துருக்கியில் ஏற்பட்ட நில அதிர்வினால், நாற்பத்தியைந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்திருக்கும் இவ்வேளையில், இந்தப்பதிவை கனத்த மனதுடன் எழுதுகின்றேன்.
இயற்கையை தெய்வமாக வழிபடும் மக்கள், அதன் சீற்றத்தை காணும்போது,
அதற்கான காரணம் தெரியாமல் புலம்புவார்கள்.
அத்தகைய ஒரு புலம்பல் மனநிலையில் நானும் 2004 ஆம்
ஆண்டு இறுதிப்பகுதியில் இருந்தேன்.
எனது அம்மா, அதற்கு முதல் வருடம் மே மாதம் இறந்த செய்தியினால்
வந்த அதிர்ச்சியை கடந்து சென்றுகொண்டிருந்தபோது,
அடுத்து வந்த ஆண்டுகளிலும் பதறவைக்கும் செய்திகளே என்னை வந்தடைந்தன.
20-04- 2004 ஆம் திகதி என்னால் மறக்கவே முடியாத தினம், அன்றைய
பகல்பொழுதில் எனது தாயார் மறைந்து முதலாண்டு திதியை முன்னிட்டு தாயாரின் உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தி படையலிட்டு, உணவருந்த அமர்ந்தபோது , எனது இரண்டாவது மகள் பிரியாதேவி தனது அறையிலிருந்து பதட்டத்துடன் ஓடிவந்தாள்.
அவளது கையடக்கத் தொலைபேசிக்கு வந்திருந்த சுருக்கமான செய்தி
இலக்கிய நண்பர் ராஜஶ்ரீகாந்தனின் மறைவைத் தெரிவித்தது.
சகோதரி தேவகௌரி ( தினக்குரல் ) தகவல் அனுப்பியிருந்தார். அதிர்ச்சியான அச்செய்தியை
அனுப்பிய அவருடனான இணைப்பு உடனடியாக கிடைக்காதமையினால், மல்லிகை இதழ் அலுவலகத்திற்கு
தொடர்புகொண்டேன். அங்கே எழுத்தாளர் ஆப்தீன், அச்செய்தியை உறுதிப்படுத்தினார். அவர்
தந்த இலக்கத்தில் தொடர்புகொண்டபோது, ராஜஶ்ரீகாந்தனின் மூத்த மகள் அபர்ணா மறுமுனையில்
கதறினார்.
பின்னாளில் ராஜஶ்ரீகாந்தன் சென்றவிடத்திற்கே நண்பர் ஆப்தீனும் அபர்ணாவும் வெவ்வேறு காலப்பகுதியில் சென்றனர் என்பது மற்றும் ஒரு தீராத சோகம்.
ஈழத்து தமிழ் இலக்கியம் மற்றும் ஊடகத்துறைகளின் வளர்ச்சியில்
காத்திரமான பங்களிப்புகளை வழங்கியவர்களின் வரிசையில் ராஜஶ்ரீகாந்தன்
குறிப்பிடத்தகுந்தவர். வடமராட்சியில் வதிரி என்னும் கிராமத்தில் 1948 ஆம் ஆண்டு பிறந்து
தனது 56 ஆவது வயதில் கொழும்பில் மறைந்தார். சிறுகதை, கட்டுரை, விமர்சனம்,
திறனாய்வு, இதழியல், மொழிபெயர்ப்பு முதலான துறைகளில் ஈடுபட்டவர்.
வடமராட்சியில் அடிநிலை மக்களின் கல்வி முன்னேற்றத்திற்காகவும் மறுமலர்ச்சிக்காகவும் கடுமையாக உழைத்த பெரியார் சூரன் அவர்களினால் எழுதப்பட்ட சுயசரிதையை கையெழுத்துப் பிரதியிலிருந்து அச்சுப்பிரதியாக பதிப்பித்து வெளியிட்டவரும் ராஜஶ்ரீகாந்தன்தான்!
அழகு சுப்பிரமணியத்தினால் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட சிறுகதைகள் (
நீதிபதியின் மகன்), நாவல் (மிஸ்டர் மூன்) ஆகியனவற்றை தமிழில் மொழிபெயர்த்தார்.
இவரது காலச்சாளரம் சிறுகதைத்தொகுதிக்கும் நீதிபதியின் மகன் மொழிபெயர்ப்பு
நூலுக்கும் தேசிய சாகித்திய விருதுகள் கிடைத்துள்ளன.
கொழும்பில் சோவியத் தூதரகத்தின் தகவல் பிரிவில் அவர் பணியாற்றிய
காலத்தில் சோவியத் நாடு, சோஷலிஸம் – தத்துவமும் நடைமுறையும், மற்றும் புதிய உலகம்,
சக்தி ஆகிய இதழ்களின் ஆசிரியர்குழுவிலும் பணியாற்றி ஊடகவியலாளராக தனது எழுத்துப்
பணிகளைத் தொடர்ந்தார்.
கொழும்பு பல்கலைக்கழகத்தில் பத்திரிகைத்துறை பாடநெறியிலும் பயிற்சி
பெற்றிருந்த ராஜஶ்ரீகாந்தனின் சிறுகதைகள் ஆங்கிலம், ருஷ்யா உக்ரேய்ன், சிங்களம்
ஆகிய மொழிகளில் பெயர்க்கப்பட்டுள்ளன. இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின்
சர்வதேச செயலாளராகவும் இயங்கியிருக்கும் ராஜஶ்ரீகாந்தன், கொழும்பில் லேக்ஹவுஸ்
நிறுவனத்தின் தினகரன் பத்திரிகையின் பிரதம ஆசிரியராகவும் பணியாற்றியவர்.
எனது நெஞ்சத்துக்கு
நெருக்கமான ராஜஶ்ரீகாந்தன் மறைந்ததையடுத்து, ராஜஶ்ரீகாந்தன் நினைவுகள் என்ற
நூலை எழுதினேன்.
அவுஸ்திரேலியாவுக்கு நான் 1987 இல் புலம்பெயர்ந்து
வந்த காலம் முதல் அவர் மறைந்த 2004 ஏப்ரில் மாதம்
வரையில் அவர் எனக்கு எழுதியிருக்கும் கடிதங்கள் ஏராளம்.
அவை இலக்கியம், சமூகம், அரசியல், எழுத்துலகம் பற்றிய செய்திகளையும் ஆவணப்படுத்தியிருக்கும். அழகிய சின்னச்சின்ன எழுத்துக்களில் அவரது கடிதங்கள் அவரது எளிமையான இயல்புகளையும் பேசியிருக்கும். 1987 ஆம் ஆண்டில் அன்றைய ஜே.ஆர். ஜெயவர்தனாவின் பதவிக் காலத்தில் வடமராட்சியில் பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத் முதலியின் உத்தரவின்பேரில் நடந்த ” ஒப்பரேஷன் லிபரேஷன் ” தாக்குதல் ஆக்கிரமிப்பை பற்றி ராஜஶ்ரீகாந்தன் எனக்கு எழுதிய கடிதங்கள் தெரிவிக்கும் செய்திகளிலிருந்து ஈழப்போராட்டத்தை முற்றாக நசுக்குவதற்காக 1987 இலேயே நடத்தப்பட்ட ஒத்திகையாகவும் அந்த ” ஒப்பரேஷன் லிபரேஷன் ” தாக்குதல் ஆக்கிரமிப்பை அவதானிக்கலாம்.
குறிப்பிட்ட ” ஒப்பரேஷன் லிபரேஷன் ” தாக்குதல்
ஆக்கிரமிப்பினையடுத்தே, இந்தியா வடமராட்சியில் விமானங்கள் மூலம் உணவுப்பொட்டலங்களை வீசி மற்றும் ஒரு ஆக்கிரமிப்புக்கு அடிகோலியது. அதன்பின்னர் அமைதி காக்க வந்த இந்தியப்படைகளின் காலம், அதன் பின்னரும் நீடித்த போர்க்காலம், இறுதிக்கட்ட முள்ளிவாய்க்கால் அவலம் பற்றி தொடர்ச்சியாக ஆவணங்களும் நூல்களும் பத்தி எழுத்துக்களும் வெளியாகின்றன.
சமகாலத்தில் தமிழ்நாட்டிலிருந்து பழ. நெடுமாறன் வெளியிட்டுள்ள
செய்தியினால், ஊடகங்களில் மற்றும் ஒரு
பட்டி மன்றம் தொடங்கியிருக்கிறது. இது எங்குபோய் முடியுமோ…?!
அன்று ராஜகாந்தன் நினைவுகள் நூலில் அவர் எனக்கு எழுதிய சில முக்கிய கடிதங்களையும் பின் இணைப்பாக சேர்த்திருந்தேன். அதன் மூலப்பிரதியை ராஜஶ்ரீகாந்தனின் அன்புத்துணைவியார் திருமதி லீலா ராஜஶ்ரீகாந்தனுக்கு அனுப்பினேன்.
அவர், தானே அதனை கணினியில் பதிவேற்றித்தருவதாகவும், கொழும்பில்
கிறிப்ஸ் அச்சகம் நடத்தும் கணவரின் நண்பர் கிருஷ்ணமூர்த்தி மூலம் அச்சிடலாம் எனவும் சொன்னார். அதனை
ஒப்புநோக்கும் வேலைகளை நண்பர் மேமன்கவி பார்த்தார்.
இந்த வேலைகள் நடந்துகொண்டிருந்தபோது எதிர்பாராதவகையில்
சுனாமி கடற்கோள் அநர்த்தம் 2004 ஆம் டிசம்பர் மாதம் கிறிஸ்மஸ் தினம் வரும் காலத்தில் வந்தது.
இந்தக் கோர அநர்தத்தினால், இந்தோனேசியா, இலங்கை, இந்தியா,
தாய்லாந்து உட்பட பல நாடுகள் ஒரு இலட்சத்து ஐம்பதினாயிரம் பேருக்கு மேற்பட்டோரை இழந்தது.
எமது தாய்நாட்டிலிருந்து வந்துகொண்டிருந்த செய்திகளினால் மனம்
பதறிக்கொண்டிருந்தது. நாம் நடத்தும்
இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் உதவியினால் கல்வியை தொடரும் சில மாணவர்களையும்
அந்தக்கடல் அள்ளிச்சென்றது.
கிழக்கிலங்கையில் பாண்டிருப்பில் தந்தையை ஆயுதப்படையிடம் இழந்திருந்த ஜனனி என்ற பத்து வயது மாணவி, தனது தாயாரின் முன்னாலேயே கிணற்றடியிலிருந்து அள்ளிச்செல்லப்பட்டு காணாமல் போனார். அவரது குடும்ப உறவில் மாத்திரம் ஏழு குழந்தைகள் இறந்தனர்.
இன்று துருக்கியில் இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பவர்களின் ஓலம்
கேட்டுக்கொண்டிருக்கிறது.
அன்று கடலுக்குள் ஏற்பட்ட அதிர்வு மக்களை காவுகொண்டது.
மனம் பேதலித்திருந்த அந்தக்காலப்பகுதியில் எமது இலங்கை
மாணவர் கல்வி நிதியம் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு உதவ முன்வந்தது. மாணவர்களின் கல்வித் தேவைக்காக சேகரித்து வைத்திருந்த நிதியில் கணிசமான தொகையிலிருந்து இரண்டு பெரிய கொள்கலன்களை ( Containers ) பெற்று, அதில் உடுபுடவைகளை சேகரித்து அனுப்புவதற்கு நிதியத்தின் பரிபாலன சபையிடம் அனுமதியை கோரினேன்.
அனுமதி கிடைத்தது. இரவு
பகலாக துரிதமாக செயல்பட்டு, உடைகள் மற்றும் மக்களுக்கு தேவையான அத்தியாவசியப்
பொருட்களும் சேகரித்தோம்.
எனக்கு மார்பில் பைபாஸ் சத்திர சிகிச்சை செய்யப்பட்டிருந்தமையால், சுமைகளை தூக்கவேண்டாம் என மருத்துவர்களின் ஆலோசனை இருந்தது. அதனைப்பொருட்படுத்தாமல் அலைந்து திரிந்தேன். பல இரக்கமுள்ள அன்பர்கள் உதவினர். அக்காலப்பகுதியில் கிறிஸ்மஸ் – புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு மக்கள் தயாராகியிருந்தனர். எமது நிதியத்தின் கணக்கிருக்கும் வங்கியும் மனிதாபிமானத்துடன் இலங்கைக்கு நாம் அனுப்பும் நிதியுதவிக்கான கட்டணத்தை அறவிடவில்லை.
எமது இல்லம் அன்பர்கள் தந்த உடுபுடவைகளினால் நிரம்பியது.
அச்சமயம் இலக்கிய சகோதரி கோகிலா மகேந்திரன், தமது கணவர் அளவெட்டி அருணோதயா கல்லூரி அதிபர் மகேந்திரராஜாவுடன், இங்கு கற்றுக்கொண்டிருந்த தமது ஏக புதல்வனை பார்க்க வந்திருந்தார்.
கோகிலா, உளவியல்
தெரிந்தவர். அத்துடன் சீர்மியப்பணிகளிலும் ஈடுபடுபவர். எனக்கிருந்த மனவுளைச்சலை அவரிடம் சொல்லிக்கொண்டிருந்தேன்.
அவர்கள் மூவரும் எம்முடன் இணைந்து உடுபுடவைகளை தேர்வு செய்து
பொதிகளில் அடுக்கும் வேலைகளில் ஈடுபட்டனர்.
மெல்பன் வேர்மன்ட் தெற்கு சமூக இல்லத்தில் கோகிலா மகேந்திரனுடன் ஒரு உளவள சீர்மியம் தொடர்பான கலந்துரையாடலை ஏற்பாடு செய்தேன்.
சுனாமியால் மறைந்தவர்களின்
ஆத்ம சாந்திக்காக விளக்கேற்றி மௌன அஞ்சலி
நடத்திவிட்டு, கோகிலா மகேந்திரனை பேசவைத்தோம்.
அன்று எனது உரையின்போது கண்கலங்கி உணர்ச்சிவசப்பட்டுவிட்டேன்.
அம்மாவின் மறைவு அதனையடுத்து எமது உற்ற நண்பர் ராஜஶ்ரீகாந்தனின் திடீர் மறைவு,
பின்னர் சுநாமி கடற்கோள் அநர்த்தம்.
கனவுகளுடன் பிறந்து தவழும் பருவத்திலும் ஆரம்பக்கல்வியில் ஈடுபடும்
வேளையிலும் கடலின் பேரலை இழுத்துச்சென்ற குழந்தைகள்… என சோகம் நெஞ்சை
அடைத்துக்கொண்டிருந்தது.
ஏற்கனவே மாரடைப்பு வந்து சிகிச்சைக்குள்ளாகியிருந்த எனக்கு
ஏதும் நேர்ந்துவிடுமோ என்ற கவலையில் மனைவியும் பிள்ளைகளும் எனது கவனத்தை மகேந்திரராஜா, கோகிலா மற்றும் அவர்களது புதல்வன் பிரவீணன் மூலம் திசை திருப்ப முயன்றார்கள்.
“ நெருக்கடியான
வேளையில்தான் நாம் உற்சாகமாக இயங்கவேண்டும்
“ என்று சொல்லிவிட்டு அவர்கள் புறப்பட்டார்கள்.
அவ்வேளையில் சிட்னியில் ஐந்தாவது தமிழ் எழுத்தாளர் விழாவுக்கான
ஏற்பாடுகளை கவனித்தேன்.
சிட்னியில் Homebush ஆண்கள் உயர்தர கல்லூரி மண்டபத்தில் இந்த
விழா 2005 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 22 ஆம் திகதி நடந்தது.
சிட்னி தமிழ்ப்பாடசாலை மாணவர்களின் ஓவியங்களுடன், அங்கிருக்கும்
ஓவியர்கள் ஞானம், குணசிங்கம் ஆகியோரின் ஓவியங்களும் இடம்பெற்ற கண்காட்சியுடன்
புத்தக கண்காட்சியும் மனோஜெகேந்திரனின்
ஏற்பாட்டில் மலர்க்கண்காட்சியும் நடத்தினோம்.
வானொலி ஊடகவியலாளர்கள் றைசெல், விக்டர் ராஜகுலேந்திரன், மற்றும் மகேஸ்வரன் பிரபாகரன் ஆகியோர் சுனாமி கடற்கோள் அநர்த்தம் தொடர்பான இரங்கலுரைகளை நிகழ்த்தினர். கவிஞர் அம்பி தலைமையில் கவியரங்கும், இலங்கையிலிருந்து வருகை தந்திருந்த சட்டத்தரணி ஜெயந்தி விநோதன் தலைமையில் விமர்சன அரங்கும் நடத்தினோம்.
இரவு நிகழ்ச்சியில் எம்மத்தியில் வதியும் கூத்துக் கலைஞர் அண்ணாவியார் இளையபத்மநாதனை (
பத்தண்ணா) பாராட்டி கௌரவித்தோம். நடன நர்த்தகி கார்த்திகா கணேசரின் மாணவியரின்
நடன நிகழ்ச்சியும், சட்டத்தரணி மனோ ஜெகேந்திரன் குழுவினரின் வில்லுப்பாட்டும் இடம்பெற்றது.
மெல்பனிலிருந்து எழுத்தாளர்
‘ நல்லைக்குமரன் ‘ குமாரசாமி தமது குடும்பத்தினருடன் வந்திருந்தார். அந்த
விழாவை முடித்துக்கொண்டு மெல்பன் திரும்பியபோது,
கொழும்புக்கு சுநாமி கடற்கோளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனுப்பிய இரண்டு
கொள் கலன்களையும் துறைமுகத்திலிருந்து விடுவிப்பதில் தாமதம் நீடிப்பதாக எமது தொடர்பாளர்களிடமிருந்து
தகவல் வந்தது.
ஒரு கொள்கலனை வன்னிப்பிரதேசத்தில் திருமறைக் கடமைகளில்
ஈடுபட்டுவந்த வணக்கத்திற்குரிய பிதா
ஜேம்ஸ் பத்திநாதரின் பெயருக்கும் மற்றும் ஒரு கொள்கலனை கிழக்கு பல்கலைக்கழகத்தின்
துணைவேந்தர் பேராசிரியர் ரவீந்திரநாத்தின் பெயருக்கும் அனுப்பியிருந்தோம்.
நான் சிட்னியிலிருந்து மெல்பன் திரும்பியதும் கொழும்பு செல்லத் தயாரானேன்.
அப்போது சந்திரிக்கா விஜயகுமாரணதுங்கா ஜனாதிபதியாகவிருந்தார். எமது தாயகத்தில் அரசியல்வாதிகளும் இலாபம்
தேடுவதில் குறியாக இருக்கும் வர்த்தகர்களும்,
நாட்டில் எத்தகைய நெருக்கடிகள் வந்தாலும் தங்கள் நலனுக்கே முக்கியத்துவம்
கொடுப்பார்கள் என்பதிலிருக்கும் உண்மையை அந்தப்பயணத்தில் மீண்டும்
தெரிந்துகொண்டேன்.
சுனாமிக்காக வெளிநாடுகளிலிருந்து தேசாபிமானம் மிக்க அன்பர்கள்
அனுப்பிய நிவாரண உதவிகளிலும் அவர்கள் தமது
இயல்புகளை காண்பித்தனர்.
சுநாமி நிவாரண உதவிக்கு வெளிநாடுகளிலிருந்து வரும் பொருட்களுக்கு
தீர்வை இல்லை என சந்திரிக்காவின் அரசு அறிவித்ததும் சில புறக்கோட்டை வர்த்தகர்கள்
தங்கள் கைவரிசையை காண்பிக்கத் தொடங்கியிருந்தனர்.
அதே சமயம் களத்தில் நின்ற விடுதலைப்புலிகள் இயக்கமும் அரசும்
போர் நிறுத்தத்தை அறிவித்துவிட்டு பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகளுக்கே
முன்னுரிமை கொடுத்தன.
அந்த சுமுகமான சூழ்நிலையை தக்கமுறையில் பயன்படுத்தி இலங்கையில்
நிரந்தரமான சமாதானத்தை அப்போதே ஏற்படுத்தியிருக்கலாம்.
ஆனால், இலங்கையின் தலைவிதி மாறியதாக சரித்திரம் இல்லைத்தானே…?
குறிப்பிட்ட இரண்டு கொள்கலன்களையும் துறைமுகத்திலிருந்து
மீட்பதற்காக பல நாட்கள் போராடவேண்டியிருந்தது.
அமைச்சர்கள் பௌசி, டக்ளஸ் தேவானந்தா ஆகியோருடனெல்லாம் தொலைபேசியில் பேச
நேர்ந்தது.
அமைச்சர் டக்ளஸின் செயலாளராக விளங்கிய, பின்னாளில் எம்.பி. ஆகவும்.
வடமாகாண சபையின் எதிர்க்கட்சித்தலைவருமாகவும் வந்த தோழர் தவராசவை அமைச்சு அலுவலகத்தில் நேரில்
சந்தித்து முறையிட்டேன்.
வன்னியிலிருந்து வாகனத்துடன் வந்திருந்த வண. பிதா ஜேம்ஸ் பத்திநாதர் தனது உடல் உபாதைகளுடன் நிவாரணப்
பொருட்களுக்காக காத்திருந்தார்.
சுமார் இரண்டு வாரங்களின் பின்னர் குறிப்பிட்ட கொள்கலன்கள்
விடுவிக்கப்பட்டன.
அன்றிருந்த சூழ்நிலைகளினால், வன்னிக்குச் செல்லத்தயங்கினேன்.
எனினும் ஒருநாள் இரவு பஸ்ஸில்
மட்டக்களப்புக்கு பயணமானேன். கிழக்கு பல்கலைக்கழகத்தில் உதவி
விரிவுரையாளராக பணியாற்றிய வாசுகி உடன் வந்தார்.
அங்கே ஆண்கள் விடுதியில் விரிவுரையாளர் கிருஷ்ணமோகனுடன்
தங்கியிருந்து கல்முனை, பாண்டிருப்பு , பெரிய நீலாவணை, அம்பாறை முதலான
பிரதேசங்களுக்குச் சென்றேன்.
இந்தப்பதிவில் நான் முதலில் குறிப்பிட்ட சுநாமி காவுகொண்ட மாணவி
ஜனனியின் தாயார் என்னைக்கண்டதும் கதறி அழுத காட்சி இன்னமும் மனதை விட்டு
அகலவில்லை. கிடைக்கப்பெற்ற குழந்தைகளின் சடலங்கள் அடக்கம் செய்யப்பட்ட இடங்களில்
நின்று கண்ணீர் விட்டு, அஞ்சலி செலுத்தினேன்.
கிழக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ரவீந்திரநாத்தின் வேண்டுகோளை ஏற்று, அந்தப்பிரதேசத்தில் சுநாமியால் பாதிக்கப்பட்ட
பல்கலைக்கழக மாணவர்கள் பலரை எமது கல்வி நிதியத்தின் உதவித்திட்டத்தில்
இணைத்துக்கொண்டு மெல்பன் திரும்பினேன்.
அந்த மாணவர்கள் அனைவரும் கல்வி நிதியத்தின் உதவியினால் கற்றுத்தேறி,
பட்டதாரிகளாகி தொழில் வாய்ப்பு பெற்று
குடும்பத்தலைவன் – தலைவியாகிவிட்டனர்.
அந்த மனிதாபிமான பணியில் எம்மோடு இணைந்து நின்ற துணைவேந்தர்
பேராசிரியர் ரவீந்திரநாத் அவர்களும் பின்னாளில் ஆயுததாரிகளினால் கடத்தப்பட்டு
காணாமலாக்கப்பட்டார்.
மனிதர்கள் சுநாமி
கடற்கோளினால் காணாமல்போவது
இயற்கையின் விதி என்றால்,
ஆயுததாரிகளினால் காணாமல் போகின்றவர்களின் விதியை யார் எழுதியது..?
( தொடரும் )
2 comments:
அருமையான பதிவு
இங்கு வதியும் அனேகமானோரைச் சென்றடைய வேண்டிய அருமையான பதிவு.
Post a Comment