இலங்கைச் செய்திகள்

யாழ்.பல்கலைக்கழகத்தில் 18 பேருக்கு வகுப்புத்தடை 

லங்கைக்கு உதவ கமல்ஹாசன் விருப்பம்

ஆர்ப்பாட்டக்காரர்களுடன் உரையாடினார் ஜனாதிபதியின் ஊடக பணிப்பாளர்

பொருளாதார ஸ்திரத்தன்மைக்கான கட்டமைப்பு சீர்திருத்தங்கள் தேவை

நாட்டைக் கட்டியெழுப்ப முக்கிய 3 விடயங்களின் கீழ் சர்வகட்சி அரசு


யாழ்.பல்கலைக்கழகத்தில் 18 பேருக்கு வகுப்புத்தடை 

யாழ்.பல்கலைக்கழகத்தில் பகிடிவதையில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள மாணவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால், பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் சுற்றறிக்கையின் பிரகாரம் 2 வருட காலத்துக்கு குறையாத வகுப்புத்தடை விதிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

யாழ்.பல்கலைக்கழத்தின் புதுமுக மாணவர்களை ஒன்று கூடல் எனும் பெயரில் யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பகுதிக்கு அழைத்து பகிடிவதைக்கு உட்படுத்தப்படுவதாக மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய இணைப்பாளர் த. கனகராஜுக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது.

முறைப்பாட்டின் பிரகாரம் அது தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழு இணைப்பாளரால் பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனையடுத்து சட்ட நிறைவேற்று அதிகாரி , மாணவர் ஆலோசகர் மற்றும் மாணவர் ஒழுக்காற்று அதிகாரி உள்ளிட்ட குழுவினர் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று புதுமுக மாணவர்களை சிரேஷ்ட மாணவர்களிடம் இருந்து மீட்டுள்ளனர்.

இதனையடுத்து சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுக்க ஏதுவாக சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில் சிரேஷ்ட மாணவர்கள் 18 பேருக்கு தற்காலிக வகுப்பத்தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேவேளை சம்பவம் தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகம் தனது பூர்வாங்க விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. புதுமுக மாணவர்களின் வாக்குமூலங்களை பெறுவதற்கான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளனர்.

பூர்வாங்க விசாரணைகளின் அடிப்படையில் , குற்றவாளிகளாக காணப்படும் மாணவர்களுக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படும். அதன் அடிப்படையில் குற்றவாளிகளாக காணப்படும் மாணவர்களுக்கு பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் சுற்றறிக்கையின் பிரகாரம் 2 வருட காலத்துக்கு குறையாத வகுப்புத்தடை விதிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

யாழ். விசேட நிருபர் - நன்றி தினகரன் 

 
லங்கைக்கு உதவ கமல்ஹாசன் விருப்பம்

பிரபல தென்னிந்திய சினிமா நடிகரும் இயக்குனருமான ‘பத்மபூஷன்’ கமல்ஹாசன் தனது நலன்புரி சங்கத்தின் மூலம் இலங்கைக்கு உதவ விருப்பம் தெரிவித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன், சென்னையில் உள்ள இலங்கை துணை உயர்ஸ்தானிகர் கலாநிதி டி.வெங்கடேஷ்வரனுடனான கலந்துரையாடலின் போது தனது விருப்பத்தை வெளிப்படுத்தியிருந்தார்.கலாநிதி டி.வெங்கடேஷ்வரன் விடுத்த அழைப்பின் பேரில், கமல்ஹாசன் ஞாயிற்றுக்கிழமை (24) சென்னையில் உள்ள இலங்கை துணை உயர்ஸ்தானிகராலயத்திற்கு விஜயம் செய்தார். இந்த பயணத்தின் போது, ​​கமல்ஹாசன் துணை உயர்ஸ்தானிகருடன் கலந்துரையாடினார். இதன்போது அவர்கள் சினிமா துறை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து விவாதித்தனர். கமல்ஹாசனை, நாட்டின் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் திரையுலகக் குழு மற்றும் நாடகக் குழு உறுப்பினர்களுடன் இலங்கைக்கு வருகை தருமாறு ​​பிரதி உயர்ஸ்தானிகர் கேட்டுக் கொண்டார்.

இதன்போது கமல்ஹாசன் தனது நலன்புரிச் சங்கத்தின் மூலம் ‘இலங்கையை ஆதரிப்பதில்’ விருப்பம் தெரிவித்திருந்தார்.    நன்றி தினகரன் 
ஆர்ப்பாட்டக்காரர்களுடன் உரையாடினார் ஜனாதிபதியின் ஊடக பணிப்பாளர்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஊடகப் பணிப்பாளர் தனுஷ்க ராமநாயக்க நேற்று காலி முகத்திடலில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்காரர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்திற்கு செல்லும் வழியில் காலி முகத்திடலில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பில் அவர் கருத்துக்களை கேட்டறிந்து அங்கிருந்து வெளியேறியதாக தெரிவிக்கப்படுகிறது.   நன்றி தினகரன் 


பொருளாதார ஸ்திரத்தன்மைக்கான கட்டமைப்பு சீர்திருத்தங்கள் தேவை

உலக வங்கி அறிவிப்பு

பொருளாதாரக் கொள்கை கட்டமைப்பை உருவாக்கும் வரை, இலங்கைக்கு புதிய நிதியுதவியை வழங்க திட்டமிடவில்லை என தெரிவித்துள்ள உலக வங்கி, இதற்கு பொருளாதார ஸ்திரத்தன்மையை மையமாகக் கொண்ட ஆழமான கட்டமைப்பு சீர்திருத்தங்கள் தேவை எனவும் தெரிவித்துள்ளது.

உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கையின் மோசமான பொருளாதார நிலைமை மற்றும் அதன் தாக்கம் குறித்து உலக வங்கிஆழ்ந்த கவலை கொண்டுள்ளது. மருந்துகள், சமையல் எரிவாயு, உரம், பாடசாலை மாணவர்களுக்கான உணவு, வரிய மற்றும் பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களுக்கான அத்தியாவசியப் பொருட்களின் கடுமையான பற்றாக்குறையைப் போக்க கடந்த காலங்களில் உலக வங்கியால் நிதி உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.இன்றுவரை, இந்த நிதியில் சுமார் 160 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அவசரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வழங்கப்பட்டுள்ளன.இந்த வளங்கள் ஏழ்மையான மற்றும் மிகவும் பாதிக்கப்படக் கூடியவர்களைச் சென்றடைவதை உறுதி செய்வதற்காக வலுவான கட்டுப்பாடுகள் மற்றும் நம்பிக்கைக்குரிய மேற்பார்வையை நிறுவுவதற்கு, அதனை செயல்படுத்தும் முகவர்களுடன் நாங்கள் நெருக்கமாக பணியாற்றி வருகிறோம்.

இதனை தொடர்ந்தும் உன்னிப்பாகக் கண்காணிப்போம். இலங்கை மக்களுக்கு எங்களுடைய ஆதரவினை அதிகரிக்க மற்ற அபிவிருத்தி பங்காளிகளுடன் நாங்கள் நெருக்கமாக ஒருங்கிணைத்து வருகிறோம்.

போதுமான பேரின பொருளாதாரக் கொள்கை கட்டமைப்பை உருவாக்கும் வரை, இலங்கைக்கு புதிய நிதியுதவியை வழங்க திட்டமிடவில்லை. இதற்கு பொருளாதார ஸ்திரத்தன்மையை மையமாகக் கொண்ட ஆழமான கட்டமைப்பு சீர்திருத்தங்கள் தேவைப்படுகின்றன.

மேலும் இந்த நெருக்கடியை உருவாக்கிய அடிப்படை கட்டமைப்பு காரணங்களை நிவர்த்தி செய்வதன் மூலம் இலங்கையின் எதிர்கால மீட்சி மற்றும் அபிவிருத்தி மீள்தன்மையை உறுதிப்படுத்த வேண்டும் என உலக வங்கி தெரிவித்துள்ளது.   நன்றி தினகரன் 

நாட்டைக் கட்டியெழுப்ப முக்கிய 3 விடயங்களின் கீழ் சர்வகட்சி அரசு

- அனைவரின் இணக்கத்துடன் 19ஆவது திருத்தம்
- பாராளுமன்ற கண்காணிப்புக்குழுவை நியமித்து அனைவரும் இணைய வாய்ப்பளித்தல்
- புத்திஜீவிகளிடமிருந்து இவை பற்றி ஆலோசனைகளை பெறுதல்

அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்து, சர்வகட்சி அரசாங்கமொன்றை உருவாக்கி நாடு எதிர்நோக்கியுள்ள சமூக, பொருளாதார மற்றும் அரசியல் சவால்களை முறியடிப்பதற்கு புதிய பாதையில் பயணிப்பதே தமது நோக்கமாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

நேற்று (30) பிற்பகல் மல்வத்து மகாநாயக்க அதி வணக்கத்திற்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர் உள்ளிட்ட மகாசங்கத்தினரை சந்தித்த ஜனாதிபதி, நாட்டை கட்டியெழுப்புவதற்காக அமுல்படுத்தப்படும் வேலைத்திட்டத்தில் மகாசங்கத்தினரின் ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் ஆவலுடன் எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டார்.

ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று, (30) மல்வத்து, அஸ்கிரி மகாநாயக்க தேரர்கள் மற்றும் அனுநாயக்க தேரர்கள் தலைமையிலான நிறைவேற்று சபை மகாசங்கத்தினரை சம்பிரதாயபூர்வமாக சந்தித்து, ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டார்.

மல்வத்து மகா விகாரையில் கூடியிருந்த மல்வத்து பீடத்தின் மகாநாயக்க அதிவணக்கத்திற்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர் உள்ளிட்ட அனுநாயக்க தேரர்கள் மற்றும் நிறைவேற்று சபை தேரர்கள் சமயக் கிரியைகளில் ஈடுபட்டு, ஜனாதிபதிக்கு ஆசிர்வாதம் வழங்கினர்.

அதனைத் தொடர்ந்து, அஸ்கிரி மகா விகாரைக்கு வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்வுக்கு, அஸ்கிரி மகா விகாரை மண்டபத்தில் ஒன்று கூடியிருந்த, அஸ்கிரி பீடத்தின் மகாநாயக்க அதிவணக்கத்திற்குரிய வரகாகொட ஸ்ரீ ஞானரதன தேரர், அனுநாயக்க தேரர்கள் உள்ளிட்ட நிறைவேற்று சபை தேரர்கள் பிரித் பாராயணம் செய்து ஆசிர்வாதம் வழங்கினர்.

மல்வத்து மகா விகாரையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஜனாதிபதிக்கு ஆசி வழங்கும் விசேட நிகழ்வின்போது, ​​மல்வத்து மகா விகாரையின் நிறைவேற்று சபை உறுப்பினர் ராஜகீய பண்டித அதி வணக்கத்திற்குரிய மஹவெல ரதனபால தேரர் சிறு அனுசாசனை உரை நிகழ்த்தி, பொருளாதாரத்தை மீட்டெடுத்து நாட்டை அபிவிருத்தியை நோக்கி கொண்டு செல்வதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு சக்தி  இருப்பதாக தெரிவித்தார்.

தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் புகழைப் பெற்ற, முதிர்ச்சியும் திறமையும் கொண்ட அரசியல்வாதியான அவர், பொதுமக்கள் எதிர்நோக்கியுள்ள அன்றாடப் பிரச்சினைகளை உடனுக்குடன் தீர்த்து, தேவையான சமூக, பொருளாதார மற்றும் அரசியல் மாற்றங்களை ஏற்படுத்துவார் என்று மகாசங்கத்தினர் நம்புவதாகவும் தேரர் குறிப்பிட்டார்.

மல்வத்து மகா விகாரை மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் மேலும் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பின்வருமாறு குறிப்பிட்டார்.

ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு, சம்பிரதாயபூர்வமாக, நான் செய்ய வேண்டிய இரண்டு கடமைகள் இருந்தன. பாராளுமன்றத்தில் அறிக்கை ஒன்றை வெளியிடுதல். அதற்கு முன்னர் சம்பிரதாயபூர்வமாக மல்வத்து - அஸ்கிரி மகா விகாரைகளில் ஆரம்பித்து ஏனைய விகாரைகளில் உள்ள மகாநாயக்க தேரர்களை தரிசித்து ஆசிர்வாதம் பெற்றுக்கொள்வது, உங்களிடமிருந்து பெற்ற ஆசீர்வாதங்களுக்கும் கிடைத்த சக்திக்கும் நான் குறிப்பாக நன்றி கூறுகிறேன். இந்த நேரத்தில், நீங்கள் வழங்கிய ஆதரவு எனது பணிகளுக்கு பலமாக அமைந்தது.

நாடும் நாட்டின் பொருளாதாரமும் அழிவின் விளிம்பில் இருந்ததால்தான் நான் முதலில் பிரதமர் பதவியை ஏற்றுக் கொண்டேன். ஒரு நாடாக நாம் இன்று மிகவும் கடினமான இடத்தில் இருக்கிறோம். இந்த ஆண்டு நாட்டின் பொருளாதாரம் மேலும் வீழ்ச்சியடையும். சர்வதேச அமைப்புகளின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொண்டு, இந்த பொருளாதாரத்தை சீர்படுத்தி 2023, 2024ஆம் ஆண்டுக்குள் நாட்டை அபிவிருத்தி செய்யக்கூடிய வகையில் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப நான் செயற்பட்டு வருகின்றேன். இது கடினமானதொரு பணியாகும். ஆனால் அதனை செய்யவில்லை என்றால், அது இன்னும் கடினமாக இருக்கும். மருந்து கொடுத்து நோயாளியை குணப்படுத்த முயற்சி செய்வதா அல்லது மருந்து கொடுக்காமல் நோயாளியை இறக்க விடுவதா என்று பார்க்க வேண்டும்.

இன்று, இந்தப் பிரச்சினைகளுடன் அரசியலமைப்பில் பல சீர்திருத்தங்களுக்கான கோரிக்கைகளும் முன் வைக்கப்பட்டுள்ளன. அதை அரசியல்வாதிகள் ஏற்றுக்கொள்ள வேண்டும். அந்த சீர்திருத்தங்கள் மூலம் பல்வேறு அழுத்தங்கள் வந்தன. சிறந்த, வலிமையான, நல்ல சக்திகள். அதேபோன்று ஒரு நாட்டை அழிக்கக்கூடிய அழுத்தங்கள். அவை அனைத்துக்கும் மத்தியில் வந்து தற்போது நான் ஜனாதிபதி பதவியை பொறுப்பேற்றுள்ளேன்.

நீங்கள் உபதேசித்தபடி, நாங்கள் மிகவும் கடினமான இடத்தில் இருக்கிறோம். பொருளாதார சிக்கல்கள் உள்ளன. அரசியல் பிரச்சினைகள் உள்ளன. மகாநாயக்க தேரர்கள் சமர்ப்பித்த ஆலோசனைகளை நான் வாசித்தேன். அதில் பல நல்ல விடயங்கள் உள்ளன. ஜனாதிபதியாக நான் புதிய பாதையில் செல்ல விரும்புகிறேன். அனைத்துக் கட்சிகளையும் ஒன்றிணைத்து அந்தப் பயணத்தை மேற்கொள்ள விரும்புகிறேன். சர்வகட்சி அரசாங்கத்தை உருவாக்குங்கள். அதற்கு இரண்டு வழிகள் உள்ளன. அதில் ஒன்று 19ஆவது திருத்தத்தை முன்வைக்க வேண்டும். அனைவரின் விருப்பத்திற்கும் ஏற்ப திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதிலிருந்து தேசிய அரசாங்கத்தை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும். இரண்டாவதாக, பாராளுமன்றத்தில் கண்காணிப்புக்குழுவை நியமித்து, அதன் மூலமும் பங்கேற்கும் வாய்ப்பை வழங்கலாம். அதன்படி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முன்வைத்த தேசிய சபைக் கொள்கை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன் புத்திஜீவிகள் எவ்வாறு இதனை ஒழுங்கமைப்பது, சீர்திருத்தங்கள் தொடர்பான ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வது அவை அனைத்தும் செய்யப்படும். இவை நமக்கு முக்கியமான விடயங்கள் ஆகும். அதனால், சர்வகட்சி அரசாங்கம் அல்லது அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து பாராளுமன்றத்தை அரசாங்கமாக ஸ்தாபித்து வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு நான் கட்சித் தலைவர்கள் அனைவருக்கும் அறிவித்தேன்.

உங்களின் அறிவுரைக்கும், கொள்கைக்கும் அமைய நான் செயற்படுவேன். அதற்காக மகாநாயக்க தேரர்கள் உள்ளிட்ட நிறைவேற்று சங்க சபையின் ஒத்துழைப்பும் பொதுமக்களின் ஆதரவும் கிடைக்கும் என நான் எதிர்பார்க்கிறேன்.

இப்போது உருவாகியுள்ளது கடைசி சந்தர்ப்பமாகும். நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்தப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டும். குறைந்தபட்சம் ஒரு பொதுவான திட்டமொன்றையாவது உருவாக்க வேண்டும். இந்த வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதே எமது முதன்மைப் பணியாகும். அவற்றை முன்னெடுக்கும்போது எமது பௌத்த தர்மத்தைப் பாதுகாக்கும் பணியையும் நாம் மறக்க மாட்டோம். நாம் இன்று லிச்சவி மன்னன் குழந்தைகளுக்கு கூறிய அறிவுரைகளை பின்பற்றினால் இந்த நாட்டை முன்னேற்ற முடியும். அதில்தான் நமது எதிர்காலம் தங்கியுள்ளது. விசேடமாக நான் உங்களுக்கு நன்றி கூறுகிறேன்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர், ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜயவர்தன உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்வுகளில் கலந்துகொண்டனர்.    நன்றி தினகரன் 
No comments: