பார் மகளே பார் - ஸ்வீட் சிக்ஸ்டி - ச சுந்தரதாஸ்

 எம் ஜி ஆரின் நடிப்பில் வெளிவந்து வெற்றி கண்ட படம்


பெற்றால்தான் பிள்ளையா. இந்த படம் வெளிவருவதற்கு சில ஆண்டுகளுக்கு முன் இதே பெயரில் நாடகம் ஒன்று மேடை ஏற்றப்பட்டு நடிக்கப் பட்டு வந்தது. யை ஜி பார்த்தசாரதியின் நாடக அமைப்பினால் மேடை ஏறிய இந்த நாடகத்தை பட்டு என்பவர் எழுதியிருந்தார். ஹிந்தியில் ராஜ்கபூர் நடிப்பில் வெளிவந்த பர்வரிஷ் படத்தின் கதையைத் தழுவி இந்த நாடகம் எழுதப்பட்டது. இந்த பெற்றால்தான் பிள்ளையா நாடகத்தை பலர் பார்த்தார்கள். அப்படிப் பார்த்தவர்களுள் சிவாஜி கணேசனும் ஒருவர். சிவாஜிக்கு நாடகம் பிடித்துப் போகவே அதனை படமாக்க தீர்மானிக்கப்பட்டது. 


கஸ்தூரி பிலிம்ஸ் சார்பில் தயாராகும் படத்தை ஏ பீம்சிங் டைரக்ட்

செய்வதாக ஏற்பாடானது. தன்னுடைய படங்களின் பெயர்கள் ப வரிசையில் ஆரம்பமாக வேண்டும் என்பதை ஒரு சென்டிமெண்டாக கொண்டிருந்த பீம்சிங் படத்துக்காக பெயரை மாற்றி பார் மகளே பார் என்று பெயர் சூட்டினார். இதன் காரணமாகவே பின்னர் எம் ஜி ஆர் நடித்த படத்துக்கு நாடகத்தின் பெயரான பெற்றால்தான் பிள்ளையா இடப்பட்டது.

ஜமீன்தாரர் சிவலிங்கம் அந்தஸ்து, கௌரவம், மரியாதை என்பவற்றில் அதீத நாட்டம் கொண்டவர். அவர் மனைவி லட்சுமி கணவனுக்கு அடங்கி நடப்பவள் . மருத்துவமனையில் இவளுக்கு ஒரு பெண் குழந்தை பிறக்கிறது. அதே சமயம் அதே மருத்துவமனையில் நாட்டியக்காரி ஒருத்திக்கு இன்னும் ஒரு பெண் குழந்தை பிறக்கிறது. மருத்துவமனையில் ஏற்படும் விபத்தொன்றினால் குழந்தைகள் எவருக்கு பிறந்தன என்ற குழப்பம் ஏற்படுகிறது. நாட்டியக்காரியும் காணாமல் போய் விடவே இரண்டு குழந்தைகளும் தனக்கு பிறந்தவை என்று லட்சுமி கணவனுக்கு சொல்லிவிடுகிறாள். இரு குழந்தைகளும் ஒரே குடும்பத்தில் இரட்டையர்களாக வளர்கிறார்கள். பதின்னெட்டு ஆண்டுகள் கழித்து எதிர்பாராத விதமாக ஒரு பிள்ளை சொந்தப் பிள்ளை மற்றையது தத்துப் பிள்ளை என்ற உண்மை சிவலிங்கத்துக்கு தெரிய வருகிறது. எரிமலையாக வெடிக்கும் சிவலிங்கம் இரண்டு மகள்கள் மீதும் சந்தேகம் கொள்கிறார்.குடும்பத்தில் சூறாவளி வீசுகிறது.

ஹிந்தியில் இரண்டு ஆண் குழந்தைகள் என்றிருந்ததை தமிழில் இரண்டு பெண் குழந்தைகள் என மாற்றியிருந்தார்கள் . இதனால் படத்துக்கு சென்டிமென்டல் வலு கூடியது. ஒரு மகளாக விஜயகுமாரியும் , மற்றைய மகளாக புஷ்பலதாவும் நடித்தனர். விஜயகுமாரியை விட புஷ்பலதாவின் பாத்திரம் நன்றாக இருந்தது. சிவாஜியை எதிர்த்து அவர் பேசும் காட்சி சூப்பர். விஜயகுமாரி வழக்கம் போல் தியாகத்தின் சின்னமாக சித்தரிக்கப்பட்டார். தாயாக வரும் சௌகார் ஜானகி படம் முழுவதும் உருக்கமாகவும், சோகமாகவும் காட்சியளித்தார்.


படத்தின் முதுகெலும்பு சிவாஜி தான். செல்வந்தராக செல்வ செருக்குடன் அவர் வரும் ஒவ்வொரு காட்சியும் ரசிகர்களை சிலிர்க்க வைக்கிறது. ஆரம்பத்தில் கம்பீரமாக காட்சியளிப்பவர் பின்னர் தளர்ந்து சோர்ந்து அனைவரையும் உருக வைக்கிறார். படம் முழுதும் அவரின் நடிப்பு நிறைந்து நிற்கிறது.

இது என்ன எம் ஆர் ராதாவுக்கு வந்த சோதனை ! படம் முழுவதும் நல்லவராக வந்து அமைதியாக நடித்து நல்ல பேரை வாங்கி கொண்டார். அதே போல் வி கே ராமசாமியும் அலட்டலில்லாத நடிப்பை தந்தார். இவர்கள் இருவருக்கும் சோடை போகாதவராக ஏ கருணாநிதி. நடிப்போடு நிறுத்தி க்ண்கொள்ளாமல் ஒரு பரத நாட்டிய பாடலுக்கு அபிநயமும் பிடித்து அசத்திவிட்டார்.

சோவுக்கு இதுதான் முதல் படம்,சென்னை தமிழை பேசி நடித்து

தன்னை அடையாள படுத்திக்க கொண்டவர் மனோரமாவின் நடிப்புக்கும் ஈடு கொடுக்கிறார். முத்துராமன் வசனம் பேசி டூயட் பாடி நடிக்க ஏ வி எம் ராஜன் என்ன பாவம் செய்தாரோ அவருக்கு வசனமும் பெரிதாக இல்லை, டூயட்டும் இல்லை. இவர்களுடன் குமாரி ருக்மணி,சீதாலட்சுமி, தாம்பரம் லலிதா ஆகியோரும் நடித்தனர்.

நீரோடும் வைகையில் நின்றாடும் மீனே , மதுராநகரில் தமிழ் சங்கம், பார் மகளே பார் ஆகிய பாடல்கள் கண்ணதாசன் வரிகளில் விஸ்வநாதன் , ராமமூர்த்தி இசையில் மனதை வருடுகிறது.

படம் முவதும் சிகரெட் பிடித்த படி வருகிறார் சிவாஜி. ஸ்டைல் என்று எடுத்துக் கொண்டாலும் இப்போது பார்க்கும் போது எரிச்சலாகவும் இருக்கிறது! சிவாஜியின் இஷ்டத்துக்கே பீம்சிங் விட்டு விட்டார் போலும் .
டி என் ஏ மரபணு பரிசோதனை செய்ய முடியாத காலத்தில் வந்த படம் என்பதால் குழந்தைகளின் பிறப்பின் இரகசியம் இறுதி வரை இரகசியமாகவே இருந்து விட்டது. ஹிந்தியில் இருந்து தமிழாகி பட்டு எழுதிய நாடகத்துக்கு வலம்புரி சோமநாதன் திரைக் கதை எழுதியிருந்தார்.


ஆரூர்தாஸின் வசனங்கள் கருத்தோடு அமைந்தன. எஜமான் நீங்க கோபத்தோடு சொன்ன எந்த காரியத்தையும் நான் செய்ததில்லை சந்தோஷமா சொன்னதைத்தான் செய்திருக்கேன் என்று சிவாஜியிடம் , கருணாநிதி சொல்வது டாப்! ஜி விட்டல்ராவ் ஒளிப்பதிவு செய்திருந்தார். வி சி சுப்புராமன் படத்தை தயாரித்தார்.

தொடர்ந்து சிவாஜியின் படங்களாகவே இயக்கி அவற்றை வெற்றி படங்களாக்கி சிகரம் தொட்ட பீம்சிங் இயக்கத்தில் உருவான பார் மகளே பார் படத்தை ரசிகர்கள் பார்த்து , படமும் நூறு நாட்கள் ஓடி வெற்றி கண்டது!

No comments: