குது பாடல் தான் தமிழில் வந்த ஈவ் டீசிங் , கல்லூரி பெண்களை கேலி செய்யும் முதல் பாடல் எனலாம்!

படத்தில் சிவாஜியின் நடிப்புக்கு நல்ல வாய்ப்பு . எல்லா வித உணர்ச்சிகளையும் காட்டும் சந்தர்ப்பம். ரங்காராவுடன் ஆவேசமாக வாதாடும் காட்சி அருமை. ரங்காராவும் ஈடு கொடுத்து நடிக்கிறார். உங்கள் வாக்குக்கும் வாழ்க்கைக்கும் தொடர்பில்லை என்று சிவாஜி வெடிக்கும் காட்சி அருமை. பணக்கார வீட்டு செல்லப்பிள்ளையாக , பொறுப்பில்லாமல் வளரும் ஒருவன் அநாதரவாக நிற்கும் போது படும் துன்பங்களை சிவாஜி நன்கு வெளிப்படுத்தியிருந்தார். 63ம் ஆண்டு வந்த பெரும்பாலான படங்களில் எம் வி ராஜம்மா தான் அம்மா. இதிலும் அவரே அன்னை. அதே நடிப்பு.


தேவிகா குறும்பாகவும், குழைவாகவும் நடிக்கிறார்.முத்துராமன், வி கே ராமசாமி, சுந்தரிபாய், ஜெயந்தி, பத்மினி பிரியதர்சினி, ஆகியோரும் நடித்திருந்தனர். நம்பியார் சதித் திட்டங்களைத் தீட்ட ஓ ஏ கே தேவர் அவற்றை நிறைவேற்றுகிறார். பிறகு அவருக்கு நடப்பது நல்ல திருப்பம். படத்தின் உச்சக் கட்டம் விறுவிறுப்பாக படமாக்கப்பட்டிருந்தது. தூக்கு தண்டனைக்கு ரங்காராவ் அழைத்து செல்லப்படுவதும் , அவரை காப்பாற்ற சிவாஜி எடுக்கும் இறுதி முயற்சியும் சூப்பர்.

நகைச்சுவை நாகேஷிடம் சிக்கிப் படாத பாடு படுகிறது. காமடி என்று

அவர் திக்குவாய்க்காரராக பேசுவது அபத்தம். இப்படி நடித்ததத்திற்காக பட தணிக்கை குழு தலைவர் சாஸ்த்திரியின் கண்டனத்துக்கு, கண்டிப்புக்கு அவர் ஆளானார் என்பது கொசுறு தகவல் .

படத்தை பி என் சுந்தரம் ஒளிப்பதிவு செய்தார்.சிவாஜியின் நண்பரான நடிகர் எம் ஆர் சந்தானம் தயாரித்தார். படத்தை இயக்க சிவாஜியின் சிபாரிசில் பி மாதவன் நியமிக்கப்பட்டார். பவஅவரின் முதல் படமான மணியோசை வெற்றி பெறாத நிலையில் இப் படத்தை அவர் இயக்குவதற்கு எதிர்ப்பு எழுந்தது. ஆனாலும் அவரின் திறமை மீது சிவாஜி நம்பிக்கை வைத்து வாய்ப்பை வழங்கினார். அவர் நம்பிக்கை பொய்க்காவண்ணம் மாதவன் படத்தை இயக்கி படமும் நூறு நாட்கள் ஓடி வெற்றி கண்டது. அதன் பிறகு மாதவன் சிவாஜியின் நிரந்தர பட இயக்குனர்களில் ஒருவரானார் .


இதே ஆண்டு சிவாஜியின் தாயாரின் பேரில் ராஜாமணி பிச்சர்ஸ் சார்பில் குங்குமம் படம் தயாரானது. சிவாஜியின் முதல் படத்தை டைரக்ட் செய்த கிருஷ்ணன் பஞ்சு இருவரும் படத்தை டைரக்ட் செய்தனர். ஊர்வசி சாரதா சிவாஜிக்கு ஜோடியாக நடித்தார். இவர்களுடன் எஸ் எஸ் ராஜேந்திரன் , விஜயகுமாரி ஆகியோரும் நடித்தனர். அன்னை இல்லத்தில் நடித்த பலர் இதிலும் இருந்தனர் . அதே கே வி மகாதேவன் அருமையாக இசையமைத்தார். சின்னஞ் சிறிய வண்ணப் பறவை எண்ணத்தை சொல்லுதம்மா, மயக்கம் எனது தாயகம் , துங்காத கண் என்று ஒன்று ஆகிய கண்ணதாசனின் பாடல்கள் மிக பிரபலமடைந்தன . ஆனால் அதற்காக ஒரே மாதிரியான கதையையா படமாக்குவார்கள்! குங்குமம் தோல்விப் பட வரிசையில் சேர்ந்து கொண்டது. இதனால் சிவாஜி , கிருஷ்ணன் பஞ்சுவுக்கான உறவும் சில ஆண்டுகள் விடுபட்டு போயிற்று.

No comments: