வள்ளுவம் காட்டும் பன்முகம்


மகாதேவ ஐயர் 
ஜெயராமசர்மா 

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் .. அவுஸ்திரேலியா 

                  

 

    உலகில் பல மொழிகள் இருந்த போதிலும் தமிழ் மொழிக்கு பல


சிறப்புகள் இருக்கின்றன. 
அந்தச் சிறப் புக்களில் முக்கியமானது " திருக்குறள் தமிழில் அமைந்திருப்பதே என்பதைக் கட்டாயம் குறிப்பிட்டே ஆக வேண்டும். தமிழுக்குக் " கதி " எவை என்ற வினாவுக்குக் கம்பராமாயணமும் , திருக்குறளும் என்றுதான் பலரும் விடை சொல்லுவதுண்டு.இங்கே சற்றுச் சிந்திக்க வேண்டியுள்ளது. கம்பரது இராமாயணம் சமூக த்தில் பல மாற்றங்களுக்கு வித்திட்டாலும் திருக்குறளின் இடத்தைத் தொட்டுவிடமுடியாது.

    திருக்குறள் - மதம் சார்ந்தது அல்ல.மொழியைப் பற்றிக் கூறுவதும்

அல்ல.இனம் சார்ந்ததும் அல்ல. 
" இறைவன் மனிதனுக்குக் கூறியது பகவத் கீதை.மனிதன் இறைவனுக்குக் கூறியது திருவாசகம். மனிதன் மனிதனுக்குக் கூறியதுதான் திருக்குறள்." இதனால் திருக்குறள் மனித மேம்பாட்டை மனத்தில் கொண்டு வையத்துள் வாழ்வாங்கு வாழும் வண்ணத்தைக் காட்டுவதற்காகவே வந்த நூலெனலாம்.

    சமணர் தமதென்பார்.பெளத்தர் தமதென்பார்.சைவரும் விட்டாரில்லை. கிரிஸ்தவ, இஸ்லாமிய கருத்து க்களும் வள்ளுவத்தில் இருக்கிறதென்று .. அவர்களும் விட்ட பாடில்லை.மொத்தத்தில் யாவரும் தமக்குரி யதே என்று உரிமை எடுக்கும் அளவுக்குத் திருக்குறள் கருத்துக்கள் அமைந்திருக்கின்றன என்பது இதினி ன்றும் புலப்படுகிறதல்லவா?

     திருக்குறள் எண்பது மொழிகளில் மொழி பெயர்க்கப் பட்டிருக்கின்றது.கிறீஸ்தவ மதநூலான பைபி ளுக்கு அடுத்த நிலையில் உலகமொழிகளில் மொழிபெயர்ப்புக்கு உட்பட்டது " திருக்குறள் "  என்கின்ற பொழுதே அதனுடைய பெறுமதி தெள்ளெனத் தெரிகிறதல்லவா.

      திருக்குறள் கருத்துக்கள் எக்காலத்துக்கும் பொருந்தும் வகையில் கூறப்பட்டிருக்கின்றன. திருக்குற ளுக்குப் பலர் தெளிவுரைகள், விளக்கவுரைகள் , என்று எழுதி இருக்கிறார்கள். உரை எழுதுகின்றவர்கள் சிந்தனையை ஒட்டியதாகவே அவர்களால் கூறப்படும் திருக்குறளுக்கான  கருத்துகளும் காணப்படும். அக் கக்ருத்துக்களை எல்லாம் நாம் படித்து விட்டு ..... வள்ளுவர் இப்படியா சொன்னார் என திகைக்கவோ தடுமாறவோ தவறான சிந்தனைகளை மனத்தில் கொள்ளவோ கூடாது.

     இதனையே வள்ளுவரும் அறிந்தாரே என்னவோ தெரியவில்லை

   எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

   மெய்ப்பொருள் காண்ப தறிவு ( 423 ) என்று அப்பொழுதே எழுதிவைத்துவிட்டார்.

   அறம், பொருள். இன்பம், இவை மனிதவாழ்வுக்கு மிகவும் இன்றியமையாதன. அறத்தின் வழியில் வாழ வேண்டும் வாழ்வதற்குப் பொருள் மிகவும் முக்கியமானது. பொருள் நல்லபடி அமைந்தால்த்தான் இன்ப த்தை அனுபவிக்க முடியும்.இவை வாழ்க்கையின் நடைமுறை. இங்கு தான் வள்ளுவரை நாம் பார்க்க வேண்டும்.பொருள் வேண்டும். அந்தப்பொருளையும் அறமான வழியிலே தேடவேண்டும்.அறமான வழி யில் வந்த பொருளைக் கொண்டு அறமான வழியிலேதான் வாழவும் வேண்டும். அப்படிவாழ்ந்து பார்..... வையத்துள் வாழ்வாங்கு வாழுவாய் என்று யாவருக்கும் வள்ளுவம் வழிகாட்டுகிறது.

    இந்த வழிகாட்டல் யாருக்கு என்று வினா எழுப்பினால் .... விடை .. யாவருக்கும் என்பது பொருத்தமாக இருக்கும் என்று எண்ணலாம் தானே ! உலகிலே வாழுகின்ற அனைத்து மனிதர்களுக்கும் இது பொருந் தும் அல்லவா?

   மொழி வேறுபடலாம்.கலாசாரம் வேறுபடலாம்.நாடுகள் வேறுபடலாம் .... ஆனால் வாழ்க்கை என்று வரும்பொழுது அங்கு வள்ளுவரின் எண்ணம் உட்புகுந்தால் நன்மைதானே.இதனை யாவரும் சிந்திப்பது உகந்ததுதானே. 

     திருக்குறளை அறநூல் என்றுமட்டும் எடுத்துக் கொள்ளமுடியாது.அறத்தைமட்டுமே கூறுவதை தலை யாய நோக்கமாகக் கொண்ட நூல்கள் பல இருக்கின்றன. திருக்குறள் அறத்தையும் காட்டுகிறது. அகத்தை யும் காட்டுகிறது. இல்லறம் பற்றியும் சொல்லும் வேளை துறவறவறம் பற்றியும் சொல்லிநிற்கிறது.இல் லாள் பற்றியும் சொல்லுகிறது. இல்லத்திற்குச் செல்வமாக இருக்கும் குழந்தைச் செல்வம் பற்றியும் சொல் லுகின்றது.விருந்தோம்பலின் பண்பினையும் விட்டுவைக்கவில்லை.

     காமம் பற்றி இப்படியும் விளக்கமுடியுமா என்னும் அளவுக்கு வள்ளுவம் விளக்குகிறது.அதே வேளை கூடா ஒழுக்கம் என்றால் என்ன அதனால் ஏற்படும் விளையுகள்தாம் எவை என்பதையும் குறள் பிட்டுப் பிட்டு வைக்கின்றது.ஆட்சி பற்றி சொல்லுவது அத்தனையும் எல்லா அரசுக்கும் நாட்டுக்கும் ஏற்றனவா கவே விளங்குகின்றன எனலாம்.

     இவற்றை நோக்கும் பொழுது திருக்குறள் காலத்துக்கு ஏற்ற குரலாகவும் பன்முகம் கொண்ட  தாக வும் இருக்கிறது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை எனலாம்.

     பன்முகம் என்றால் என்ன ? அட்டாவதானி , சதாவதானி,ன்னும் பதங்களை நாம் கேள்விப் பட்டிரு ப்போம். பலபேருக்குத் தெரிந்தும் இருக்கலாம்.சில பேருக்குத் தெரியாமலும் இருக்கலாம். இந்தவிதமான அவதானங்களைக் கொண்டிருப்போரைச் சமுகமானது ஏற்றிப் போற்றி நிற்பதையும் காணமுடிகிறது. இப் படிப்பட்டவர்கள் எல்லோரையும் விடச் சிறந்த அவதானியாக வள்ளூவரை நாம் பார்க்கின்றோம். வள்ளு வரின் குறளில் கூறப்பட்டுள்ள கருத்துக்கள அவரின் பன்முக ஆற்றலையே எமக்குப் பறைசாற்றி நிற்கி ன்றன என்பதில் எவருமே சந்தேகம் கொள்ளமுடியாது. இதற்கு அவரின் கருத்துக்களே சாட்சியாக வந்து நிற்கும்.

        திருக்குறள் எழுதப்பட்ட காலத்தில் சமயங்கள் பல இருந்திருக்கவேண்டும். பலவிதமான சாதி அமைப்புக்களும்கூட இருந்திருக்கவேண்டும். அதற்குப் பின்னரும் இந்த அமைப்புக்கள் தொடர்ந்தும் இருந்திருக்கின்றன. ஆனாலும் திருக்குறளை யாவரும் ஏற்றுக்கொண்டுதான் இருந்திருக்கிறார்கள் என்பதற்குக் காரணம் திருக்குறளின் பன்முகம் என்றுதான் கூறவேண்டும்.சாதிச்சண்டைகள் சமயச் சண்டைகள் இடம்பெற்ற போதிலும் யார்யாரெல்லாம் பிடுங்குப்பட்டாரோ .... அவர்கள் யாவருமே திருக்குறளை ஒதுக்கிவைக்கவில்ல. சில நூல்களை ஒதுக்கினார்கள். காரணம் ..அவை சாதி , சமய , முலாம் பூசப்பட்டனவாக இருந்தமையெனலாம். ஆனால் திருக்குறள் தான் எழுந்தகாலம் முதல் இன்று வரை சேர்க்கப்படும் நூலாக விளங்குகிறதே அல்லாமல் ஒதுக்கப்படும் நூலாக இருக்கவில்லை என்ப துதான் திருக்குறளின் பன்முகம் எனலாம்.

      திருக்குறளின் முதற் குறளை எடுத்துக்கொள்வோம் ....

  அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

  பகவன் முதற்றே உலகு ( 1 )  
இந்தக்குறளுக்கு உரையாசிரியர்கள் தங்களது சிந்தனைக்கு ஏற்றவகையில் விளக்கங்களை தந்துள்ளா ர்கள். பொதுவான முறையில் இக்குறளை நாம் நோக்கும் பொழுது ..... "எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது." என்று கருத்தை எடுக்கும் பொழுது யாவருக்கும் இக்குறள் பொருத்தமாக இருக்குமல்லவா ? உலக மொழிகளின் எழுத்துக்கள் .. ஆரம்பிக்கும் பொழுது எப்படியும் " அ " என்னும் உச்சரிப்பு வந்து சேரும்.இது அடிப்படை. இந்த அடிப்படை .... உலகத்துக்கும் அடிப்படை கடவுள் என்ற கருத்தும் யாவருக்கும் பொருத்த மானதும் அல்லவா.

    ஐந்து கண்டங்களிலும் வாழுகின்ற அனைத்து மக்களுக்கும் --- இந்தக் குறளும் அது சுட்டி நிற்கும் அடிப்படையும் பொருந்தி வருகிறது அல்லவா?இந்தக்குறளில் எந்த ஒரு சமயத்தையோ அல்லது எந்த ஒரு கடவுளின் பெயரையோ காணமுடியவில்லை. பொதுவாக ஒருநூலை எழுதத் தொடங்கும் தமிழ்க் கவிஞன் ஏதாவது ஒரு முறையில் ஏதோ ஒரு தெய்வத்தை வணங்கியே அந்த நூலை ஆரம்பிப்பது என்பது மரபாகி வந்திருக்கிறது.ஆனால் திருக்குறள் அந்த மரபையே விலக்கிவிட்டு .... உலகம் தழுவிய நோக்கையே உயர்வென எண்ணி இந்தவகையில் அமைந்திருப்பதை நோக்குகின்ற பொழுது ... வள்ளுவ த்தின்  பன்முகம் புலப்படுகின்றதல்லவா ?

      கெடுப்பதூஉங் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே

      எடுப்பதூஉம் எல்லாம் மழை ( 15 ) 
மழை என்பது யாவருக்கும் பொதுவானது. மழைக்கு சாதி,பேத ,இன, மொழி ,தேச , பேதமில்லை. ஆங்கில மழையென்றோ தமிழ் மழையென்றோ சொல்லுவதுண்டா?மழை யென்றால் மழைதான். அந்தமழை பெய்தால் நன்மை.  பெய்யாவிட்டால் பெருநட்டம்.பெய்தாலும் சிலவேளை நட்டம் தான். அதாவது ... பெருமழை பெய்தால் .. வீடழியும் ,நாடழியும் , விளைச்சல்கள் யாவுமே அழியும். அதே நேரம் அறவே மழை பெய்யாது விட்டால் .... நாடழியும் ,விளைச்சல்கள் அழியும் உயிர்களே ஊசலாடும் நிலைகூட வந்துவிடும். இந்த நிலையைத் தீர்மானிக்கும் ஆற்றல் மழைக்கே இருக்கிறது. இதனை காலநிலை ஆய்வாளர்கள் பலர் தமது மண்டையை குழப்பிக்கொண்டிருக்கும் நிலையில் ... அதனைப் பற்றிய கருத்தை மிகவும் சுருக்கமாகவும் அதேவேளை ஆழ்ந்து சிந்திக்கக் கூடியமுறையிலும் சொல்   லிய விதத்தால் வள்ளுவத்தின் பன்முகம் புலப்படுகிறதல்லவா ?

     உலகின் எந்த இடத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் ... யாவருமே தாங்கள் பெரியவராக மதிக்க ப்பட வேண்டும் என்று எண்ணுவது இயல்புதானே.பெரியவர் இருந்தால் .. அவருக்குக் குறைந்தவர் சிறிய வர்தானே. எனவே பெரியவர் , சிறியவர் ,  என்பதை எப்படி மதிப்பீடு செய்வது என்னும் நிலை ஏற்படுகிற தல்லவா? அதற்கு வழிதான் என்ன ?வழியிருக்கிறது .. என்று சொல்லி அதனையும் மிகவும் விளக்கமாகத் தந்துநிற்கிறது திருக்குறள்.

    செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்

    செயற்கரிய செய்கலா தார் ( 26 )  
செய்வதற்கு அரிய செயல்களைச் செய்யக்கூடியவர் பெரியார். செய்வதற்கு அரிய செயல்களைச் செய்ய முடியாதவர் சிறியர்.இதனை விட வேறு விளக்கங்கள் .. பெரியவர் . சிறியவர்  , என்பதற்குக் கொடுக்க முடியுமா ?இந்த விளக்கம் உலகம் முழுவதிலும் உள்ளவர்கள் அனைவருக்குமே பொருந்தும் .அதே வேளை ஏற்கவும் கூடியதாகும்..

      விலங்களுக்கும் மனிதனுக்கும் பலவித்தியாசங்கள் இருக்கின்றன. விலங்குகளுக்குச் சிரிக்கத் தெரி யாது. சிரிப்பும் வராது. விலங்குகளுக்கு மனம் என்றால் என்ன என்று தெரியவும் மாட்டாது. புரியவும் மாட்டாது.ஆனால்மனிதனின் விசேடமே மனம்தான். அந்த மனம்தான் மனிதனுக்கு விஷத்தையும் ஊட்டு வதாகும். " மனமது செம்மையானால் மந்திரம் தேவையில்லை "  என்று சொல்லுவது வழக்கம். எனவே மனிதன் மனத்தை நல்லபடி வைத்திருக்க வேண்டும் .  "அகத்தின் அழகு முகத்தில் தெரியும் " என்பது ம்கூட  மனத்தைப் பற்றியதே. மனத்தில் எழுகின்ற எண்ணங்களே யாவரையும் ஆட்டிவைக்கின்றது. எனவே மனத்தை நல்லபடி வைத்திருப்பது யாவருக்கும் இன்றியமையாததுதானே ! 

      மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன்

      ஆகுல நீர பிற ( 34 )  
மனத்திலே குற்றம் இல்லா இருக்க வேண்டும்.அப்படி இருப்பதுதான் அறம் ஆகும். மனத்தூய்மை இல்லாத மற்றவை ஆரவாரத்தன்மை உடையவை.மனத்தூய்மை உடன் ஒருவன் இருப்பது வாழ்வுக்கு ஏற்றதாகும். இங்கு ஒருவன் என்பதை ஒவ்வொருவரும் என்று எடுத்துக் கொண்டால் உலகத்திலுள்ளவர்கள் அத்தனை பேரும் எவ்வளவு நல்லவர்களாக மாறிவிடுவார்கள்.நினைக்கவே மிகவும் பெருமையாக இருக்கிறதல் லவா. உலக மக்கள் யாவரும் நல்ல மனத்துடன் வந்துவிட்டால் ... சண்டை சச்சரவுகள் இல்லாமலே போய்விடுமல்லவா ? எனவே இந்தக்குறளின் பார்வை பன்முகம் ஆனதுதானே ?

       மனத்திலே மாசு ஏற்படக்காரணம் என்ன ? போட்டி,பொறாமை, ஆசை, கோபம், கடுஞ்  சொற் பிர யோகம். இவற்றை யார் கொண்டிருந்தாலும் அவர்களுக்குச் சிக்கல்தான்.அப்படியான நிலையில் வாழ்வது எப்படி நல்ல வாழ்வாக அமையமுடியும்?

          அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்

         இழுக்கா இயன்றது அறம் ( 35 ) 
பொறாமை , ஆசை , கோபம் , கடுஞ்சொல் , ஆகிய இந்த நான்கு குற்றங்களுக்கும் இடங்கொடுக்காமல் அவற்றை விலக்கி நின்று செயல்படுதலே அறம் என்று எடுத்துக்கொள்ளலாம். இவை யாவும் மனம் சம்ப ந்தப் பட்டவையாகும்.மக்கள் மனம் மாசுக்கு ஆளானால் அவர்கள் எதைச்செய்தாலும் அவை யாவும் அறத் துக்குப் புறம்பானதாகவே அமைந்துவிடும்.அறத்துக்குப் புறம்பாக மனிதர்களின் செயற்பாடுகள் அமையும் பொழுது உலக அமைதியே கெட்டுவிடும் நிலையே தோற்றிவிடும். எனவே மனம் சம்பந்தப்பட்ட இந்தக் குறள்கள் உலகிலே வாழுகின்ற அனைவருக்கும் வேண்டியதே.இந்த நோக்கு வள்ளுவரிடம் எப்பவோ தோன்றியதே. அவரின் பன்முகச்சிந்தனைக்கு நல்ல எடுத்துக்காட்டல்லவா ?

       அறத்தின் வழியில் வாழவேண்டும் என்பது தமிழருக்கும் , தமிழ்பண்பாட்டுக்கும் மட்டும் உரித்தான ஒன்றல்ல. தமிழ்நாட்டில் , பாரததேசத்தில் , அறம்பற்றிய கோட்பாடுகள் , சித்தாந்தங்களுக்கும் , மற் றைய நாட்டினது அறக்கோட்பாடுகளுக்குமிடையே வேறுபாடுகள் இருக்கலாம்.    ஆனால் மனித தர்மம் என்ற ரீதியில் சில அடிப்படைகள் எல்லா இடத்தும் பொதுவானதுதான். நாட்டுக்கு நாடு கலாசாரத் தன் மைகள் வேறுபட்டாலும் ... குடும்பம், குழந்தை , அன்பு, பாசம் ,  அரவணைப்பு , நீதி,நேர்மை , நம்பி க்கை , விசுவாசம் , நட்பு , இவைகள் மாறுபடமாட்டாது.

     இதே போன்றதுதான் கடவுள் பற்றிய நம்பிக்கையுமாகும்.சிலர் கடவுள் என்ற பெயரால் பல நம்பிக் கைகளைக் கொண்டிருப்பர். சிலர் அதனை தங்களுக்கு மேலான ஒரு சக்தியாகக் கூட எடுத்துக் கொள் ளுவார்கள்.ஆனால் எல்லோர் மனத்திலும் நல்ல எண்ணங்களும் அதற்குப் புறம்பான எண்ணங்களும் நிறைந்தே இருக்கின்றன.

      வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் 

      தெய்வத்துள் வைக்கப் படும் ( 50 )  
இப்படித்தான் வாழவேண்டும் என்பது ஒருமுறை. எப்படியும் வாழலாம் என்பது ஒருமுறையல்ல. எனவே இப்படித்தான் வாழவேண்டும் என்னும் அற நெறிப்படி வாழ்க்கையை வாழ்பவன் இந்த உலகத்திலே வானு லகத்தில் இருக்கும் தேவர்களுக்கு உரிய மரியாதைய கெளரவத்தைப் பெறமுடியும் என்று இந்தக் குறள் சொல்லுகிறது.இங்குதான் ஒரு சிக்கல் .... தேவர்கள் உண்டா ? வானுலகு உண்டா ?கடவுள் நம்பிக்கை, சமய நம்பிக்கை  இல்லாதவர்கள் தேவர்கள் தேவ உலகு பற்றி அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. அதா வது அறநெறியில் இப்படித்தான் வாழவேண்டும் என்றவகையில் வாழ்ந்தால் இந்த உலகத்தில் உனக்கு மிகவுயர்ந்த இடமும் கெளரவமும் மகிழ்ச்சியும் கிடைக்கும் என்று எடுத்துக்கொள்ளலாம். அப்படி எடுத்து க்கொண்டால் இந்தக் குறள் நாடு கடந்தும் பயனை நல்கும் குறளாகிவிடும் அல்லவா? அப்படியான கார ணத்தால்த்தான் தமிழிலே வந்த குறள் பலமொழிகளைச் சென்றடைந்திருக்கிறது எனலாம். குறளின் கரு த்தை யாவரும் ஏற்கின்றார்கள் என்பதே இதன் நிலையாகும்.

      வையத்துள் வாழ்வாங்குவாழ்வதற்கு ஒரு ஒழுங்கு முறை யாவரிடமும் இருக்கவேண்டியது  எவ்வ ளவு அவசியமோ .... அதே அளவு அவசியமானது ... ஒவ்வொரு குடும்பத்திலும் மனைவியின் பங்களிப்பா கும். நல்ல மனைவி நல்ல குடும்பம் தெய்வீகம் என்று சொல்லுவதுண்டு. எனவே இல்லத்தை ஆளும் இல்லாள் ஆகிய மனைவி அமைவது மிகவும் முக்கியமானது. குடும்பம் என்னும் பொழுது உலகத்தில் வாழுகின்றவர்கள் யாவருக்கும் குடும்பம் இருக்கும்.அங்கு கணவன் மனைவி இருப்பர். கணவனும் மனை வியும் கருத்தொருமித்து வாழும்பொழுது அங்கு ஆனந்தம் பெருகும். அனைத்துமே சிறப்பாக அமையும். மனைவி மட்டும் நல்லபடி அமையாது விடும் நிலையில் அங்கு எதுவுமே இருக்கமாட்டாது.

       விவாகரத்துகள் மலிந்து விடுவதால் வாழ்வே சிக்கலாகிவிட்டது.கணவன் மனைவிக்கு இடையில் கருத்துவேற்றுமைகள் வருவது இயல்புதான்.அக்கருத்து வேற்றுமை பேசித்தீர்க்கக் கூடியதே.அதைவிடுத்து பிரிவினைக்கு வழிசமைப்பது பொருத்தமற்றதுதானே.கணவனை சீராக்கி குடும்பத்தை நல்லபடி நடத்தும் பொறுப்பு பெண்ணிடம் நிறையவே இருக்கவேண்டும். எனவே  குடும்பத்தில் பெண்ணின் நிலை முக்கியம் பெறுகிறது.

      தற்காத்துத் தற்கொண்டான் பேணித் தகைசான்ற

      சொற்காத்த்ச் சோர்விலாள் பெண் ( 56 )

 

      மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை

      எனைமாட்சி தாயினும் இல் ( 52 )
 குடும்ப வாழ்க்கைக்கு ஏற்ற பண்புகள் ஒரு மனைவியிடம் இல்லாமல் விட்டால் அந்தக்குடும்பத்தில் எவ் வளவுதான் இருந்தாலும் அவைகளால் எந்த விதமான மகிழ்ச்சியோ திருப்தியோ வந்துவிடமாட்டாது. மனைவியானவள் தன்னையும் காப்பாற்ற தெரிந்தவளாகவும் , தனது கணவனையும் காத்துநிற்கும் ஆற் றல் பெற்றவளாகவும் இருத்தல் வேண்டும்.அதே வேளை பேசும் விதத்திலும் கையாளும் சொற்கள் விடய த்திலும்கூட மிகவும் கவனம் உள்ளவளாகவே இருக்க வேண்டும்.மனைவின் நிலைதான் குடும்பத்தை உய ர்த்தவும் தாழ்த்தவும் காரணமாக அமைகின்றதை யாவரும் கவனிக்க வேண்டும் என்று வள்ளுவம் விரும் புகிறது.

     குடும்பம் மகிழ்ச்சியாக இல்லாவிட்டால் என்ன இருந்தும் என்ன பயன் ? அதற்கு முக்கியம் மனை விதானே! மேல்நாட்டில் உள்ளவர்கள் குடும்ப விஷயத்தில் எங்களைப்போன்று இறுக்கம் இல்லா விட் டாலும் இப்போது அதைப்பற்றி உணரத் தலைப்பட்டு எங்களை நோக்கும் நிலைக்கு வந்துகொண்டு இரு க்கிறார்கள்.அவர்களிடம் எங்களின் திருக்குறள் செல்லும் பொழுது அவர்களும் நல்ல குடும்பங்களை உருவாக்கி மகிழ்வுடன் இருக்க முடியும்தானே! குடும்பத்துக்கு மனைவியின் பங்கு எவ்வளவு முக்கிய மானது என்பதை வள்ளுவர் அப்போதே மனம்கொண்டு இப்படியான குறட்பாக்களை தந்தமை அவரது சிந்தனைக்குச் சான்றாகி நிற்கிறதல்லவா.

       மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்தவரம் என்று சொல்லுவார்கள்.அதே போன்றதுதான் குழந்தைகளும் அமைவது.குழந்தைகள் வாழ்க்கையின் முக்கிய  செல்வங்கள் எனலாம்.குழந்தை இல்லா வீட்டில் குதூகலத்தையே பார்க்கமுடியாது.திருமணத்தால் கிடைக்கும் முதற்பரிசே குழந்தைகள்தானே. குழந்தைகள் என்றாலே மனத்தில் இன்பந்தான் வந்துநிற்கும். அப்படிப்பட்ட குழந்தைகளின் இன்பம் பற்றி திருக்குறள் சொல்லும் விதம் மேலும் இன்பத்தையே யாவருக்கும் வழங்கி நிற்க வல்லது.

     மக்கள் மெய்தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்

     சொற்கேட்டல் இன்பம் செவிக்கு ( 65 )  
குழந்தைகளை தூக்கி அணைத்து நிற்கும் பொழுது அவர்களின் உடல் படுவதால் எங்களின் உடலே பூரிப் படைகிறது.அவர்களின் மழலை மொழிகளைக் கேட்கும் பொழுது எங்களின் செவிகள் இன்பம் அடைகின் றன.இந்த நிலையில் உலகமக்கள் யாவருமே மகிழ்ச்சியடைவார்கள். காட்டு மிராண்டிகளாயிருந்தாலும் , நாகரிகத்தின் உச்சியில் உள்ளவர்களாக இருந்தாலும் , அன்றாடம் காய்ச்சிகளாக இருந்தாலும் .. அனை வருமே குழந்தைகளைப் பொறுத்தளவில் இந்தக்குறள் சொல்லிய நிலைக்குள் நிச்சயம் வந்தே விடுவார்.

திருக்குறள் தன்முகத்தைப் யாவரும் பார்க்கும்படி செய்திருப்பது புலனாகிறதல்லவா.

       உலகம் முழுவதுமே இன்று ஒன்றுக்காக ஏங்கித்தவிக்கிறது. அது எது தெரியமா ? அதுதான்

அன்பு. எது தேவையே அதையெல்லாம் என்ன விலைகொடுத்தாயினும் வாங்கிவிடலாம்.ஆனால் என்ன விலை கொடுத்தாலும் வாங்கமுடியாததுதான் "அன்பு." 

      அன்புக்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்

      புன்கண்ணீர் பூசல் தரும் ( 71 )

      

      அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்

      நண்பென்னும் நாடாச் சிறப்பு ( 74 )

 

      அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்

      வற்றல் மரந்தளிர்த் தற்று ( 78)   
அன்பை அடைத்து வைப்பது முடியாத காரியம். அதனைப் பூட்டி வைப்பதற்குப் பூட்டும் இருக்கிறதா ? அன்பு எப்படியும் வெளிப்பட்டே தீரும்.அன்பு இருந்தால்த்தான் மற்றவருடன் பழகமுடியும்.சேரமுடியும். மற்றவர்கள் மீது விருப்பத்தைக்கூட காட்டமுடியும். நட்புக்கூட அன்பினால் ஏற்படுவதே ஆகும். அப்படி ப்பட்ட அன்பு உள்ளத்தில் இல்லாமல் போகும் ஆயின் அது ஒரு வாழ்வாக அமையவே மாட்டாது. பாலை வனத்தில் வரண்டு பட்டுப்போய் நிற்கும் மரம் தளிர்க்க முடியுமா ? அது ஆகாத ஒன்றாகும்.அது போல த்தான் அன்பு இல்லா வாழ்க்கையும் இருக்கும். எனவே வாழ்வு வளமுள்ளதாகவும், மகிழ்ச்சி நிறைந்த தாகவும் இருக்க வேண்டுமேயானால் கட்டாயம் ஒவ்வொருவர் உள்ளத்திலும் அன்பு ஊற்றெடுத்தல் வேண்டும் என்பதே குறள் காட்டும் வழியாகும். இதனை உலகத்தில் உள்ளவர்கள் எவராவது மறுத்துக் கூறுதல் இயலுமா ?எவருமே மாறான கருத்தை இதில் கொண்டிருக்கவே மாட்டார்கள். ஏனென்றால் ... அன்புதான் அனைவருக்கும் அருமருந்து. இந்தமருந்தைக் கொடுத்த திருக்குறள் போற்றப்படவேண்டியதுதானே.

          அன்பு எப்படி வாழ்க்கைக்கு முக்கியமோ அதே போன்றதுதான் மற்றவரிடம் நாம் பேசும் பேச்சு மாகும்.மற்றவர்களை மனம் மகிழும்படி நாங்கள் பேசப்பழகுதல் வேண்டும். மிருகங்களுக்கு பேசத் தெரி யாது. மனிதர்களுக்குப் பேசத்தெரியும். அப்படிப் பேசத் தெரிந்த ஆற்றலைப் பெற்றுவிட்ட மனிதனோ அந்த அரிய விஷயத்தை வைத்துக்கொண்டே அவசியமற்ற சண்டைகளை உருவாக்கி விடுகின்றான்.காரணம் பேசத்தெரியாமை.

      இனிய உளவாக இன்னாது கூறல்

      கனியிருப்பக் காய்கவர்ந் தற்று ( 100 ) 
பழுத்த சுவையான பழங்கள் மரத்தில் இருகின்றன. அதனைவிட்டுவிட்டு காயாக இருப்தை யாராவது பறி த்துச் சுவைத்தால் அப்படிச்சுவைக் கின்றவர்களை எப்படி எடுத்துக்கொள்வது ? சற்றுச்சிந்திக்க வேண்டி இருக்கிறதல்லவா ? நன்றாகவே சிந்திக்க வேண்டும். பழத்தைப் போன்று பண்பான இனிமையான சொற் களை வைத்துக்கொண்டு காய்போல இருக்கும் கரடுமுரடான மற்றவரை மனம்வருந்தப் பண்ணும் சொற் களைப் பேசுவது முறையானதா ? அனைவரும் சிந்தித்துப் பாருங்கள் என்று திருக்குறள் எமக்கெல்லாம் செப்பி நிற்கிறது.பேசும் பேச்சால் உங்களின் அன்பு தெரியவேண்டும் உங்களின் நல்ல பண்பு வெளிப் படல் வேண்டும். அப்படிப் பேசிப்பாருங்கள் அனைவருமே உங்கள்மேல் அன்புபாராட்டுவதோடு அரவணைத்தும் நின்றிடுவார்.இந்தவழியைக் காட்டும் திருக்குறளை உலகம் தழுவித்தானே நிற்கும். இதுதான்  வள்ளுவ த்தின் பன்முக நோக்காகவும் எடுத்துக்கொள்ளலாம்.எதனாலும் வாங்க முடியாததை அன்பாலும், பண் பாலும் , வாங்கிவிடலாம் என்று குறள் கூறுவது ஒரு புரட்சிதானே !

  வள்ளுவம்  எல்லா விஷயங்களையும் தொட்டே வந்திருக்கிறது. அதுதான் வள்ளுவத்தின் பெருமை என லாம்.ஏதாவது சிக்கல் என்றால்கூட வள்ளுவத்தை எடுத்துப் பார்த்தோமேயானால் அதற்கான தீர்வு அங்கே சரியாகச் சொல்லப்பட்டிருக்கும். காரணம் எதையுமே பல கோணங்களில் இருந்து ஆராய்ந்தே வள்ளுவம்  கருத்துக்களைச் சொல்லியிருக்கிறது. அப்படிச்சொல்லப்படும் கருத்துக்கள் உலகம் தழுவிய மக்கட்கெல்லாம் உகந்தவகையில் அமைந்திருப்பதுதான் ஆச்சரியமான ஒன்று எனலாம்.இதனையே வள்ளுவத்தின் பன்முகம் என்றுகூட எடுதுக்கொள்ளலாம்.

       காலத்தால் செய்யும் உதவியானது இந்த உலகத்தைவிடவே மேலானது. ஒருவர் செய்த நன்றியை மறப்பதைபோல கூடாதசெயல் வேறு எதுவாகவும் இருக்கவே முடியாது.வாழ்க்கையில் சமன்செய்து சீர் தூக்கும் கோல்போல இருப்பவர்களைத்தான் உலகமே பெரியவர்கள் என்று மதிக்கும்.அடக்கம் என்பது மனிதனை மேல்நிலைக்கே கொண்டு சென்று விடும் அடக்கம் இல்லாது விட்டால் அழிவுதான் வந்து நிற்கும்.மனிதர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் என்ன தெரியுமா ? பேசும் சக்தி. அந்தச்சக்தியை அழி வுக்கும் பயன்படுத்தலாம். ஆக்கத்துக்கும் பயன்படுத்தலாம். ஆனபடியால் எதனைக் காக்காவிட்டாலும் நாவைக்காக்க வேண்டியது வாழ்க்கையில் மிகமிக அவசியமும் கட்டாயமுமாகும்.

      வாழ்க்கையில் ஒழுக்கம் மிகவும் முக்கியமானது.ஒழுக்கத்தைப் பற்றிச்சிந்திக்காதவர்கள் கூட அவஸ்த்தைப் படும்பொழுது ஒழுக்கத்தைப்பற்றி எப்படியும் யோசிப்பார்கள். இதனால் ஒழுக்கத்தை உயிரினும் மேலாக நினைத்தல் வேண்டும் என்பது குறளின் நிலையாகும். ஒழுக்கமாக இருப்பவர்கள் மற்றைய குடும்பப் பெண்களை கெளரவமாகவே பார்ப்பார்கள். எனவே ஒழுக்கம் நல்லதையே செய்யவைக்கும்.

      ஒழுக்கம் எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்குப் பொறுமையும் முக்கியமானதே.பொறுமை இல்லாமையால்த்தான் பல பூசல்கள் பூகம்பங்களாக மாறிவிடுவதைக் காண்கின்றோம்.தன்னை வெட்டு கின்றவனை பூமியானது பொறுமையுடன் சகித்து அவனுக்கு வேண்டியதை எல்லாம் அளிக்கின்றது. அந்தப் பூமியைப்போல நாங்களும் இருத்தல் வேண்டும்.தீங்கு செய்தவரிடமும் நாங்கள் பொறுமையைக் காட்டுதல்தான் சிறந்த பண்பாகும் என்பது குறளின் குரலாகும். 

       நாம் பேசும் வார்த்தைகளுக்குப் பெறுமதி இருக்க வேண்டும். வெறும் வெத்துவேட்டாக வார்த் தைகள் இருக்கவே கூடாது.எனவே சொற்களைப் பயன்படுத்துபொழுது பயனுள்ளவற்றை பயன்படுத்துதல் இன்றியமையாததாகும்.பயனற்ற சொற்களைப்பயன்படுத்தவே கூடாது. இது வாழ்க்கைத் தத்துவம் என்று கூட எடுத்துக்கொள்ளலாம். அதேவேளை மிகச்சிறந்த முகாமைத்துவ பாடம் என்றுகூட எடுத்துக் கொள்ள லாம்.

       அரசியல் ஆகட்டும் , வாணிபம் ஆகட்டும் , ஆன்மீகம் ஆகட்டும் , நீதி ஆகட்டும் , கல்வி நிர்வாகாம் ஆகட்டும் ,வேறு எந்தத்துறைகள் ஆகட்டும் ..... யாவற்றிலும் பயனற்ற சொற்கள் பயன்படுத்தப் படுமா னால் நிலைமை எப்படி ஆகிவிடும். இதனை எண்ணிப்பார்க்க வேண்டும் என்பதைக் கூறாமல் கூறி நிற்கிறது குறள். இதுதான் குறளின் பன்நோக்குதல் என்று எடுத்துக் கொள்ளலாம்தானே.

       கல்வியின் பயன்பாடு உலகம் தழுவியதாகும்.கல்வியென்பது யாவருக்கும் வேண்டியதே. கண்ணி ல்லாதவர்களே தங்களுக்குரிய எழுத்துமுறையில் கற்று உயர்கல்வியைத் தமதாக்கி உயர்ந்த நிலையில் மதிக்கப்படுவதை நாம் காண்கின்றோம். அதேநேரம் நல்ல கண்ணிருந்தும் கல்வியின் பயன் உணராமல் கல்வியே கற்காமல் இருப்பவரை என்னவென்றுதான் சொல்லலாம். கண்ணுடையவர் கற்கவேண்டும் அப்படிக்கல்லாமல் இருந்தால் அவர்களின் கண்கள் கண்களாகக் கருதவே முடியாது. அதனைப் புண்ணெ ன்றுதான் எடுத்துக்கொள்ளல் வேண்டும். கல்வியென்பது எங்களுடன் தொடர்ந்துவருவது. கற்பது வேறு. பணமுடையவராக இருப்பது என்பது வேறு. கல்வி யைக்கற்கவேண்டும்.கற்றபடி நிற்கவேண்டும்.கல் வியென்பது நல்ல சிந்தனைக்கே இட்டுச்செல்ல வல்லதாகும். இதுகுறளின் வழியாகும்.கல்வியை மிகவும் முக்கியமாகக் குறள் வலியுறுத்து கின்றது.

         கற்றறிந்தவர்கள் சபையிலே பிள்ளையை முன்னுக்கு நீற்கச்ச்செய்வதுதான் ஒரு தந்தையினது பெரும்பொறுப்பு.தனது பிள்ளை மிகசிறந்த கல்விமான் என்ற செய்தியைக் கேட்கும் பொழுது பெற்ற பொழுது கிடைத்த பெருமையைவிட மேலான பெருமையை தாயானவள் அடைகிறாளாம் என்று சொல்லு வதன் மூலம் சமூகத்துக்குக் கல்வி எந்தளவு முக்கியமானது எனக் குறள் சொல்லுமானால் குறளின் எதிர்பார்ப்பார்ப்பும் அதனது பன்முக நோக்கும் எத்தகையது என்பது வெள்ளிடை மலையாகி நிற்கிறதல் லவா ? கல்வியைப் பற்றிய வள்ளு வத்தின் சிந்தனையை யுனஸ்க்கோ உணர்ந்த படியால்த்தான் உலகம் முழுவதும் கல்வியைப் பரப்ப பல வேலைத்திட்டங்களை எல்லாம் அமைத்துச் செயல்படுத்திவருவது குறிப்பிடத் தக்க ஒன்றல்லவா ! இதனை எத்தனையோ காலத்துக்கு முன்னர் வள்ளுவர் தெரிந்து கொண்டபடியாலன்றோ கல்வி பற்றிய கருத்துக்களைக் குறளாக்கி எமக்கு வைத்துச்சென்றார்.இந்த நோக்கை என்னவென்று சொல்லுவது ! 

        கல்வியறிவு அரசனுக்கு அவசியம்.மந்திரிகளுக்கு அவசியம்.நாட்டுமக்களுக்கும் அவசியம். அப்பொழுதுதான் நல்லாட்சி அங்கு நிலவும் சூழல் உருவாகலாம் என்று வள்ளுவர் நினைக் கின்றார். கல்வியறிவுள்ள ஆட்சியாளர்கள் அமையும் பொழுது அங்கு முறையான ஆட்சி நடக்கும் வாய்ப்பு ஏற்படும்.ஆட்சியிலுள்ளவர்களுக்குத் தக்க ஆலோசனை வழங்குவதற்கு நல்ல தேர்ந்த்த கல்வியறிவுள்ள அமைச்சர்கள் இருப்பதும் அவசியம்தானே. 

     கல்வியறிவால் நல்ல சிந்தனை உருவாக இடமுண்டு.நல்ல சிந்தனையைக் கல்விதருவதால் அனை வருமே கல்வியைக் கசடறக் கற்பதோடு நில்லாமல் அங்குகூறப்பட்டதின்படி நடந்து பாருங்கள் யாவுமே சிறப்பாக அமையும் என்று குறள் வலியுறுத்துவதை ஒருநாட்டுக்கென்றோ ஒரு அரசுக்கென்றோ எடுக்கா மல் அதனை உலகம் அனைத்துக்கும் என்று எடுத்துக்கொண்டால் உலகம் மிகவும் உன்னத நிலைக்கு வந்துவிடுமல்லவா ? இதுதான் திருக்குறளின் சிறப்பும் நோக்கும் எனலாம்.

       இல்லறம்பற்றிக்கூறிய திருக்குறள் துறவறம் பற்றியும் கூறுகிறது. ஆனால் வித்தியாச மாகவே கூறுகிறது. வெளிவேஷங்கள் துறவறம் அல்ல. மொட்டை அடிப்பதோ . முடியை நீண்டதாக வளர்ப்பதோ துறவுக்கு இலக்கணமல்ல. உலகம் பழிக்கும் விஷயங்களை விட்டெ றியவேண்டும். மற்றவனைத் துன்ப ப்படுத்தக்கூடாது. தனகுவரும் துன்பங்களைத்தாங்கிக் கொள்ளு தல்வேண்டும். இது எல்லாம் புதுமையும் புரட்சியுமாகத் தெரியவில்லையா?இதுதான் வள்ளுவத்தின் விஷேடம் எனலாம்.

     அரசியல், ஆட்சிமுறை, அனைத்திலும் குறள் கூறும் விஷயங்கள் பொதுவானவை.அதே வேளை அடி ப்படையானவை. வள்ளுவரின் கற்பனை அரசியல், கற்பனை ஆட்சியியல் , என்று கூட எடுத்துக் கொண் டாலும் அங்கு சொல்லப்பட்ட அத்தனை விஷயங்களும் உலகத்தின் அரசுகளுக்கும் ஆட்சிமுறைகளுக்கும் அடிப்படையான விஷயங்களையே சுட்டி நிற்கின்றன் என்பதை மறுத்துக்கொள்ளமுடியாது. அந்த அளவு க்கு ஆளமும் நுண்மையும் அவற்றில் பொதிந்து இருக்கின்றன என்பதை இன்று யாவருமே ஏற்றுக்கொள் ளுகின்றனர். இதற்குக் காரணம் வள்ளுவத்தின் பன்முகத்தன்மை என்றுதான் எடுத்துக்கொள்ளல் வேண்டும். 

   எண்ணித் துணிக கருமந் துணிந்தபின்

   எண்ணுவ மென்ப திழுக்கு ( 467   
இந்தக்குறள் கூறும் கருத்தை யாராவது புறக்கணித்து விடுதல் முடியுமா? இந்தக்குறள் உலகமக்கள் அனைவருன் உள்ளத்திலும் பதிந்திருக்க வேண்டிய குறள் அல்லவா ?இப்படி ஒரு அறிவுரையை தெளிவை வேறு எங்கும் காண்பது என்பது அரிதல்லவா ?

     இடுக்கண் வருங்கால் நகுக அதனை

     அடுத்தூர்வ தகுதொப்ப தில் ( 621 )  
இக் குறள் உளவியல் சம்பந்தமானாதா அல்லது வைத்தியம் சம்பந்தமானதா அல்லது வழ்வியல் போத னையா என எல்லோரையும் சிந்திக்கத் தூண்டுகிறதல்லவா ? இன்று மருத்துவதுறையில் வாய்விட்டுச் சிரியுங்கள் என்கின்றனர்.அதனை பெரிய வைத்திய முறையாகவும் சொல்லுகின்றனர். சிரித்த்தால் உட லுக்கும் மனத்துக்கும் உகந்தது என்று உளவியலாளர்களும் சொல்லுகிறார்கள். துன்பம் வந்தால் அத னைப்பற்றி சிந்திக்காமல் வர்வதுவரட்டும் என்று மனத்தில் சிரித்து நின்றால் அந்தத் துன்பம் எங்களைப் பாதிக்கமாட்டாது என்பது குறளின் நிலைப்பாடாகும். இது உலக உயந்த தத்துவம் அல்லவா ! யாவருக் கும் கொடுக்கப்படும் உயர்மருந்தும் அல்லவா ?

      சிரித்துவாழுதல் வேண்டும் பிறர் சிரிக்க வாழுதல் மட்டும் கூடாது. அதே போலத்தான் உணவினை யும் அளவுக்கு மீறி உண்டால் சிரிப்புக்கு ஆளாகிவிடுவோம். நோய்வரும் உடம்பு படுத்துவிடும்.உடம்பு பருத்தும்விடும். ஆரோக்கியமும் கெட்டுவிடும்.ஆனபடியால் அளவுடன் உண்ணுதல் அனைவருக்கும் ஏற்ற தாகும்.அளவுடன் உண்டால் நிலையான் சுகம் கிடைக்கும். அளவுமீறி உண்டால் சுகம் என்பது நிலைத்து நிற்கவே மாட்டாது.

       இப்படியெல்லாம் விருந்து பற்றியும், அதற்கான மருந்து பற்றியும் , உடல் ஆரோக்கியம் பற்றியும் திருக்குறள் கூறி தனது பல்நோக்கை விரிவாக்கம் செய்து நிற்கிறது எனலாம்.

      திருக்குறள் கூறும் ஆரம்ப கருத்துக்களை நோக்குவார்க்கு .... பின்னர் வரும் காதலும் அதுசார்ந்த கற்பனையையும் பார்க்கும்பொழுது சற்றுத்திகைப்பு ஏற்படலாம். ஆனால் அதனை பார்த்துவிட்டு ஆச்சரி யப்படத்தேவையேயில்லை. ஏனென்றால் காதல் என்பதும் மனித வாழ்க்கையினுடைய முக்கிய அம்சம் தானே! அந்தக் காதலையும் குறள் காட்டும் விதம் யாவரையும் அதன்பால் ஈர்த்தேவிட வல்லதாக இருக் கிறது. ஒன்றே முக்கால் அடிகள் கொண்ட பாவினத்தால் காமத்துப்பாலை இப்படியும் சொல்ல முடியுமா என்று எண்ணும்பொழுது திருக்குறளின் திறலினை உணர்ந்து வியப்புத்தான் அடைகின்றோம்.

      அறம்பற்றிக் கூறும்பொழுது அங்கு கற்பனைக்கு இடமில்லை. பொருள் பற்றிக்கூறும் பொழுதும் கற்பனைக்கு இடமில்லை.பொருள் தேடுவது அறத்தின் வழியில் இருக்க வேண்டும் என்பதுதான் வள்ளு வத்தின் அடிப்படை. எனவே இங்கு கற்பனையோ வர்ணனைக்கோ இடம் இல்லை. ஆனால் காமம் பற்றிச்சொல்லும் பொழுது காதலின் தன்மை , காதலரின் பாங்கு ,காதலியைக் காதலன் காணும் விதம் இங்கெல்லாம் கற்பனை செறிந்துதான் இருக்க வேண்டி உள்ளது. அதனையே குறளும் செய்து நிற்கிறது.

       இவள் தெய்வமகளோ , மயிலோ , குழையணிந்த பெண்ணோ , என் நெஞ்சம் மயங்குகிறது . எனக் காதல்வயப்பட்டவன் ஒருபெண்ணைப்பார்த்து வருணிக்கின்றான்.

      அதே வேளை .... என்காதலர் என்கண்ணில் உள்ளார்.கண்ணின் உட்பகுதியில் இருந்து அவர் நீங்கு வதே இல்லை. நான் எனது கண்ணை இமைத்தாலும் அவர் வருந்துவதில்லை. அவ்வளவு நுட்பமானவர் எம் காதலர்.என் கண்ணுக்குள் அவர் இருப்பதால் கண்ணுக்கு மைதீட்டிக் கொள்வ தேயில்லை.அப்படி த்தீட்டினால் அவரை மறைத்துவிடும் என்று அஞ்சுகின்றேன்.சூடான வற்றை உண்ண அஞ்சுகிறேன். காரணம் அவர் என்நெஞ்சினுள் இருப்பதே.

       நான் அவளைப் பார்க்கும்பொழுது குனிந்து நிலத்தைப் பார்ப்பாள். அதே நேரம் நான் பார்க்காது நிற் கும் பொழுது என்னைப் பார்த்துச் சிரித்துக்கொள்ளுவாள். 

       இப்படியாக காதலனும் காதலியும் ... தங்களின் காதலுணர்வை வெளிக்காட்டும் பாங்கை நாடகப் பாணியில் குறள் காட்டுவது நயக்கத்தக்கதாக இருக்கும். இக் காதல் நாடகம் இன்றுவரை தொடர்கிற தையும் நாம் கண்டுகொள்ள முடிகிறதல்லவா ?

       அதே வேளை காதலன் காதலுக்கு இடையில் அன்பின் பிணைப்பால் ஏற்படும் சிறு பிணக்குகளை யும் அதாவது ஊடலினையும் குறள் காட்டுவதும் நயந்து இன்புற வைக்கின்றது.

      ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்

     கூடி முயங்கப் பெறின் ( 1330 )   
காமத்திற்கு இன்பம் தருவதே ஊடல்தானாம்.அந்த ஊடலின் பின்வரும் கூடல் மிகவும் இன்பமாக இருக் குமாம் என்று காமத்துப்பாலை குறள் நிறைவுசெய்து நிற்கிறது.

     திருக்குறள் பன்முகம் கொண்டது என்பதற்கு ..... குறளின் போக்கே சிறந்த உதாரணம் எனலாம்.அறம்,பொருள் , இன்பம் , என்று கொண்டு உலகமக்கள் அனைவருக்கும் வேண்டிய அத்தனையையும் திருக் குறள் உடன் பாட்டாலும் எதிர் மறையாலும் எடுத்து விளக்கி நிற்கிறது எனலாம்.சிலநூல்கள் ஒன்றை மட்டும் சொல்லிவிட்டுச் சென்றுவிடும் அத்தோடு முடிந்தது என அந்த நூலின் நிலை இருக்கும்.ஆனால் திருக்குறளோ அப்படியானதன்று. எதைச்சொன்னாலும் அதனை விளக்க தக்க காரணங்களை அது தந்தே நிற்கும்.சொல்லப்படும் விஷயங்கள் யாவருக்கும் ஏற்கும் விதத்தில் அமைந்தும் இருக்கும்.

      முடிவு நல்லதாக ஏற்படுமானால் அதுவே போதும். அதற்காக மேற்கொள்ளும் வழிகள் தவறாக இரு ந்தாலும் கவலைப்பட வேண்டியதில்லை என்று எண்ணுவதே பலரின் எண்ணமாகும். அதற்கு ஏற்றாற் போல வழிகளைத் தெரிவு செய்து தமக்கு வேண்டியவற்றைப் பெற்றும் விடுவர்.

     ஆனால் இதனை வள்ளுவம் ஏற்றுக்கொள்ளவில்லை. முடிவைப்பற்றியே வலியுறுத்தும் நூல்களுக்கு மத்தியில்..... கருதிய முடிவை அடைந்தாலும் அடையாவிட்டாலும்கூட ... தேர்ந்து எடுக்கும் வழி தூய்மை யானதாக இருக்க வேண்டும் என்பதே வள்ளுவத்தின் நிலைப்பாடாகும். எனவேதான் எதனைக் கூறுவதாக இருந்தாலும் அங்கு தூய்மை , நன்மை , பொதுமை , பாதிப்பு இன்மை , எவர்க்கும் ஏற்புடைமை ,எக்கா லத்துக்கும் பொருத்தமானவை , புதுமையானவை ,புரட்சிகரமானவை , என்னும் பன்முகத்தில் பலவிஷய ங்களை வள்ளுவம்  தந்து நிற்கிறது எனலாம். அதுமட்டுமல்ல வள்ளுவம் தொட்டுக்காட்டும் விஷயங்க ளும் பன்முகம் கொண்டதே. இதனால்த்தான் " வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு " எனப்பாரதி போற்றியிருக்கிறார் என எண்ணமுடிகிறதல்லவா !

No comments: