இலங்கைச் செய்திகள்

 யாழ். சர்வதேச வர்த்தக சந்தை கண்காட்சி இன்று ஆரம்பம்

இந்திய ரூபாவின் பயன்பாடு இலங்கையின் பொருளாதார மீட்சிக்கும் வளர்ச்சிக்கும் உதவும்

 IMF பிரதானி கிறிஸ்டலினா ஜோஜிவா - ஜனாதிபதி இடையே தீர்மானமிக்க கலந்துரையாடல்

திருகோணமலை IOC எண்ணெய் தாங்கிகள் மற்றும் களஞ்சிய முனையத்திற்கு ஜனாதிபதி கண்காணிப்பு விஜயம்

உள்ளூராட்சித் சபைத் தேர்தலுக்கான நிதி இடைநிறுத்தப்படுவதை தடுத்து இடைக்கால உத்தரவு


யாழ். சர்வதேச வர்த்தக சந்தை கண்காட்சி இன்று ஆரம்பம்

- வட மாகாண ஆளுநரால் திறந்து வைப்பு

"வடக்கின் நுழைவாயில்” சர்தேச வர்த்தக சந்தை கண்காட்சி 13ஆவது தடவையாக இன்றைய தினம் (03) வெள்ளிக்கிழமை  யாழப்பாணத்தில் ஆரம்பமாகியது.

யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தக சந்தை இன்றைய தினம் (03) வெள்ளிக்கிழமை தொடக்கம் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை (05) வரையிலான மூன்று தினங்கள் நடைபெறவுள்ளது.

கண்காட்சி கூடத்தினை வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா நாடா வெட்டி திறந்து வைத்தார்.

கொழும்பின் பிரபல வர்த்தக நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் உற்பத்தியாளர்களையும் இணைத்து யாழ்ப்பாணத்தில் இந்த சந்தை நடைபெறுகிறது.

சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் தமது உற்பத்திகளை தெற்கு தொழில் முயற்சியாளர்களுடன் இணைந்து தமது உற்பத்திகளை சந்தைப்படுத்துவதற்கும் தொழில் நுட்பரீதியில் தொடர்புகளை வளர்த்துக் கொள்ளவும் உதவியாக இருக்கும்.

பல வருடகாலமாக வடக்கின் கைத்தொழில் துறை வளர்ச்சி மற்றும் சந்தைவாய்ப்பில் இருந்த பாரிய இடைவெளிகள் ஒவ்வொரு வருடமும் நடாத்தப்படும் கண்காட்சிகள் மூலம் குறைக்கப்பட்டுள்ளது.

250 கண்காட்சிக் கூடங்கள் அமைக்கப்படவுள்ள நிலையில் கண்காட்சியில் பங்குபற்றுவதற்காக சுமார் 15 ஆயிரம் பேர் வந்திருக்கிறார்கள்.

சுமார் 45 ஆயிரம் தொடக்கம் 50 ஆயிரம் பேர் வரை பார்வையாளர்கள் வருவார்கள் என எதிர் பார்க்கிறோம்.

பாடசாலை சீருடையுடன் வருகைதரும் மாணவர்கள் குறித்த கண்காட்சியை இலவசமாகப் பார்வையிடுட முடியும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். 

யாழ். விசேட நிருபர்

நன்றி தினகரன்    






இந்திய ரூபாவின் பயன்பாடு இலங்கையின் பொருளாதார மீட்சிக்கும் வளர்ச்சிக்கும் உதவும்

இந்தியா இலங்கை இடையிலான பொருளாதார பரிவர்த்தனைகளுக்காக இந்திய ரூபாவினைப் பயன்படுத்துவது குறித்த கலந்துரையாடலொன்று கடந்த வியாழக்கிழமை (02) இந்திய உயர் ஸ்தானிகராலயத்தால் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.

இலங்கை வங்கி, ஸ்டேட் பாங்க் ஒப் இந்தியா, மற்றும் இந்தியன் வங்கி ஆகியவற்றின் பிரதிநிதிகள் தமது அனுபவங்களை இங்கு பகிர்ந்துகொண்டதுடன் இலங்கை மத்திய வங்கி மற்றும் இந்திய ரிசேர்வ் வங்கி ஆகியவற்றால் 2022 இல் வழங்கப்பட்ட நடைமுறைப்படுத்தல் கட்டமைப்பின் அடிப்படையில் Vostro/Nostro கணக்குகள் ஊடாக இந்திய ரூபா அடிப்படையிலான வர்த்தக பரிவர்த்தனைகளை தாம் ஏற்கனவே ஆரம்பித்திருப்பதாக இவ்வங்கிகள் இங்கு தெரிவித்திருந்தன.

குறுகிய காலக்கெடு, குறைந்த பரிமாற்ற கட்டணங்கள், இலகுவான வர்த்தக கடன் வசதிகள் ஆகியவை உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் இந்திய ரூபா மூலமாக மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகள் மூலமாக கிடைக்கப்பெறுகின்றமை குறித்து இந்நிகழ்வில் பங்கேற்றிருந்த வங்கிகளால் கூறப்பட்டிருந்தது. வருமான அறவிட்டினை அதிகரிக்க உதவுவதில் அதன் பங்கு உட்பட சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறைகளில் இந்த முன்முயற்சி காரணமாக ஏற்பட்டுள்ள  நன்மைகள் மற்றும் பல்வேறு அம்சங்கள் குறித்தும் இத்திட்டத்தினை ஏனைய துறைகளில் பயன்படுத்துதல் குறித்தும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

இந்த நிகழ்வில் இந்திய ரிசேர்வ் வங்கியின் அதிகாரிகளும் மெய்நிகர் மார்க்கம் மூலமாக பங்கேற்றிருந்ததுடன் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள மூலதன கணக்கு பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் தெரிவுக்கு புறம்பாக பொருட்கள் மற்றும் சேவைகளுக்காக நடைமுறைக் கணக்குகளையும் இந்திய ரூபாவினைப் பயன்படுத்தி மேற்கொள்வதற்கான சாத்தியங்கள் குறித்து சுட்டிக்காட்டியிருந்தனர். இலங்கை மத்திய வங்கியுடனான நெருக்கமான ஒத்துழைப்பினையும் வலியுறுத்திய இந்திய ரிசேர்வ் வங்கி அதிகாரிகள், இந்த செயற்பாடுகளை மேலும் ஒழுங்கமைப்பதற்காக இந்திய ரிசேர்வ் வங்கியானது அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டனர்.

இதேவேளை இங்கு உரை நிகழ்த்தியிருந்த நிதித்துறை இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, இலங்கைக்காக சர்வதேச நாணய நிதியத்திடம் இந்தியா வழங்கிய வலுவான உத்தரவாதம் உட்பட கடந்த வருடம் இந்தியாவால் இலங்கைக்கு வழங்கப்பட்ட நிதி ரீதியான மற்றும் மனிதாபிமான அடிப்படையிலான ஆதரவினையும் இரு நாடுகளுக்கும் இடையிலான நெருக்கமான பொருளாதார ஒத்துழைப்பினையும் பாராட்டியிருந்தார்.

இங்கு உரை நிகழ்த்திய இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, இந்திய ரூபாயில் வர்த்தக ரீதியிலான பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்கு இலங்கை மற்றும் இந்திய வர்த்தக சமூகத்தினர் மத்தியில் காணப்படும் வலுவான கோரிக்கைகள் குறித்து குறிப்பிட்டிருந்தார். அத்துடன் நடைமுறைக் கணக்கு மற்றும் முழு அளவிலான மூலதன கணக்கு ஆகியவற்றின் பரிமாற்றங்களுக்காகவும் இந்த வசதியினை விஸ்தரிப்பதற்கும் அவர் இந்தச் சந்தர்ப்பத்தில் அழைப்பு விடுத்திருந்தார்.

இந்நிகழ்வில் 300 இற்கும் அதிகமானோர் நேரடியாக பங்கேற்றிருந்த அதே சமயம் பலர் இணைய ரீதியாகவும் இணைந்து கொண்டிருந்த நிலையில் இந்தியா மற்றும் இலங்கையிருந்தும் பல்வேறு துறைகளையும் சேர்ந்த முக்கியஸ்தர்கள் இந்நிகழ்வில் பங்கு பெற்றிருந்தமையை மத்திய வங்கியின் ஆளுநர் பாராட்டியிருந்தார்.

வர்த்தக மற்றும் முதலீட்டு நடவடிக்கைகளை முதன்மையாகக் கொண்ட செயற்பாடுகள் மூலமாக இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவானதும் நெருக்கமானதுமான பொருளாதார ஒத்துழைப்பினை கட்டி எழுப்புவதற்கான கூட்டு முயற்சிகளில் இந்த முன்னெடுப்பானது சாதகமான தாக்கத்தினை ஏற்படுத்துமென இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே சுட்டிக்காட்டியிருந்தார். அத்துடன் இரு நாடுகளுக்கும் இடையிலான டிஜிட்டல் முறையிலான கொடுப்பனவுகள், இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார நட்புறவினை மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள்,  டிஜிட்டல் கொடுப்பனவுத் துறையில் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான ஒத்துழைப்பு மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவை மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் அவர்  இங்கு எடுத்துரைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது

இந்தக் கலந்துரையாடலில் இலங்கை மத்திய வங்கியின் உயரதிகாரிகள், இலங்கை அரசாங்கத்தைசேர்ந்த அதிகாரிகள், சுற்றுலாத்துறை, ஊடகத்துறை மற்றும் வங்கித்துறையைச் சேர்ந்த அதிகாரிகள், பொருளாதார நிபுணர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலர் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி பங்கேற்றிருந்தனர்.

இதேவேளை இந்திய ரிசர்வ் வங்கியின் அதிகாரிகள், இந்திய அரசாங்கத்தை சேர்ந்த உயரதிகாரிகள், வர்த்தக மற்றும் உற்பத்தித் துறை சார்ந்த சங்கங்களின் பிரதிநிதிகள், ஏற்றுமதி ஊக்குவிப்பு சபைகளின் உயரதிகாரிகள் உள்ளிட்டோர் மெய்நிகர் மார்க்கமூடாக இந்தியாவிலிருந்து பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.   நன்றி தினகரன் 





IMF பிரதானி கிறிஸ்டலினா ஜோஜிவா - ஜனாதிபதி இடையே தீர்மானமிக்க கலந்துரையாடல்

- இலங்கை கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சாதகமான பின்னணி

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கும் இடையில் நேற்றுமுன்தின் (02) இரவு, Zoom ஊடாக விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

இலங்கை எதிர்பார்க்கும் சர்வதேச நாணய நிதியத்தின் நிதி வசதிகள் மற்றும் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இங்கு  விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

தற்போது, இலங்கையின் கடன் மறுசீரமைப்பு மற்றும் நிதி வசதி தொடர்பில்,  அனைத்து தரப்பினரினாலும் சாதகமான மற்றும் நம்பிக்கையான பின்னணி உருவாக்கப்பட்டு வருகின்றது.அண்மையில் சீனப் பிரதமருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர், சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் ஜனாதிபதியுடன் இந்தக் கலந்துரையாடலை நடாத்தியுள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

அதேபோன்று, கடனில் சிக்கியுள்ள நாடுகளுக்கு அர்த்தமுள்ள வகையில் பங்களிப்பதற்காக, பலதரப்பு முயற்சிகளில் பங்கேற்க சீனா தயாராக உள்ளதாக சீனப் பிரதமர் லீ க-சியாங் ( Li Keqiang) சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளரிடம் தெரிவித்துள்ளதாக அண்மையில், “ப்ளூம்பேர்க்' (Bloomberg) செய்திச் சேவை, செய்தி வெளியிட்டிருந்தது.

இலங்கை, பாகிஸ்தான் போன்று, கடனில் சிக்கியுள்ள நாடுகளுக்கு ஒன்றிணைந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குத் தேவையான பணிகளை மேற்கொள்வதாக அதன் போது மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   நன்றி தினகரன் 






திருகோணமலை IOC எண்ணெய் தாங்கிகள் மற்றும் களஞ்சிய முனையத்திற்கு ஜனாதிபதி கண்காணிப்பு விஜயம்

- நெருக்கடியான காலத்தில் நாட்டின் எரிபொருள் விநியோகத்தை முறையாகப் பேணியமைக்கு ஜனாதிபதி பாராட்டு

பல தசாப்தங்களாக பயன்படுத்தப்படாத எண்ணெய் தாங்கிக் கட்டமைப்பை நவீனமயப்படுத்தி, திருகோணமலை அபிவிருத்தி வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க நடவடிக்கை

திருகோணமலை எண்ணெய் தாங்கி கட்டமைப்பை மீண்டும் செயற்படுத்தி தேசிய பொருளாதாரத்துடன் இணைப்பதற்கான துரித வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பொறுப்பான அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

இன்று (03) முற்பகல் திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் வளாகம், இந்தியன் ஒயில் நிறுவன  எண்ணெய் தாங்கிகள் மற்றும்  களஞ்சிய முனையத்திற்கு கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்டபோதே, ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.

பல தசாப்தங்களாக பயன்படுத்தப்படாத திருகோணமலை எண்ணெய் தாங்கிக் கட்டமைப்பை நவீனமயப்படுத்தி, திருகோணமலை அபிவிருத்தி வேலைத்திட்டத்தை துரிதப்படுத்த வேண்டியதன் அவசியத்தையம் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

திருகோணமலை இந்தியன் ஒயில் நிறுவனத்தின் எண்ணெய் தாங்கிகள் மற்றும் களஞ்சிய முனையத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை முகாமைத்துவப் பணிப்பாளர் மனோஜ் குப்தா வரவேற்றார்.

அவற்றின் செயற்பாடுகளை பார்வையிடச் சென்ற ஜனாதிபதிக்கு, அந்த முனையத்தின் செயற்பாடுகள் தொடர்பிலும் சுருக்கமாக விளக்கமளிக்கப்பட்டது.

இந்தியன் ஒயில் நிறுவனத்தின் மசகு எண்ணெய் கலக்கும் ஆலையையும் ஜனாதிபதி  பார்வையிட்டதுடன், வருடத்திற்கு 18000 கிலோ லீற்றர் கொள்ளளவைக் கொண்டுள்ள இந்த ஆலை மூலம் நாட்டின் மசகு எண்ணெய் தேவை பூர்த்தி செய்யப்படுகின்றது.

எண்ணெய்க் களஞ்சிய முனையத்தில் அமைந்துள்ள அதிநவீன ஆய்வு கூடத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி, அதன் செயற்பாடுகளை பார்வையிட்டதுடன், அண்மையில்  மேம்படுத்தப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட இலங்கையின் முதலாவது உள்நாட்டு கிரீஸ் உற்பத்தி ஆலையையும் பார்வையிட்டார்.

வருடாந்தம் 3000 மெற்றிக் டொன் கொள்ளளவைக் கொண்ட இந்த கிரீஸ் உற்பத்தி ஆலையானது இந்நாட்டின் மொத்த கிரீஸ் தேவையையும் பூர்த்தி செய்வதோடு தற்போது கிரீஸ் இறக்குமதிக்காக செலவிடப்படும் அந்நியச் செலாவணியைச் சேமிக்கும் திறனையும் கொண்டுள்ளது.

நாட்டின் வலுசக்தித் தேவைகள் எப்பொழுதும் திறம்படப் பூர்த்தி செய்யப்படுவதை உறுதிசெய்து, எல்லா நேரங்களிலும் தொடர்ச்சியாகச் செயற்படும் இந்தியன் ஒயில் நிறுவனத்தின் பவுசர் நிரப்பு வளாகத்தின் வசதிகளையும் ஜனாதிபதி பார்வையிட்டார்.

பின்னர் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா ஐஓசி நிறுவனம் இணைந்து  முன்னெடுக்கும் 61 எண்ணெய் தாங்கிகளை உள்ளடக்கிய மேல் தாங்கி வளாகத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி அதன் செயற்பாடுகளையும் பார்வையிட்டார்.

இதேவேளை, இரண்டாம் உலகப் போரின் போது குண்டுத் தாக்குதலுக்கு உள்ளான எண்ணெய் தாங்கி வளாகத்தையும்   ஜனாதிபதி  பார்வையிட்டார்.

நெருக்கடியான காலப்பகுதியில் நாட்டின் எரிபொருள் விநியோகத்தை முறையாகப் பேணுவதற்கு இந்தியன் ஒயில் நிறுவனம் ஆற்றிய அர்ப்பணிப்பை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராட்டியதுடன், ஜனாதிபதியின் வருகையை நினைவுகூரும் வகையில்  அவருக்கு நினைவுப் பரிசு ஒன்றும் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, இராஜாங்க அமைச்சர்களான பிரமித பண்டார தென்னகோன், டி.வி.சானக்க, பாராளுமன்ற உறுப்பினர் கபில அத்துகோரள, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, இந்தியன் ஒயில் நிறுவனத்தின் சிரேஷ்ட உப தலைவர் பி. முகர்ஜி, உப தலைவர் பி.கே.மண்டல், முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தன உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.    நன்றி தினகரன் 







உள்ளூராட்சித் சபைத் தேர்தலுக்கான நிதி இடைநிறுத்தப்படுவதை தடுத்து இடைக்கால உத்தரவு

2023 வரவு செலவுத் திட்டத்தில் தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை எவ்வித தடையுமின்றி விடுவிக்குமாறு, நிதி அமைச்சின் செயலாளர் மற்றும் சட்ட மா அதிபருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 2023 வரவு செலவுத் திட்டத்தில் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை இடைநிறுத்தி வைப்பதற்கு எதிராக, உயர் நீதிமன்றம் குறித்த இடைக்கால தடையுத்தரவை பிறப்பித்துள்ளது.

தேர்தலுக்கு நிதி வழங்கக் கோரி, ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவினால் தாக்கல் செய்யப்பட்ட குறித்த மனுவை பரிசீலிக்க அனுமதி வழங்கப்பட்டதை அடுத்து இந்த இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு உயர் நீதிமன்ற நீதியரசர்களான பீ. பத்மன் சூரசேன, ஜனக் டி சில்வா, பிரியந்த ஜயவர்தன ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே குறித்த உத்தரவு வழங்கப்பட்டது.

அத்துடன், வாக்குச் சீட்டு அச்சடிக்க அரச அச்சகத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியை நிறுத்தி வைப்பதைத் தடுக்கும் மற்றொரு இடைக்கால உத்தரவையும் உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

குறித்த மனுவின் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்த நிதியமைச்சின் செயலாளர் மற்றும் ஜனாதிபதி சார்பில் சட்டமா அதிபர் ஆகியோருக்கு இத்இடைக்கால உத்தரவை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

குறித்த மனு பரிசீலனை எதிர்வரும் மே 26ஆம் திகதி மீண்டும் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.   நன்றி தினகரன் 






No comments: