முதல் சந்திப்பு மக்கள் வங்கி முகாமையாளர் யோகேஸ்வரி சிவப்பிரகாசம் மக்களின் எழுத்தாளரான கதை ! முருகபூபதி


ஒரு படைப்பாளி எதனை எழுதினாலும்அவ்வெழுத்து வாசகரின் கவனத்தை ஈர்க்காதுவிட்டால் காணாமல் போய்விடுவார்.

  நவீன தொழில்நுட்ப வசதிகள் பெருகியிருக்கும்  சமகாலத்தில்,  படைப்பாளரின்  ஆக்கம் உடனுக்குடன் பதிவேற்றம் கண்டுவிடும்.

ஆனால்,  முன்பு இந்நிலையில்லை.  ஒரு பத்திரிகைக்கு அல்லது இலக்கிய இதழுக்கென  எழுதும்  படைப்பினை  தபாலில் அனுப்பி,  அது வெளிவரும்வரை காத்திருக்கவேண்டியிருந்தது.


இன்று முற்றாக நிலைமை மாறிவிட்டது.  காகித அச்சில் வெளிவரும் ஊடகங்கள், இத்தனை சொற்களுக்குள் எழுதுங்கள் எனக்கேட்கின்றமையால், படைப்பாளிகள், தாம் எழுதியவற்றை  பிழை திருத்தி செம்மைப்படுத்தும்போது எத்தனை சொற்கள் வந்துள்ளன என்பதையும் கூர்ந்து பார்த்துவிட்டே அனுப்பநேர்ந்துள்ளது.

இந்தச்சங்கடங்கள் இல்லாத ஒரு காலத்தில் எழுதத்தொடங்கியவர்தான் யோகேஸ்வரி சிவப்பிரகாசம்.

1997 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் நான் இலங்கை சென்றிருந்தவேளையில் மல்லிகை ஜீவா எனக்குத்தந்த கதைத் தொகுதிதான் உணர்வின் நிழல்கள்.  எழுதியிருந்தவர் யோகேஸ்வரி சிவப்பிரகாசம்.

ஜீவா இந்தத் தொகுதியை என்னிடம் தரும்போது, இதனை எழுதியவர் யாழ்ப்பாணத்தில் மக்கள் வங்கிக்கிளையொன்றின் முகாமையாளர் என்ற தகவலையும் சொன்னார்.

வடபுலத்தில்   அப்போது போர்மேகங்கள் சூழ்ந்திருந்தமையால்  அந்தப்பயணத்தில், என்னால் யாழ்ப்பாணம் செல்லமுடியாதுபோய்விட்டது. அதன்பின்னர்,  2010 ஆம் ஆண்டு தொடக்கத்தில் யாழ்ப்பாணம் சென்றிருந்தபோது, நல்லூர் ஆதீனத்தில் ஒரு இலக்கிய சந்திப்பில் எதிர்பாராதவகையில் யோகேஸ்வரி அவர்களை சந்தித்தேன்.

எனினும் நீண்டநேரம் அவருடன் கலந்துரையாட முடியாதுபோய்விட்டது.

யோகேஸ்வரியின் கதைகளை அவ்வப்போது படிக்கநேர்ந்தது. மீண்டும் ஒரு தடவை இலங்கை வந்தசமயம்  வடமராட்சிக்குச்சென்றுவிட்டு திரும்பும்போது, நான் பயணித்த வாகனச்சாரதியிடம் ,  தம்பி… இடையில் வரும் கோப்பாயில் ஒரு எழுத்தாளரை சந்திக்கவேண்டும்.  ஆனால், அவருடைய வீடுதான் எங்கிருக்கிறது என்பது தெரியவில்லை. அவர் வங்கிமுகாமையாளர். இந்தப்பகுதியில் எவருக்கும் தெரிந்திருக்கும். விசாரித்துப்போம்  “ என்றேன். இவ்வாறு நான் அவரிடம் சொல்லிக்கொண்டிருந்தபோது,  வலது புறத்தில் பிரதேச செயலகம் தென்பட்டது.

வாகனத்தை அங்கே திருப்பச்செய்து, உள்ளே சென்று யோகேஸ்வரி


சிவப்பிரகாசம் அவர்களின் வீட்டை விசாரித்தேன்.  பதில் கிடைத்தது.  அந்த வீடும் அருகில்தான் இருந்தது.

அந்த இரண்டாவது சந்திப்பில் இவருடன் நீண்டநேரம் பேசமுடிந்தது.

இவரது பெற்றோரின் பூர்வீகம் வட இலங்கையாயிருந்தபோதிலும், பிறந்தது மலேசியாவில் கோலாலம்பூரில். 

 சின்னத்துரைகமலாம்பிகை தம்பதியரின் அருமை மகள். ஆரம்பக்கல்வியை இளவாலை மெய்கண்டான் வித்தியாலயத்திலும்  மலேசியாவில் இம்பிறோட் தமிழ் வித்தியாலயத்திலும் தொடர்ந்துவிட்டு,  தனது உயர்தர வகுப்பிற்காக பண்டத்தரிப்பு மகளிர் உயர்நிலைப்பாடசாலைக்கு வந்துள்ளார்.


பின்னர்  பேராதனை பல்கலைக் கழகம் பிரவேசித்து பட்டதாரியாகி,  வங்கித்துறையில் உதவி முகாமையாளர்   பிரதி முகாமையாளர் ,  முகாமையாளர்  முதலான பதவிகளில் 1972 ஆம் ஆண்டு முதல் 2003 ஆம் ஆண்டு வரையில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்.

தற்போது, பிள்ளைகளின் அழைப்பினால், இங்கிலாந்து வாசியாகிவிட்டார்.

பல்கலைக்கழகத்தில் படிக்கும் காலத்திற்கு முன்பிருந்தே இலக்கியப்பிரதிகள் எழுதிவந்திருக்கும் இவரது ஆக்கங்கள் கொழும்பிலிருந்து வெளியான தந்தை செல்வநாயகத்தின் சுதந்திரன் பத்திரிகையில் இடம்பெற்றிருக்கின்றன.

இலங்கை வானொலியில் வ. இராசையா மாஸ்டர்  இளைஞர்கள் – யுவதிகளுக்கான தொடர் நிகழ்ச்சியை நடத்திய 1960 – 1970 காலப்பகுதியில் யோகேஸ்வரி தனது ஆக்கங்களை தபாலில் அனுப்பியிருக்கிறார். அவற்றை ஒலிபரப்பியிருக்கும் இராசையா மாஸ்டர்  தேர்ந்த வாசகர்.  எழுத்தாளர்களை ஊக்குவிக்கவேண்டும் என்பதற்காக கொழும்பில் தமிழ்க்கதைஞர் வட்டம் ( தகவம் ) என்ற அமைப்பினை உருவாக்கியவர்.

அவரது அறிமுகம் கிடைத்தமையினால்,  மல்லிகை ஜீவாவுக்கு யோகேஸ்வரியின் அறிமுகமும் கிடைத்தது. அதன் பெறுபேறுதான் யோகேஸ்வரியின் உணர்வின் நிழல்கள்.  அதனை மல்லிகை ஜீவா எனக்கு அறிமுகப்படுத்தியதனால், பின்னாளில் யோகேஸ்வரியின் அறிமுகம் எனக்கும் கிடைத்தது. இந்த பதிவை தற்போது நான் எழுதுவதன் மூலம், யோகேஸ்வரி மேலும்  பல  புதிய இளம் தலைமுறை வாசகர்களுக்கு அறிமுகமாகலாம்.

இவ்வாறுதான் ஒரு படைப்பாளி  வாசகர் பரப்பில் அங்கீகாரம் பெறுகிறார்.

யோகேஸ்வரியின் படைப்புத்திறனை தகவம் இராசையா மாஸ்டர்,  ஜீவாவிடம் சொன்னதும், மல்லிகைப்பந்தல் வெளியீடாக இவரின் கதைகளை வெளியிட ஜீவா விரும்பியிருக்கிறார்.

யோகேஸ்வரியும் தனது பிரதிகளை ஒரு கோவையில் வைத்து


கொடுத்துள்ளார்.   அந்த போர்க்கால நெருக்கடியில் ஜீவா கொழும்புக்கு சென்றிருந்தபோது, யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதிக்கும் காங்கேசன் துறை வீதிக்கும் குறுக்கே  செல்லும் சந்தில் அமைந்திருந்த மல்லிகை காரியாலயம் இராணுவத்தின் எறிகணை வீச்சினால் சேதமடைந்தது.

அங்கிருந்த அலுமாரியிலிருந்த யோகேஸ்வரியினதும் மற்றும் சில எழுத்தாளர்களினதும்  இலக்கிய பிரதிகளும் தெருவில் வீசப்பட்டிருந்தன.  நிலைமையை  பார்ப்பதற்காக அவ்விடம் சென்ற மல்லிகை அச்சுக்கோப்பாளர் சந்திரசேகரம் அண்ணர்,  கிடைத்தவற்றை சேகரித்து கொழும்புக்கு அனுப்பினார்.

அதனால் நாம்,  யோகேஸ்வரியின் உணர்வின் நிழல்கள்  தொகுப்பினை படிக்கின்றோம்.

 ஈஸ்வரி,  துளசிராணி,  வாடாமலர்,  ஈஸ்வரி முதலான புனைபெயர்களிலும் எழுதிவந்திருக்கும் யோகேஸ்வரி வெளியிட்டிருக்கும் இதர கதைத் தொகுப்புகள் :  ஈன்ற பொழுதில் ,  கண நேர நினைவலைகள்,  மனம் விந்தையானதுதான்,  இன்னும் பேசவேண்டும்,  தாலி.


சமயம் சார்ந்தவை :  அரை நிமிட நேரம், முன்னோர் சொன்ன கதைகள்.  நடைச்சித்திரம்:  எண்ணிலா குணமுடையோர். கடித இலக்கியம் : ( மகளிருக்கு )  உனக்கொன்றுரைப்பேன் கட்டுரைகள்:  ஒளி வளர் தீபங்கள், தொகுப்புகள்:  இருபாலை சேனாதிராய முதலியாரின்  ஆக்கங்கள்,   வடகோவை சபாபதி நாவலரின் நான்மணிகள்.

உணர்வின் நிழல்கள் தொகுப்பிலிருக்கும்  சோகங்களும் சுமைகளாகி என்ற சிறுகதை, தென்னாசிய நாடுகள் பலவற்றில்  செயற்படும்  மகளிர்  அமைப்புகளின்  ஒன்றிணைந்த  இயக்கமான   “ சார்க்    அமைப்பின் சிறந்த சிறுகதைக்கான விருதைப்பெற்றுள்ளது.

இரசிகமணி கனக செந்தி கதா விருது,  சிரித்திரன் சுந்தர் விருது,  வலி. கிழக்கு அருள் நெறி மன்றத்தின் விருது , யாழ். உதயன் பத்திரிகையின் வெள்ளி விழா விருது உட்பட பல இலக்கிய விருதுகள் பெற்றிருக்கும் யோகேஸ்வரி சிவப்பிரகாசம் ஈழத்து இலக்கிய வளர்ச்சியில்  கவனத்திற்குரியவர்.

---0---

           

 

No comments: