யாவரும் வியக்கும் வண்ணம் நற்கதி அடைந்தார் நிறைவில் !

 


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 

 மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
 மெல்பேண் ..... அவுஸ்திரேலியா 



              காமனைத் தகனம் செய்தார் 


            கதிர்வேலன் உதிக்க வைத்தார்
            பிரம்மமாய் எழுந்து நின்றார்
            பெரும்விஷம் எடுத்து நின்றார் 
            அப்பெரும் அரனார் அருகில்
            அணுகிடும் தொண்டர் ஆகி 
            நிற்கின்ற பெருமை பெற்றார்
            நினைப்பதில் களங்க முற்றார்  

            அணுகிடும் தொண்டர் மாற்றம்
            அரன் உளம் ஏற்கவில்லை
            புவியதில் பிறப்பாய் என்று
            புகன்றிட்டார் பொறுக்க வொண்ணா 
            காத்திட வேண்டும் என்று
            கைகூப்பிக் கேட்டார் தொண்டர்
            கைலையில் இருக்கும் நாதன்
            கருணையைப் பொழிவேன் என்றார்

           அரனது அணுகு தொண்டர்


           அழகெலாம் ஒன்று சேர்ந்து
           அவனியில் பிறந்து நின்றார்
           அவனருள் வருமென் றெண்ணி 
           புவிதனில் பிறந்த தொண்டர்
           புலனதில் புவியின் தன்மை 
           படிந்திடும் வண்ணம் ஆங்கே
           நடந்தன விதியின் கோலம் 

          அழகுடை பிள்ளை கண்டு
          அரசனும் காதல் கொண்டு
          வேண்டினன் பெற்றோர் முன்னால்
          விருப்புடன் அணைத்தே நிற்க
          அரசனின் விருப்பம் தன்னை
          ஆணையாய் கொண்ட பெற்றார்
          அரனினை அகத்தில் எண்ணி
          அளித்திட்டார் குழந்தை தன்னை

          அரண்மனை புகுந்த அந்த
          அந்தணப் பிள்ளை அங்கு
          விலை மதிப்புள்ள ஆடை
          அணிமணி புனைந்து கொண்டு

          நிலமதில் மகிழ்ச்சி கொண்டு
          நிறைவுடை வாழ்கைப் பெற்று
          அரசனாய் ஆகி வந்தார்
         அனைவரும் வியந்தே பார்க்க 

          மண்ணினைத் தொட்ட அன்பர்
          மணவினைப் பருவம் எய்தி
          மங்கல நாணைப் பூட்ட
          வந்தனர் சுற்றஞ் சூழ
          யாருமே நினையா வண்ணம்
          யாருமே அறியா வண்ணம்
          திடீரென ஒருவர் வந்தார்
          திருப்பமும் கொடுத்தே நின்றார்

          மணமகன் அடிமை என்றார்
          சான்றுகள் உளவே என்றார்
          சபையிலே சண்டை செய்து
          தடுத்தனர் விவாகம் தன்னை
          ஆத்திரம் கொண்டார் அன்பர்
          அடிக்கவும் சென்றார் முன்னே
          பித்தனா நீயும் என்று
          பேசினார் சபையின் முன்னே 

          தடுத்தவர் சளைக்கா நின்றார்
          தன்னுரு காட்டி நின்றார்
          வெறுத்தவர் விறைத்து நின்றார்
          விமலனார் வெளிச்சம் ஆனார்
          திட்டிய வார்த்தை கொண்டு
          செப்பிடு பாடல் என்றார்
          செந்தமிழ் மழையாப் பாடல்
          சுந்தரர் கொடுத்தே நின்றார்

          பிறவியின் பயனைப் பெற்றார்
          பெம்மானின் அருளைப் பெற்றார்
          கருணையைக் கொடுத்து நிற்கும்
          கடவுளின் நட்பைப் பெற்றார் 
          உரிமையாய் உதவி கேட்கும்
          உயிர் நண்பனாகி நின்றார்
          உலகிடை அடியார் கூட்டம்
          உய்திட உரமும் ஆனார் 

         சம்பந்தர் அப்பர் பின்னே
         வந்திடும் தகைமை பெற்றார்
         நட்பெனும் உறவைக் காட்டி
         நாதனைத் தொழவும் செய்தார் 
         வன்மையாய் பேசி நின்று
         வன்தொண்டர் பெயரைப் பெற்றார்
         வாழ்வியல் முறையில் புதுமை
         புகுத்திய தொண்ட  ரானார் 

         கோலத்தை மாற்றி நின்றார்
         ஞாலத்தைப் பார்க்க வைத்தார்
         சீலத்தைத் தலைமேற் கொண்டார்
         சிவனையே சிந்தை வைத்தார்
         ஆலத்தை உண்ட எந்தை
         அடியையே பற்றி நின்றார்
         ஆலால சுந்தர  னாய் 
         அவனியில் போற்ற நின்றார் 

         நிந்தையாய் பேசி நின்றார்
         நிமலனை நெருங்கி நின்றார்
         அஞ்சிடா வகையில் கருத்தை
         அள்ளியே வழங்கி நின்றார்
         தாமரை இலையின் நீர்போல்
         பூமியில் வாழ்ந்தார் வாழ்க்கை
         யாவரும் வியக்கும் வண்ணம்
         நற்கதி அடைந்தார் நிறைவில் 


No comments: