அணங்கு ஐவர் நாட்டியம் - நாட்டியக் கலாநிதி கார்த்திகா கணேசர்எமது தாயகத்தில் அல்லல் உற்றோருக்கு பொதுத்தொண்டு ஆற்றிவரும் 'பனை' நிறுவனத்திற்கு நிதி உதவி சேகரிப்பதற்காக ‘அணங்கு ஐவர்’ என்ற நாட்டிய நிகழ்வு 25 February 2024 அன்று Bryan Brown அரங்கில் நடந்தேறியது. இந்நிகழ்வின் மூலம் $ 12,000 சேர்ந்ததாக அறிவிக்கவும் பட்டது. பார்வையாளர்கள் அருமையான ஆடலைப் பார்த்து ரசிக்க மட்டுமல்லாது, தமது பணம் நல்லதொரு சேவைதனை வழங்கி மக்கள் வாழ்வை உயர்த்த உதவும் என்ற மன நிறைவையும் பெறுவதற்கு இந்நிகழ்வு வழிகோலியது.

மகாபாரதம், இராமாயணம் ஆகிய இரு இதிகாசங்களில் இருந்தும் ஐந்து வேறுபட்ட நாயகியர் பாத்திரங்களை ஐந்து பெண்கள் ஏற்று ஆடினார்கள் .  முதலாவதாக அருந்ததி சுரேந்தர் குந்திதேவியாக தோன்றி, துர்வாச முனிவரின் வரத்தால் சூரிய தேவனைக் காண்கிறார். அவர் மூலம் கர்ப்பவதி ஆகிறார். இங்கு சிறுபிள்ளைத்தனமாக முனிவர் வரத்தை பரிட்சை பண்ண எண்ணும் அனைத்து முக பாவங்களையும் அருந்ததி சுரேந்தர் அற்புதமாக வெளிப்படுத்தினார். குடும்ப பந்தத்தில் ஈடுபட முடியாமல் உண்டான மனக்கவலை, குழந்தையைப் பராமரிக்க இயலாமை, சமூக ஏளனம் அத்தனையும் சேர, குழந்தையை ஆற்றிலே மிதக்க விடும் தாயின் ஆற்றாமை பார்வையாளர் மனதை உருக்கும் காட்சியாக அமைந்தது. குந்தி பாத்திரத்தை ஏற்றிருந்த அருந்ததி சுரேந்தர் உணர்ச்சி மேலீட்டால் தன்னை மறந்து ஆடியதுபோல் தோன்றியது .

வர்ணம், குந்திதேவி இவற்றிற்கான சாகித்தியங்களை மதுராந்தகி வைத்திலிங்கம் ஆக்கி இருந்தார். இவை அருமையாகவும் இனிமையாகவும் அமைந்திருந்தன.

பாஞ்சாலியாக கார்த்திகா மனோகரன் தோன்ற மற்றைய நால்வரும்


வெவ்வேறு பாத்திரம் ஏற்று ஆடினர். வர்ண அமைப்பு அற்புதமாக அமைந்திருந்தது. அனுஷா தர்மராஜாவின் மனோதர்மத்தை அவரது கட்சிகளான ஜதிகள் கணீர் என ஒலித்து மெருகேற்றின. பாஞ்சாலியை அர்ஜுனன் போட்டியில் வென்று மனையாள் ஆக்குகிறான். தாயாரே ஐவரும் பகிருங்கள் என்கிறாள். அந்தக் கொடுமையை கார்த்திகா மனோகரன் அழகாக சித்தரித்தார். பாஞ்சாலி கண்ணனிடம் என்றும் வற்றாது உணவு வழங்க பாத்திரம் பெற்றமை, முனிவர் வருகை என வர்ணம் நீண்டது. சூதாட்டக் காட்சி போற்றும்படியாக அமைந்திருந்தது. துகில் உரி கட்டத்திலே கார்த்திகாவின் உருக்கமான நடிப்பைக் கண்டோம் .


மண்டோதரி, அகலிகை, தாரை போன்ற பாத்திரங்களுக்கு பாடல்கள் அருணாசலக் கவிராயரின் பாடல்களில் இருந்து பெறப்பட்டு இருந்தன. மகனான இந்திரஜித்தை போரிலே இழந்த நிலையில் அவனுடைய தாயார் மண்டோதரியாகத் தோன்றியவர் சிறீ பைரவி மனோகரன். போர்க்களத்திலே உயிர் அற்றுக் கிடக்கும் மகனின் உடலைக் கண்டு பலவாறாகத் துடிக்கிறாள் தாய். தந்தை போன்றே மூன்று உலகை ஆள்வான் என எண்ணினேன் என்கிறாள். அத்தனையும் பாடல். ஆனால் பெற்ற தாயாய் உயிரற்ற மகனின் உடலைக் கண்டு துடித்து அழுது, ‘எவர் உள்ளத்தையும் உருக்கி விட என்னால் முடியும்’ என சிறீ பைரவி மனோகரன் தன் நடன ஆற்றலால் நிரூபித்தார். நெஞ்சம் நெகிழ வைத்த அவர் ஆற்றலைப் போற்றுகிறோம்.

கணவனால் சபிக்கப்பட்ட அகலிகையாக துர்கா சிவாஜி


தோன்றினார் . இவரே தனது ஆடலையும் அமைத்திருந்தார். கல்லாக சமைந்து பல வருடங்களுக்குப் பிறகு இராமனின் கால் பட்டு உயிர் பெற்று எழுந்தவள் தென்றலை உணர்வதும் பறவைகள் இசையைக் கேட்டு உணர்வு பெறுவதுமாக காட்சிப்பாடலாக உருவாக்கி இருந்தார். ரசித்தோம். அவரது வியப்பு நிஜ உலக உணர்வு என உணர்த்தியது. அவர் தேர்ந்த ஆடல் அமைப்பாளர் மட்டுமல்ல, தேர்ந்த நர்த்தகியாகவும் ஆடினார். அவரது ஒவ்வொரு அசைவும் அர்த்தம் பொதிந்ததாக பார்வையாளர்கள் உணரும் வகையில் அமைந்திருந்தது. உயிர் பெற்றதும் தன்னை மறந்த நிலை, கல் நிலையில் இருந்து மாற்றம் அடைவது அதனால் ஏற்பட்ட வியப்பு போன்றவற்றை அற்புதமாக எடுத்துக் காட்டினார். தேர்ந்த உணர்வுகள் வெளிப்பட அமைத்திருந்த ஆடல் போற்றும் வகையில் இருந்தது.


தாரையாக அமேஷா தர்ஷன் தோன்றினார். கணவனை இழந்த பெண் பட்ட துயரும், மனமுருக கணவன் உடலை மடி மேல் வைத்து அழுத காட்சியும் எவரையும் உருக்கும். வானரத் தலைவனாக அவன் கீர்த்தி, உணவு உண்டது, நீராடியது என பலவற்றை நினைவு கூர்ந்தார். இராம பாணத்தால் முறையற்ற கொலை நடைபெற்றுள்ளது என்னுமாறு அவரது ஆடல் அமைந்திருந்தது. வானரங்களை அழகாகக் காட்சிப்படுத்தினார். இராமா இராமா என வாலி உயிர் நீத்த வலியைக் காட்டியது நிகழ்ச்சி.

 கச்சேரி சுர பாவ லயம் என இனிது ஆரம்பமாகியது. இதற்கான பாடலை ஷிவானி வழங்க அகிலன் சிவானந்தன் இசை அமைத்திருந்தார். கலாஷேதிரா ஸ்தாபகர் ருக்மணி அம்மையார் ஆடல் அமைந்த M D ராமநாதனின் இசை. இது கலாஷேதிராவின் வாரிசுகள் நாம் என்பதைக் கூறியதாக அமைந்தது

இத்தனை ஆடல்களையும் உருவகப்படுத்தி, யாவரையும் ஒருங்கிணைத்து நிகழ்வைத் தயாரித்த அனுஷா தர்மராஜா யாவரின் பாராட்டுக்கும் உரியவர். இணைந்து இசை வழங்கிய அகிலன் என்றுமே ஆடலைப் புரிந்து உணர்ந்து பாடுபவர். அவரது திறமை பாராட்டுக்குரியது. இருந்தும் ஒரு நெருடல்! இத்தனைப் பாத்திரங்களும் பெண் பாத்திரங்களே. ஒரு பெண் அகிலனுடன் இணைந்திருந்தால் மேலும் சிறப்பாக அமைந்திருக்கும் .

அணிசெய் கலைஞராக ஜனகன் சுதந்திர றாஜ் ஆடலுக்கு மிருதங்கம்


வாசிப்பதில் கைதேர்ந்த விற்பன்னர். வயலின் வாசித்த அகல்யா பாவலன் பாவாடை பருவம் தாண்டி,  பாவடை தாவணியில் காட்சி தந்தார். வாசிப்பில் தேர்ந்த கலைஞராக வாசித்தார். வேணு கானம் வழங்கிய  ஜதூஷன் ஜெயராஜ் கூட வயதில் இளையவர் என அறிந்தேன். இனிமையான வாசித்து ஆடலுக்கு மெருகூட்டினார்.

ஆடல் உடை பற்றி எனக்கு அருகில் இருந்த அனுராதா கூறினார். வெவ்வேறு பாத்திரங்களாக வரும்போது உடை மாற்றி இருக்கலாமே என.  நானோ ஏன் பாத்திரத்திற்கு ஏற்ற உடை அணியலாமே எனக் கருத்து தெரிவித்தேன். உச்சி முதல் உள்ளங்கால் வரை தேவ கன்னியரோ என எண்ணும் வண்ணம் பரத உடை அணிவது எமது மரபு. இங்கே ஆடலிலே புதுமை கண்டோம். ஏன் உடையும் மாற்றம் பெறலாமே. மனதை விட்டதால் ஆடலை வழங்கிய அத்தனை பேருக்கும் ரசிகர் சார்பில் நன்றிகளைத் தெரிவிக்கிறோம்.

 

No comments: