இலங்கையில் 2005 ஆம் ஆண்டு தொடக்கத்தில் நான் சம்பந்தப்பட்ட
நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு, மீண்டும் மெல்பனுக்கு புறப்படும் தறுவாயில், ராஜஶ்ரீகாந்தன் நினைவுகள் நூலின் சில பிரதிகளை வடமராட்சியிலிருந்த மூத்த எழுத்தாளர் நண்பர் தெணியானுக்கு சேர்ப்பித்தேன்.
அவர் எனக்களித்த வாக்குறுதியின்
பிரகாரம், 20-03-2005 ஆம் திகதி கரவெட்டி தேவரையாளி இந்துக்கல்லூரி மண்டபத்தில்
இந்நூலின் அறிமுக நிகழ்வை நடத்தினார். அப்போது நான் அவுஸ்திரேலியாவிலிருந்தேன்.
கல்லூரியின் அதிபர் திரு.
ம. குட்டித்தம்பியின் தலைமையில் நடந்த இந்நிழ்வில், கலாநிதிகள் எஸ். சிவலிங்கராசா,
த. கலாமணி, செ. திருநாவுக்கரசு ஆகியோர் உரையாற்றினர். எனது சார்பில் நண்பர் தெணியான்
உரையாற்றினார். இந்த நிகழ்வின்போதும் நூல் விற்பனையில் கிடைத்த பணம் யாவும் திருமதி
லீலா ராஜஶ்ரீகாந்தனிடமே ஒப்படைக்கப்பட்டது.
எனது நெஞ்சத்துக்கு நெருக்கமான நண்பர்தான் ராஜஶ்ரீகாந்தன்.
நான் அவுஸ்திரேலியாவுக்கு 1987 பெப்ரவரியில் புறப்பட்டபோது விமான நிலையம் வந்து வழியனுப்பி வைத்தவர். தொடர்ந்தும் என்னுடன் தொடர்பிலிருந்தவர். அவரது மறைவு என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்தது. அவரின் ஆத்மா சாந்தியடையவேண்டும் என பிரார்த்திக்கொண்டே, என்னால் முடிந்ததை அப்போது இலங்கையில் செய்தேன்.
தற்போது நண்பர் தெணியானும்
எம்மத்தியில் இல்லை. இவர்கள் பற்றிய நினைவுகளை சுமந்தவாறே காலத்தை கடத்துகின்றேன்.
இவர்கள் இருவரும் எனக்குக்கிடைத்த
மிகச்சிறந்த நண்பர்கள். இவர்களின் பிள்ளைகளுடன்
தொடர்ந்தும் தொடர்பிலிருக்கின்றேன்.
இந்த எழுத்தும் வாழ்க்கையும்
தொடர் பதிவில், நான் மேற்கொண்ட இலக்கிய தொகுப்பு முயற்சிகள் பற்றியும் பேசவேண்டியிருக்கிறது.
அந்த அனுபவமும் சுவரசியமானது.
1988 இற்குப்பின்னர் எமது மூத்த எழுத்தாளர் எஸ்.பொ. அவர்களுடன் மீண்டும் எனக்கு நெருக்கம் ஏற்பட்டது. எனது அழைப்பின்பேரில் சிட்னியிலிருந்து மெல்பனுக்கு வருகை தந்த அவர், 1989 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 25 ஆம் திகதி மெல்பன் வை. டபிள்யூ. சி. ஏ. மண்டபத்தில் நடந்த எனது சமாந்தரங்கள் கதைத் தொகுதியின் வெளியீட்டு அரங்கில் உரையாற்றினார். இந்நிகழ்ச்சிக்கு பேராதனை பல்கலைக்கழக முன்னாள் விரிவுரையாளர் கலாநிதி காசிநாதர் தலைமை தாங்கினார்.
நைஜீரியாவுக்கு தொழில்
வாய்ப்பு பெற்று எஸ்.பொ. கொழும்பிலிருந்து புறப்படுவதற்கு முன்னர், ஜெம்பட்டா
வீதியில் நாடக, திரைப்பட கலைஞர் மாத்தளை கார்த்திகேசு
தமது இல்லத்தில் நடத்திய பிரிவுபசார தேநீர் விருந்து நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டேன்.
ஒரு விடுமுறைக்கு இலங்கை
வந்திருந்தபோது வீரகேசரிக்கு வந்து என்னை மீண்டும்
சந்தித்த எஸ்.பொ. , ஆபிரிக்காவில் ஒரு தவம் என்ற தலைப்பில் ஒரு தொடரையும் எழுதத்தொடங்கி,
முதல் அத்தியாயத்தை தந்துவிட்டுச்சென்றிருந்தார்.
இதர அத்தியாயங்களையும்
எஸ். பொ. அனுப்பிய பின்னர் அந்தத் தொடரை வெளியிடலாம் என்றார் வீரகேசரி வாரவெளியீட்டுக்குப்
பொறுப்பான ஆசிரியர் பொன். ராஜகோபால். அந்தத் தொடரை எஸ். பொ. பின்னர் எழுதி அனுப்பவில்லை. அதனால் வெளியாகவில்லை.
மீண்டும் மற்றும் ஒரு விடுமுறை
காலத்தில் கொழும்பு வந்திருக்கும் எஸ். பொ. , என்னைத் தேடிக்கொண்டு வீரகேசரிக்குச்
சென்றுள்ளார். நான் அப்போது அவுஸ்திரேலியா வாசியாகியிருந்தேன். ராஜகோபாலிடம் எனது முகவரியை
பெற்றுக்கொண்டு சிட்னிக்கு வருகை தந்த எஸ். பொ. , எனக்கு கடிதம் எழுதி, எமது நட்பை இந்த புகலிட தேசத்தில் புதுப்பித்துக்கொண்டார்.
மெல்பனில் நடந்த எனது சமாந்தரங்கள்
நூல் வெளியீடு அவருக்கு மிகுந்த உற்சாகத்தையளித்தது. எனது நூல் பற்றிய விமர்சன உரையை மெல்பன் 3 zzz தமிழ் ஓசை வானொலியிலும் நிகழ்த்தினார். அக்கட்டுரை யாழ்ப்பாணத்திலிருந்து அச்சமயம் வெளியான திசை வார இதழிலும் கொழும்பில்
தினகரன் வார மஞ்சரியிலும் வெளியானது.
சிட்னிக்கு நான் செல்லும்
சந்தர்ப்பங்களில் எஸ்.பொ.வை அவரது மூத்த மகன்
மருத்துவர் அநுராவின் வீட்டில் சந்திப்பது வழக்கம். அப்போது அவர்கள் சிட்னியில் Strathfield என்ற பிரதேசத்தில் வசித்தார்கள்.
1990 ஆம் ஆண்டு ஏப்ரில் மாதம் தமிழ்நாட்டிற்குச் சென்று பல எழுத்தாளர்களை சந்தித்தேன். அவர்கள் ஜெயகாந்தன், அசோகமித்திரன், ராஜம் கிருஷ்ணன், ‘ சிட்டி ‘ சுந்தரராஜன், சோ. சிவபாதசுந்தரம், திலகவதி, சிவகாமி, அகிலன் கண்ணன், கே.சி. எஸ். அருணாசலம், தனுஷ்கோடி ராமசாமி, தா. பாண்டியன், பொன்னீலன், தி. க. சிவசங்கரன், இந்திரா பார்த்தசாரதி, கவிஞர்கள் வாலி, வைரமுத்து, மேத்தா, மேத்தா தாசன், முத்துதாசன், அக்கினிபுத்திரன், செ. யோகநாதன், சு. சமுத்திரம் ஆகியோர்.
இந்திராபார்த்தசாரதியை எதிர்பாராதவகையில்
தமிழ்ப்புத்தகாலயத்தில் அவரது துணைவியாருடன் சந்தித்தேன். அகிலன் கண்ணன், அவர்களை எனக்கு அறிமுகப்படுத்தியிருந்தார். அப்போது இ. பா. பாண்டிச்சேரியில் பணியிலிருந்தார். அங்கே செல்வதற்கு புறப்படும் தறுவாயில் அவருடன் சில நிமிடங்கள்தான் பேச முடிந்தது.
தனது மகள் ஒருவர்,
சிட்னியில் வசிப்பதாக சொன்ன இ. பா. தமது மகளின்
முகவரியும் தந்தார்.
எனினும் அவரது பாண்டிச்சேரி
முகவரியை அவரிடம் கேட்டுப்பெறுவதற்கு தவறிவிட்டேன்.
மெல்பன் திரும்பியதும் சென்னையில் எடுத்த படங்களை கழுவி வைத்திருந்தேன். அப்போது இந்த டிஜிட்டல் மின்னஞ்சல் யுகம் தோன்றவில்லை.
எனது தமிழகப்பயணம் பற்றிய
தொடரை கொழும்பு தினகரன் வாரமஞ்சரியில் தொடர்ந்து 14 வாரங்கள் எழுதினேன். சிட்னியிலிருந்த எஸ். பொ. அதனை தொடர்ந்து படித்துவந்தார்.
தொலைபேசியில் பேசும் சந்தர்ப்பங்களில் எனது தொடர் பற்றிய தனது கருத்துக்களையும் எதிர்வினைகளையும்
அவர் கூறுவதற்கும் தவறுவதில்லை.
ஒருசமயம் நான் சிட்னிக்கு
சென்றிருந்தபோது, அவர் மகனுடன் தங்கியிருந்த
பிரதேசத்தில் ஒரு மதுச்சாலையில் நானும்
மேலும் இருவரும் அவரை ஒரு நாள் சந்தித்தோம்.
அந்த சந்திப்புக்கு அவர்தான் ஏற்பாடும் செய்திருந்தார்.
அந்த மற்ற இருவரும் : எழுத்தாளர் மாத்தளை சோமு,
பத்திரிகையாளர் சுந்தரதாஸ்.
அந்தச் சந்திப்பில் தமிழ்ச்சிறுகதைக் களஞ்சியம்
உருவாக்கவேண்டும் என்று எஸ்.பொ. குறிப்பிட்டார். இலங்கையில் சிறுகதை இலக்கிய வளர்ச்சி சில பரிமாணங்களுடன் வளர்ந்திருக்கிறது. முதல் தலைமுறைக்குள் இலங்கையர்கோன், சி. வைத்திலிங்கம், சம்பந்தன் ஆகியோரும், அதன்பின்னர் எஸ்.பொ, கே. டானியல், என். கே. ரகுநாதன், டொமினிக்ஜீவா ஆகியோரும் மூன்றாவது தலைமுறையில் தெணியான், செங்கைஆழியான், செம்பியன் செல்வன், செ. யோகநாதன், செ. கதிர்காமநாதன், தெளிவத்தை ஜோசப் ஆகியோரும் அதற்கு அடுத்துவரும் நான்காவது தலைமுறையில் அ. யேசுராசா, குப்பிழான் ஐ. சண்முகன், ஐ. சாந்தன், திக்குவல்லை கமால், மாத்தளை சோமு, மல்லிகை சி. குமார், முருகபூபதி ஆகியோரும் வருகிறார்கள். இவர்கள் தவிர மேலும் பலர் இருக்கிறார்கள்.
தலைமுறை அடிப்படையில் ஈழத்து
தமிழ்ச் சிறுகதைக்களஞ்சியம் என்ற தலைப்பில் தொகுப்புகளை வெளியிடுவோம், அதற்கு உங்கள்
இருவரதும் ஆதரவும் ஒத்துழைப்பும் தனக்கு வேண்டும் என்று எஸ். பொ. என்னையும் மாத்தளை
சோமுவையும் பார்த்துக் கேட்டார்.
அந்த நீண்ட நேரச் சந்திப்பில் எஸ். பொ. , சென்னையில் தாம்
புதிதாக தொடங்கவிருக்கும் புத்தக வெளியீட்டுத் திட்டம் பற்றி நிறையப்பேசினார். நான் மெல்பன் திரும்பியபின்னரும் எனக்கு இதுவிடயமாக சில கடிதங்களும் எழுதினார்.
இக்காலப்பகுதியில் இந்திரா
பார்த்தசாரதி, சிட்னிக்கு வருகை தந்திருந்தார். அவரை மாத்தளை சோமு சந்தித்து, மெல்பனில் இலங்கை
தமிழ்ச்சங்கம் நடத்திய விழாவுக்கு அவரை அனுப்பிவைத்தார். ஆனால், எனக்கு இந்திரா பார்த்தசாரதி
சிட்னி வந்திருக்கும் தகவலை ஏனோ எனக்குச் சொல்ல மறந்துவிட்டார்.
இ. பா. வை, மெல்பன் விமான நிலையம் சென்று அழைத்துவந்தவர் தமிழர்
ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவர் ஜெயக்குமார்.
இ.பா. சிட்னிக்கு திரும்பிச்சென்றுவிட்ட தகவலும் எனக்கு தாமதமாகக் கிடைத்தது.
அதன்பின்னர் அவர் 1990 ஆம் ஆண்டு சென்னையில் எனக்குத்தந்த
அவரது சிட்னியில் வதியும் மகளின் முகவரிக்கு, முன்னர் எடுத்த படத்தை தபாலில் அனுப்பிவைத்தேன். அதனைப்பார்த்து அவரும் மகளும் நெகிழ்ந்துவிட்டார்கள். காரணம் அந்தப்படத்திலிருந்த இ.பா.வின் அன்புத்துணைவியார் அப்பொழுது உயிருடன் இல்லை.
துணைவியார் மறைந்துவிட்டார்
என்ற செய்தியுடன் அவர் எனக்கு கடிதம் எழுதினார்.
பின்னர் சிட்னியில் வதியும் இலக்கிய நண்பர் செ. பாஸ்கரன் மூலம் அவரை மெல்பனுக்கு
அழைத்து எனது இல்லத்தில் தங்கவைத்து, இங்கே ஒரு இலக்கியச்சந்திப்புக்கும் ஏற்பாடு செய்தேன்.
அவரைப் பேட்டி கண்டு பாரிஸ் ஈழநாடுவிலும் மெல்பன் மரபு இதழிலும் எழுதினேன். இந்த நேர்காணல்
எனது சந்திப்பு தொகுதியில் இடம்பெற்றுள்ளது.
இந்தத் தகவல்கள் அடங்கிய
விரிவான கட்டுரையை இந்தப்பதிவில் இடம்பெற்றுள்ள
படத்துடன் பின்னர் எழுதியிருக்கின்றேன். எனக்கு மிகவும் பிடித்தமான படைப்பாளி இந்திரா
பார்த்தசாரதி. தற்போது அவருக்கு 93 வயதாகப்போகிறது.
இவரது மழை நாடகத்தை இலங்கையிலும் ஐரோப்பிய நாடுகளிலும் மேடையேற்றிய கலைஞர் பாலேந்திராவுடன் அண்மையில் உரையாடியவேளையிலும்,
இ. பா. வைப்பற்றி பேசிக்கொண்டோம்.
இது இவ்விதமிருக்க, சிட்னிக்கு
வருகை தந்த இ.பா. அங்கு எஸ்.பொ. வையும் சந்தித்தார்.
அவர்களுக்கிடையில் புதிய நட்பு துளிர்த்தது.
நாம் தொகுக்கவிருக்கும்
தமிழ்ச்சிறுகதைக்களஞ்சியம் பற்றி இலங்கை பத்திரிகைகள் இலக்கிய இதழ்கள் மற்றும் புகலிட இதழ்களுக்கு ஒரு விரிவான அறிக்கை எழுதி அனுப்புமாறும்
என்னை எஸ். பொ. பணித்தார். தனக்கும் மாத்தளை சோமுவுக்கும் சிட்னியில் அப்போது நிரந்தர முகவரி இல்லாத காரணத்தினால் மெல்பனிலிருக்கும்
எனது நிரந்தர வதிவிட முகவரிக்கு சிறுகதைகள் கிடைக்கும் வகையில் அந்த அறிக்கையை ஊடகங்களுக்கு
அனுப்புமாறும் எஸ். பொ. சொன்னார்.
மாத்தளைசோமுவும் அடிக்கடி
இந்தியா – மலேசியா என சுற்றுலாக்கலில் ஈடுபட்டமையால் எனது நிரந்தர முகவரிக்கு கதைகளைப்
பெறுவது எஸ். பொ.வின் நோக்கமாகவும் இருந்தது.
நானும் அந்த அறிக்கையை
தயாரித்து அனுப்பினேன். அத்துடன் 1941 – 1950 – 1951 – 1960 – 1961 – 1970 –
1971 – 1980 – 1981 – 1990 முதலான ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் சிறுகதைகள் எழுதிய
ஈழத்து எழுத்தாளர்களின் பட்டியலையும் தயாரித்தேன்.
இன்றளவும் அந்தப்பட்டியலின் மூலப்பிரதியும்
குறிப்பிட்ட ஊடக அறிக்கையும் எனது வசம் இருக்கின்றது. அதனால்தான் தற்போது இதனை எழுதமுடிகிறது.
அந்த அறிக்கையையும் பட்டியலையும்
எஸ்.பொ. வுக்கு தபாலில் அனுப்பிவைத்தேன். அவர் சென்னைக்கும் சிட்னிக்குமாக பறந்துகொண்டிருந்த
காலம்தான் அது.
அந்த அறிக்கையில் நான்
எழுதியிருந்ததை இங்கே முழுமையாகத் தருகின்றேன்.
தமிழ்ச் சிறுகதைக் களஞ்சியம்:
எழுத்தாளர் – வாசகர் கூட்டு முயற்சி.
தமிழ்ச்சிறுகதைக்கு ஒரு
நூற்றாண்டு வயதும் பூர்த்தியாகி நீண்டகாலம்.
தமிழ்ச்சிறுகதை உருவம், உள்ளடக்கம் முதலானவற்றில் பல்வேறு பரிமாணங்களையும்
பரிசோதனைகளையும் கண்டுவிட்டது. இலங்கை, தமிழ்நாடு, மலேசியா, சிங்கப்பூர் உட்பட தமிழர்கள்
புலம்பெயர்ந்த நாடுகள் பலவற்றிலிருந்தும் வருடாந்தம்
நூற்றுக்கணக்கான சிறுகதைகள் வெளியாகின்றன.
ஈழத்து இலக்கிய வளர்ச்சியை
கவனத்தில்கொண்டால், அதற்கு வளம்சேர்த்த பெருமை சிறுகதைகளையும் சார்ந்துள்ளது.
ஏற்கனவே பல சிறுகதைகள்
ஈழத்தில் வெளியானபோதிலும், அனைத்து ஈழத்துப்படைப்பாளிகளினதும் தரத்தையும் – ஆற்றலையும்
படித்து இனம்காணத்தக்க முழுமையான தொகுப்பு நூல் இன்னமும் கிடைக்கவில்லை.
யாழ்ப்பாணத்திலிருந்து சில படைப்பாளிகளின் அரிய முயற்சியினால்
வெளியான ஒரு சில தொகுப்புகளும் – பரிசுக்கதைத் தொகுப்புகளுமே சிலரது ஆற்றலை எமக்கு
இனம் காட்டின.
ஐந்து தசாப்தங்களாக ஈழத்தில்
படைப்பாளிகள் சிறுகதைகளை எழுதிவருகின்றனர். இவர்களில் பலர் இன்றில்லை. மறைந்துவிட்டனர்.
இலங்கையர்கோன், சம்பந்தர்,
வைத்திலிங்கம் முதல் இன்று எழுதிக்கொண்டிருக்கும் புதிய தலைமுறை எழுத்தாளர்கள் வரையில்
பலரதும் தரமான உன்னத சிறுகதைகளை ஒரே தொகுப்பில் வெளியிடுமுகமாக – அவுஸ்திரேலியாவிற்கு
புலம்பெயர்ந்த எழுத்தாளர்கள் மூவர் திட்டம் ஒன்றைத் தயாரித்துள்ளனர்.
எஸ். பொன்னுத்துரை, ( எஸ்.பொ.
) மாத்தளை சோமு, லெ. முருகபூபதி ஆகிய மூவரும் தமிழகத்தின் பிரபல எழுத்தாளரும் கணையாழி
சஞ்சிகையின் கௌரவ ஆசிரியரும் இந்திரா பார்த்த சாரதியும் கூட்டாக இணைந்து இக்களஞ்சியத்தை
வெளியிட ஆவனசெய்துள்ளனர்.
இதேவேளை தமிழ்நாட்டு சிறுகதைகளை
கணையாழி இதழ் வாயிலாக சேகரிக்கும் பணியும் ஆரம்பமாகியுள்ளது.
இக்களஞ்சியம் நான்கு அல்லது
அதற்கு மேற்பட்ட பாகங்களில் வெளியாகவுள்ளது.
எழுத்தாளர்கள் மாத்திரமின்றி
வாசகர்களும் தாம் பெரிதும் விரும்பிப்படித்த தரமான சிறுகதைகளை தேர்வுசெய்து இக்களஞ்சியத்திற்கு
வழங்கத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
இதுவரைகாலம் வெளிவந்துள்ளவற்றுள்
– தாம் படித்த மிகச்சிறந்த சிறுகதைகளை – அது வெளிவந்த பத்திரிகை அல்லது இதழின் பெயர்
– காலம் -எழுதியவரின் பெயர் – புகைப்படம் – எழுதியவரின் வாழ்க்கைக் குறிப்பு முதலானவற்றையும்
இக்களஞ்சியத்திற்காக அனுப்பிவைக்கலாம்.
புலம்பெயர்ந்தவர்களின் படைப்புகள்
அந்நிய நாடுகளுக்கு புலம்பெயர்ந்த
ஈழத்தமிழ் மக்கள் மத்தியிலிருந்து இன்றும் உள்ளார்ந்த ஆற்றல் வற்றிப்போகாத பல படைப்பாளிகள் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.
இவர்களின் தரமான சிறுகதைகள்
வெளியாகும் நூற்றுக்கணக்கான சிற்றேடுகளும் பத்திரிகைகளும் இப்பொழுது ஐரோப்பிய , ஸ்கண்டிநேவிய
, அவுஸ்திரேலிய நாடுகளிலிருந்து வெளியாகின்றன.
ஈழத்தமிழரின் புலம்பெயர்ந்த
வாழ்வைச் சித்திரித்த கதைகளும் கணிசமானவை கிடைக்கப்பெற்றுள்ளன.
இக்களஞ்சியம் தொடர்பாக
எழுத்தாளர்கள் – வாசகர்களினதும் கருத்துக்கள் கோரப்படுகின்றன. கதைகளை தேர்வுசெய்து,
எழுத்தாளரைப்பற்றிய குறிப்புகள் புகைப்படங்களுடன்
பின்வரும் முகவரிக்கு அனுப்பிவைக்கலாம்.
L.
MURUGAPOOPATHY – 170. HOTHLYN DRIVE, CRAIGIEBURNE, VICTORIA, 3064, AUSTRALIA.
ஈழத்து எழுத்தாளர்கள்,
வாசகர்கள் மற்றும் புலம்பெயர்ந்த தமிழ்ப்படைப்பாளிகள் யாவரினதும் ஆதரவு இக்களஞ்சியத்திற்கு கோரப்படுகிறது எனச்சொல்லப்பட்ட அறிக்கை ஊடகங்களுக்கு
அப்போது அனுப்பப்பட்டது.
மேற்குறிப்பிட்ட முகவரி
வீட்டை விற்றுவிட்டு, தற்போது மெல்பன் புறநகரத்தில்
மோர்வெல் என்ற இடத்தில் கடந்த பத்தாண்டுகளுக்கும்
மேலாக நான் வசிக்கின்றேன்.
எஸ். பொ. வுக்கு அன்று நான் தயாரித்து அனுப்பிய ஈழத்து மூத்த – இளம்
தலைமுறை எழுத்தாளர்களின் பெயர்ப்பட்டியலுடன் இனி அடுத்த அங்கத்தில் சந்திக்கின்றேன்.
( தொடரும்
)
letchumananm@gmail.com
No comments:
Post a Comment