உலகச் செய்திகள்

 ரஷ்ய, உக்ரைன் போர் அழிவுகளை தடுக்க நடவடிக்கை

பெரியம்மை தடுப்பூசியை குரங்கு அம்மை நோய்க்கு பயன்படுத்த ஐரோப்பிய யூனியன் அனுமதி

குரங்கு அம்மை நோய் உலகை தொற்றும் அபாயம், 70 நாடுகள் ஆபத்தில்

மியன்மாரில் நால்வருக்கு தூக்கு தண்டனை

 


ரஷ்ய, உக்ரைன் போர் அழிவுகளை தடுக்க நடவடிக்கை

உக்ரைன் மீது ரஷ்யா ஆரம்பித்த போர் தற்போது 150 நாட்களை எட்டியுள்ளன. இப்போர்,கடந்த பெப்ரவரி 24 இல் ஆரம்பமானது.ரஷ்யா புறப்பட்ட வேகத்தில் இதுவரை வெற்றி கிட்டாதுள்ளதால்,பாரிய தடுமாற்றங்களை ரஷ்யப் படைகள் சந்திப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எனினும், ரஷ்யாவின் முன்னேறும் வியூகங்கள் முன்னேற்றம் அடைவதாகவே அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்கா மற்றும் பல மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன் ரஷ்யப் படைகளை துணிவுடன் உக்ரைன் எதிர்த்து நிற்கிறது. எனினும் போரிலிருந்து பின்வாங்கும் மனநிலையில் ரஷ்யா இல்லை. இதனால் போர் முடிவில்லாமல் நீண்டு கொண்டே செல்கிறது.

இந்நிலையில்,இருதரப்பும் சரமாரியான தாக்குதல்களை நேற்றும் நடத்தின. கடந்த சில வாரங்களாக கிழக்கு உக்ரைன் மீது தீவிரமான தாக்குதல்களை நடத்தி வரும் ரஷ்யப்படைகள் நேற்று (25) உக்ரைனின் மத்திய பகுதியில் அமைந்துள்ள கிரோவோஹ்ராட்ஸ்கா பிராந்தியத்தில் மூர்க்கத்தனமாக தாக்குதல்களை தொடுத்தன. அங்குள்ள விமானப்படைத் தளம் மற்றும் ரெயில்வே கட்டமைப்பை குறிவைத்தே,இந்த சரமாரி தாக்குதல்கள் நடத்தப்பட்டன. விமானப்படை தளத்தின் மீது 13 ஏவுகணைகள் வீசப்பட்டதாகவும், இதில் விமானப்படை வீரர் ஒருவர் உட்பட 3 பேர் பலியாகி, 13 பேர் படுகாய மடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.எனவே,அழிவுகளை தடுப்பதற்கான நடவடிக்கைகள் அவசரமாக மேற்கொள்ளப்பட வேண்டுமென கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.   நன்றி தினகரன் 
பெரியம்மை தடுப்பூசியை குரங்கு அம்மை நோய்க்கு பயன்படுத்த ஐரோப்பிய யூனியன் அனுமதி

பெரியம்மை நோய்க்கான தடுப்பூசியை குரங்கு அம்மை நோய்க்கு பயன்படுத்த ஐரோப்பிய ஒன்றியம் அனுமதியளித்துள்ளது.

உலக அளவில் 72 நாடுகளில் குரங்குஅம்மை நோயால் கிட்டதட்ட 16,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை அடுத்து இந்நோயை உலக சுகாதார நிறுவனம் பொது அவசர நிலையாக அறிவித்தது. இந்நிலையில், பெரியம்மை நோய்க்கான தடுப்பூசியை குரங்கு அம்மை நோய்க்கு பயன்படுத்த ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு ஐரோப்பிய ஆணையம் அனுமதியளித்துள்ளது. டென்மார்க்கை சேர்ந்த மருத்துவ நிறுவனம் தயாரித்துள்ள இத்தடுப்பூசி குரங்கு அம்மை நோய் பாதிப்பிலிருந்து பாதுகாக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2013 ஆம் ஆண்டு முதல் ஐரோப்பிய ஒன்றியத்தால் இமான்வேக்ஸ் தடுப்பூசி பெரியம்மை நோய்க்கான தடுப்பூசியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இப்போது குரங்கு அம்மை மற்றும் பெரியம்மை ஆகிய இரு நோய்களுக்கும் இதனை பயன்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த இரு நோய்களை உண்டாக்கும் வைரஸ்களிடையே பொதுவான குணாதிசயங்கள் உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குரங்கு அம்மை நோய்க்கான ஆரம்ப அறிகுறிகள் என காய்ச்சல், தலைவலி, தசைவலி, முதுகுவலி ஆகிய அறிகுறிகள் தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு இருக்கும். மேலும் உடலில் புண்கள் ஏற்படும், முகம், கை, கால்கள் போன்ற பகுதிகளில் புள்ளிகள், புண்கள் ஏற்படும்.குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்களுக்கும், அவர்களுடன் பொருட்களை பகிர்ந்துகொள்பவர்களுக்கும் இந்நோய் தொற்றக்கூடும் என்பதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

வெளியாட்கள் வந்து சென்ற பிறகு, அந்த இடங்களை சுத்தம் செய்ய வேண்டும், முகக்கவசம் அணிய வேண்டும், குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.    நன்றி தினகரன் 
குரங்கு அம்மை நோய் உலகை தொற்றும் அபாயம், 70 நாடுகள் ஆபத்தில்

 Monday, July 25, 2022 - 6:00am

உலகில் வேகமாகப் பரவி வரும் குரங்கு அம்மை நோய் குறித்து உலக சுகாதார ஸ்தாபனம் சகல நாடுகளையும் எச்சரித்துள்ளது.இதுவரையில்,இந்நோய் எழுபது நாடுகளில் பரவியுள்ளதால்,சகல அரசாங்கங்களும் விழிப்பாக இருக்க வேண்டுமென உலக சுகாதார ஸ்தாபனம் கேட்டுள்ளது.இந்நோயை கட்டுப்படுத்துவது குறித்த அவசரக் கூட்டம், உலக சுகாதார ஸ்பாதனத்தின் செயலாளர் தலைமையில் நடந்துள்ளது.கடந்த மூன்றாண்டுகளுக்குப் பின்னர், இவரது தலைமையில் அவசரமாக நடாத்தப்பட்ட கூட்டம் இதுவாகும்.

செல்வந்த நாடுகள் நிதியுதவி வழங்கி இந்நோயைக் கட்டுப்படுத்த முன்வர வேண்டுமென,உலக சுகாதார ஸ்தாபனத்தின் செயலாளர் ரெட்ரோஸ் இக்கூட்டத்தில் வேண்டுகோள் விடுத்தார்.மத்திய மற்றும் மேற்கு ஆபிரிக்க நாடுகளில் ஒரு தசாப்தத்துக்கு முன்னர் இந்த குரங்கு அம்மை நோய் அடையாளங்காணப்பட்டது.எனினும் இவ்வருட மே,மாதத்தில்தான்,இது ஏனைய நாடுகளில் பரவ ஆரம்பித்தது.தற்போது, ஐரோப் பா இன்னும் வட அமெரிக்க நாடுகளில் பரவியுள்ளமை தெரிய வந்துள்ளது.

நைஜீரியா மற்றும் கொங்கோ ஆகிய நாடுகளில்,அதிக உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளன.காட்டு விலங்குகளால் இந்நோய் பரவுகின்றது. வைத்தியர்களுக்கு, இந்நோய் குறித்து மேலதிக அறிவூட்டல், வைத்தியசாலைகளை தயாராக வைத்திருத்தல், மருந்து மற்றும் சிகிச்சைகளை விரைவாக கொண்டு செல்வதற்கான போக்குவரத்துக்களை (ஆகாயம்,தரை,நீர்) தயார்படுத்தல் உள்ளிட்ட விடயங்கள் இக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளன.   நன்றி தினகரன் 

மியன்மாரில் நால்வருக்கு தூக்கு தண்டனை

 Tuesday, July 26, 2022 - 9:06am

மியன்மார் இராணுவ அரசாங்கம் நான்கு பேரை தூக்கிலிட்டு மரண தண்டனையை நிறைவேற்றி உள்ளது. இவர்கள் நால்வரும் தேசத்துரோகக் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகக் குற்றஞ் சாட்டப்பட்டவர்களாவர். 2021 ஜனவரியில் இவர்களுக்கு மியன்மார் நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்தது. இதில், சிறைக்காவலில் வைக்கப்பட்டுள்ள மியன்மார் முன்னணி அரசியல்வாதியான ஆங்சாங்சுயின் சகாவும் உள்ளடங்குகின்றார்.

கிளர்ச்சியை தூண்டும் பாடல் மற்றும் இசையமைத்த ஒருவரும்,கலகத்தை ஏற்படுத்தி பெண்களைக் கொலை செய்த ஒருவர் உட்பட இன்னுமிருவர் வேறு தேசத்துரோக செயல்களில் ஈடுபட்டதாக மியன்மார் இராணுவ அரசாங்கம் அறிவித்துள்ளது. ஜனநாயக விரோத மாக செயல்படும் இந்த அரசாங்கம் சர்வதேசத்திலிருந்து தனிமைப்படும் நிலைக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.   நன்றி தினகரன் No comments: