அதிகாரம் 10 : புதிய தலையிடி
விடுமுறை முடிந்து வேலை
தொடங்கியதும் புங், ஜோசுவாவை மெது மெதுவாக வெட்டத் தொடங்கினாள்.
ஜோசுவாவுக்கோ அவளைத் தன் மனத்தில் இருந்து அகற்றுவது என்பது முடியவே
முடியாத காரியம். அவளின் மோகனக் கவர்ச்சியில் சிக்குண்டு தவித்தான். அவள் இன்னமும் வருவாள், இன்பத்தை அள்ளிப் பருகலாம்
என்று கனவு கண்டு கொண்டிருக்கும்போது, அவள் தான் தப்புவதற்கான முயற்சியில் ஈடுபடத்
தொடங்கிவிட்டாள்.
புங் இப்போது நந்தனை தனது
உற்ற நண்பனாக பாவனை செய்து கொண்டாள். உண்மையில் ஜோசுவாவைக் கோபப்படுத்துவதற்காகவே
அவள் இந்த நெருக்கத்தை நந்தனுடன் ஏற்படுத்திக் கொண்டாள்.
ஜோசுவாவை கொடுமையான தனிமை வாட்டியது.
அவள் இனித் தனக்குக்
கிடைக்கமாட்டாள் எனத் தெரிந்துகொண்டதும், அவளுடன் நெருக்கமாக இருந்த
புகைப்படங்களில் சிலவற்றை ஃபேஸ்புக் மூலம் தனது நெருங்கிய நண்பர்களுடன் பகிர்ந்து
கொண்டான் ஜோசுவா. இவை அமீபாக் கலங்கள் போல் பிரிந்து பிரிந்து பலரிடம் சென்றன.
ஒரு சனிக்கிழமை இரவு
உணவிற்குப் பின்னர், புங் வீட்டில் ரிவி பார்த்துக் கொண்டிருந்தாள். அவளின் மகள்
செல்லமாகச் சிணுங்கியபடி வந்து, தாயின் அருகில் இடித்துக் கொண்டு அமர்ந்தாள்.
ஏதாவது அவளிடம் காரியம் ஆகவேண்டி இருந்தால் இப்படி அருகில் வந்து இருப்பாள்.
“அம்மா… போன கிழமை ஒரு
பார்ட்டிக்குப் போயிருந்தோம் அல்லவா? அந்தப் பார்ட்டிக்கு வந்திருந்த ஒரு பையன்
என்னை விரும்புவதாகச் சொல்லுறான்”
புங்கிற்கு ஆச்சரியமாக
இருந்தது. அப்போது மகளிற்கு பதினெட்டு வயதுதான் நடந்து கொண்டிருந்தது.
பள்ளிப்படிப்பு முடிந்து யூனிக்குப் போக ஆரம்பிக்கும் நேரம்.
”பார்ட்டியில் சந்தித்தாய்.
அதன் பிறகு எப்பிடிச் சந்தித்தாய்?”
“பார்ட்டியில் சந்தித்தபோது
ரெலிபோன் நம்பர் கேட்டுக் கொடுத்தனான். தொடர்ந்து SMS அனுப்பிக் கொண்டு
இருக்கிறான் அம்மா… என்ன சொல்லுறது?”
புங் ஜோசித்தாள்.
இரண்டு கிழமைகளுக்கு
முன்னர், கார் ஒன்று இவர்களின் வீட்டிற்கு முன்னால் வந்து நின்று இவர்களின் வீட்டை
நோட்டமிடுவதாக மகன் சொல்லியிருந்தான். அப்போது மகளும் ‘அம்மா… இப்படி இரவிலும் சிலவேளைகளில் நான்
கண்டிருக்கின்றேன். என்ரை றூம் றோட்டுப் பக்கமாக இருப்பதால் அடிக்கடி இப்படி
வெளிச்சமடிச்சுக் கொண்டு வாற வாகனங்கள் சிலவேளை எங்கடை வீட்டடியிலை நிக்கிறதுமாப்
போலவும் இருக்கிறது’ என்று தன் பங்குக்கு சொல்லியிருந்தாள். ஒருவேளை தன்னுடைய
கூத்தை மகளும் அறிந்து கொண்டாளோ என ஐயுற்றாள் புங். அதையே சாக்காக வைத்து
லாபமடையப் பார்க்கின்றாளோ?
“அப்பாவிடம் கதைத்துவிட்டுச்
சொல்கின்றேன்” மொட்டையாகச் சொல்லி அவளின் விருப்பத்தைப் பின்போட்டாள்.
இதற்கிடையில் அந்தப் பையனின் பூர்வீகம் அறியும் முயற்சியில் மகளை நோண்டத் தொடங்கினாள்.
பையனின் பூர்வீகம் நல்லதென
அறிந்து கொண்டாள். இனி மகளும் யூனிக்குப் போய் யாரையாவது பிடித்துவிடக் கூடும்
எனப் பயந்தாள். வேற்றுநாட்டைக் காட்டிலும் சொந்தநாடு பரவாயில்லை என கணவனுக்குக்
காரணம் சொன்னாள். மகளுக்குச் பச்சைக்கொடி காட்டினார்கள்.
சம்மதம் சொன்ன மறுநாள்,
மருமகன் ஒரு பூச்செண்டுடன் இவர்கள் வீட்டிற்கு வந்துவிட்டான். மருமகனுக்கு இன்னும்
கார் ஓடத் தெரியாது. அவனின் அப்பா கூட்டிக் கொண்டு வந்திருந்தார்.
“நல்ல குடும்பம்” என்று
புங்கின் கணவன் நக்கலடித்தான்.
”தம்பி… நீங்கள் முதலிலை ஒரு
கார் ஓடப் பழக வேணும்.”
“ஓம் அன்ரி…”
‘ஓம் அன்ரி’ என்று புங்கைப்
பார்த்துச் சொன்னதில் அவளுக்கு ஒரு குறும்புச் சிரிப்பு வாயிற்குள் வந்தது.
மருமகன் எள் என்று சொல்லும்
முன்னர் எண்ணெய் ஆகிவிடுவான்.
அடுத்த மாதம் கார் பழகி, ஒரு
காரும் வாங்கிக் கொண்டு வந்துவிட்டான்.
அவளாகவே ஒரு பையனைப்
பிடித்துவிடடாள். பழகிப் பார்க்கட்டும். மகளுக்கு யூனி போக ஒரு கார் வாங்க
வேண்டும் என நினைத்த அவர்களுக்குக் காசும் மிச்சம்.
அவளை யூனிக்கும், சனி
ஞாயிற்றுக் கிழமைகளில் வேலைக்கும் கூட்டிச் சென்றான் மருமகன்,
கணவனுக்கு புங்கின்
நடவடிக்கைகள் பிடிக்காவிடினும் தலையாட்டுவதைத் தவிர வேறொன்றும் செய்ய முடியவில்லை.
வார இறுதிகளில்தான் குடும்பம் நடத்துகின்றான். இல்லை என்று மறுத்தால் அதற்கும்
ஆப்பு வைத்து விடுவாள். பிறகு இரவில் ஜீன்சைப் போட்டுக் கொண்டு படுத்துவிடுவாள்.
சமைப்பதையும் குறைத்துக் கொள்ளுவாள். கணவனுக்கு சமையல் சுட்டுப் போட்டாலும் வராது.
பொறியியலில் மாஸ்ரர் வரை சென்றுவிட்ட அவனுக்கு, சோறு வடிக்கவும் முட்டை அவிய
விடவும்தான் தெரியும். சட்டி பானைகள் நல்லாகக் கழுவுவான்.
மருமகனின் வருகைக்குப்
பிறகு, வீடு முழுக்க ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமாக இருக்கின்றது. இதனால் மகனின்
படிப்பு பாழாக, அவனும் கெட்ட பழக்கங்கள் பழகிவிடுவானோ எனப் பயந்தாள் புங்.
பிள்ளைகளுக்கு பொற்றோர்
‘ரோல் மொடல்’ ஆக இருக்க வேண்டும். தவறும் பட்சத்தில் எல்லாம் தவிடு பொடிதான்.
தொடரும்….
No comments:
Post a Comment