தாய்வானை சுற்றி சீனா போர் ஒத்திகை
உலகின் இரண்டாவது பெரிய கையடக்க தொலைபேசி உற்பத்தியாளராக இந்தியா
மியன்மார் இராணுவத்தின் வான் தாக்குதலில் 100 பேர் வரை பலி
சவூதி தூதுக்குழு யெமன் ஹூத்திக்களுடன் பேச்சு
சீனாவை அடுத்து பிலிப்பைன்ஸுடன் அமெரிக்கா பாரிய போர் ஒத்திகை
தாய்வானை சுற்றி சீனா போர் ஒத்திகை
தாய்வானுக்கு அருகில் போர் ஒத்திகை மேற்கொண்டு வரும் சீனா அதன் மூன்றாவது நாளான நேற்று (10) தாய்வானை முற்றுகையிடுவதை உருவகப்படுத்தும் வகையில் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளது.
இதன்போது அந்த தீவை நோக்கி ஜெட் விமானங்களை செலுத்துவதற்கு விமானதாங்கி கப்பல் ஒன்றை பயன்படுத்தியது.
நாட்டின் கிழக்குப் பக்கத்தில் ஜெட்களை அவதானித்ததாக தாய்வான் கூறியிருக்கும் நிலையில் தனது ஷங்டொங் விமானதாங்கி கப்பல் இதில் பங்கேற்றிருப்பதாக சீனா தெரிவித்துள்ளது.
கலிபோர்னியாவில் அமெரிக்க பாராளுமன்ற சபாநாயகரை தாய்வான் ஜனாதிபதி ட்சை இங் வென் சந்தித்ததை அடுத்து சீனா கடந்த சனிக்கிழமை இந்தப் போர் ஒத்திகையை ஆரம்பித்தது.
தாய்வான் தம்மை இறைமை கொண்ட நாடாக கருதியபோதும் அதனை தமது நாட்டின் பிரிந்து சென்ற மாகாணமாகவே சீனா கருதுகிறது.
இந்நிலையில் தமது நீர்ப் பகுதியை சுற்றி 70 போர் விமானங்கள் மற்றும் 11 கப்பல்களை அவதானித்ததாக தாய்வான் நேற்று தெரிவித்தது.
அதற்குப் பதிலடியாக தாய்வானின் ஆயுதப் படை அதன் சொந்தப் பயிற்சிகளை மேற்கொண்டுள்ளது. நன்றி தினகரன்
உலகின் இரண்டாவது பெரிய கையடக்க தொலைபேசி உற்பத்தியாளராக இந்தியா
உலகில் இரண்டாவது பெரிய கையடக்கத் தொலைபேசி உற்பத்தி நாடாக விளங்கும் இந்தியா, கையடக்கத் தொலைபேசிகளை ஏற்றுமதி செய்யும் ஐந்து முக்கிய நாடுகளில் ஒன்றாக மாறியுள்ளது என்று இந்தியாவின் இலத்திரனியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப மத்திய இராஜாங்க அமைச்சர் ரஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
கடந்த மார்ச் 31 ஆம் திகதியுடன் முடிவடைந்த நிதியாண்டில் 85 ஆயிரம் கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட பெறுமதி கொண்ட கையடக்கத் தொலைபேசிகளை ஏற்றுமதி செய்துள்ள எமது நாடு, இவ்வருடம் நிறைவடையும் போது ஒரு இலட்சம் கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட பெறுமதி கொண்ட கையடக்கத் தொலைபேசிகளை ஏற்றுமதி செய்யும்' என்றும் கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், இந்திய செலியூலர் அன்ட் இலக்ட்ரொனிக்ஸ் அசோசியேசன் வழங்கியுள்ள தரவுகளின்படி, 2022-2023 நிதியாண்டில் 10 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான ஸ்மார்ட் போன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இது கடந்த நிதியாண்டை விடவும் இந்நிதியாண்டில் இரு மடங்கு ஏற்றுமதி அதிகரிப்பாகும். இதற்கு உற்பத்தியை அடிப்படையாகக் கொண்ட ஊக்குவிப்புகளே முக்கிய காரணம்.
கையடக்கத் தொலைபேசி ஏற்றுமதியில் ஐக்கிய அரபு இராச்சியம், அமெரிக்கா, பிரித்தானியா, இத்தாலி, நெதர்லாந்து ஆகிய நாடுகள் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளன. அந்நாடுகளுடன் தற்போது இந்தியாவும் இணைந்து கொண்டுள்ளது. இதன் ஊடாக உலகில் கையடக்கத் தொலைபேசி ஏற்றுமதி செய்யும் ஐந்து முக்கிய நாடுகளில் எமது நாடும் ஒன்றாகியுள்ளது. இந்தியாவில் விற்பனை செய்யப்படும் 97 வீதமான ஸ்மார்ட் போன்கள் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படுபவை' என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இந்திய செலியூலர் அன்ட் இலக்ட்ரொனிக்ஸ் சங்கத்தின் தலைவர் பங்கஜ் மொஹிந்த்ரூ, 'கையடக்கத் தொலைபேசி கைத்தொழில் உற்பத்தி இவ்வருடம் 40 பில்லியன்அமெரிக்க டொலர்களை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகின்ற அதேநேரம், அவற்றில் 25 வீத ஏற்றுமதி 10 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருக்கும் என்றுள்ளார். நன்றி தினகரன்
மியன்மார் இராணுவத்தின் வான் தாக்குதலில் 100 பேர் வரை பலி
தாக்குதலை உறுதி செய்தது இராணுவம்
பெண்கள் மற்றும் நடன நிகழ்ச்சியில் பங்கேற்ற பாடசாலை சிறுவர்கள் உட்பட குறைந்தது 100 பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் மத்திய சகைன் பிராந்தியத்தில் உள்ள சமூகக் கூடம் ஒன்றின் மீது வான் தாக்குதல் நடத்தியதை மியன்மார் இராணுவம் ஒப்புக்கொண்டுள்ளது.
பா சி கியி கிராமத்தில் உள்ள இராணுவ ஆட்சியை எதிர்க்கும் ஆயுதக் குழு ஒன்றின் அலுவலகம் திறக்கப்படும் விழா மீது பாதுகாப்புப் படை கடந்த செவ்வாய்க்கிழமை (11) தாக்குதல் நடத்தியதாக இராணுவ பேச்சாளர் சோ மின் டுன் குறிப்பிட்டுள்ளார்.
இதில் கொல்லப்பட்ட சிலர் இராணுவ சதிப்புரட்சிக்கு எதிரான போராளிகள் என்றும் சிவில் உடை அணிந்த சிலரும் பலியாகி இருப்பதாகவும் அவர் ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.
சமூகக் கூடத்தின் மீது கடந்த செவ்வாய்க்கிழமை காலை போர் விமானங்கள் குண்டுகளை வீசியதாக சம்பவத்தை பார்த்தவர்கள் உள்ளூர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர். இந்த குண்டுவீச்சுக்குப் பின்னர் உயிர் தப்பியவர்கள் மீது ஹெலியில் இருந்து துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் மீட்பு நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்பட்டதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.இந்தத் தாக்குதலை கடுமையாகக் கண்டித்திருக்கும் ஐ.நா செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸ், “இதனைச் செய்தவர்கள் பொறுப்புக் கூற வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். அமெரிக்காவும் ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளது.
இதனை ஒரு பயங்கரச் சம்பவம் என்று வர்ணித்திருக்கும் மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஸ்தானிகர் வோல்கர் டுர்க், சர்வதேச சட்டத்தை அப்பட்டமாக மீறும் செயல் என குறிப்பிட்டுள்ளார்.
மியன்மாரில் 2021 பெப்ரவரியில் ஆட்சியை கைப்பற்றிய இராணுவம் அதன் எதிர்ப்பாளர்களுக்கு எதிரான வான் தாக்குதல்களை பயன்படுத்துவதை அதிகரித்துள்ளது.
இராணுவ சதிப்புரட்சிக்கு சகைன் பிராந்தியத்தில் எதிர்ப்பு வலுத்ததோடு அந்த சமூகத்தினர் சொந்த ஆயுதக் குழுவை உருவாக்கி செயற்படுவதோடு சொந்தமாக பாடசாலை மற்றும் மருத்துவ நிலையங்களையும் நடத்தி வருகின்றனர். நன்றி தினகரன்
சவூதி தூதுக்குழு யெமன் ஹூத்திக்களுடன் பேச்சு
Tuesday, April 11, 2023 - 5:42pm
ஈரான் ஆதரவு ஹூத்தி கிளர்ச்சியாளர்களுடனான புதிய போர் நிறுத்தம் ஒன்றுக்கான பேச்சுவார்த்தைக்காக கிளர்ச்சியாளர் கட்டுப்பாட்டு யெமன் தலைநகருக்கு சவூதி அரேபிய தூதுக் குழு ஒன்று பயணித்துள்ளது.
யெமனில் அமைதியை ஏற்படுத்துவதற்காக சானாவில் சவூதி அதிகாரிகள் பேச்சுவார்த்தையை முன்னெடுத்திருப்பதாக வளைகுடா பிராந்தியத்தை தளமாகக் கொண்ட யெமன் இராஜதந்திரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
சீனாவின் மத்தியஸ்தத்தில் சவூதி மற்றும் ஈரானுக்கு இடையே இராஜதந்திர உறவை மீண்டும் ஏற்படுத்துவதில் இணக்கம் எட்டப்பட்ட நிலையிலேயே சவூதி தூதுக்குழுவினர் யெமன் பயணித்துள்ளனர்.சவூதி தரப்பு இதனை உத்தியோகபூர்வமாக உறுதி செய்யாதபோதும் சவூதி மற்றும் ஓமான் தூதுக்குழுக்கள் சானா வந்திருப்பதாக ஹூத்திக்களின் பத்திரிகைகள் குறிப்பிட்டுள்ளன. யெமன் தலைநகர் சானாவை 2014 ஆம் ஆண்டு ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியதை அடுத்தே அந்நாட்டின் சர்வதேச அங்கீகாரம் பெற்ற அரசுடன் மோதல் வெடித்ததோடு அங்கு சவூதி தலைமையிலான இராணுவக் கூட்டணி ஒன்று ஹூத்திக்களுக்கு எதிராக கடந்த எட்டு ஆண்டுகளாக போரிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
எனினும் யெமனில் ஓர் ஆண்டாக போர் நிறுத்தம் ஒன்று நீடித்து வருவதோடு, அது கடந்த ஒக்டோபரில் முடிவுற்றபோதும் அங்கு மோதல்கள் கணிசமாகக் குறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
யெமன் போர் பல சிக்கல்களைக் கொண்டிருப்பதோடு ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் மற்றும் சவூதி தலைமையிலான கூட்டுப் படைக்கு எதிரான போர் தவிர, அங்கு அல் கொய்தா மற்றும் பல்வேறு தரப்புகளும் போர் புரிந்து வருகின்றன. நன்றி தினகரன்
சீனாவை அடுத்து பிலிப்பைன்ஸுடன் அமெரிக்கா பாரிய போர் ஒத்திகை
தாய்வானைச் சூழ சீனா பாரிய இராணுவ ஒத்திகை ஒன்றை பூர்த்தி செய்த அடுத்த நாளான நேற்று (11) அமெரிக்கா மற்றும் பிலிப்பைன்ஸ் இணைந்து மிகப்பெரிய இராணுவ ஒத்திகை ஒன்றை ஆரம்பித்துள்ளது.
தாய்வான் ஜனாதிபதி அமெரிக்க பாராளுமன்ற சபாநாயகரை கடந்த வாரம் சந்தித்ததை அடுத்து சீனா, கடந்த மூன்று நாட்களாக தாய்வானை முடக்கும் வகையில் போர் ஒத்திகையை நடத்தியது.
இந்தப் போர் ஒத்திகையை அமெரிக்கா கண்டித்ததோடு, இது பொறுப்பற்ற செயல் என்றும் தமக்கு அமெரிக்கா செல்வதற்கு உரிமை இருப்பதாகவும் தாய்வான் ஜனாதிபதி ட்சாய் இன் வென் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அமெரிக்கா ஆரம்பித்திருக்கும் போர் ஒத்திகை முன்னர் திட்டமிட்டதாகும்.
இந்தோ–பசிபிக் பிராந்தியத்தில் திறந்த மற்றும் சுதந்திரமான அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கான தங்கள் அர்ப்பணிப்பை இந்தப் பயிற்சிகள் காட்டுவதாக பிலிப்பைன்ஸ் மற்றும் அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர்.
பிலிப்பைன்ஸுடனான வருடாந்த பலிகடான் ஒத்திகை தொடர்பில் அமெரிக்கா கடந்த மாதம் அறிவித்ததோடு இதுவரை நடந்ததில் மிகப்பெரியது என்றும் குறிப்பிட்டிருந்தது. இதில் அமெரிக்காவில் இருந்து 12,000 துருப்புகள் உட்பட 17,000க்கும் அதிகமான துருப்புகள் பங்கேற்கின்றன.
இரண்டு வாரங்கள் இடம்பெறும் இந்தப் போர் ஒத்திகையில் தென் சீன கடலில் போர் கப்பல்களை இலக்குவைத்துத் தாக்குதல் நடத்துவது போன்ற ஒத்திகைகளும் இடம்பெறவுள்ளன.
எனினும் தாய்வானை ஒட்டிய விவகாரத்துடன் தொடர்புபட்டதாக இந்தப் போர் ஒத்திகை இருக்காது என்று அமெரிக்கா மற்றும் பிலிப்பைன்ஸ் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த பெப்ரவரியில் பிலிப்பைன்ஸுடன் அமெரிக்கா புதிய பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டதோடு அதில் போட்டி இருக்கும் நீர்ப்பகுதிக்கு அருகில் உள்ள பிலிப்பைன்ஸ் தீவுகளில் நான்கு புதிய கடற்படை தளங்களை அமைக்க ஒப்பந்தமாகியுள்ளது.
பிலிப்பைன்ஸ் மற்றும் தென் சீன கடல் பகுதியைக் கொண்ட நீர்ப் பாதை உலகின் மிகப் பெறுமதி மிக்க வர்த்தகப்பாதையாக இருப்பதோடு, அண்மைய ஆண்டுகளில் சீனா இதற்கு உரிமை கோரும் நிலையில் தற்போது பிரச்சினைக்குரிய பகுதியாக மாறியுள்ளது. நன்றி தினகரன்
No comments:
Post a Comment