உலகச் செய்திகள்

பைடன், ஜின்பிங் இடையே சந்திப்பு இடம்பெற வாய்ப்பு

நியூசிலாந்தில் பூகம்பம்

உக்ரைன் மீது ரஷ்யா சரமாரி ஏவுகணை வீச்சு

கொவிட் தோற்றத்தை அறிவதில் உலக சுகாதார அமைப்பு உறுதி

சவூதியின் முதல் பெண் விண்வெளிக்குப் பயணம்

70 ரொஹிங்கிய அகதிகள் இந்தோனேசியாவில் தஞ்சம்


 பைடன், ஜின்பிங் இடையே சந்திப்பு இடம்பெற வாய்ப்பு

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், சீனாவிலிருந்து அனுப்பப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் வேவு பலூன் தொடர்பாக சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கிடம் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த உரையாடல் எப்போது நடைபெறும் என்ற விபரங்கள் வெளியிடப்படவில்லை. ஆனால் அமெரிக்கா சீனாவுடன் பூசலை நாடவில்லை என்று பைடன் வலியுறுத்தினார்.

சீனாவிலிருந்து வந்த பலூனைச் சுட்டு வீழ்த்தியதற்குத் தாம் மன்னிப்புக் கேட்கப் போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். அமெரிக்கர்களின் நலனையும் பாதுகாப்பையும் உறுதிசெய்யத் தாம் எப்போதுமே நடவடிக்கை எடுக்கப் போவதாக அவர் கூறினார்.இந்நிலையில், அமெரிக்காவின் ஆகாயவெளியில் சுட்டு வீழ்த்தப்பட்ட ஏனைய 3 பொருட்களுக்கும் சீனாவுக்கும் தொடர்பு இருப்பதாகத் தெரியவில்லை என்று பைடன் குறிப்பிட்டார்.

அந்தப் பொருட்களை மீட்டு, பகுப்பாய்வு செய்யும் பணி தொடர்கிறது.

 நன்றி தினகரன்  






நியூசிலாந்தில் பூகம்பம்

நியூசிலாந்தின் வெளிங்கடன் நகருக்கு அருகில் நேற்று (15) 6.1 ரிக்டர் அளவில் பூகம்பம் பதிவாகியுள்ளது. அது பயங்கரமானதும் சக்திவாய்ந்ததாகவும் இருந்தது என்று சிலர் விபரித்துள்ளனர்.

பூகம்பம் காரணமாக 30 விநாடிகள் வரை வெளிங்டன் நகர் குலுங்கியுள்ளது. பரபரரூமுவின் வடமேற்காக 50 கி.மீ தொலைவில் 45 கிலோமீற்றர் ஆழத்தில் இரவு 7.38 மணிக்கு இந்த பூகம்பம் ஏற்பட்டதாக புவியியல் ஆலோசனை நிறுவனமான ஜியோநெட் தெரிவித்துள்ளது.   நன்றி தினகரன் 





உக்ரைன் மீது ரஷ்யா சரமாரி ஏவுகணை வீச்சு

உக்ரைனின் பல்வேறு பகுதிகளிலும் ரஷ்யா மீண்டும் சரமாரி ஏவுகணை தாக்குதல்களை நடத்தியுள்ளது.

கடந்த புதன்கிழமை இரவிலிருந்து வியாழக்கிழமை அதிகாலை வரை விடிய விடிய நடத்தப்பட்ட இந்தத் தாக்குலுக்கு பல்வேறு ரகங்களைச் சேர்ந்த ஏவுகணைகளை ரஷ்யா பயன்படுத்தியுள்ளது.

உக்ரைன் நிலைகள் மீது ரஷ்யா மொத்தம் 36 ஏவுகணைகளை வீசியது. அதில் 16 ஏவுகணைகளை உக்ரைன் வான்பாதுகாப்பு ஏவுகணைகள் இடைமறித்து அழித்தன. எஞ்சிய ஏவுகணைகள் தங்கள் இலக்குகளைத் தாக்கின என்று உக்ரைன் இராணுவ தலைமை தளபதி வாலெரி ஸலுஷனீ தெரிவித்துள்ளார்.

இதுவரை ரஷ்யா வீசிய ஏவுகணைகளை உக்ரைன் வான்பாதுகாப்பு ஏவுகணைகள் அதிக அளவில் இடைமறித்து அழித்துள்ளன. அதனுடன் ஒப்பிடும்போது தற்போது குறைந்த அளவிலேயே ரஷ்ய ஏவுகணைகள் அழிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

நாட்டின் வடக்கு, மேற்கு, தெற்கு, கிழக்கு, மத்தியப் பகுதிகளைக் குறிவைத்து ரஷ்ய ஏவுகணைகள் வீசப்பட்டதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனர்.   நன்றி தினகரன் 






கொவிட் தோற்றத்தை அறிவதில் உலக சுகாதார அமைப்பு உறுதி

கொவிட்–19 வைரஸ் பரவல் எங்கிருந்து, எப்படி ஆரம்பித்தது என்பதைக் கண்டுபிடிக்காமல் விடப்போவதில்லை என உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.

அவ்விவகாரத்தைத் தாங்கள் கைவிட்டு விட்டதாகச் கூறப்படுவதை அந்த அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் கேப்ரியேசஸ் மறுத்தார்.

வருங்காலத்தில் இத்தகைய நோய்த்தொற்றுகள் ஏற்படுவதைத் தடுக்க SARS CoV-2 வைரஸ் எங்கிருந்து, எப்படி வந்தது, மனிதர்கள் மத்தியில் எவ்வாறு பரவியது என்பதைக் கண்டுபிடிப்பது மிகவும் அவசியம் என்றார் அவர். 2019ஆம் ஆண்டு இறுதியில் அந்த வைரஸ் பரவல் சீனாவில் ஆரம்பமானது.

எனினும் அது தொடர்பான ஆய்வுகளுக்குச் சீனாவிடமிருந்து சரிவர ஒத்துழைப்பு கிடைக்காததால் உலக சுகாதார அமைப்பு அதன் ஆய்வுகளைக் கைவிட்டுவிட்டதாக நேச்சர் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதற்கு விளக்கமளித்த டொக்டர் டெட்ரோஸ் சீன அதிகாரிகளுக்கு அதிகாரபூர்வக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என்றார்.

இதற்கு முன் 2021 இல் சர்வதேச நிபுணர்கள் குழுவொன்றை உலக சுகாதார அமைப்பு சீனாவுக்கு நேரடியாக அனுப்பியது. ஆயினும் அதில் பெறப்பட்ட தகவல்கள் வெளிப்படையாக இல்லை என விமர்சனங்கள் எழுந்தன.    நன்றி தினகரன் 




சவூதியின் முதல் பெண் விண்வெளிக்குப் பயணம்

இந்த ஆண்டு இறுதியில் சவூதி அரேபியா முதல் பெண்ணை விண்வெளிக்கு அனுப்பவுள்ளது.

சவூதியின் அல் கார்னியுடன் இணைந்து ரய்யானா பர்னாவி 10 நாள் திட்டமாக சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பயணிக்கவிருப்பதாக சவூதி பிரெஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தனியார் விண்வெளி நிறுவனமான எக்சியோ ஸ்பேஸ் மூலம் இந்த வசந்தகாலத்தில் முன்னெடுக்கப்படும் திட்டத்தின் அங்கமாகவே ஸ்பேஸ்எக்ஸ் ட்ரகன் விண்கலத்தில் இந்த இருவரும் விண்வெளி செல்லவுள்ளனர்.

சவூதி அரேபியாவில் பெண்கள் மீதான கண்டிப்பான கொள்கைகளை தளர்த்தும் முயற்சியில் அந்நாட்டில் முடிக்குரிய இளவரசர் முஹமது பின் சல்மான் ஈடுபட்டு வரும் நிலையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.   நன்றி தினகரன் 







70 ரொஹிங்கிய அகதிகள் இந்தோனேசியாவில் தஞ்சம்


இந்தோனேசியாவின் அச்சே மாநிலத்திற்குச் சுமார் 70 ரொஹிங்கிய அகதிகள் சென்றுசேர்ந்துள்ளனர்.

கடந்த நவம்பரிலிருந்து இதுவரை 6 படகுகளில் அகதிகள் இந்தோனேசியாவுக்குச் சென்றுள்ளனர். பங்களாதேஷில் உள்ள முகாம்களில் கடுமையான நிலையை எதிர்நோக்கும் அகதிகள், வேறு இடங்களைத் தேடிச் செல்கின்றனர். அந்த முகாம்களில் சுமார் 1 மில்லியன் பேர் வசிக்கின்றனர்.

மியன்மாருக்குத் திரும்பினால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அச்சத்தில் ரொஹிங்கிய மக்கள் வேறு இடங்களில் தஞ்சம் புக முயல்கின்றனர்.

கடந்த ஆண்டில் அதிகமான அகதிகள் நோய், பட்டினி, சோர்வு ஆகியவற்றால் கடலில் மாண்டுவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

ரொஹிங்கிய மக்கள் கடந்த ஆண்டு மிக ஆபத்தான நிலைமையை எதிர்நோக்கியதாக, ஐக்கிய நாட்டு அகதிகள் அமைப்பு குறிப்பிட்டது.    நன்றி தினகரன் 


No comments: