வையத்துள் வாழ்வாங்கு வாழ பலவுரைத்தார் !


மகாதேவ ஐயர்   ஜெயரமாசர்மா

மேனாள்தமிழ்மொழிக்கல்வி இயக்குநர்  
மெல்பேண் ….  அவுஸ்திரேலியா நல்லறத்தை நன்னெறியை நாமுணர வைப்பதற்கு
வள்ளுவனார் உவந்தளித்த  நல்வரமே குறளாகும்
சொன்னயமும் பொருணயமும் எமக்கீயும் நன்னூலாய்
எஞ்ஞான்றும் விளங்குவது எங்கள் திருக்குறளாகும் 

ஆயிரத்து முன்னூற்று முப்பதென்ப தெண்ணல்ல 
அத்தனையும் அனைவருக்கும் வாய்த்தபெரு பொக்கிஷமே 
ஈராயிரம் வருடம் நிலைத்திருந்து  இம்மண்ணில் 
பேரொளியாய் திகழுவது வள்ளுவத்தின் பெருமையன்றோ 

தமிழன்னை பெற்றெடுத்த தவப்புதல்வர் பலராவர்
அனைவருமே அன்னைக்கு ஆசைமிகு புத்திரரே 
என்றாலும் வள்ளுவரை எம்மன்னை அணைத்திடுவாள்
வள்ளுவரால் தமிழமுது  வானளவும் சென்றதுவே 

இல்லறத்தைச் சொன்னார் துறவறத்தைச் சொன்னார்
நல்லறத்தை அதனூடாய் நயமுடனே பயந்தார்
சொல்லறத்தை வள்ளுவத்தின் உயிராக்கி நின்றார்
சுவையோடு கருத்துரைத்து வள்ளுவத்தை ஈந்தார் 

எதுவுரைத்த போதும் அதுவாகி நின்றார்
எவருணர்வும் நோகா கருத்துரைக்க நினைத்தார்
நினைத்த கருத்தை  நீதியாய் உரைத்தார்
நிலையாக நிற்கும்படி வள்ளுவத்தைக் கொடுத்தார்

அன்னைக்கும் சொன்னார் அப்பனுக்கும் சொன்னார்
அவரீன்ற பிள்ளைகட்டும் அருமையாய் சொன்னார் 
கல்லென்று சொன்னார் நடவென்று சொன்னார் 
கல்லாமல் இருந்தால் கண்ணில்லை என்றார்

கற்றுவிட்டால் எழுமைக்கும் துணையாகு மென்றார்
கல்லாமை யாவருக்கும் பொல்லாமை என்றார்
கற்றுவிடு கற்றுவிடு எனவுரைத்து நின்றார்
கடவுளடி பற்றுவதே கற்றபயன் என்றார் 

சினமடக்கு என்றார் தீயசெயல் கடிந்தார்
தனக்குவை இல்லான் தாழ்சேரு என்றார்
மனக்கவலை மாற்ற மருந்துபல சொன்னார்
வையத்துள் வாழ்வாங்கு வாழ பலவுரைத்தார் 

நன்மைதரும் இன்சொல்லை நாடுவெனச் சொன்னார்
நலனற்ற சொல்லனைத்தைம் கேடுவென வுரைத்தார் 
இனிமையுடன் பேசுவதே இன்பமெனச் சொன்னார்
இவையனைத்தும் வள்ளுவத்தின் உயிர்மூச்சு என்றார் 

கொல்லாதே என்றார் குடியாதே என்றார் 
கொல்லுவதைத் தின்னுவதை விட்டுவிடு என்றார்
நீவளர உயிர்வதைத்தல் நீதியிலை என்றார்
உயிரோம்பி வாழுதல்தான் உயர்வாழ்வு என்றார் 

புத்துணர்வுக் கருத்துக்களை பொறுப்புடனே சொன்னார்
புலனெல்லாம் தூய்மைபெற பொருத்தமாய் புகன்றார்
பொருத்தமில்லா கருத்துக்களைப் புறந்தள்ளி நின்றார்
புவிவாழ பொருந்துவதை வள்ளுவமாய் கொடுத்தார் 

No comments: