சோதனை மேல் சோதனை 13 இற்கு வந்த சோதனை !? அவதானி

ஆறறிவு படைத்த மனிதர்களில்  பலர்  13 ஆம் இலக்கத்தை


துரதிர்ஷ்டமானது எனக் கருதுவார்கள்.  சில வெளிநாடுகளில் இருக்கும் உல்லாசப் பயணிகள் விடுதியில் 13 ஆம் இலக்க அறையும் இல்லை.

சில நாடுகளில் 13 ஆம் திகதி வெள்ளிக்கிழமைகளில் வந்தால், அதனை கறுப்பு வெள்ளி என நம்பிக்கொண்டு வேலைக்குச் செல்வதை தவிர்த்துவிடுபவர்கள் பற்றியும் அறிந்திருக்கின்றோம்.

இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் உருவாக்கப்பட்ட 13 ஆவது திருத்தச்சட்டம் கடந்த 1987 ஆம் ஆண்டு முதல் இற்றைவரையில் இலங்கை அரசியல் அரங்கில் தொடர்ந்தும் விவாதிக்கப்படும் பேசும் பொருளாகியிருக்கிறதே தவிர,  உருப்படியாக எதுவும் நடந்திருப்பதாகத் தெரியவில்லை. இந்த இலட்சணத்தில் 13 + ( பதின்மூன்று பிளஸ் ) என்றும் பேசத் தொடங்கியிருக்கிறார்கள்.

இந்தப்பதிவில் இடம்பெறும் வரலாற்று முக்கியத்துவம் மிக்க படத்தை எமது வாசகர்கள் எத்தனை தடவைதான் பார்த்திருப்பார்கள். இதில் இடம்பெற்றுள்ள இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி, இலங்கை ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்தனா, அமைச்சர்கள் காமினி திசாநாயக்கா, ஏ.ஸி. எஸ். ஹமீத் இந்திய வெளிவிவகார அமைச்சர் நரசிம்மராவ், ஜே.ஆரின் சகோதரர் எச். டபிள்யூ. ஜெயவர்தனா ஆகியோர் தற்போது உயிரோடு இல்லை.

இந்த ஒப்பந்தத்தை அன்று எதிர்த்த ரணசிங்க பிரேமதாசவும் இன்றில்லை.  இவர்கள் மட்டுமன்றி, சுதுமலையில்  அப்போது மக்கள் முன்தோன்றி ஆயுதங்களை கீழே வைப்பதாகச் சொன்ன வேலுப்பிள்ளை பிரபாகரனும், கேர்ணல் கிட்டுவும் மற்றும் ஒரு  தரப்பிலிருந்த ஈ.பி. ஆர். எல். எஃப். செயலாளர் நாயகம்  பத்மநாபாவும்,  தமிழ்த்தலைவர்கள் அமிர்தலிங்கமும், யோகேஸ்வரனும்  இன்றில்லை.  

இந்த வருடம் செப்டெம்பர் மாதம் 29 ஆம் திகதி வந்தால், குறிப்பிட்ட இலங்கை -இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு 36 வருடங்களாகின்றன.

1987 ஆம் ஆண்டு பிறந்த தமிழ் – சிங்கள – முஸ்லிம் குழந்தைகளும்  வளர்ந்து படித்து வேலை வாய்ப்பு பெற்று மணம் முடித்து பிள்ளைகளும் பெற்றுவிட்டனர்.

ஆனால், அன்று பிறந்த ஒப்பந்தம் இன்றும் அந்த இடத்திலேயே தவித்துக்கொண்டு நிற்கிறது.  ஆனால், அதனைப்பற்றிப் பேசிப் பேசிய பலரும் சலிப்பின்றி அரசியல் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

கடந்த 36 வருட காலத்திற்குள் இலங்கை அரசியலில் பல மாற்றங்கள் நேர்ந்துவிட்டன. அவ்வாறு மாற்றங்கள் நிகழும்போதெல்லாம் எமது அனைத்து அரசியல் தலைவர்களும் கையில் தூக்கிப்பிடித்துப் பேசுவது இந்த 13 ஆவது திருத்தச் சட்டத்தைத்தான்.

அன்று வடக்கும் – கிழக்கும் இணைந்த மகாணசபை திருகோணமலையை தலைமையகமாக வைத்து இயங்கத்தொடங்கியது. அந்த ஒப்பந்தத்தை கடுமையாக எதிர்த்தவரான  பின்னர் வந்த ஜனாதிபதி பதவிக்கு வந்த ரணசிங்க பிரேமதாச,  விடுதலைப்புலிகளை My Boys என விளித்து,  வரவேற்று கொழும்பில் உல்லாசப்பயணிகள் விடுதியில் தங்க வைத்து உபசரித்து, பணமும் ஆயுதங்களும் வழங்கி ஆதரித்து தனது வழிக்கு இழுக்க முனைந்தார்.

இறுதியில் அவர் 1993  ஆண்டு மே மாதம் 01 ஆம் திகதி கொழும்பில் நடந்த மேதின ஊர்வலத்தில் ஒரு தற்கொலைதாரியினால் கொல்லப்பட்டார்.

அதற்கு முன்னர் 1991 ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் திகதி தமிழ்நாடு ஶ்ரீபெரும்புதூரில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தின்போது மற்றும் ஒரு தற்கொலை குண்டுதாரியினால்  ராஜீவ் காந்தியும் கொல்லப்பட்டார்.

ஜே. ஆர். ஜெயவர்தனா மேற்குறிப்பிட்ட இருவருக்கும் பின்னர் 1996 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 01 ஆம் திகதி இயற்கையாகவே மரணம் எய்தினார்.

இவ்வளவுபேரும் அந்த இலங்கை – இந்திய ஒப்பந்தத்துடன் சம்பந்தப்பட்டிருந்தவர்கள்தான். அன்று அதனை ஆதரித்தவர்களும் தற்போது இல்லை, எதிர்த்தவர்களும் தற்போது இல்லை.

ஆனால், ஏட்டில் எழுதப்பட்டு அரசியல் சட்டத்தில் இணைக்கப்பட்ட அந்த 13 ஆவது திருத்தம் மாத்திரம் ஏட்டுச்சுரக்காய் போன்று இன்னமும்  வாழ்ந்துகொண்டிருக்கிறது.

பதினெட்டுக்கும் மேற்பட்ட பிரிவுகள் – உப பிரிவுகள் கொண்ட இந்த ஒப்பந்தத்தின் சாராம்சம் இதுதான்:  

இலங்கையின் ஐக்கியம், இறைமை, பிராந்திய ஒருமைப்பாடு ஆகியவற்றைப் பேணிக்காத்தல்.

இலங்கை,  சிங்களவர், தமிழர், முஸ்லீம்கள், பறங்கியர் ஆகியோரைக் கொண்ட பல்லின, பன்மொழி சமூகங்கள் வாழும் நாடு என்பதை ஏற்றல்.

கவனமாகப் பேணிக் காப்பாற்ற வேண்டிய தனித்தனிக் கலாசாரம்,மொழி அடையாளங்களை ஒவ்வொரு இனமும் கொண்டுள்ளதென்பதை ஏற்றுக்கொள்ளல்,

வடக்கு -  கிழக்கு மாகாணங்கள் அங்கு ஏனைய இனக்குழுக்களுடன் எல்லாக் காலத்திலும் ஒன்றாக வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழ் பேசும் மக்களின் வரலாற்றுப்பூர்வமான வசிப்பிடங்கள் என்பதை  அங்கீகரித்தல்.

இலங்கையின் ஐக்கியம், இறைமை, பிரதேச ஒருமைப்பாடு ஆகிய அம்சங்களைப் பலப்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்ந்த சகல பிரஜைகளும் சமத்துவமாகவும், பாதுகாப்பாகவும், ஒற்றுமையாகவும் சுபீட்சத்துடன் தங்கள் அபிலாசைகளை நிறைவேற்றி வாழும் பல இன, பல மொழி பேசும் பல மதங்களைக் கடைப்பிடிக்கும் தன்மையைப் பேணுதல் முதலான தீர்மானங்களுடன், கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தில் மேலதிக உடன்படிக்கைகளும் இருந்தன.

வடக்கு – கிழக்கு இணைந்த மாகாண சபை முறைமை இல்லாது ஒழிக்கப்பட்டது.

பின்னர் ஒன்பது மாகாணங்களுக்கும் தேர்தல்கள் நடந்து மாகாண சபைகள் இயங்கின. அவற்றுக்கு ஆளுநர்களும் நியமனமானார்கள்.

கலைக்கப்பட்ட இந்த மாகாண சபைகளுக்கான தேர்தலும் நீண்டகாலமாக நடைபெறவில்லை.  வடக்கின் முதல்வர்  பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் பெற்றுவிட்டார். கிழக்கு முதல்வர் அமைச்சராகிவிட்டார்.

பின்கதவால் பாராளுமன்றம் வந்து, தற்போது ஜனாதிபதியாகியிருக்கும் ரணில் விக்கிரமசிங்கா, குறிப்பிட்ட 13 ஆவது திருத்தச்சட்டத்தை நிறைவேற்றுவேன் எனச்சொன்னதும் பௌத்த பிக்குகளும் கடும்போக்காளர்களும் அதனை மூர்க்கத்தனமாக எதிர்க்கத் தொடங்கியுள்ளனர்.

வடக்கிற்கும் கிழக்கிற்கும் பொலிஸ் அதிகாரம், காணி அதிகாரம் வேண்டும் என்று தமிழ்த் தேசியக்கட்சிகள் குரல் எழுப்புகின்றன.

மலையகத் தமிழர்களை கைவிட்டு விடாதீர்கள் என ஒரு திசையிலிருந்து குரல் எழுகிறது.

கிழக்கின் முஸ்லிம்களுக்கு தனி நிருவாக அலகு வேண்டும் என்ற குரலும் ஒலிக்கிறது.

பாவம் அந்த  பதின்மூன்று !  போக்கிடமின்றி பிறந்த இடத்திலேயே நிற்கிறது.

தேர்தல் வாக்குப்  பெறுவதற்கு இந்த பதின்மூன்று துருப்புச்சீட்டாகிவிட்டது.  அதிர்ஷ்டம் கெட்ட 13 இற்கு பெயர்ச்சியோ – விமோசனமோ இல்லையா…?

---0---

 

  

 

No comments: