சிவராத்திரி தினத்தில் சிந்திப்போம் வாருங்கள் !

 


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்

மெல்பேண் ….. அவுஸ்திரேலியா       வேதத்தின்   முதல்வன் விடமுண்டன் கண்டன் 
       ஆதியந்தம் இல்லான் அருளொளியாய் நிறைவான் 
        சோதியென எழுந்தான் துடுக்கொழிய வைத்தான்  
        மாலயனின் மயக்கம் போக்கியவன் நின்றான் 

       மாலயனின் மயக்கம் போக்கிய நாளுலகில்
       மகாசிவ ராத்திரியாய் மலர்ந்ததென  வுரைப்பார் 
       சீலமுடன் சிவனை சிரத்தையுடன் எண்ணி 
       விரதமதை விரும்பி நோற்றிடுவார் அடியார் 

       பசித்திருக்க வேண்டும் தனித்திருக்க வேண்டும்
       விழித்திருக்க வேண்டும் மெய்யுணர்தல் வேண்டும் 
       ஆலமதை உண்ட அருட்கடலாம் சிவனை
       அகமிருத்தி விரதம் அனுட்டிக்க வேண்டும் 

        அப்பனுக்கு ஒன்று அம்மைக்கு ஒன்பது 
        இப்புவியில் விரதமதை ஏற்கின்றார் அடியார் 
        எல்லாமே இராத்திரியாய் இருப்பதுதான் சிறப்பு 
        இறையுணர்வை ஊட்டுவதே இதன் நோக்கமாகும் 

        விரதமெனும் வார்த்தை வெறும் வார்த்தையல்ல 
        பவவினைகள் போக்கும் பாங்கான வார்த்தை 
        உடலுளத்தைத் தூய்மை ஆக்கிவிடும் வார்த்தை 
        உணர்வுடனே செய்தால் உயர்நிலையே வாய்க்கும் 

       ஆன்மீகக் கருத்துக்களை அலட்சியமாய் நோக்கும்
       அவலமது அலையலையாய் எழுகிறது நாளும் 
       அறிவியலை நிறைத்தபடி ஆன்மீகம் அமைந்திருக்கு 
       அதை உணர்ந்தால் அலட்சியமும் அகன்றோடிப்போகும் 

      பிறக்கின்ற நாளெல்லாம் பெம்மானை நினைக்க 
      இருக்கின்ற வகையினிலே இணைத்தார்கள் முன்னோர்
      வையத்து வாழ்வார்கள் வாழ்வாங்கு வாழ 
      மனஞ்சிறக்க விரதமெலாம் வண்ணமுற வைத்தார் 

     புராணக் கதையெல்லாம் பொருந்துமா என்பார் 
     பூதலத்தில் கருத்துரைக்க தேர்ந்த வழியன்றோ 
     கதையுரைத்து கதையுரைத்து கடவுளுணர் வூட்டும் 
     காரியத்தை புராணமாய் கண்டார்கள் முன்னோர் 

     மூடத் தனமென்று முழஞ்சுழிக்க வேண்டாம் 
     முன்னோர்கள் சிந்தனையில் முகிழ்த்ததுதான் புராணம் 
      முன்னைப் பழம்பொருளாய் முதலுக்கும் முதலாக 
      விண்ணிற்கும் பரம்பொருளை விளக்கியதும் புராணமன்றோ 

      திருமுறைகள் போற்றுகின்ற செம்பொருளாம் சிவனை 
      சிவராத்திரி தினத்தில் சிந்திப்போம் வாருங்கள் 
      சித்தர்க்குச் சித்தராம் திருச்சிற்றம் பலத்தானை
      பக்தியாய் பாடிப் பரவிடுவோம் வாருங்கள் 
      

No comments: