முதல் சந்திப்பு கலை, இலக்கிய, மனித உரிமை ஆர்வலர் தன்னார்வத் தொண்டர் லயனல் போப்பகே ! முருகபூபதி

 

இலங்கை சுதந்திரம் பெற்ற பின்னர் 1971 ஆம் ஆண்டு


தென்னிலங்கையில் நடந்த சிங்கள இளைஞர்களின் ஆயுதக்கிளர்ச்சியை மறந்திருக்கமாட்டீர்கள்.  

பல்கலைக்கழக மாணவர்களும், படித்துவிட்டு வேலை வாய்ப்பில்லாமல் அவதியுற்ற ஏழை – மத்தியதர இளைஞர்களும் தென்பகுதியில் முன்னெடுத்த அந்தப் போராட்டம் குறுகிய காலத்தில் அரசின் தீவிர அடக்குமுறையினால் முறியடிக்கப்பட்டது.

அப்போது கைதானவர்கள்தான் ரோகண விஜேவீரா, லயனல் போப்பகே, டி. ஐ. ஜி. தர்மசேகர, விக்டர் ஐவன்,  உபதிஸ்ஸ கமநாயக்க முதலான இளைஞர்கள்.

இவர்களில் ரோகண விஜேவீரா, ரஷ்யாவில் லுமும்பா


பல்கலைக்கழகத்தில் படித்துவிட்டு திரும்பியிருந்தவர். லயனல் போப்பகே பேராதனை பல்கலைக் கழகத்தில் பொறியியல் பீடத்தில் படித்தவர்.

இந்தப்பெயர்களை,  அன்றைய ஶ்ரீமாவோ பண்டாரநாயக்கா – என். எம். பெரேரா – பீட்டர்கெனமன் ஆகியோரின் ( ஶ்ரீல. சுதந்திரக்கட்சி – சமசமாஜக்கட்சி – கம்யூனிஸ்ட் கட்சி ) கூட்டரசாங்கத்தின் காலத்தில் நீதியரசர் அலஸ் தலைமையில் நடந்த குற்றவியல் நீதி ஆணைக்குழுவின் விசாரணைகளின்போது வெளியான செய்திகளிலிருந்து அறிந்திருந்தேன்.

தோழர் பாலாதம்பு குறிப்பிட்ட அரசியல் கைதிகளுக்காக வாதிட்டார்.  எனினும் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் நீண்ட காலம் சிறையிலிருந்தனர். கிளர்ச்சி நடந்தபோது ஆயிரக்கணக்கான இளைஞர்கள், யுவதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். பலரது சடலங்கள் மாணிக்க கங்கையிலும், களனி கங்கையிலும் மிதந்தன.

கதிர்காமத்தில் நடக்கும் சித்திரை புத்தாண்டு விழாக்களில் அழகுராணியாக தெரிவுசெய்யப்பட்டிருந்த பிரேமாவதி மனம்பேரி, அந்த புனித பிரதேசத்தில் ஒரு இராணுவ அதிகாரியினால் மானபங்கப்படுத்தப்பட்டு கொல்லப்பட்டார்.

இந்தப்பெண்ணின் கதையை சித்திரிக்கும் கங்கை மகள் என்ற சிறுகதையை பின்னாளில் எழுதியிருக்கின்றேன்.

இச்சிறுகதை  “ கங்காவே துவெனிய  என்ற தலைப்பில் சிங்களத்திலும் வெளிவந்துள்ளது.   அரசியல் கைதிகளை விடுதலை செய்யவேண்டும் எனக்கோரும் இயக்கத்தில் நானும் இணைந்திருந்தேன்.

இவ்வியக்கம்,  கொழும்பில் மலேவீதியில் அன்றைய கல்வி அமைச்சிற்கும் பரீட்சைத் திணைக்களத்திற்கும்  அருகில் இயங்கிக்கொண்டிருந்த இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பணிமனையில் தோழர் லீனஸ் திஸாநாயக்காவால் முன்னெடுக்கப்பட்டது. அந்த இயக்கத்தினால் வெளியிடப்பட்ட துண்டுப்பிரசுரத்தில் தோழர் சண்முகதாசன், வாசுதேவ நாணயக்கார, குமாரி ஜயவர்தனா,  தினேஷ் குணவர்தனா ( இன்றைய பிரதமர் ) ஆகியோருடைய பெயர்களுடன் எனது பெயரும்  இடம்பெற்றிருந்தது.

குறிப்பிட்ட இலங்கை ஆசிரியர் சங்க பணிமனையில் நானும் சிறிது காலம் வேலை செய்தேன். அச்சங்கம் வெளியிட்ட ஆசிரியர் குரல் பத்திரிகையின் ஆசிரியர் குழுவிலும் இணைந்திருந்தேன். தற்போது இங்கிலாந்தில் வதியும் தோழர் காதர்,  எமக்கு அரசியல் வகுப்பு நடத்தி, சுயநிர்ணய உரிமை  பற்றிய விளக்கங்கள் அளிப்பார்.

1977 ஆம் ஆண்டு  நடந்த தேர்தலில் இடதுசாரிக் கட்சிகள் படுதோல்வியடைந்து,  ஶ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் சுதந்திரக்கட்சியும் மிகக் குறைந்த  ஆசனங்களையே பெற்றது.

அதனால், தமிழர் விடுதலைக்கூட்டணி பிரதிநிதியான அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித்தலைவரானார்.

அரசியல் கைதிகளை விடுவிக்கவேண்டும் என்ற அறப்போராட்டம்


தொடர்ந்தது.  ஜே.ஆரின் ஐக்கிய தேசியக்கட்சி , தேர்தல் பிரசாரத்தின்போது, அரசியல் கைதிகளை விடுவிப்பதாக வாக்குறுதி அளித்திருந்தது.

இக்கட்சிக்கு அந்தத் தேர்தலில் அறுதிப்பெரும்பான்மை கிடைத்தமையால்,  கண்டி போகம்பறை, யாழ்ப்பாணம் கோட்டை ,  கொழும்பு வெலிக்கடை – மகசின் சிறைகளிலிருந்த சகல அரசியல் கைதிகளும் விடுதலையானார்கள்.

அவ்வாறு விடுதலையானவர்களில்  ஒருவர்தான் தோழர் லயனல் போப்பகே. 

வீரகேசரியில்  நான் பணியாற்றிக்கொண்டிருந்தபோது,  1978 ஆம் ஆண்டு ஒருநாள் மாலை அலுலகத்தின் வாயிலில் கடமையிலிருந்து பாதுகாப்பு ஊழியரிடமிருந்து ,  என்னைப்பார்க்க ஒருவர் வந்திருப்பதாக தகவல் வந்தது.  சென்று பார்த்தேன்.


ஒருவர் தன்னை லயனல் போப்பகே எனச்சொல்லி அறிமுகப்படுத்திக்கொண்டு, கைகுலுக்கினார்.  இலங்கை ஆசிரியர் சங்கத்தின் அப்போதைய தலைவர் எச். என். பெர்னாண்டோவும், செயலாளர் சித்ராலும் என்னைப்பற்றி தம்மிடம் சொல்லியிருப்பதாகக் கூறினார்.

எச். என். பெர்னாண்டோவின் தங்கையைத்தான் தோழர் ரோகண விஜேவீரா மணம்முடித்தார்.

இவ்வாறு 1978 ஆம் ஆண்டு  முதல் முதலில் எனக்கு அறிமுகமான தோழர்  லயனல், 45 வருடகாலமாக எனது ஆழ்ந்த நேசத்திற்கும் நெருங்கிய தோழமைக்குமுரியவராக விளங்குகிறார். இவரது தலைமையில் 1983 ஆம் ஆண்டு நடந்த மேதின ஊர்வலத்தையும் மாபெரும் கூட்டத்தையும் பார்த்து, அன்றைய ஜே.ஆரின் அரசு கதிகலங்கியது.

தருணம் பார்த்திருந்த ஜே.ஆர். 1983 நடுப்பகுதியில் மக்கள் விடுதலை


முன்னணியை தடைசெய்தார். அதனால், லயனல் போப்பகே மீண்டும் கைதாகி தடுத்துவைக்கப்பட்டார். பின்னர் விடுதலையாகி ஜப்பான் சென்ற லயனல், அங்கிருந்து அவுஸ்திரேலியா வந்து,  படித்து  கலாநிதிப்பட்டமும் பெற்றார்.

அன்று 45 வருடங்களுக்கு முன்னர் இவரது அழைப்பினை ஏற்று , மக்கள் விடுதலை முன்னணியின் செஞ்சக்தி பத்திரிகையின் ஆசிரியர் குழுவில் இணைந்து பணியாற்றியதுடன், மொழிபெயர்ப்புகளையும் செய்து கொடுத்தேன்.

குறிப்பிட்ட செஞ்சக்தி இதழில் கவிஞர் புதுவை ரத்தினதுரையின் கவிதைளும் இடம்பெற்றுள்ளன.

தோழர் லயனல்போப்பகே, கலை, இலக்கிய ஆர்வலர். அத்துடன் அரசியல் கட்டுரைகளும் எழுதுபவர்.  இந்த ஆற்றல்களை பல்கலைக்கழகத்தில் படிக்கின்றபோதும், 1971 முதல் சிறைவாசம் அனுபவித்த காலத்திலும் வளர்த்துக்கொண்டவர்.


சிறையிலிருந்த காலத்தில் பாடல்கள் இயற்றி,  வெற்றுத்தகர டின்கள், தண்ணீர் அள்ளும் வாளிகள் ஆகியனவற்றை  பயன்படுத்தி இசை எழுப்பி சிறையிலிருந்த சக  தோழர்களுடன் பாடியவர். அதற்கு விடுதலைக்கீதம் எனத் தலைப்பிட்டிருந்தார்.

விடுதலையாகி வந்த பின்னர்,  என்னிடமும் சில பாடல்களைத்தந்து தமிழ்ப்படுத்தி இசையோடு பாடினார்.  விடுதலைக்கீதம் இசை நிகழ்ச்சி 1978 முதல் 1983 ஜூன் வரையில் இலங்கை எங்கும் நடந்தது.   அடக்கி ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலை முன்னணி, ஃபீனிக்ஸ் பறவையைப் போன்று எழுச்சி பெற்றது.  ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரில் மாதம் இந்த இயக்கம் 1971 கிளர்ச்சியில் கொல்லப்பட்டவர்கள் நினைவாக நடத்தும் மாபெரும் கூட்டங்களில் விடுதலைக்கீதம் பாடல்களும் இடம்பெறும்.

அதில் ,   “ வேலுப்பிள்ளை அண்ணா என்னை மன்னிப்பாய்…  “ என்ற பாடலும்,  “ மனம்பேரி சகோதரியே… “  என்ற பாடலும்   பிரசித்தம். இதனை இயற்றியவரும் – பாடியவரும் தோழர் லயனல் போப்பகேதான். இவருடைய மனைவி சித்ராவும் சிறந்த பாடகி.

தற்போது அவுஸ்திரேலியா மெல்பனில் குடும்பத்தினருடன் வதியும் தோழர், மனித உரிமைச்செயற்பாட்டாளராகவும், தன்னார்வத்தொண்டராகவும்  இயங்கியவாறு, இன ஐக்கியத்திற்கும் ஒருமைப்பாட்டுக்கும் குரல் கொடுத்து வருவதுடன், சிறந்த தமிழ் அபிமானியாகவும் விளங்குகிறார்.

மெல்பனில் முன்னர் வெளியான உதயம்


                                                          ( இருமொழிப்பத்திரிகை ) ஆண்டு விழா பிரஸ்டன் நகர மண்டபத்தில் நடந்தபோது, இடம்பெற்ற கருத்தரங்கிலும் சிறப்புரையை நிகழ்த்தினார்.

2004 ஆம் ஆண்டு நாம் கன்பர மாநிலத்தில் நான்காவது தமிழ் எழுத்தாளர் விழாவையும் கவிஞர் அம்பியின் பவளவிழாவையும்  நடத்தியபோது, அதற்கான மண்டபத்தை ஏற்பாடு செய்து தந்தவர்.  மெல்பனிலிருந்து சென்றிருந்த கலை, இலக்கியவாதிகளை தமது இல்லத்தில் தங்கவைத்து உபசரித்ததுடன், அந்த விழாவிலும் உரையாற்றினார்.

எமது அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் மெல்பனில்  நடத்திய இலக்கிய மொழிபெயர்ப்புகள் தொடர்பான கருத்தரங்கிலும் கலந்துகொண்டு உரையாற்றினார்.

கிறிஸ்மஸ் தீவில் தடுத்துவைக்கப்பட்டிருந்த ஈழத்தமிழ் அகதிகளை மனிதாபிமான ரீதியில் விடுவிக்கவேண்டும், என்ற அறப்போராட்டத்தையும்  மெல்பனில் இயங்கும் குடிவரவு – குடியகல்வு திணைக்களத்தின் முன்னால் ஆரம்பித்து முன்னெடுத்தவரும் லயனல் போப்பகேதான் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன்பின்னர், குறிப்பிட்ட ஈழத் தமிழ்அகதிகள் ( எண்பது பேருக்கும் மேல் ) விடுவிக்கப்பட்டனர்.

அவர்களை வரவேற்று உபசரித்து, எமது சமூகத்துடன் ஒன்றிணைக்கும் இராப்போசன -  இசை நிகழ்ச்சியையும் தோழர் லயனல்,  வடக்கு மெல்பன் பிரதேசத்தில் நடத்தினார்.

எனது மணிவிழா 2011 ஆம் ஆண்டு மெல்பனில் நடந்தபோதும் உரையாற்றினார். அவரது உரை ரஸஞானி ஆவணப்படத்திலும் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு  மனிதநேயத்துடனும் இன ஐக்கியத்தை பேணும் வகையிலும் அயர்ச்சியின்றி இயங்கிவரும் தோழர் லயனல் போப்பகே பற்றிச்  சொல்வதற்கு பல நல்ல விடயங்கள் இருக்கின்றன.

தோழர் லயனல் பற்றி மைக்கல் கொலின் என்ற எழுத்தாளர், THE LIONEL BOPAGE STORY என்ற 565 பக்கங்கள் கொண்ட விரிவான நூலை எழுதியுள்ளார்.

கொவிட் பெருந்தொற்று இலங்கையிலும் பரவியிருந்தபோது, தோழர் லயனல் முன்னின்று ஆரம்பித்த தன்னார்வத் தொண்டு அமைப்பு,  இலங்கையில் ரோட்டரி கழகம் செஞ்சிலுவைச்சங்கம் முதலான அமைப்புகளின்  ஊடாக மேற்கொண்ட  சேவைகள் குறிப்பிடத்தகுந்தவை.

அண்மையில் இலங்கை,  75 ஆவது சுதந்திர தின விழாவை கொண்டாடியபோது, லயனல் ,  இலங்கையின் தற்போதைய நெருக்கடிக்கும் 1971 நிலைவரத்துக்கும் இடையிலான ஒற்றுமைகள் மீது ஒரு சிந்தனை   என்ற தலைப்பில் எழுதிய கட்டுரை, ஆங்கில, தமிழ்,   சிங்கள ஊடகங்களில் வெளியானது என்பதும் குறிப்பிடத்தகுந்தது. 

---0---

 


No comments: