படித்தோம் சொல்கின்றோம்: நீறுபூத்திருக்கும் நீண்ட காலப் பிரச்சினையை நினைவூட்டும் ஆவூரானின் சின்னான் குறுநாவல் முருகபூபதி


இலங்கையின் வடபுலத்தில் சப்த தீவுகளில் ஒன்றான நெடுந்தீவிலிருந்து,  அருட் திரு. தனிநாயகம் அடிகளார் முதல் பல ஆளுமைகள் அறியப்பட்டுள்ளனர். அவர்களில் கலை, இலக்கியவாதிகளும், ஊடகவியலாளர்களும், தன்னார்வத் தொண்டர்களும்  அடக்கம்.

ஆயினும், நெடுந்தீவின் நிலக்காட்சியுடன் எத்தனை படைப்பிலக்கியங்கள் வெளிவந்துள்ளன..? எனக்கேட்டால், செங்கை ஆழியானின் வாடைக்காற்று என்ற பிரபல்யமான நாவலைத்தான் குறிப்பிடுவார்கள்.

இந்நாவலை அவர் எழுதியமைக்கு, சிறிதுகாலம் அவர் அங்கே காரியாதிகாரியாக  ( D. R. O -  District Revenue Officer )  பணியாற்றியதும் முக்கிய காரணம். செங்கை ஆழியான், பின்னர் செட்டிகுளத்திலும் அதே பணியை தொடர்ந்ததன் பின்னணியில் காட்டாறு என்ற நாவலையும் எழுதினார்.

முன்னைய வாடைக்காற்று திரைப்படமாகவும் வெளியானது.

எனினும் அதன் பெரும்பாலான காட்சிகள், மன்னார்


பேசாலையில்தான் படமாக்கப்பட்டன.

நெடுந்தீவின் நிலக்காட்சியுடன்,  நான்கு தசாப்த காலத்திற்கு முன்பிருந்த சமூக கட்டமைப்பு குறித்து பேசுகிறது, அவுஸ்திரேலியா மெல்பனில் வதியும் படைப்பிலக்கியவாதியான ஆவூரான் சந்திரனின் சின்னான் என்ற குறுநாவல்.

ஏற்கனவே ஆத்மாவைத் தொலைத்தவர்கள் என்ற கதைத் தொகுதியை வரவாக்கியிருக்கும் ஆவூரானின் இரண்டாவது நூலாக இந்தக் குறுநாவல் வெளிவந்துள்ளது.

யாழ். அல்வாயிலிருந்து வெளியாகும் ஜீவநதி இதழின் பதிப்பகத்தினால், இந்த ஆண்டு தொடக்கத்தில் ஆவூரானின் மணிவிழாக் காலத்தில்  இக்குறுநாவல் வெளியிடப்பட்டுள்ளது.

ஆவூரானுக்கு கடந்த ஜனவரி மாதம் 01 ஆம் திகதி 60 ஆவது பிறந்த தினம்.

ஆவூரானின் பூர்வீக ஊரான நெடுந்தீவைச் சேர்ந்த இலக்கிய ஆர்வலர் – கல்வி இயலாளர் மாவிலி மைந்தன் சி. சண்முகராசா இக்குறுநாவலுக்கு முன்னுரை வழங்கியிருக்கிறார். இந்நூலுக்கு மெல்பன் ஓவியர் கிறிஸ்டி நல்லரெத்தினம் பொருத்தமான முகப்போவியம் வரைந்துள்ளார்.

எழுத்தாளர் கே. எஸ். சுதாகர் அணிந்துரை தந்திருக்கிறார்.

இவர்கள் இருவருமே கனடா, அவுஸ்திரேலியாவில் வாழ்ந்துகொண்டிருப்பவர்கள்.  இவர்களின் கருத்துக்களுடன், அவுஸ்திரேலியாவில் கடந்த கால் நூற்றாண்டுக்கும் மேலாக வாழ்ந்துகொண்டிருக்கும் ஆவூரானின் இக்குறுநாவல் வெளிவந்துள்ளது.

நீண்ட நெடுங்காலமாக ஆவூரானின் மனதில் கனன்றுகொண்டிருந்த நெருப்பின் வெளிப்பாடாகவும் இந்த படைப்பிலக்கிய முயற்சியை அவதானிக்க முடிகிறது.

வடபுலத்தின் அடிநிலை மக்களின் பிரச்சினைகளை, போராட்டங்களை,  அவர்களின் ஆத்மாவை ஏற்கனவே படைப்பிலக்கியத்தில் பேசியவர்கள்:   டானியல், டொமினிக் ஜீவா, என். கே. ரகுநாதன்,  செங்கை ஆழியான், தெணியான், நந்தினி சேவியர் என எம்மால் ஒரு சிறிய  பட்டியலை தரமுடிகிறது. இந்த மூத்த தலைமுறை படைப்பாளிகள் தற்போது எம்மத்தியில் இல்லை.  எனினும் அவர்கள் சொன்ன - சித்திரித்த பிரச்சினைகள் இன்னமும் வடபுலத்தில் முற்றாக தீர்ந்துவிடவில்லை.

ஆயுதம் ஏந்திய விடுதலை இயக்கங்கள், களத்திற்கு வந்தபோது,  சாதிப்பிரச்சினை துப்பாக்கி முனைக்குப் பின்னால் மறைந்திருக்கிறது என்றுதான் பொதுவாகச் சொன்னார்கள்.

அண்மைக்காலத்தில்,  தென்மராட்சியில் ஒரு ஆலயத்தின் தேரை இழுத்துச்செல்வதில் ஏற்பட்ட பிணக்கினையடுத்து, அந்தத் தேர், வீதி நிர்மாணப்பணிகளுக்கு பயன்படுத்தும் பொக்கோ இயந்திரத்தினால் இழுத்துச்செல்லப்பட்ட காட்சியை நாம் மறந்துவிட முடியாது.

வடபுலத்தின் சாதிப்பிரச்சினையில் தொடர்ந்தும் துருத்திக்கொண்டிருந்ததும் இந்த ஆலய விவகாரங்கள்தான்.

அதனையடுத்து தேநீர்கடையில் தேநீர் அருந்தும் விவகாரம்.

மாவிட்டபுரம் கந்தசாமி ஆலய பிரவேசப்பிரச்சினை,  லண்டன் பிரிவு கவுன்ஸில் நீதிமன்றத்தின் கதவையும் தட்டியது. புங்குடுதீவு கண்ணகி அம்மன் கோயிலில் அடிநிலை மக்களுக்கு குடிநீர் பெற முடியாதிருந்ததை கண்டித்து எழுத்தாளர் மு. தளையசிங்கம் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி பொலிஸிடம் அடிவாங்கிச் செத்தார்.

அக்காலப்பகுதியில் அவர் யாழ். பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்தபோது,  கைதாகியிருந்த உரும்பராய் சிவகுமாரன், தளையசிங்கத்திடம் அவர் கைதான காரணத்தை கேட்டுவிட்டு,   “ சேர்… உங்களுக்கு விசர்… உவங்களுக்கு உந்த அகிம்சை – சத்தியாக்கிரகம் எதுவும் சரிப்பட்டு வராது. நீங்கள் மேல்சாதிக்காரரின் கிணத்துக்கை பொலிடோல் ஊத்தியிருக்கவேண்டும் .  “ என்றாராம்.

அப்போது வடபுலத்தில் துளிர்க்கத் தொடங்கிய இளம் தலைமுறையின் வன்முறை மீதான சிந்தனை பற்றி, தளைய சிங்கம், தமது தம்பி பொன்னம்பலத்திடம் சொல்லியிருக்கிறார்.

ஆலயப்பிரவேசப் போராட்டம் பற்றித்தான் எழுத்தாளர் என்.கே. ரகுநாதன் எழுதிய கந்தன் கருணை கூத்து பேசியது. இதனை வடமராட்சி அம்பலத்தாடிகள், கிராமங்கள் தோறும் அரங்காற்றுகை செய்தனர்.

இந்த முன்கதைச் சுருக்கத்தைப் பற்றி இங்கே சொல்லநேர்ந்தமைக்கு, ஆவூரானின் குறுநாவல் பேசும் செய்திகளும் முக்கிய காரணம்தான்.

இக்குறுநாவலும்  ஆலயம் சார்ந்த பிரச்சினையைத்தான் பேசுகிறது.  நெடுந்தீவுக்கு பசுவூர் எனவும் பெயர் முன்பிருந்ததாம்.  இங்கிருந்து வெளிப்பிரதேசங்களுக்கு மட்டுமன்றி, படகு மூலம் இந்திய எல்லைக் கரையோர மக்களுக்கும் பசுவின் பால் எடுத்துச்செல்லப்பட்டிருப்பதாக ஆவூரான் கேள்வி ஞானத்தில் சொல்கிறார்.  அதனாலும் தனக்கு ஆவூரான் என புனைபெயரை வரித்துக்கொண்டவர்.

நெடுந்தீவில் பிறந்து பின்னர் வன்னி பெருநிலப்பரப்பிற்கு இடம்பெயர்ந்து, தற்போது அவுஸ்திரேலியாவில் புகலிடம் பெற்று வாழ்ந்தவாறு இலக்கியப்பிரதிகள் எழுதிவரும் ஆவூரான்,  இக்குறுநாவலில் தனது என்னுரையில் இவ்வாறு குறிப்பிடுகிறார்:

 “ என் தாய் நிலமான அழகிய தீவில் நான் வாழ்ந்த அந்த சொற்ப காலத்தில் நான் கண்டு பார்த்து வளர்ந்த எமது கிராமத்தைச்  சுற்றியுள்ள சமூகத்தின்  நடைமுறை வாழ்வில் அன்றாடம் நிகழ்ந்த பல வாழ்வியல் சம்பவங்களையும் மனித நேயம் என்ற சொல்லாடலே அற்றுப்போய் நின்ற பொழுதுகளையும் கண்ணில் சுமந்துகொண்டு தினப்புலமான வன்னி மண்ணில் என் வாழ்வை பதியம் போட்டிருந்தாலும் , மனம் எப்போதும் பிறந்த மண்ணையே சுற்றி வந்து நினைவுகளை தூவிச் சென்று கொண்டிருக்கும் இந்தக் காலத்தில் நான் , எமது தீவுக்கு  வெளியே வாழ்ந்து கொண்டிருக்கும் போது கேட்டறிந்த விழிப்புணர்வுப் போராட்டங்களையும்               முன்னிறுத்தியே இக் கதையைசொல்ல முனைந்தேன். 

அடிநிலைச்சமூகத்தில் பிறந்த சின்னான் என்ற சிறுவன், தான்  செய்யாத கொலைக்குற்றத்திற்காக கைதாகி நீண்டகாலம் தென்னிலங்கையில் சிறைவாசம் அனுபவித்துவிட்டு, ( சுமார் முப்பது ஆண்டு காலம் ) ஊருக்குத் திரும்பி வருகின்றான்.

அவனது வாழ்க்கையில்  அனுபவித்த கொடுமைகளை, பெற்ற அனுபவங்களை, சந்தித்த மனிதர்களை  ஒரு கதை சொல்லியாக ஆவூரான் சித்திரிக்கிறார்.

தமிழ் மாத்திரமே பேசத்தெரிந்தவனாக சிறைசென்ற  சின்னான்,  அங்கிருந்து சிங்களம் பேசவும், எழுதவும் இயன்றவனாக ஊருக்குத் திரும்புகின்றான்.

 நெடுந்தீவில் வந்திறங்கும்போது, பல மாற்றங்களை பார்க்கின்றான்.  அவன் பற்றி அறிந்த ஒரு தமிழ்ப் பத்திரிகை நிருபரும்,  ஒரு  சிங்களப் பெண்பொலிஸ் கான்ஸ்டபிளும் அவன் மீது கருணை காண்பிக்கின்றனர்.

எனினும், சின்னான் சிறை செல்வதற்கு காரணமாக இருந்த ஆலய தர்மகர்த்தாவும் அவரது குடும்பத்தினரும், அவனை  அந்த ஊரைவிட்டே  ஒதுக்கும் எண்ணப்பாங்குடனேயே செயல்படுகின்றனர்.

பெற்றோரை, சகோதரங்களை இழந்து தனிமரமாகிவிடும், சின்னான், அந்த சமூகத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் தனது பயணத்தை தொடருகின்றான்.

மேலும் விரிவாகப்பேசவேண்டிய கதைக்களம், 72 பக்க குறுநாவலாகியிருக்கிறது.

கே. டானியல் தமது பஞ்சமர் நாவலை முதலில் எழுதினார். மேலும் அதன் தேவையை உணர்ந்து, பஞ்சமர் – இரண்டாம் பாகம் எழுதநேர்ந்தது.

தற்போது இரண்டு பாகங்களும் இணைந்த முழுத்தொகுப்பு வாசிக்க கிடைக்கிறது.

அவ்வாறே எதிர்காலத்தில், சின்னான் குறுநாவலின் கதை இரண்டாம் பாகத்திலும் தொடருமா என்பது தெரியவில்லை.

 

சின்னான் பிரதிகளுக்கு: aavuraan.au@gmail.com

( நன்றி:  கனடா தாய்வீடு மார்ச் 2023 இதழ் )

---0---

                                                               



 

 

 

 

No comments: