வாசகர் முற்றம் வாசகியாக வளர்ந்து, படைப்பிலக்கியவாதியாகிய சியாமளா யோகேஸ்வரன் முருகபூபதி


எழுத்தாளர்கள் என்ற மகுடத்திற்குள்தான் படைப்பிலக்கியவாதிகளும், ஊடகவியலாளர்களும் வருகின்றார்கள்.

இவர்களின் முதல் தெரிவாகியிருப்பது நூல்களும் இதழ்கள், பத்திரிகைகளும்தான்.  அவற்றை வாசித்து பெற்ற அனுபவங்களிலிருந்தே, எழுத்துத் துறைக்குள் பிரவேசிக்கின்றார்கள்.

அவ்வாறு படிப்படியாக தேர்ந்த வாசகியாக வளர்ந்து காலப்போக்கில் படைப்பிலக்கியவாதியாக மலர்ந்து சிறுகதை, நாவல்  எழுதியவர் பற்றித்தான் இந்த வாசகர் முற்றத்தில் அறிமுகப்படுத்துகின்றோம்.

இலங்கையின் வடபுலத்தில் பருத்தித்துறையைப் பிறப்பிடமாகக்கொண்டு அங்கே  மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலையில் ஆண்டு பன்னிரண்டாம் தரம்  வரையில் பயின்று பின்னர் பேராதெனிய பல்கலைக் கழகத்தில் பட்டப்படிப்பை முடித்து பின்னாளில்  அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்து  பிறிஸ்பேனில் கடந்த பதினாறு ஆண்டுகளாக வாழ்ந்து வருபவர் எழுத்தாளர் திருமதி சியாமளா யோகேஸ்வரன்.

இதுவரையில்  இதயராகம் ( நாவல் ) உறவுகள் ( சிறுகதை ) ஆகிய நூல்களையும் வரவாக்கியிருப்பவர்.  அண்மையில் கானல் நீர் என்ற நாவலையும் எழுதி முடித்துள்ளார்.

இளம்வயதில் பெற்ற வாசிப்பு அனுபவம் பற்றி, சியாமளாவிடம் கேட்டோம்.

 “ ஐந்து வயதில் சிறுவர்களுக்கான காமிக்ஸ்  நூலில் தொடங்கி, பின்னர் வீரகேசரி, தினக்குரல் முரசொலி முதலான  பத்திரிகைகளை வாசிக்க வீட்டில் அனுமதி கிடைத்தது.  இந்திய எழுத்தாளர்களான லஷ்மி, இந்துமதி, பட்டுக்கோட்டை பிரபாகர், சுஜாதா, சாண்டில்யன், கல்கி, பாலகுமாரன் போன்றோரின் கதைகளையும் இலங்கை எழுத்தாளர்களான தாமரைச்செல்வி, டொமினிக் ஜீவா போன்றோரின் கதைகளையும்  எனது  பதின்ம வயதுகளில் வாசிக்கத் தொடங்கியிருக்கின்றேன். கைகளில் கிடைக்கும் புத்தகங்கள் எதுவானாலும் வாசித்து முடித்து விடுவது எனது பழக்கமாகவே இருந்தது.  “ என்றார்.

 “ குறிப்பிட்ட பதின்ம வயதில் தன்னை வாசிக்கத்  தூண்டி


ஊக்கமளித்தவர் எனது தாயார்தான். எனினும் எங்கள் ஊர் நூல்நிலைய நூலகர் - அன்பர் திருச்செல்வம்  அவர்கள்தான் வாசிக்கத் தரமான புத்தகங்களை அடையாளம் கண்டு சிபாரிசு செய்வார். நல்ல புத்தகங்களை எமக்காக எடுத்து வைத்திருந்து, வாசிப்பதற்குக் கொடுத்திருக்கிறார்.  “ எனச்சொன்னார் சியாமளா.

அன்றைய வாசிப்பு அனுபவமும் இன்றைய வாசிப்பு அனுபவமும் பற்றி…? கேட்டோம்.

 “ அன்றைய காலத்தில் புத்தகங்கள் வாசிப்பது மட்டுமே ஒரே பொழுது போக்காக இருந்திருக்கின்றது. தொழில் நுட்ப வசதிகள் இருக்கவில்லை.  அது போர்க்காலம் என்பதனால்  மின்சாரமும் இல்லை.  புத்தகங்களை பண்டமாற்றுச் செய்து அதை யார் முதலில் வாசித்து முடிப்பது என்று ஒரு உள்ளகப்போட்டியே நடைபெறும். ஐந்நூறு பக்கங்களுக்கு மேற்பட்ட நாவல்களைக் கூட ஒரே இரவில் வாசித்து முடித்து விட்டுத்தான் உறங்கவே போயிருக்கின்றேன். வாசிப்பது என்ற ஆரோக்கியமான போட்டி எமது நட்பு வட்டத்தை இன்னமும் ஆழமாக்கியிருந்திருக்கிறது. இப்போது வாசிப்பது மிகவும் அருகிக் கொண்டு செல்கின்றதோ என்ற ஒரு ஆதங்கம் இருக்கின்றது.  “ என்றார்.


அத்துடன்,  எவ்வளவு வாசிக்கின்றோமோ


அவ்வளவுக்கு எழுதும் ஆற்றல் மேம்படுகின்றது. ஆனாலும் ஒவ்வொரு எழுத்தாளருக்கும் என்று ஒரு தனித்துவமான பாணியே அவரை அடையாளப்படுத்தும் என்று நினைக்கின்றேன். எத்தனை நூல்களை வாசித்தாலும் அவரவருக்கென்று இருக்கும் தனிப்பாணியை இழந்து விடாமல் இருக்க வேண்டும்.  “ எனச்சொன்னார்.

எமது அடுத்த கேள்வி :  வாசிப்பதற்கான உங்கள் நூல்களின் தெரிவு எவ்வாறு அமைகிறது…?

 “ இப்போதெல்லாம் ஏதாவது நாவல்களைப் பற்றிய நல்ல விமர்சனங்களை வாசிக்கும் போது அந்த நூலை வாசிக்க வேண்டும் என்ற ஆவல் மேலெழுகிறது. அல்லது வலைப்புலனத்தில் எழுத்தாளர் ஒருவரைப் பற்றியோ அல்லது அவரது படைப்பைப் பற்றியோ விவாதங்கள் போய்க் கொண்டிருக்கும் போது, அதை வாசிக்க வேண்டும் என்ற ஆவல் ஏற்படுகிறது.

சியாமளா யோகேஸ்வரன்,  எழுத்துலகில் பிரவேசித்தபின்னரும்  தொடர்ந்து தனது வாசிப்பு அனுபவத்திலிருந்து  புதிய கருத்தியல்களையும் உருவாக்குவார் என நம்புகின்றோம்.

---0---

 

No comments: