இலங்கை தேசிய கீதத்தின் பிதா ஆனந்த சமரக்கோன் : உறைபொருளும் மறைபொருளும் ! அவதானி

 


கவிஞர்கள் மிகவும் மென்மையானவர்கள். அத்துடன் உணர்ச்சிமயமானவர்கள்.  நாம் அறிந்தமட்டில் தமிழ்நாட்டில் கவிஞர் ஆத்மநாம், இலங்கையில் சிவரமணி ஆகிய கவிஞர்கள், இந்த உலகில் வாழப்பிடிக்காமல் தற்கொலை செய்துகொண்டவர்கள்.

 எத்தனையோ இடர்களுக்கும் நெருக்கடிக்கும் மத்தியில் வறுமையில் வாடிய  பாரதியார்,  “ வீழ்வேன் என நினைத்தாயோ,.?  “ என்றுதான் ஓங்காரமாக ஒலித்தார். வாழ்ந்தார்.

  “ வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில்    என்றவர்


கவியரசு கண்ணதாசன்.  இத்தனைக்கும் அவர் கடன் தொல்லையால் பல்வேறு சிரமங்களை அனுபவித்தவர்.

இந்த குறிப்புகளுடன்தான், இலங்கை தேசிய கீதத்தை இயற்றிய கவிஞரை நாம் இச்சந்தர்ப்பத்தில் நினைவுகூருகின்றோம்.

 இலங்கை சுதந்திரம் பெற்று 75 வருடங்களாகிவிட்டன.  அதன்கொண்டாட்டத்தில் ஒலிப்பதுதான் தேசிய கீதம்.  அரச நிகழ்வுகள், பாடசாலை வைபவங்களிலும் ஒலிக்கும்.

 சிங்கள மொழியில் மாத்திரம்தான் பாடவேண்டும் என சிங்கள பேரினவாதிகள் - கடும்போக்காளர்கள் சொல்லிவந்தனர்.

இம்முறை காலிமுகத்திடலில் சுதந்திர தின விழாவில் முதலில்  சிங்களத்திலும் இறுதியில் தமிழிலும் இந்தக்கீதம் இசைக்கப்பட்டது.

 ஒரு காலகட்டத்தில் இலங்கையில் தியேட்டர்களில் திரைப்படம் காண்பிக்கப்பட்டபோது இடைவேளையில் திரையில் தேசியக்கொடியை காண்பித்து, தேசிய கீதத்தை பின்னணியில் ஒலிக்கவிட்டார்கள்.

ரசிகப்பெருமக்கள் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும்.  சிறிது காலத்தில் அந்த நடைமுறையை அரசு மாற்றியது.  திரைப்படம் தொடங்கு முன்னர் காண்பித்தார்கள்.

மக்கள்  காலப்போக்கில் தியேட்டர்களுக்கே செல்வதை குறைத்தபின்னர் தேசிய கீதம் காண்பிப்பதும் படிப்படியாக குறைந்தது.

 இதனை இயற்றியவர் கவிஞர் ஆனந்த சமரக்கோன்.  இவரும்  மனஉளைச்சலினால் அளவுக்கு அதிகமாக தூக்கமாத்திரைகளை உட்கொண்டு  தற்கொலை செய்துகொண்டார். அதற்கு அவர்  இலங்கை அரசுக்கு இயற்றிக்கொடுத்த தேசிய கீதமும் ஒரு முக்கிய காரணம் எனச்சொல்லப்படுகிறது.

 இதுதொடர்பாக எமக்கு கிடைத்த தகவல் குறிப்புகளை இங்கே தருகின்றோம்.

 அவர் பிறப்பால் கிறிஸ்தவர்.  இயற்பெயர்:  வில்பிரட் அல்விஸ் சமரகோன் 1911 இல்  தென்னிலங்கையில்  பாதுக்கையில்  பிறந்த அவர்,   1934 ஆம் ஆண்டு இலங்கை வந்த   இந்திய வங்கக் கவிஞர்  ரவீந்தரநாத் தாகூரின் படைப்பாற்றலில் ஆர்வம்கொண்டு,  இசை ,  ஓவியம் ஆகிய துறைகளில் உயர்கல்வியை மேற்கொள்வதற்காக  இந்தியா சென்று சாந்தி நிகேதனில்   தாகூர், நந்தலால் போஸ் ஆகியோரிடம் இசை மற்றும் ஓவியக்கலை  பயின்றார்.

 


நாடு திரும்பிய சமரக்கோன்,  1937 இல், தனது முன்னோரின் மதமான பௌத்தத்துக்கு மாறியதுடன் , பெயரையும் "ஆனந்த" என்று  மாற்றிக்கொண்டார்.

 தான் எழுதிய “கீத குமுதினி” எனும் கவிதைத் தொகுப்பிலிருந்த  ‘நமோ நமோ மாதா’ பாடலை  இலங்கைத் தேசிய கீதத் தெரிவுப் போட்டிக்கு அனுப்பினார்.

 குறிப்பிட்ட நூலை 1940  இல் வெளியிட்ட அச்சக உரிமையாளரான ஆர்.கே.டபிள்யூ. ஸ்ரீவர்தனவுக்கு  அச்சுக் கூலி கொடுக்க முடியாமல் , சமரக்கோன் தனது பதிப்புரிமையை அவரிடம் கையளித்தார்.

 போட்டியில் நமோ நமோ மாதா தெரிவு செய்யப்பட்ட போது, அதன் உரிமை சமரகோனிடம் இருக்கவில்லை. அவர் எழுதிய நமோ நமோ... எனத்தொடங்கும் தேசிய கீதம் அமங்கலமான  ‘ந’ எனும் எழுத்தில் தொடங்குவது அபசகுனமானது என்றும், நாட்டுக்குத் துரதிர்ஷ்டத்தைக் கொண்டு வரும் என்றும் ஒரு பிரிவினர் வாதிட்டதனால் , ஸ்ரீ லங்கா மாதா என்னும் வரி முதல் வரியாக 1961 இல் சேர்த்துக் கொள்ளப்பட்டது.

 இதை ஆனந்த சமரக்கோன் கடுமையாக எதிர்த்ததுடன், மன


உளைச்சலுக்கும்  ஆளானார்.  தேசிய கீதத்தின் பதிப்புரிமை  அவரிடம்  அப்போது இருக்க வில்லை. அச்சகத்திடமிருந்து அரசாங்கம் 2500 ரூபாவுக்கு வாங்கியிருந்தது. எனவே அவரால் எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை. இது குறித்து பல விமர்சனங்களையும் அவர் எழுதியிருக்கிறார்.

 இலங்கையின் இசைத்துறைக்கு பெரும் சேவை செய்த அவர். தனது ஒரே மகனின் அகால மரணத்தைத் தொடர்ந்து இந்தியாவில் சிறிது காலம் வாழ்ந்தார். அவரின் ஓவியக் கண்காட்சிகள் பல நாடுகளில் நடந்திருக்கின்றன.

தனது 51 ஆவது வயதில் ஏப்ரல் 1962 ஆம் ஆண்டு  ஏப்ரில் மாதம் 05 ஆம் திகதி அதிக தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலை செய்துகொண்டார்.

 மூடியிருந்த கதவைத் தட்டியும்  அவர் எழும்பாதிருந்தமையால் கதவை உடைக்க வேண்டியிருந்தது. கூடுதல் தூக்க  மாத்திரைகளை எடுத்ததால் மரணம் ஏற்பட்டதாக விசாரணையில் தெரிய வந்தது.

 தனது கீதம் எவ்வாறு  சிதைக்கப்பட்டது என அப்போதைய எதிர்க்கட்சித்  தலைவர் டட்லி சேனநாயக்கவுக்கு முறையிடும் அவரது கடிதம் ஒன்றும் மேசையில் கிடந்தது.

 ஆனந்த சமரகோன் நிம்மதியின்றி மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்த ஒரு சந்தர்ப்பத்தில் “ அவர்கள் எல்லோரும் சேர்ந்து என் தலையை பிடுங்கிவிட்டு,  வேறொரு தலையை பொருத்திவிட்டார்கள்” என்று புலம்பியிருக்கிறார்.

 இறப்பதற்கு சில நாட்களுக்கு முன், ரைம்ஸ் ஒஃப் சிலோன் பத்திரிகைக்கு ஒரு கடிதம் எழுதினார்.

 “ எனது கீதத்தின்  தலையை வெட்டி விட்டனர். அது அந்த பாடலை மட்டும் அழிக்கவில்லை. அதை எழுதியவரின் வாழ்க்கையையும் அழித்துவிட்டது. நான் விரக்தியிலுள்ளேன். என் இதயம் நொறுங்கிவிட்டது. ஒரு அப்பாவி கவிஞனுக்கு இப்படியெல்லாம் செய்யக் கூடிய நாட்டில் வாழ்வது துரதிஷ்டமே.   சாவதே நல்லது.  “ என குறிப்பிட்டிருந்தாராம்.

 படைப்பாளுமை மிக்க இந்தக் கவிஞருக்கு ஆதர்சமாகத் திகழ்ந்த ரவீந்திரநாத் தாகூர் அவ்வேளையில் அவருடைய நினைவுக்கு ஏன் வரவில்லை என்பது எமக்கு மிகுந்த ஆதங்கமே !

 இலங்கை சுதந்திரதினத்தில் தொடர்ந்தும் பாடப்படும் தேசிய கீதத்தை இயற்றியவரின் வாழ்வில் இழையோடியிருக்கும்   இந்தச்  சோகம் பட்டொளி வீசிப்பறக்கும்  தேசியக்கொடிக்கும் தெரியாது, பாடிக்கொண்டிருக்கும் மூத்த இளம் தலைமுறைக்காவது தெரியுமா என்பதும் தெரியாது… !? 

  ஆனந்த சமரக்கோனின் நினைவாக இலங்கை அரசு அஞ்சல் முத்திரை வெளியிட்டு  மன்னிப்புக்கேட்டுக்கொண்டது போலும் !

 

---0---

 

 

 


No comments: