இதயத்தில் நீ - ஸ்வீட் சிக்ஸ்டி - ச சுந்தரதாஸ்

 அறுபதாம் ஆண்டுகளின் ஆரம்பத்தில் உருவான முக்தா பிலிம்ஸ்


தனது இரண்டாவது தயாரிப்பான இதயத்தில் நீ படத்தை 1963ம் வருடம் வெளியிட்டது.முதல் படமான பனித்திரையில் கதாநாயகனாக நடித்த ஜெமினி கணேசனே இந்தப் படத்திலும் நாயகனாக நடித்தார்.ஆனால் கதாநாயகி மாற்றப்பட்டு ,சரோஜாதேவிக்கு பதில் தேவிகா கதாநாயகியாக நடித்தார்.அன்றைய கால கட்டத்தில் சரோஜாதேவி கிடைக்காவிட்டால் அவருக்கு மாற்றீடாக இருந்தவர் தேவிகாதான்!


காதல்,நகைச்சுவை இந்த இரண்டையும் சமமாக கலந்து படத்துக்கு

திரைக் கதை எழுதி டைரக்ட் செய்திருந்தார் வி சீனிவாசன்.படத்தின் ஆரம்பமே கலகலப்பாக தொடங்குகிறது.வக்கீல் ஆனந்தன் பூங்காவில் நெல்லையப்பனின் பேத்தியான ராதாவை கண்டு காதல் கொள்கிறான்.இருவரிடையேயான காதல் வளர்ந்து நிச்சயதார்தத்திற்கு நாள் குறிக்கப்படுகிறது.ஆனால் எங்கிருந்தோ திடீர் என வந்து சேரும் ராதாவின் போலிக் தந்தையான மாரிமுத்துவால் நிச்சயதார்த்தம் தடைப்படுகிறது.அதே சமயம் தனது பெற்றோர்கள் யார் என்ற ரகசியத்தையும் அறிந்து கொள்ள ஆனந்தன் துடிக்கிறான்.காதலர்கள் மீண்டும் ஒன்று சேர்ந்தார்களா என்பதே மீதிக் கதை.

காதல் ஹீரோ என்றால் ஜெமினிதான்.காதலிக்கு டாவடிப்பது,குழைத்து குழைந்து பேசுவது,காதல் தோல்வியில் உருகுவது ,பெற்றோரைத் தேடுவது என்று கொடுத்த வேடத்தை சிறப்பாக செய்திருந்தார்.அவரோடு சேர்ந்து தேவிகாவும் காதலித்து,உருகி,வருந்தி நடித்திருந்தார்.ஆரம்பத்தில் இவர்கள் அறிமுகமாகும் காட்சி சுவாரசியமாக இருந்தது.

படம் தொடங்கி அரை மணி நேரம் கழித்தே எம் ஆர் ராதா அறிமுகமாகிறார்.ஆனால் அவர் வந்த பின்னர்தான் படம் விறுவிறுப்பாகிறது.மனைவியையும்,மகனையும்,அல்லது மகளையும் பிரிந்து அலைந்து அவர்களை கண்டுபிடிக்கும் ரோல் ராதாவுக்கு புதிதல்ல.ஏற்கனவே சில படங்களில் செய்தது.அதையே இதிலும் செய்கிறார்.அவர் சதி செய்வதும்,அவை பிழைப்பதுமாக படம் நகர்கிறது.ஆனால் இறுதியில் அவரை அநாதரவாக விட்டிருக்க வேண்டாம்.


படத்துக்கு அச்சாணியாக அமைந்தது நகைச்சுவைதான்.தங்கவேலு,நாகேஷ் இருவரும் இணைந்து அதனை வழங்கியிருந்தார்கள்.தங்கவேலு வசனங்களினால் சிரிக்க வைத்தால்,நாகேஷ் ஆக்க்ஷனால் சிரிக்க வைக்கிறார்.இவர்களுடன் எம் சரோஜாவும் இணைகிறார்.படத்தின் நகைச்சுவை காட்சிகளுக்கு வசனம் எழுதிய கே தேவராஜனுக்கு சபாஷ்!
வில்லனின் கை ஆளாக வரும் வி கோபாலகிருஷ்ணன் நடிப்பு படு செயற்கை ! டீ எஸ் முத்தையா,குமாரி ருக்மணி,வி எஸ் ராகவன்,ஜெமினி மகாலிங்கம்,லக்ஷ்மி ராஜ்ஜியம்,கே கே சௌந்தர் ஆகியோரும் நடித்திருந்தனர்.

படத்துக்கு இசை வழங்கியவர்கள் விஸ்வநாதன்,ராமமூர்த்தி.பாடல்

எழுத சான்ஸ் கேட்டு விஸ்வநாதனை அணுகி அவரால் ஏற்கனவே நிராகரிக்கப்பட்ட வாலி, சீனிவாசனின் சிபாரிசால் இந்த படத்தில் விஸ்வநாதன் இசையில் நான்கு பாடல்களை எழுதும் வாய்ப்பைப் பெற்றார் .இவர் எழுதிய பூ வரையும் பூங்கொடியே, ஒடிவது போல் இடை இருக்கும் இருக்கட்டுமே,உறவு என்றொரு சொல் இருந்தால், யார் சிரித்தால் என்ன ஆகிய நான்கு பாடல்களும் பிரபலமாகி வாலிக்கு சினிமா உலகில் ஒர் இடத்தை உறுதியாக்கியது.


படத்துக்கான வசனங்களை மா ரா எழுதியிருந்தார் .பி ராமசாமி ஒளிப்பதிவாளராக செயற்பட்டார்.வி ராமசாமி படத்தை தயாரித்தார். காதல்,நகைச்சுவை,சற்றே சோகம்,இடையில் சஸ்பென்ஸ் என்று கலவையான கதையை குழப்பமின்றி இயக்கியிருந்தார் சீனிவாசன்.இதயத்தில் நீ பெரும் வெற்றியை பெறாவிட்டாலும் கூட அடுத்த படத்தை தயாரிக்கக் கூடிய அளவு இலாபத்தை முக்தா பிலிம்ஸுக்கு ஏற்படுத்திக் கொடுத்தது !

No comments: