இலங்கைச் செய்திகள்

 

அனைத்து இந்து மக்களின் வேண்டுதல்களும் நிறைவேற பிரார்த்திக்கிறேன்

மலையகத்தில் இந்திய அரசின் வீடமைப்பு திட்டம் குறித்து ஆராய்வு   

 "வைக்கோல் பட்டறை நாய்" என கூறிய மாநகர சபை உறுப்பினரின் ஒரு மாத சம்பளம் இரத்து

 உலக மக்களை முட்டாளாக்கும் பழ. நெடுமாறனின் செயற்பாடு

2,000 இலங்கையருக்கு இஸ்ரேலில் தொழில்!


அனைத்து இந்து மக்களின் வேண்டுதல்களும் நிறைவேற பிரார்த்திக்கிறேன்

- ஜனாதிபதியின் மகா சிவராத்திரி செய்தி

மகா சிவராத்திரி விரதத்தை பக்தியோடு  அனுஷ்டிக்கும் அனைத்து இந்து மக்களின் வேண்டுதல்களும் நிறைவேற பிரார்த்திக்கிறேன்.

உலகெங்கிலும் உள்ள இந்துகள் சிவராத்திரி நாளில் அனைத்து உயிர்களையும் துன்பத்திலிருந்து காப்பாற்றும் நோக்கத்துடன் சிவபெருமானை  வழிபடுகின்றனர்.

"இருள் நீங்கி ஒளி பரவட்டும்" என்ற பிரார்த்தனையுடன் கண்விழித்து  இரவு முழுவதும் பிரார்த்தனை செய்கின்றனர்.இது ஒருவருக்கொருவர் அமைதி, நல்லிணக்கம் மற்றும் சமத்துவத்தை வளர்க்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பரஸ்பர மரியாதை மற்றும் ஒருவருக்கொருவர் நம்பிக்கை இல்லாமல் ஒரு நாடாக நாம் முன்னேற முடியாது. சிவபெருமானின் இந்த பிரகாசமான இரவில் நாம், நமது உறவுகளை வலுப்படுத்த முடிவு செய்தால், நாடு எதிர்கொள்ளும் அனைத்து சவால்களையும் கடந்து, அமைதி, நல்லிணக்கம் மற்றும் செழிப்பு நிறைந்த நாட்டை நாம் நிச்சயமாக கட்டியெழுப்ப முடியும்.

மகா சிவராத்திரியில் ஏற்றப்படும் தீப ஒளியால் அனைத்து துன்பங்களும் நீங்கி, வளமான இலங்கையின் கதவுகள் திறக்கப்பட வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன்.

ரணில் விக்ரமசிங்க
ஜனாதிபதி
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு
18.02.2023

நன்றி தினகரன் 




மலையகத்தில் இந்திய அரசின் வீடமைப்பு திட்டம் குறித்து ஆராய்வு   

அமைச்சர் ஜீவனுடன் தூதரக அதிகாரிகள் சந்திப்பு

இந்திய அரசின் நிதி உதவியின் கீழ் மலையகத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள வீடமைப்புத் திட்டம் தொடர்பில் இந்திய தூதரக அதிகாரிகளுக்கும் இ.தொ.கா. பொதுச்செயலாளர், அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்குமிடையே நேற்று (16) விசேட கலந்துரையாடலொன்று நடைபெற்றது.

அமைச்சர் ஜீவன் தொண்டமான்  தலைமையில் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சு அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில், விசேடமாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள் மூவர் கலந்துகொண்டிருந்தனர். மலையக மக்களுக்காக இந்தியா வழங்கிய 04 ஆயிரம் வீடுகள் திட்டத்தில் ஒரு சில பகுதிகளில் வீடமைப்புத் திட்டம் இன்னும் முழுமைப்படுத்தப்பாடமல் உள்ளதால், அவற்றை பூர்த்தி செய்வதற்காக மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகள் தொடர்பாக, இந்திய தூதரக அதிகாரிகளுக்கு அமைச்சர் ஜீவன் தொண்டமான் இதன்போது விளக்கமளித்தார். அத்துடன், இலங்கையின் தற்போதைய பொருளாதார சூழ்நிலைக்கமைய, முன்னதாக மதிப்பீடு செய்யப்பட்டதன் பிரகாரம் 10 ஆயிரம் வீட்டுத் திட்டத்தை முன்னெடுக்க முடியாதநிலை காணப்படுவதால், மேலதிகமாக தேவைப்படும் உதவிகள் தொர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

ஹற்றன் சுழற்சி நிருபர்

நன்றி தினகரன் 





 "வைக்கோல் பட்டறை நாய்" என கூறிய மாநகர சபை உறுப்பினரின் ஒரு மாத சம்பளம் இரத்து


- ஒரு மாதத்திற்கு சபை அமர்வும் தடை

யாழ்.மாநகர சபையில் சிலர் " வைக்கோல் பட்டறை நாய்" போல செயற்படுகின்றார்கள் என சக உறுப்பினர் கூறியதை கண்டித்து அவரை சபையில் இருந்து வெளியேற்றி அவரது ஒரு மாத சம்பளமும் இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

யாழ்.மாநகர சபையின் மாதாந்த அமர்வு நேற்றைய  தினம் வியாழக்கிழமை (16) முதல்வர் ஆர்னோல்ட் தலைமையில் நடைபெற்றது.

அதன் போது , சபையில் உறுப்பினர் பாலசுப்பிரமணியம் பத்மமுரளி "சபையில் சிலரின் செயற்பாடுகள் வைக்கோல் பட்டறை நாய்" போன்றுள்ளது என கூறி இருந்தார்.

அதனால் சபையில் சில உறுப்பினர்கள் கடும் ஆவேசம் அடைந்து அமளியில் ஈடுபட்டதோடு, "வைக்கோல் பட்டறை நாய்" என கூறிய உறுப்பினரை வெளியேற்றுமாறு முதல்வரை கோரினர்."நீங்கள் என்னை வெளியேற்ற தேவையில்லை. நானே வெளியேறுகிறேன் " என கூறி குறித்த உறுப்பினர் சபையில் இருந்து வெளியேறி சென்றார்.

குறித்த உறுப்பினர் சபையில் கூறியது அநாகரீகமானது. அதனை சபை குறிப்பேட்டில் பதிய வேண்டும். சபை உறுப்பினர்களின் வேண்டுகோளினால், உறுப்பினர் சபையில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

சபையில் அநாகரீகமான வார்த்தை பிரயோகித்தமையால் , அவரது ஒரு மாத சம்பளத்தை இரத்து செய்வதுடன், இந்த மாதத்தில் சபையின் எந்தவொரு செயற்பாடுகளுக்கும் அவர் அனுமதிக்கப்படமாட்டார் என சபையில் தீர்மானிக்கப்பட்டதாக முதல்வர் அறிவித்தார்.

யாழ்.விசேட நிருபர் 

நன்றி தினகரன் 




உலக மக்களை முட்டாளாக்கும் பழ. நெடுமாறனின் செயற்பாடு

கருணா அம்மான் ஆவேசமாக அறிக்கை

வடக்கில் நடந்த இறுதிப்போர்க்களத்தில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டதாக தெரிவித்துள்ள கருணா அம்மான் என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன், பழ நெடுமாறன் புலிகளின் தலைவர் உயிருடன் உள்ளதாக கூறி உலக மக்களை முட்டாளாக்குவதாக தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன்  இருப்பதாக தமிழகத்தின் மூத்த அரசியவாதியும், விடுதலைப்புலிகளுடன் மிக நெருங்கிய தொடர்பிலும் இருந்தவருமான பழ.நெடுமாறன் கூறி இருந்தமை பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

எனினும், அந்தத் தகவலை இலங்கை இராணுவம் முற்றாக மறுத்ததுடன் விடுதலைபுலிகளின் தலைவர் இறுதிப்போரில்கொல்லப்பட்டுவிட்டார் எனவும் கூறியது.

அத்துடன் இறுதிப்போரை வழிநடத்தியவரும் முன்னாள் ஜானதிபதியுமான கோட்டாபய ராஜபக்ஷவும் விடுதலைபுலிகளின் தலைவர் தொடர்பில் பழநெடுமாறன் கூறிய கருத்தை நிராகரித்திருந்தார்.

இவ்வாறான நிலையிலேயே தற்போது முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினரும், முன்னாள் பிரதி அமைச்சருமான கருணா எனும் விநாயக மூர்த்தி முரளீதரன், விடுதலைபுலிகளின் தலைவர் தொடர்பில் பழ நெடுமாறன் கூறியது பொய் எனக் கூறியுள்ளார்.    நன்றி தினகரன் 





2,000 இலங்கையருக்கு இஸ்ரேலில் தொழில்!

தாதியர் துறையில் வழங்க இணக்கம்

இலங்கையருக்கு இவ்வாண்டு 2,000 தாதியர் வேலைவாய்ப்பை வழங்க இஸ்ரேல் இணங்கியுள்ளது. இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இஸ்ரேலின் விசேட பிரதிநிதிகள் குழு, தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவை சந்தித்தபோது, இதற்கான உறுதிப்பாட்டை வழங்கியுள்ளது.

இஸ்ரேல் தாதியர் தொழில் வாய்ப்பை வழங்குவதற்காக, இடைத்தரகர்கள் பணம் கோரினால், அது தொடர்பில் தகவல்களை தமக்கு வழங்குமாறும், அந்த நாட்டின் குடித்தொகை மற்றும் புலம்பெயர்வுக்கான அமைப்பின் பிரதிநிதிகள் கோரியுள்ளனர்.  நன்றி தினகரன் 



No comments: