எழுத்தும் வாழ்க்கையும் ( இரண்டாம் பாகம் ) அங்கம் - 60 பிலிப்பைன்ஸ் - சிபு தீவில் தந்தைக்கு இறுதி அஞ்சலி ! மகளுக்கு பிறந்த தினம் ! எதிர்பாராத நிகழ்வுகளின் சங்கமமே வாழ்க்கை !! முருகபூபதி


ஒரு விடயத்தை மீண்டும் மீண்டும் சொன்னால், அல்லது எழுதினால்,  அது தொடர்ந்து வந்துகொண்டேயிருக்கும் !

வாழ்க்கையில் எதிர்பாராமல் நாம் சந்திக்கும் தருணங்களில் கிட்டும் அனுபவங்களை மறந்துவிட முடிவதில்லை.

நினைக்கத்  தெரிந்த மனதால், மறக்கவும் முடியாதிருப்பதுதான்


வாழ்வில் விந்தையானது.

2005 ஆம் ஆண்டு,  அடுத்தடுத்து இரண்டு தடவைகள் இலங்கைக்கு வந்து திரும்பியிருந்தேன்.  அந்த ஆண்டு மீண்டும் அங்கிருந்து  மெல்பனுக்கு திரும்பியபோது,  இன்னும் இரண்டு மூன்று வருடங்களுக்கு விமானம் ஏறமாட்டேன் என்றுதான் நண்பர்களிடமும் உறவினர்களிடத்திலும் சொல்லிவிட்டு விடைபெற்றேன்.

   “ எதிர்பாராத நிகழ்வுகளின் சங்கமம்தான் வாழ்க்கை  என்று நான் அடிக்கடி சொல்வதற்கு, எதிர்பாராதவகையில்  எனது தனிப்பட்ட வாழ்விலும்,  எழுத்துலகிலும்  மற்றும் பொது வாழ்விலும் நிகழ்ந்த சம்பவங்கள்தான் பிரதான காரணம்.

வாழ்வு அனுபவங்கள்தானே பல உண்மைகளை மனதில் பதியவைத்து புத்திக்கொள்முதலைத்தருகின்றன.

புலம்பெயர் வாழ்க்கை என்பது சொர்க்கம் அல்ல. நானறிந்த சிலர் வெளிநாடுகளிலிருக்கும்  தமது பிள்ளைகளிடம் சென்று, அங்கே வாழப்பிடிக்காமல் திரும்பிச்சென்ற கதைகள் பலவற்றை அறிவேன்.

தாய் ஓரிடம், தந்தை ஓரிடம், மகன் ஒரு தேசம், மகள் மற்றும் ஒரு தேசம்.  சொந்த பந்தங்கள் எங்கெங்கோ வெவ்வேறு திசையில்.  நண்பர்கள் எங்கோ ?!   என்ற கவலை மறுபுறம்.

எமது தமிழ் சமூகத்தில் மரண அறிவித்தல்களை பார்த்தால், இறந்தவரின் மனைவி அல்லது   கணவர்   – மக்கள் – மருமக்கள் – பேரப்பிள்ளைகள் எங்கெங்கே இருக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள முடியும்.

இற்றைக்கு 17 வருடங்களுக்கு ( 2006 ) முன்னர், இதே ஏப்ரில் மாதம் 10 ஆம் திகதி,  திங்கட் கிழமை எனக்கு ஒருநாள் ஓய்வு கிடைத்தது. அன்றைய நாளை எனது மருத்துவ பரிசோதனைக்காக ஒதுக்கியிருந்தேன். காலையில் ஒரு மருத்துவ ஆலோசனை நிலையத்திலும் மாலையில் ஒரு மருத்துவ நிலையத்திலும் நான் பிரசன்னமாகவேண்டியிருந்தது.

மனைவி மாலதியும் உடன்வருவதாக இருந்தது. காலையில் இரத்த பரிசோதனை இருந்தமையால், எதனையும் உட்கொள்ளாமல் வரச்சொல்லியிருந்தார்கள்.

வெறும் வயிற்றுடன் புறப்பட்டதனால், பரிசோதனைக்குப் பிறகு உண்பதற்காக உணவும் தயார் செய்துகொண்டு வீட்டைப்பூட்டியவாறு காரில் ஏறினேன்.

அப்போது வீட்டினுள்ளே  தொலைபேசி அழைப்பு வந்தது.  இந்த நேரத்தில் யார்…? வெளியே சென்ற பிள்ளைகள் அவசரமாக தொடர்புகொள்ளக்கூடும் என்ற எண்ணத்தில்,  காரை விட்டு இறங்கி வந்து கதவைத்திறந்துகொண்டு தொலைபேசி அருகே செல்கிறேன். அது தொடர்ந்து ஒலிக்கிறது.

மறுமுனையில் மனைவியின் தம்பி விக்னேஸ்வரன் சொன்ன செய்தியால் அதிர்ந்துபோனேன்.     “ அப்பா இறந்துவிட்டார்.  “ என்றார் அவர்.

 “ எங்கே..?  

“ பிலிப்பைன்ஸில். 

  நீங்கள் எங்கிருந்து பேசுகிறீர்கள்..? 

 “ சிங்கப்பூரிலிருந்து,  ஒரு வேலை அலுவலாக வந்தேன்.  அதற்கிடையில் இப்படி ஆகிவிட்டது. 


மனைவியை அழைத்து தொலைபேசி ரிஸீவரைக்  கொடுத்தேன். அவள் கதறத் தொடங்கிவிட்டாள்.

அவர் அன்றைய தினம் (  ஏப்ரில் 10 ஆம் திகதி )  பிலிப்பைன்ஸில்,  சிபு  என்ற தீவில் இறந்திருக்கிறார். அதற்கு முதல்நாள்  சில மணிநேரங்களுக்கு முன்னர் 09 ஆம் திகதி இரவு தந்தையும் மகளும் பேசியிருக்கின்றனர்.  அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி.  மாரடைப்பும் மரணமும் சொல்லிக்கொண்டு வருவதில்லை.

வேகமும் விவேகமும் இல்லையென்றால், புகலிடத்தில் வாழ்வது சிரமம் என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்திருக்கின்றேன். மனைவியைப் போன்று நானும் அழுதுகொண்டிருக்கமுடியாது.

மின்னல்வேகத்தில் செயல்படவேண்டியதாயிற்று. எனது அன்றைய


அலுவல்கள் அனைத்தையும் நிறுத்திவிட்டு, எனது கடவுச்சீட்டைப் பார்த்தேன். அது காலாவதியாகியிருந்தது. மனைவிக்கு பிலிப்பைன்ஸ் விசா எடுக்கவேண்டும்.

அதற்காக மெல்பனில் இருக்கும் பிலிப்பைன்ஸ் துணைத் தூதரகத்திற்கும் எனது கடவுச்சீட்டுக்காக குடிவரவு – குடியகல்வு திணைக்களமும் செல்லவேண்டும். அடுத்து விமான டிக்கட்!!!??? இதற்கெல்லாம் பணம்…?!

நான் அன்றும் இன்றும் தேடி வைத்த பெரும் சொத்தே இனிய நண்பர்கள்தான். சில மணிநேரங்களில் எனது கடவுச்சீட்டும் புதுப்பித்து, மனைவிக்கும் விசா எடுத்து, விமான டிக்கட்டும் ஏற்பாடு செய்துகொண்டு,  புதன்கிழமை 13 ஆம் திகதி காலை விமானம் ஏறினோம்.

பிலிப்பைன்ஸ்,  சிபு தீவில் மாமனாரின் இறுதி நிகழ்வுகள் ஏற்பாடாகியிருந்தது.

வடமராட்சியை பூர்வீகமாகக் கொண்டிருந்த  அவர் ஒரு மருத்துவர்.  முன்னர் இலங்கையில் பல பாகங்களிலும் அரச மருத்துவராக பணியாற்றி ஓய்வுபெற்றவர்.


இறுதியில் எங்கள் நீர்கொழும்பூர் வாசியாகி, அந்தப்பிரதேச மருத்துவமனைகளில் பணியாற்றி ஓய்வுபெற்றிருந்தவர்.  1987 ஆம் ஆண்டு வடமராட்சியில் அன்றைய பாதுகாப்பு பிரதி அமைச்சர் லலித் அத்துலத் முதலியின் உத்தரவின்பேரில் நடத்தப்பட்ட லிபரேஷன் ஒப்பரேஷன் தாக்குதலின்போது விமானக்குண்டு வீச்சில் தனது ஒரு மகளை ( திருமதி நந்தினி சுந்தரலிங்கம் )  இழந்தவர்.  மனைவியார்  1999 ஆம் ஆண்டு நீர்கொழும்பில் இயற்கை எய்தினார்.

அவரது மற்றும் ஒரு மகளான எனது மனைவி மாலதி, அவுஸ்திரேலியாவுக்கும், இளைய மகள் சூரியகுமாரி  மணம் முடித்து துபாய்க்கும் சென்றுவிடவும், சிங்கப்பூரில் இருந்த மூத்த மகள் பத்மினியின் குடும்பத்திடமும் ஏக புதல்வன் விக்னேஸ்வரனிடமும் சென்றவர்.

விக்னேஸ்ரன் பிலிப்பைன்ஸ்,  சிபு தீவில்,  ஒரு கம்பனியை நடத்திவந்தார். அவரிடம் சென்றவிடத்தில்தான் அவரது மரணம் சம்பவித்திருக்கிறது.  அவ்வேளையில் மகன் அருகில் இல்லை. தொழில் சம்பந்தமாக அவசரமாக அவர் சிங்கப்பூர் வர நேர்ந்திருக்கிறது.

அப்போது அந்த எதிர்பாராத இழப்பு எமது குடும்பத்தில் நிகழ்ந்துவிட்டது.

மனைவியின் தங்கை சூரியகுமாரியும் தம்பி விக்னேஸ்வரனும்  எழுத்தாளர்கள்தான். சூரியகுமாரி இலக்கிய விமர்சகர். வீரகேசரி ஆசிரிய பீடத்தில் பணியாற்றியவர். விக்னேஸ்வரன் கவிஞர். சென்னையில் கண்ணதாசன் பதிப்பகத்திலும் சிறிது காலம் வேலை செய்தவர்.  இரண்டு நூல்கள் எழுதியிருப்பவர். அத்துடன் பாடலாசிரியர்.  திரைப்பட இயக்குநர்  கலைவாணன் கண்ணதாசனிடத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியவர். அத்துடன் ஒரு திரைப்படத்திலும் நடித்திருக்கிறார்.

துபாயிலிருந்த சூரியகுமாரி,  தானும் தனது மகனுடன்  வருவதாக தகவல் சொல்லியிருந்தார். அவரும் தகப்பனுடன் முதல் நாள் தொலைபேசியில் உரையாடியிருக்கிறார்.

தமது இரண்டு புதல்விகளுடனும் அவ்வாறு முதல் நாள் சுமுகமாக உரையாடியிருப்பவர், திடீரென விடைபெற்றது பேரதிர்ச்சி.

அவரது பூதவுடலை, இலங்கைக்கோ, சிங்கப்பூருக்கோ எடுத்துவராமல், பிலிப்பைன்ஸிலேயே இறுதி நிகழ்வுகளை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

பிலிப்பைன்ஸ்

அதற்கு முன்னர் நான் என்றைக்குமே சென்றிருக்காத பெரிய தீவு. அந்த நாட்டிற்கு சொந்தமான தீவுக்கூட்டங்கள் பற்றியும் அங்கே நேர்ந்த அரசியல் மாற்றங்கள் பற்றியும் ஓரளவு அறிந்திருந்தேன்.

மாமனார் மருத்துவர் பஞ்சநாதன் மறைந்தது, அங்கே சிபு என்ற தீவில்.

தாய்வானுக்கும் இந்தோனேஷியாவுக்கும் இடைப்பட்ட பெருந்தீவு பிலிப்பைன்ஸ்.  இதனைச்சுற்றி ஏராளமான தீவுக்கூட்டங்கள்.  சுமார்


ஏழாயிரம் தீவுகள் இருக்கின்றன எனச்சொன்னால் நம்பமாட்டீர்கள்.  மனிலா தலைநகரம். அதனைச்சுற்றி இருக்கும் பிரதான தீவுகள்: லூசான், மின்டனன், சமர், நெக்ரெஸ், பலவன், பெனி, மின்டோர், வெயிட், சிபு, போகோல் , மஸ்பேட்… இப்படி எத்தனையோ…!

நாம் செல்லவேண்டியது சிபு.

சிங்கப்பூரில் இறங்கி – சிபுவுக்கு மற்றுமொரு விமானத்தில் நாம் செல்லவேண்டும்.  நாம் அங்கே போய்ச்சேருவதற்கு முன்னர்,  மைத்துனர் விக்னேஸ்ரன் சிபுவுக்கு புறப்பட்டுவிட்டார்.

அங்கே எமது மொழி தெரிந்தவர்கள் எனச்சொல்வதற்கு எவரையும் தெரியாது.  நண்பர்கள் , இனத்தவர்கள் என்றும் எவருமில்லை.  அந்நிய மண்ணில் – ஒரு மரணச் சடங்கை எவ்வாறு நடத்தப்போகின்றோம் ?  நெஞ்சை ஆக்கிரமித்தது இந்த வினா..!

2004 சுனாமி தத்துவ போதனை செய்தது! அன்று கடலோடு ஜல சமாதியான இலட்சக்கணக்கான இன்னுயிர்களுக்கு ஏது மரணச்சடங்கு!?

உயிர் உடலில் இருக்கும்வரையில்தான் அதற்குச் சொந்தமானவருக்கு எதுவும் தெரியும். உயிர் உடல் கூட்டைவிட்டுப்  பிரிந்த பின்பு – அந்த பூதவுடலுக்குச் செய்யவேண்டிய பணிகள், மரியாதைகள், கடமைகளைப் பார்த்துத்தான், நாமும் நமது மரணத்தின் பின்பு மற்றவர்கள் என்ன செய்வார்கள்..?  என்பதை அறிந்துகொள்கின்றோம்.

நாம் எது செய்தாலும் இறந்தவருக்குத் தெரிவதில்லை. காற்றுவெளியில் சஞ்சரிக்கும் உயிர் அனைத்தையும் பார்த்துக்கொண்டிருக்கிறது என முன்னோர்கள் சொல்வார்கள்.  ஆனால், உயிர் உடலை விட்டுப்பிரிந்த பின்பு, என்ன நடக்கிறது ?  என்பது யாருக்கும் தெரியாது. எமது துயரம், அழுகை, ஏக்கம், பெருமூச்சு அந்த உயிரற்ற உடலுக்குத் தெரியுமா…?

எம்மிடம் எஞ்சியிருக்கப்போவது மறைந்தவர்கள் பற்றிய நினைவுகள் மாத்திரமே. 

மாமனார் மருத்துவர் பஞ்சநாதன், எனக்கு உறவு முறையில் மாமனாராவதற்கு முன்பே எனது அருமை நண்பர்.   எங்கள் ஊர் இந்து இளைஞர் மன்றத்திலும் அங்கம் வகித்தவர். அதிர்ந்துபேசமாட்டார்.  ஆழ்ந்த அமைதி அவரது சுபாவம்.

2005 இல் எனது இரண்டாவது மகள் பிரியாவின் திருமணத்திலும் கலந்துகொண்டார். அப்போது கவிஞர் அம்பியும் வந்திருந்தார். அந்தத்  திருமண வைபவம் நீர்கொழும்பில் நடந்தபோது , மல்லிகை ஜீவா,  ஞானம் ஆசிரியர் தி. ஞானசேகரன் தம்பதியர், எழுத்தாளர்கள் சோமகாந்தன் தம்பதியர், தெளிவத்தை ஜோசப், வன்னியகுலம், ரவிவர்மா, தனபாலசிங்கம், உடுவை தில்லை நடராஜா, மு. பஷீர், நிலாம், ஆப்தீன், புத்தகக் கடை  பூபாலசிங்கம் ஶ்ரீதரசிங், வதிரி சி. ரவீந்திரன், தேவகௌரி, தினகரன் பிரதம ஆசிரியர் சிவா சுப்பிரமணியம்  ஆகியோருடன்  பிரபல வயலின் கலைஞர் வி. கே. குமாரசாமி உட்பட பலரும் வந்து சிறப்பித்தனர்.

மாமனார்  பஞ்சநாதன்,  “ இது எழுத்தாளன் வீட்டு கலியாணம்  “ என்று பெருமையோடு சொன்னார்.

எம்மோடு கவிஞர் அம்பியும் அவரும் சில நாட்கள் தங்கியிருந்தனர்.  நாம் மூவரும் ஊரைச்  சுற்றிப்பார்த்தோம். தொலைவுக்குச் சென்று ஒன்றாக  அமர்ந்து ஒரு தென்னந்தோட்டத்தில்  தென்னங் கள்ளும் இறக்கி அருந்தினோம்.

என்னை மருமகனாகப்  பார்க்காமல் தோழனாக நேசித்தவர்.  அவரது மரணம் என்னையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்தது.

அந்த  எதிர்பாராத பிலிப்பைன்ஸ் பயணத்தில், நான் மிகப்பெரிய உண்மை ஒன்றை புரிந்துகொண்டேன்.  மனித நேயமென்பது, ஒரு குறிப்பிட்ட இனத்திற்கு மாத்திரம் சொந்தமான பண்பல்ல. அது பொதுவானது.

எனது மாமனாருக்கு அந்த பிலிப்பைன்ஸ் - சிபு தீவு மக்களுடன் சில மாத கால பரிச்சியம்தான்.  சொந்த பந்தங்கள் அருகில் இல்லாத சூழ்நிலையில் அவரது உயிர் பிரிந்திருக்கிறது. பொதுவாக இப்படிப்பட்ட தருணத்தில் என்ன நடந்திருக்கும்…?

பிள்ளைகள், உறவினர்கள் வரும்வரையில் பூதவுடலை மருத்துவமனை சவச்சாலையில் வைத்திருப்பார்கள். ஆனால், அந்த சிபு தீவு மக்கள் அவ்வாறு செய்யவில்லை.  எவருக்கும் காத்திராமல், தமது சொந்தச் சகோதரனாக அவரைக்கருதி, அவரது பூதவுடலுக்கு சகல மரியாதைகளும் வழங்கி ஒரு மண்டபத்தில் அலங்காரத்துடன் அஞ்சலிக்கு வைத்திருந்தார்கள்.

தமிழர் என்று சொல்லிக்கொள்வதற்கு துபாயிலிருந்து வந்த சூரியகுமாரியும் அவரது ஆண்குழந்தையும் நானும் மனைவியும் மைத்துனர் விக்னேஸ்வரனும் மாத்திரமே அங்கு அப்போது நின்றோம்.

சொந்தத்  தாய்நாட்டில் கூட அவ்வாறு அவருக்கு இறுதி மரியாதை நடந்திருக்குமா..?  என்பது சந்தேகம்தான்.  அந்த ஏப்ரில் மாதம் 13 ஆம் திகதி அவருக்கு இறுதி நிகழ்வு. அன்றுதான் அவரது மகள் சூரியகுமாரியின் பிறந்த தினம்.

அவர் இறப்பதற்கு முதல்நாள், அந்த சிபு மக்களிடம் மகளின் பிறந்த தினம் பற்றி சொல்லிக்கொண்டிருந்தாராம்.  அன்றைய தினம் மகளுக்கு வாழ்த்துக்கூறவேண்டும்.  நான் மறந்தாலும் தயவுசெய்து நினைவுபடுத்துங்கள் எனவும்  சொல்லியிருக்கிறார்.

ஆனால்,  அவரது வாழ்த்து மகளுக்கு கிடைக்கவில்லை. அன்றைய தினம் அவர் அக்கினியில் சங்கமமானார்.

அந்த  மின் மயான மண்டபத்தில், எமது சமய முறைப்படி புதல்வன் விக்னேஸ்வரன் கொள்ளிவைத்தபின்னர், நாம் வெளியே வந்தோம்.

அந்தக்  கட்டிடத்தின் வாயிலில் நின்று,  இறுதி அஞ்சலி செலுத்த வந்தவர்களை கைகூப்பி வணங்கிவிட்டு புறப்படத்தயாரானோம்.

அந்த மக்கள் எம்மை அருகே மற்றும் ஒரு மண்டபத்திற்கு அழைத்து வந்தனர்.

அந்த மண்டபம் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

அங்கே ஒரு மேசையில் அழகான பெரிய கேக் வைக்கப்பட்டிருந்தது. அதில் சூரியகுமாரியின் பெயரும் வண்ணத்தில் பதிக்கப்பட்டிருந்தது.

  உங்கள் அப்பாவின் வாழ்த்து இது. இதனை வெட்டிப்பகிருங்கள் எனச்சொல்லி சூரியகுமாரியை அருகே அழைத்தனர்.

நாம் திடுக்கிட்டோம்.

மகள் சூரியகுமாரி தரையில் அமர்ந்து ஓவென அலறி கூக்குரலிடத்தொடங்கிவிட்டார். அவரை அமைதிப்படுத்துவது சங்கடமாகியது.

 “ என்னால் முடியாது   “ என்று அவர் கத்திக்கொண்டிருந்தார்.

 “ அவ்வாறு சொல்லவேண்டாம். இது உங்கள் பாசமுள்ள அப்பாவின் விருப்பம். அவரால் உங்களுக்கு பிறந்த தின வாழ்த்து கூறமுடியாது போனது.  ஆயினும்,  அவரது விருப்பத்தை நிறைவேற்றவேண்டியது அவருடன் இருந்த எங்களின் கடமை.  சிலவேளை அவர் உயிருடன் இருந்திருந்தால், நாமெல்லோரும் உங்கள் பெயரைச்சொல்லி  வாழ்த்துபாடல் பாட , அவர் இந்த கேக்கை வெட்டி எங்களுக்கு பரிமாரியிருப்பார்.   என்றார்கள் அந்த மக்கள்.

அம்மக்களின்  அந்த உயர்ந்த உன்னத பண்பினால் நாம் நெகிழ்ந்துபோனோம்.

அடுத்த அறையில் தந்தையார் தகனமாகிக்கொண்டிருந்தார். இந்த அறையில் தந்தையின் விருப்பத்துடன் மகளுக்கு கேக் வெட்டப்பட்டது.  இப்படி ஒரு காட்சியை இதனை வாசிக்கும் எவரேனும் எங்காவது கண்டிருப்பீர்களா..?

சூரியகுமாரி, தான் இனிமேல் பிறந்த தினமே கொண்டாட மாட்டேன் எனச்சொல்லிக்கொண்டே அந்த கேக்கை விம்மி விம்மி அழுதவாறே வெட்டினார்.

கண்களில் நீர் மல்க அந்தக் காட்சியை பார்த்துக்கொண்டு நின்றோம்.

மறைந்தவரின் ஆத்மா அக்காட்சியை பார்த்துக்கொண்டிருக்கும் என்ற குருட்டு நம்பிக்கை எனக்கு வந்தது.

( தொடரும் )  

                     

 

No comments: