சுவாமி விபுலாநந்த அடிகளாரது 75 வது நினைவு ஆண்டில்……,.

 

இருளகற்றும் இளம்பரிதி போன்று உதித்த

   ஈழத்து அடிகளாரை நினைவு கூர்வாம். 
சுவாமி விபுலானந்த அடிகளார்


…….பல்வைத்திய கலாநிதி பாரதி இளமுருகனார்   
 கைமலிந்த கலையேடும் யாழும் கொண்ட

     கலைமகளின் கடாட்சம்பெற்(று) உயர்ந்த செம்மல்

மெய்யுருகச் செந்தமிழிற் கவிப டைத்தார்

    வித்தகனார் யாத்திட்ட செய்யுள் யாவும்

தெய்வமணம் கமழுமையா! செந்தண்மை விஞ்சத்

     திருப்பொலியும் அந்தணனாய்  ஈழ நாட்டிலே

செய்ததிருப் பணிகளெலாஞ் செப்பவோ காலம்

     சிறிதும்பற் றாதேயவர் திருத்தாள் போற்றி!

   

பலமொழியிற் பெரும்புலமை பெற்றே  இலங்கையிற்;

    பார்போற்றும் முதற்பண்டிதன் எனவே மலர்ந்து

சிலகாலம் பல்கலைக்கழ கந்தனிற் சேர்ந்து

    சீரியபெரும் பேராசிரி யனாகி உயர்ந்து

உலகத்தமிழ் வித்தகர்கள் உவந்தே மெச்ச

    உத்தமனார் சொல்லாக்கப் பேரவைத் தலைவனாய்

பலர்வியந்து போற்றிடவே அகராதி தந்து

     பாடுபட்டே வெற்றிகண்ட மாமனி தனன்றோ?

  

     அமிழ்தமன்ன தாய்மொழியிற் புலமை பெற்று

        அருங்கலைகள் பலகற்று  ஐயந் தெளிந்து

    தமிழ்கமழும் நறுஞ்சொல்லாம் மலர்கள் தேர்ந்து

        தமதுமொழிக் கன்னிக்கு ஆரமாய்ச் சூட்டி

    புகழ்கமழும் மட்டுநகர் போற்றி வாழ்த்தப்

         புனிதமிகு யாழ்நூலைப் புவிக்க ளித்துத்

    திகழ்ந்திட்ட பெருந்துறவி விபுலா னந்தன்

        செயற்கரிய திறம்போற்றி நினைவு கூர்வாம்!.

 

 தணியாத தமிழ்ப்பற்றும் சமய வேட்கைத்

   தனிப்பற்றுங் கொண்டுயர்ந்து தமிழன் னைக்கு 

அணியாக  யாழ்நூலை அன்போ டணிந்து

   ஆங்கிலநூல் மொழிபெயர்த்தே அளித்த சைவ

மணியான பேரறிஞர் விபுலா னந்தர்

   மகத்தான சேவைகளை நினைவு கூர்ந்து

பணிவாகக் கரங்கூப்பிப் போற்றுவ தோடு

   பலன்தருமவன் நூல்களையும் படித்து மகிழ்வோம்!

 

மருளகற்ற வழிசமைத்த நாவலன் வழியில்

     மாண்புடனே பணிபுரிந்து இறையை உள்ளத்(து)

அருள்விரிக்கும் கமலத்தால் அர்ச்சித் தானை

   ஆகமசித் தாந்தமெலாம் ஆய்ந்து ணர்ந்து

பொருள்விரிக்கப் பலநூல்கள் யாத்திட் டானை

   பொருவரிய தேனாடாம் மட்டு நகரின்

இருளகற்றும் இளம்பரிதி போன்று உதித்த

   ஈழத்து அடிகளாரை நினைவு கூர்வாம். 

  

  வெள்ளைநிற மல்லிகையோ வேறு பூவோ

        விரைவாக வாடிவிடும் விமலன் அந்தோ

எள்ளளவும் வாடிடாது நின்றி லங்கும்

    இன்மனத்தோர் புடமிட்டு அன்பால் வளர்த்த

கள்ளமில்லா வெண்மைமிகு உள்ளம் என்னும்

    கமலமன்றோ விரும்புமலர் என்று கூவிக்

கொள்ளைகொண்டு சைவர்மனம் குடிகொண் டானைக்

    கூப்பியிரு கைகொண்டு வணங்கு வோமே!
No comments: