உலகச் செய்திகள்

 கிரீஸில் இரு ரயில்கள் மோதிய விபத்து: பலி எண்ணிக்கை 36 ஆக உயர்வு

உக்ரைன்–ரஷ்யா போர் குறித்து ஜி20 மாநாடு சமரசமின்றி முடிவு

வனுவாட்டுவில் அடுத்தடுத்து பூகம்பம், சூறாவளி பாதிப்பு

ஆப்கானின் இரண்டாவது பெரிய வர்த்தகப் பங்காளியாகும் சீனா

இத்தாலியில் அகதிப் படகு விபத்து: பலி 62 ஆக உயர்வு


கிரீஸில் இரு ரயில்கள் மோதிய விபத்து: பலி எண்ணிக்கை 36 ஆக உயர்வு

கிரீஸில் இரு ரயில் வண்டிகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் குறைந்தது 36 பேர் கொல்லப்பட்டு மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.   

மத்திய நகரான லொரிஸாவுக்கு வெளியில் கடந்த செவ்வாய்க்கிழமை (28) பின்னேரம் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. ஏ​ெதன்ஸில் இருந்து வடக்கு நகரான தெசலோனிக்கியை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பயணிகள் ரயில் ஒன்று தெசலோனிக்கியில் இருந்து வந்து கொண்டிருந்த சரக்கு ரயில் ஒன்றுடன் மோதியுள்ளது.   

வேகமாக மோதியதால் பயணிகளை ஏற்றியிருந்த சில ரயில் பெட்டிகள் வெடித்து தீப் பிழம்பு ஏற்பட்டுள்ளது.   

“10 விநாடிகளில் பயங்கரமான பாரிய வெடிப்பு ஒன்றை நாம் கேட்டோம்” என்று ரயில் பெட்டியில் இருந்து பாய்ந்து உயிரை காத்துக் கொண்ட 28 வயது பயணியான ஸ்டார்ஜியோஸ் மினேனிஸ் தெரிவித்துள்ளார்.   

“வண்டி எமது பக்கமான விழுவதற்கு முன்னர் நாம் ஒரு பக்கமாக சாய்ந்திருந்தோம். கேபிள்கள் விரைவாக தீப்பிடித்து அச்சம் நிலவியது. இடது மற்றும் வலது பக்கமாக தீ பரவியது” என்று அவர் தனது பயங்கர அனுபவத்தை விபரித்துள்ளார்.   

விபத்தினால் பயணிகள் ரயிலின் முதல் நான்கு பெட்டிகளும் தடம்புரண்டு முதல் இரு பெட்டிகளும் தீப்பற்றி கிட்டத்தட்ட முழுமையாக கருகிவிட்டதாக டெசாலி பிராந்திய ஆளுநர் கொன்சன்டினோஸ் அகொரஸ்டோஸ் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.   

ஒரே தண்டவாளத்தில் இரு ரயில்களும் ஒன்றுடன் ஒன்று மோதியதாக அவர் கூறினார். “ஒன்றுக்கு மற்றது வருவது தெரியாத அளவுக்கு அவை அதிக வேகமாக பயணித்துக்கொண்டிருந்தன” என்று ஆளுநர் குறிப்பிட்டார்.   

ரயில் பெட்டிகள் தடம்புரண்டு இருப்பது, சரக்கு ரயிலில் இருந்த கொள்கலன்கள் அருகில் இருக்கும் வீதியில் வீசப்பட்டு பெரும் அழிவு ஏற்படுத்தி இருக்கும் காட்சிகள் அங்கிருந்து வெளியாகியுள்ளன.   

ரயில் பெட்டிகளுக்குள் சிக்கி இருக்கும் பயணிகளை தேடும் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டிருந்தன. சுற்றியுள்ள திறந்தவெளி பகுதியிலும் இரவு நேரத்தில் தேடுதல் நடத்தப்பட்டது.   

சிறுகாயங்களுடன் இருப்பவர்கள் உட்பட சுமார் 250 பயணிகள் விபத்து இடம்பெற்ற பகுதியில் இருந்து பஸ் வண்டி மூலம் வெளியேற்றப்பட்டனர்.   

சம்பவ இடத்தில் பல டஜன் அம்புலன்ஸ் வண்டிகள் விரைந்ததோடு, தீக்காயத்திற்கு உள்ளானவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.   

மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், பலி எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.   நன்றி தினகரன் 







உக்ரைன்–ரஷ்யா போர் குறித்து ஜி20 மாநாடு சமரசமின்றி முடிவு

உக்ரைன் போர் தொடர்பில் ஒருமித்த நிலைப்பாடு இன்றி ஜி20 கூட்டம் நிறைவடைந்துள்ளது. போரை நிறுத்துவதற்கான ரஷ்யா மீதான கோரிக்கைக்கு ரஷ்யா மறுத்ததுடன் சீனாவும் அந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளது.

கடந்த வியாழனன்று (02) புது டில்லியில் நடைபெற்ற ஜி20 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் மாநாட்டில், ரஷ்யா முழுமையாகவும் நிபந்தனையற்ற வகையிலும் உக்ரைனில் இருந்து வாபஸ் பெற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. எனினும் அதற்கு ரஷ்யாவுடன் சீனாவும் மறுப்பை வெளியிட்டது.

வெவ்வேறு தரப்புகள் மாறுபட்ட நிலைப்பாட்டை பெற்றிருந்த நிலையில் சமரசம் எட்டுவதில் வேறுபாடு இருந்தது என்று இந்திய வெளியுறவு அமைச்சர் சுப்ரமன்யம் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

எனினும் பன்முகத்தன்மையை வலுப்படுத்தல், உணவு மற்றும் வலுசக்தி பாதுகாப்பு மேம்பாடு, காலநிலை மாற்றம், பாலின பிரச்சினைகள் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு போன்ற குறைந்த வளர்ச்சி அடைந்த நாடுகளின் கவலைக்குக் காரணமான பெரும்பாலான விவகாரங்களில் உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளின் குழுக்களில் ஒன்றான ஜி20 உறுப்பினர்கள் இடையில் இணக்கம் எட்டப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.

ஒன்றுகூடிய வெளியுறவு அமைச்சர்கள் இடையே வீடியோ தொழில்நுட்பத்தில் பேசிய, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, உணவு மற்றும் வலுசக்தி பாதுகாப்பு, காலநிலை மாற்றம் மற்றும் கடன் விவகாரத்தில் எட்ட முடியுமான உடன்படிக்கைகளை சீர்குலைக்க தற்போதைய பதற்ற சூழலுக்கு இடம்விடக் கூடாது என்று வலியுறுத்தினார்.

இதில் பங்கேற்ற ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கி லவ்ரோவுக்கு எதிர்ப்பை வெளியிட்டு ஜெர்மனி வெளியுறவு அமைச்சர் அன்னலேனா பேர்பொக் பேசினார். “லவ்ரோவ் அவர்களே, போரை நிறுத்துங்கள், எமது சர்வதேச ஒழுங்கை மீறுவதை நிறுத்துங்கள், உக்ரைன் நகரங்கள் மற்றும் பொதுமக்கள் மீது குண்டு போடுவதை நிறுத்துங்கள்” என்றார்.

இதற்கு பதிலளித்து பேசிய லவ்ரொவ், உக்ரைனுக்கு பல ஆண்டுகளாக ஆயுதங்களை கொடுத்து வரும் மேற்கத்திய நாடுகள் கபட நாடகம் ஆடுகின்றன என்று சாடினார்.

எனினும் இந்தியா சென்றிருக்கும் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அன்டனி பிளிங்கன் வலுசக்தி மற்றும் உணவு பாதுகாப்பை வலுப்படுத்துவதிலேயே அதிக காலத்தை செலவிட்டு வருவதாக அமெரிக்க இராஜாங்க திணக்களம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. எனினும் உக்ரைனில் ரஷ்யாவின் போருக்கு சவால் விடுக்காமல் இருக்க முடியாது என்று பிளிங்கன் இந்த மாநாட்டில் சுட்டிக்காட்டினார்.

இதில் பிளிங்கன், லவ்ரோவை குறுகிய நேரம் சந்தித்துப் பேசினார். இது ரஷ்ய மற்றும் அமெரிக்காவுக்கு இடையில் கடந்த பல மாதங்களில் இடம்பெற்ற உயர்மட்ட சந்திப்பாக இருந்தது. எனினும் இந்த சந்திப்பு 10 நிமிடங்களுக்கு குறைவாகவே இருந்தது என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.    நன்றி தினகரன் 






வனுவாட்டுவில் அடுத்தடுத்து பூகம்பம், சூறாவளி பாதிப்பு

பசுபிக் பிராந்திய நாடான வனுவாட்டுவில் கடந்த சில தினங்களுக்குள் பூகம்பம் மற்றும் சூறாவளி தாக்கியதை அடுத்து நேற்று (03) அங்கு அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூடி சூறாவளியால் பாதிக்கப்பட்ட மின்சார கட்டமைப்பு மற்றும் வீதிகள் சீராக்கப்பட்ட நிலையில் நேற்றுக் காலை இரட்டை பூகம்பம் தாக்கியதோடு மற்றொரு சூறாவளி அந்த நாட்டை நெருங்கியுள்ளது.

“வனுவாட்டு இயற்கை அனர்த்தங்களுக்கு பழக்கப்பட்டபோதும் அடுத்தடுத்து சூறாவளி வருவது இது முதல்முறை” என்று யுனிசெப்பின் எரிக் டுர்பெயர் ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.

முதலில் தாக்கிய ஜூடி சூறாவளியால் உயிர்ச்சேதங்கள் ஏற்படாதபோதும் கூரையில் தூக்கி எறியப்பட்டு, வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, மரங்கள் வேரோடு சாய்க்கப்பட்டு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.

தலைநகர் போர்ட் விலாவில் உள்ள அவசர முகாம்களில் நூற்றுக்கணக்கானோர் அடைக்கலம் பெற்றுள்ளனர். தலைநகரில் இரு நாட்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அங்கு 6.5 மற்றும் 5.4 ரிக்டர் அளவில் இரு பூகம்பங்கள் பதிவாயின.   நன்றி தினகரன் 






ஆப்கானின் இரண்டாவது பெரிய வர்த்தகப் பங்காளியாகும் சீனா

ஆப்கானிஸ்தானின் இரண்டாவது பெரிய வர்த்தகப் பங்காளியாக சீனா மாறும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சீனாவின் சுங்கத் தரவுகளின் படி, 2022 ஆண்டு டிசம்பர் மாதம் ஆப்கானில் இருந்து 9.09 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான பொருட்களை இறக்குமதி செய்துள்ள சீனா, 59 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான பொருட்களை ஆப்கானுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. இதன் ஊடாக சீனாவுக்கு சாதகமான வர்த்தக சமநிலை ஏற்பட்டுள்ளது.இத்தரவுகளின் படி, இவ்வருடம் இரு நாடுகளுக்கிடையிலான இருபக்க வர்த்தகம் 816 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அமையும் எனக் கணிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பட்டுப் பாதை சுருக்க அறிக்கையில், ஆப்கானிஸ்தானுடன் சீனாவின் வர்த்தக நடவடிக்கைகள் வேகமாக வளர்ச்சி பெற்று வருகின்றன. இதற்கு பட்டுப்பாதை முன்முயற்சிகள் பெரிதும் உதவியுள்ளன. அதனால் பாகிஸ்தானுக்கு அடுத்தப்படியாக ஆப்கானிஸ்தானுடன் வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுக்கும் இரண்டாவது பெரிய நாடாக சீனா இவ்வருடம் மாறும் என்று கூறப்பட்டள்ளது.   நன்றி தினகரன் 







இத்தாலியில் அகதிப் படகு விபத்து: பலி 62 ஆக உயர்வு

இத்தாலியின் துறைமுக நகரான கிரோடோன் கடற்கரைக்கு அப்பால் ஏற்பட்ட அகதிகள் படகு மூழ்கிய விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 62 ஆக அதிகரித்துள்ளது. இதில் 12 சிறுவர்கள் உள்ளனர்.

ஆப்கான், பாகிஸ்தான், ஈரான் மற்றும் மேலும் பல நாடுகளைச் சேர்ந்த அகதிகளுடன் சில நாட்களுக்கு முன் துருக்கியில் இருந்து பயணத்தை ஆரம்பித்திருக்கும் இந்தப் படகு மோசமான காலநிலையால் கடந்த ஞாயிறன்று (26) மூழ்கியுள்ளது.

இதில் 81 பேர் உயிர்தப்பியிருப்பதோடு அவசர சிகிச்சை பிரிவில் ஒருவர் உட்பட 20 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக மாகாண ஆளுநர் அலுவலகத்தின் மனுவேலா குர்ரா ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.

இதில் குடியேற்றவாசிகளை ஆட்கடத்திய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டதாக சுங்க பொலிஸ் அதிகாரியான குவார்டியா டி பினான்சா தெரிவித்துள்ளார்.

இந்தப் படகில் 200க்கும் அதிகமானவர்கள் ஏற்றிவரப்பட்டிருக்கும் நிலையில் தொடர்ந்து 60க்கும் அதிகமானவர்கள் காணாமல்போன நிலையில் இருப்பதாக மீட்புப் பணியாளர்கள் ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் இரண்டு டஜனுக்கும் அதிகமான பாகிஸ்தான் நாட்டவர்கள் இருப்பதாக அந்நாட்டு பிரதமர் ஷஹ்பாஸ் ஷரீப் குறிப்பிட்டுள்ளார். முடியுமான விரைவில் உண்மையை கண்டறியும்படி பாக். இராஜதந்திரிகளை அவர் அறிவுறுத்தியுள்ளார்.

பாறை ஒன்றில் மோதியே இந்தப் படகு மூழ்கியுள்ளது. அங்கு தொடர்ந்து தேடுதல் நடவடிக்கை இடம்பெற்று வருகிறது.

ஐரோப்பாவை அடையும் குடியேற்றவாசிகளின் முயற்சியில் மத்தியதரைக்கடல் பகுதியில் கடந்த 2014 தொடக்கம் 20,000க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்து அல்லது காணாமல்போயிருப்பதாக கண்காணிப்புக் குழுக்கள் குறிப்பிடுகின்றன.   நன்றி தினகரன் 





No comments: