மெல்பேர்ண் வெதர் – குறுநாவல்

அதிகாரம் 8 : கொண்டாட்டம்

 


மக்காறியோ செய்யமுடியாததை தான் செய்து முடித்துவிட்டதாக தப்பட்டம் அடித்தான் ஜோசுவா. ஆனால் மக்காறியோ அதை நம்பத் தயாரில்லை. நிஜத்தில் ஒருநாள் காட்டுகின்றேன் எனச் சபதம் போட்டான் ஜோசுவா.

 ஒருநாள் டியர்பார்க் ஹோட்டலில் இரவைக் கழிப்பதென முடிவு செய்தார்கள் ஜோசுவாவும் புங்கும். இரண்டுபேரும் கார்த்தரிப்பிடத்தில், வேலை ஆரம்பித்து பதினைந்து நிமிடங்களுக்குள் சந்தித்துக் கொள்வதென்று முடிவு செய்திருந்தார்கள்.

 வேலை ஆரம்பிப்பதற்கான மணி ஒலி கேட்டது. சற்று நேரத்தில் காரில் இருந்து இறங்கி சுற்றுமுற்றும் பார்த்தாள் புங். குளிர் காலம் வானம் இருண்டு கிடந்தது. மெதுவாக நடந்து ஜோசுவாவின் காரைச் சேர்ந்தாள். கதவைத் திறந்து, கார் சீற்றைச் சரித்துவிட்டு குளிர் உடுப்பின் தொப்பியால் தன் தலையை மூடிக்கொண்டு ஒருக்களித்துப் படுத்தாள். இனி அவளைத் தெருவில் போகும் ஒருவரும் கண்டுகொள்ள முடியாது.

 ஜோசுவா தன் கழுத்தைச் சரித்து அவளைப் பார்த்துச் சிரித்தான். அவள் ஒன்றும் சொல்லாமல் மெளனமாக தன் வாயைச் சுழித்தாள். அந்தச் சுழிப்பு அவன் மனதைக் கிறங்க வைக்க காரை மெதுவாகக் கிழப்பினான்.

 இந்தக் காட்சியை கார்த்தரிப்பிடத்தில் இன்னொரு காருக்குள்ளிருந்து மக்காறியோ பார்த்துக் கொண்டிருந்தான்.

 கார் ஹோட்டலை அடைந்ததும் காரைவிட்டு இறங்க மறுத்தாள் புங்.

 “நான் வரமாட்டேன். எனக்குப் பயமாக இருக்கின்றது” அடம்பிடித்தாள் புங்.

 அங்கும் இங்கும் பார்த்துவிட்டு அவளை இறுக அணைத்து அவளின் கன்னத்தில் ஒரு உம்மாக் கொடுத்தான் ஜோசுவா. குளிரினால் உறைந்து போயிருந்த அவள் கன்னங்கள் சில்லென்று இருந்தன. முத்துக்குளித்த முதல் சுகானுபவத்தில் மூச்சுத் திணறினான் ஜோசுவா.

 “பொறு… பொறு… விட்டால் நீ இங்கேயே விஷயத்தை முடித்துவிடுவாய்” சொல்லிக் கொண்டே காரைவிட்டு இறங்கினாள் புங். ஜோசுவாவின் பின்னாலே அற நனைந்த கோழிபோல உரசிக்கொண்டு நடந்தாள்.

 “இதைத்தானே பதினைந்து வருடங்களாக ’மை ஹஸ்பெண்டும்’

அல்பேற்றோவும் செய்யுறாங்கள். அவங்களுக்கு இன்னும் அலுக்கேல்லைத்தானே!” புங்கின் காதிற்குள் ஜோசுவா மெதுவாகச் சொன்னான்.

 “அது என்ன மைஹஸ்பெண்ட்?” ஆச்சரியத்துடன் ஜோசுவாவின் முகத்தைப் பார்த்தாள் புங்.

 “உனக்கு ஆச்சிமாவைத் தெரியும்தானே! ஆச்சிமா தான் ’மை ஹஸ்பெண்ட்’ அவளின் நிக் நேம் தான் மை ஹஸ்பெண்ட்”

 “அவளைப்பற்றி எனக்கு எல்லாம் தெரியும். ஆனால் நிக் நேமை இப்பதான் தெரிந்து கொண்டேன்.”

 “ஆச்சிமா எதற்கெடுத்தாலும் மை ஹஸ்பெண்ட்…. மை ஹஸ்பெண்ட் என்று சொல்லுவாள். மூச்சுக்கு மூச்சு மை ஹஸ்பெண்ட் தான்.  கார் வாங்கினால், மை ஹஸ்பெண்ட் தான் வாங்கித் தந்தான். சென்ற் வாங்கினால், மை ஹஸ்பெண்ட் தான் வாங்கித் தந்தவன். ஆனால் நித்தமும் பழகிறது என்னவோ அல்பேற்றோவுடன்.”

 “ஆச்சிமா… பூம் பூம்” சொல்லிவிட்டு அடக்க முடியாமல் சிரித்தாள் புங். ஜோசுவா அவளின் வாயில் கையை வைத்து அமுக்கிக் கொண்டான்.

 ஹோட்டலின் வாசலில் புங் நின்றுகொள்ள, ஜோசுவா உள்ளே நுழைந்து நோட்டம் விட்டு, தெரிந்தவர்கள் ஒருவரும் இல்லையென்று உறுதி செய்தபின்னர் அறையின் திறப்பை வாங்கி வந்தான்.

 இருவரும் கட்டிலின் மெத்தையில் இருந்து, ஒருநாளும் காணாத புதுமுகங்கள்போல ஆளை ஆள் ஆராய்ந்தார்கள்.

 “நீ கணவனைத் தவிர வேறு ஒரு ஆடவனுடன் பழகுவது இதுதான் முதல் தடவையா?”

 “ஆம். நீ?”

 அவன் கெக்கட்டம் போட்டுச் சிரித்தான்.

 “சென்ற்கில்டா எனது அயல் ஊர். நான் எனது ஊரில் இருப்பதைக் காட்டிலும் அங்கேதான் பலநாட்கள் தங்கி இருக்கின்றேன்” என்று ஒரு பொய்யைச் சொல்லிவிட்டு அவளைக் குனிந்து பார்த்தான். ஜோசுவா பெண்களுடன் பழகி இருப்பது உண்மைதான் என்றாலும் அதிகம் அல்ல. அவள் கைகள் மெதுவாக நடுங்குவதைக் கண்டான்.

 “நான் சாப்பாடு ஓடர் செய்துவிட்டு வருகின்றேன். இப்ப ஓடர் கொடுத்தால்தான் சரியான நேரத்திற்கு வரும்” சொல்லிவிட்டு கீழே படிகளில் இறங்கி நடக்கலானான். அவன் போனதும் கதவை உட்புறமாகத் தாழிட்டாள் புங். அறை முழுவதையும் துல்லியமாக உற்று நோக்கினாள். எங்காவது இரகசிய கமரா பூட்டப்பட்டிருக்கலாம். காற்றாடி, சூடான காற்று வரும் துவாரங்கள், மின்குமிழ்கள் என எல்லா இடங்களிலும் ஒரு அங்குலம் விடாமல் அலசி ஆராய்ந்தாள். அப்படி ஒன்றையும் காணவில்லை. தாழ்ப்பாளை நீக்கி ஜோசுவாவின் வரவுக்காகக் காத்திருந்தாள்.

 அவன் வந்ததும் கட்டிலில் இருந்தபடியே பலதும் பத்துமென சிறிது நேரம் உரையாடினார்கள். பின்னர் புங் தான் ரொயிலற் போய் வருவதாகச் சொல்லிச் சென்றாள். ஜோசுவா தனது கோற்றைக் கழட்டி அதற்கென்று இருந்த ஸ்ராண்டில் மாட்டினான். அந்த ஸ்ராண்டை ஒவ்வொரு இடமாக நகர்த்தி, அங்கிருந்தபடியே கட்டிலைப் பார்த்தான்.  பொருத்தமான இடம் வந்ததும், கோற்றின் மேல் பொக்கற்றில் இருந்த பொத்தான்மீது தன் கண்களைப் பதித்து கட்டிலின் மேல் தன் கண்களை குவியப்படுத்தினான். திருப்தி எனத் தெரிந்ததும் உதட்டிலிருந்து சிரிப்பு தவழ்ந்தது.

 புங் ரொயிலற்றுக்குள்ளிருந்து நிர்வாண கோலத்தில் அழகுதேவதையாக வெளியே வந்தாள். நிர்வாணச் சாமியாராக கட்டிலில் இருந்த ஜோசுவா அவளை வைத்த கண் வாங்காது பார்த்தான். அவளின் உடலிற்குள் ஒரு மின்னல், விழியோரங்களில் ஒரு குறுகுறுப்பு. பாய்ந்து ஒரு வேட்டைநாய் போல அவளைப் பற்றிக் கொண்டான் ஜோசுவா.

 கலகம் முடித்து, பின்னர் குளித்து உணவருந்தி மீண்டும் சல்லாபித்து உறங்கினார்கள். உறங்கும்போது மணி பத்திற்கு அலாரம் வைத்தார்கள். நறுமணம் கமழும் அவளுடலைத் தழுவி மோர்ந்தபடி படுத்துவிட்டான் ஜோசுவா. புங் உறக்கம் போல் இருந்தாலும் அவள் சிந்தனை எங்கோ சிறகடித்துப் பறந்தது.

 பத்துமணியளவில் துயில் கலைந்து, முதலில் புங்கும் பின்னர் ஜோசுவாவும் தமது குடும்ப அங்கத்தவர்களுடன் தொலைபேசினார்கள்.

 பின் மீண்டும் பன்னிரண்டிற்கு அலாரம் வைத்துவிட்டு, விளக்கை அணைத்து, தாமும் அணைத்து கதை பேசினார்கள். ஒருவர் கைகளை மற்றவர் கோர்த்தபடி மீண்டும் உறங்கிப் போனார்கள். பின்னர் பன்னிரண்டு மணியளவில் எழுந்து இன்னொரு படம் காட்டினார்கள், பார்த்தார்கள். அதன்பின்னர் விழித்திருந்து, எல்லாரும் வேலை முடிப்பதற்கு அரைமணி நேரம் முன்பதாக கார்த் தரிப்பிடம் சென்று அவரவர் வீட்டிற்குப் போனார்கள்.

 அடக்கப்பட்ட ஆசைகளினால் அலைக்கழிக்கப்பட்ட அவர்கள் இருவரினதும் மனம் அன்று அடங்கிக் கொண்டது. ஆனால் குரங்குமனம் புதிதாக விழித்துக் கொள்ளும் என்பதை அவர்கள் உணரவில்லை.

 

தொடரும்…. No comments: