எழுத்தும் வாழ்க்கையும் ( இரண்டாம் பாகம் ) அங்கம் – 23 பொன்னியின் செல்வன் ஓவியர் மணியம் இல்லத்தில்…. தமிழக கலை, இலக்கிய ஆளுமைகளிடம் கற்றதும் பெற்றதும் !! முருகபூபதி


கல்கி கிருஷ்ணமூர்த்தியின் பொன்னியின் செல்வன் புகழ்பெற்ற புதினம். எழுபது ஆண்டுகளுக்கு முன்னர் அவர் கல்கியில் தொடராக எழுதிய இக்கதை, அவர் மறைந்த பின்னரும் தொடர்ந்து பேசப்படுகிறது.

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் மணிரத்தினம் இயக்கத்தில் நட்சத்திரப் பட்டாளமே தோன்றியிருக்கும் பொன்னியின் செல்வன் திரையரங்குகளுக்கு வரவிருக்கிறது. மற்றும் ஒன்று 2023 ஆம் ஆண்டு வெளியாகிறது.

பல வருடங்களுக்கு முன்னர் எம்.ஜி. ஆர். இக்கதையை


ஐம்பதினாயிரம் ரூபாவுக்கு வாங்கி, பின்னாளில் தமிழ்த்திரையுலகில் பிரபல்யம் பெற்ற முள்ளும் மலரும் மகேந்திரனை அழைத்து தனது வீட்டில் தங்கவைத்து  திரைக்கதை வசனம் எழுதி வாங்கினார்.

எனினும்,  அன்று அந்தப்படம் தயாரிப்பிற்கான முன் முயற்சியோடு நின்றுவிட்டது.  இதுபற்றி முள்ளும் மலரும் மகேந்திரன் தனது சினிமாவும் நானும் என்ற நூலிலும் விரிவாக எழுதியுள்ளார். இதனை பதிப்பித்து வெளியிட்டவர் எங்கள் எஸ். பொ. ( மித்ர பதிப்பகம் )

பென்னியின் செல்வன் தொடர்கதை மீண்டும் மீண்டும் கல்கியில் வெளியானது.  நூலாக வெளிவந்து பல பதிப்புகளையும் கண்டுவிட்டது.

அதன் வசனங்களுடன் இறுவட்டுக்களும் வெளியாகிவிட்டன.  எங்கள் குடும்பத்தில் எனது அம்மா, பெத்தாச்சி உட்பட பலரும் எனது சிறிய வயது காலத்தில் படித்தார்கள். எனது மச்சானுக்கு  ( அக்காவின் கணவர் )  தற்போது 85 வயதாகிறது. அவர் இப்போதும் பொன்னியின் செல்வனை படித்துக்கொண்டிருக்கிறார்.

எனது மனைவி மாலதியின் குடும்பத்திலிருக்கும் அனைவருமே பொன்னியின் செல்வனை படித்தவர்கள்தான்.

ஆனால், நான்தான் இதுவரையில் அதனை படிக்கவேயில்லை.  இதனை அறிந்த எனது மனைவி ஒருநாள்  “ பொன்னியின் செல்வனை படிக்காத  நீங்கள் எல்லாம் என்ன எழுத்தாளர்…?  “ என்றும் கேட்டிருக்கிறாள்.

அதற்கு நான் ஜெயகாந்தன் பாணியில்,  “ எனக்கு அம்புலிமாமாவில் வரும் கதைகள்தான் பிடித்தமானது  “ என்றேன்.

இந்த முன்கதைச் சுருக்கத்தின் பின்னணியில்  மணிரத்தினம் பொன்னியின் செல்வனை பெரும் பொருட் செலவில் தயாரித்து முடிக்கும் கட்டத்திற்கு வந்துள்ளார்.


பொன்னியின்செல்வனை கல்கி அவர்கள் 1950 காலகட்டத்தில் எழுதியவர்.  ராஜேந்திரசோழன் இலங்கைக்கும் வந்திருப்பதனால், அவன் வந்து சென்ற இடங்களை பார்ப்பதற்காகவும் வந்தாராம். அவர், தனது தொடர்கதைக்கு ஓவியங்கள் வரைந்த தமிழகத்தின் பிரபல ஓவியர் மணியம் அவர்களையும் அநுராதபுரம், பொலன்னறுவை, முதலான இடங்களிலிருக்கும் வரலாற்றுச் சின்னங்களை பார்த்து படம் வரைவதற்காகவே அழைத்து வந்தவர்.

கல்கி எமது இலங்கையை தனது பொன்னியின் செல்வனில் இவ்வாறு வர்ணித்திருப்பார்.

 "இது இலங்கை!"

மறுபடியும் வந்தியத்தேவன் கண் விழித்தபோது, அவன் எதிரேயும்


சுற்றிலும் தோன்றிய காட்சி அவனைப் பிரமிக்கச் செய்தது. கிழக்கே வானமுகட்டில் சூரியன் உதயமாகிக் கொண்டிருந்தான். அங்கே கடல் உருக்கிவிட்ட தங்கக் கடலாகித் தகதகவென்று திகழ்ந்தது. உதயகுமாரி தங்கப் பட்டாடை புனைந்து கொண்டு ஜொலித்தாள். அவனுக்கு எதிரே படகு போய்க் கொண்டிருந்த திசையில் ஒரு மரகதத் தீவு நீலக் கடலாடை போர்த்துக்கொண்டு விளங்கியது. வலப்புறத்தில் அதே மாதிரி இன்னொரு பச்சை வர்ண பூமிப் பிரதேசம் காணப்பட்டது. அது நாலு புறமும் கடல் சூழ்ந்த தீவா அல்லது நீண்டு பரந்து வியாபித்துள்ள பூமிப் பிரதேசமா என்று நன்றாகத் தெரியவில்லை. இரண்டு மரகதப் பிரதேசங்களுக்கும் ஊடே பார்த்தால் தூரத்தில் அத்தகைய இன்னும் பல தீவுகள் பச்சை நிறத்தின் பல்வேறு வகைக் கலவைகளுக்கு உதாரணமாகத் தோன்றிக் கொண்டிருந்தன. படகிலிருந்தபடியே நாலுபுறமும் சுற்றிப்

பார்த்தால், வானவில்லின் ஏழுவித வர்ணங்களும் அதன் ஏழாயிரம் வகைக் கலவை நிறங்களும் திகழ்ந்தன. மொத்தத்தில் அந்தக் காட்சி கண்ணெதிரே காணும் உண்மைக் காட்சியாகவே தோன்றவில்லை. ஓவியக் கலையில் தேர்ந்த அமர கலைஞன் ஒருவன், "இதோ சொர்க்கலோகம் எப்படியிருக்கும் என்று காட்டுகிறேன்!" என்று சபதம் பூண்டு தீட்டிய வர்ணச் சித்திர அற்புதம் போலவே தோன்றியது.

இந்தக் காட்சியைக் கண்டு மெய்ம்மறந்து நினைவிழந்திருந்த வந்தியத்தேவனுடைய செவியில், "இது சொர்க்கம் அல்ல,  இது இலங்கை!" என்ற வார்த்தைகள் விழுந்து அவனை விழிப்படையச் செய்தன.

இயக்குநர் மணிரத்தினமும் தனது பொன்னியின் செல்வன் படப்பிடிப்பிற்காக இலங்கைக்கு வரவிருந்தவர்தான்.  ஆனால்,


கொவிட் பெருந்தொற்று அவரை தடுத்துவிட்டது.

இதற்கு முன்னரும் 2010 ஆம் ஆண்டுகளில் அவர் தமது கடல் திரைப்படத்திற்காக இலங்கையில் ஒரு பாடல் காட்சியை படமெடுக்க வரவிருந்தவர்.  தமிழகத்திலிருந்த விடுதலைப்புலி ஆதரவாளர்கள்,  முள்ளிவாய்க்கால் பேரழிவையடுத்து, இலங்கை செல்லும் தமிழக எழுத்தாளர்கள் – கலைஞர்களை தடுத்துக்கொண்டிருந்த காலம் அது.  கடல் படத்திற்கு வசனம் எழுதிய ஜெயமோகனாலும் இலங்கைக்கு  வரமுடியாமல் போய்விட்டது.  மீண்டும் ஜெயமோகன் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு வசனம் எழுதியுள்ளார்.

இம்முறையும் அவர்களால் இலங்கை வரமுடியவில்லை. 

கல்கியும் ஓவியர் மணியமும் இலங்கை வந்தார்கள்.  ஓவியர் மணியத்தின் மகன்தான் ஓவியர் மணியம் செல்வன்.  இவர்


விக்னேஸ்வரனின் நல்ல நண்பர். விக்னேஸ்வரனுடைய தென்றல்விடு தூது கவிதைத் தொகுதிக்கு மணியன் செல்வன்தான் முகப்பு அட்டை வரைந்துகொடுத்தார்.  அத்துடன் விக்னேஸ்வரனின்  அக்கா  திருமதி நந்தினி சுந்தரலிங்கம் ( ஆசிரியை )  1987 இல் வடமராட்சியில் நடந்த லிபரேஷன் ஒப்பரேஷனின்போது பொம்மர் தாக்குதலில் கொல்லப்பட்டார்.

அன்னாருக்கான அஞ்சலி மலருக்கான முகப்பினையும் மணியன் செல்வனே வரைந்து கொடுத்திருந்தார்.

1990 மார்ச்சில் நான் சென்னைசென்றிருந்தபோது, விக்னேஸ்வரன்


என்னையும் மணியம் செல்வன் வீட்டுக்கு அழைத்துச்சென்றார்.  திருமதி மணியம் அம்மையார் தனது கணவர் இலங்கை சென்ற கதைகளை சுவாரசியமாகச் சொன்னார்.

அவர் எனது குழந்தைகளுக்கு வழங்கிய  அழகிய பால கிருஷ்ணர் சின்னம் இன்னமும் எங்கள் வீட்டின் சுவரில் காட்சியளிக்கிறது.

மணியம் செல்வன் எனது வேண்டுகோளை ஏற்று எங்கள் அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கியச்சங்கதின் வெளியீடான தமிழ் முரசு இதழுக்கும் நிரந்தர முகப்போவியம் வரைந்து தந்தார்.

எனக்காக அவர் வரைந்து தந்த ஓவியம்தான் எனது கங்கை மகள் கதைத் தொகுதியின் முகப்பினை அலங்கரிக்கிறது.


ஓவியர் மணியம் செல்வனின் நண்பர் எழுத்தாளர் பாலகுமாரன்.  இவர் அக்காலப்பகுதியில் எனக்கு மிகவும் பிடித்தமான எழுத்தாளர்.  பாலகுமாரனின் பல நூல்களுக்கு மணியன் செல்வனே படம் வரைந்தவர்.

பாலகுமாரன் - நாயகன், ஜென்டில்மென், பாட்ஷா முதலான திரைப்படங்களுக்கும் வசனம் எழுதியவர்.  சிந்து பைரவி, இது நம்ம ஆளு முதலான  திரைப்படங்களிலும் நடித்தவர்.  அவரைப் பார்க்கவேண்டும் எனச்சொன்னவுடன், மணியன் செல்வன் அழைத்துச்சென்றார்.

பாலகுமாரன் மீனம்பாக்கம் விமானநிலையத்தில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தின் பின்னணியிலும் ஒரு கதை எழுதியிருக்கிறார்.  பாலகுமாரன், மாலன், வஸந்த் ஆகியோர்


சாவியின்  இதழ் ஒன்றிலும் பணியாற்றியவர்கள்.  பின்னர் இம்மூவரும் வெவ்வேறு திசைகளில் பயணித்தார்கள்.  பாலகுமாரன்  அவள் அப்படித்தான் திரைப்பட இயக்குநர் ருத்ரய்யாவின் நண்பர்.  இந்தப்படம் அக்காலப்பகுதியில் பெரிதும் பேசப்பட்ட திரைப்படம்.

இதனைப்பார்த்திருக்கும் எமது கவிஞர் சேரன் கூட, பாலகுமாரனுடன் அந்தப்படத்தில் நடித்த நடிகை ஶ்ரீபிரியாவை பார்க்கச்சென்றாராம்.  இந்தத் தகவலை அன்று பாலகுமாரன் சொன்னார்.

பாலகுமாரன் தான் எழுதிய சில நாவல்களை தனது கையொப்பத்துடன் எனக்கு பரிசளித்தார்.  அவருக்கு இரண்டு மனைவிமார். இருவரும் ஒரே வீட்டிலிருந்து எம்மை உபசரித்தனர்.


பாலகுமாரன் 2018 இல் மறைந்தார். அப்போது  “ எழுத்துச்சித்தர் பாலகுமாரன் நினைவுகள் -  ஈழப்போராட்டத்தையும் கேள்வி ஞானத்தில் எழுத விரும்பியவர்  “ என்ற தலைப்பில் அஞ்சலிக்குறிப்பும் எழுதினேன்.

அந்த சென்னைப்பயணத்தில் கவிஞர்கள்  வாலி, வைரமுத்து, மேத்தா, அக்கினிபுத்திரன், இன்குலாப்,  மேத்தாதாசன்,  இந்திரா பார்த்தசாரதி, ஜெயகாந்தன், சிவகாமி, திலகவதி,  தொ. மு. சி. ரகுநாதன் , தி.க. சிவசங்கரன், அசோகமித்திரன், அறந்தை நாராயணன், சமுத்திரம், குணசேகரன் உட்பட இடதுசாரித் தோழர்கள் நல்லகண்ணு, தா. பாண்டியன்,  கே.சி. எஸ். அருணாசலம், தனுஸ்கோடி ராமசாமி, இளம்பிறை ரஃமான்,  ஆகியோரையும் ராஜம் கிருஷ்ணனை மீண்டும் சந்தித்தேன்.

இவர்களில் தொ. மு. சி. ரகுநாதன் எனது தந்தை வழி உறவினர்


. எனக்கு தாத்தா.  புதுமைப்பித்தனின் நண்பரான இவர்,  பாரதி இயல் ஆய்வாளருமாவார்.  நான் பின்னாளில் இலங்கையில் பாரதி நூலை எழுதுவதற்கு இவரும் தூண்டுகோளாகவிருந்தவர்.

எனது பறவைகள் நாவலை ரகுநாதனுக்கே சமர்ப்பித்துள்ளேன்.

இவரது மகன்  ஹரீந்திரன்,  எமக்கு அண்ணிமுறையான  மாலதியை மணம்முடித்திருந்தார். மாலதி ஒரு கல்லூரியில் விரிவுரையாளர். அவர் தனது மேற்கல்வி ஆய்வுக்கு தனது மாமனார் ரகுநாதனின் படைப்புகளையே எடுத்துக்கொண்டார்.  எனினும் இவரது கவிதைத் தொகுதிக்கு கவியரசு கண்ணதாசன்தான் அணிந்துரை எழுதினார்.


மாமனார்தான் தமது மகனுக்கு வரப்போகும் மனைவியை                 ( தமது மருமகளை  ) அறிந்துகொள்ள  முயற்சிப்பார். ஆனால், இங்கே தனது மாமனாரையே ஒரு பெண் ஆய்வு செய்து பட்டம் பெற்றுள்ளார் என்று  மாலதி ஹரீந்திரன் பற்றி  வீரகேசரியில் பின்னர் எழுதினேன்.

சோவியத் கலாசார நிலையத்தில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் விழாவில் கவிஞர் வைரமுத்துவுக்கும்,  இசையமைப்பாளர் சந்திரபோஸுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.   எங்கள் நாட்டின் எழுத்தாளர் செ. யோகநாதனும் கலந்துகொண்டார். அப்போது அவர் சென்னையில் இடம்பெயர்ந்து  வாழ்ந்துகொண்டிருந்தார்.

அடையாறில் தோழர் ரங்கநாதன் இல்லத்தின்  மேல்மாடியில் அமைந்த கீற்றுக்கொட்டகையில் மல்லிகை 25 ஆவது ஆண்டுமலர் அறிமுக நிகழ்வை நடத்தினோம்.

அக்காலப்பகுதியில் சென்னையில் இருந்த எங்கள் அப்பல்லோ சுந்தா சுந்தரலிங்கம் அண்ணரும் அந்த நிகழ்விற்கு வருகை தந்தார்.

இவ்வாறு ஒருபுறத்தில் எழுத்தாளர்களுடன் நேரத்தை செலவிட்டவாறு எனது குடும்பத்தினரையும் பல்வேறு இடங்களுக்கு அழைத்துச்சென்றேன்.  எங்கள் அப்பாவின் சொந்த பந்தங்கள் மதுரை, சாத்தூர், பாளையங்கோட்டை, திருநெல்வேலி எங்கும் வசிக்கிறார்கள். அவர்களிடமெல்லாம் அழைத்துச்சென்றேன்.

இடையில் மகன் முகுந்தனுக்கு திருப்பதியில் மொட்டையும் அடிக்கப்பட்டது.  சிறிது காலம் அக்காமார் அவனை திருப்பதி என்றே அழைத்தனர்.

முன்னர் வீரகேசரியில் பணியாற்றிய மூத்த பத்திரிகையாளர் எஸ். எம். கார்மேகம் அப்போது சென்னையில் தினமணியில் சிரேஷ்ட செய்தி ஆசிரியராகவிருந்தார்.

அவர் உமா லொட்ஜுக்கு வந்து எங்களை தமது வீட்டுக்கு அழைத்துச்சென்று உபசரித்தார். அந்த உறவு தற்போதும் அவுஸ்திரேலியா சிட்னியில் வதியும் அவரது மகள் திருமதி கனகா கணேஷ் ஊடாக தொடருகின்றது.

சென்னையிலிருந்து  திரும்புகையில் எமது பொதிகளில் புத்தகங்களே நிரம்பிவிட்டன.   அவற்றை பக்குவமாக அடுக்குவதற்கு விக்னேஸ்வரனும், மேத்தாதாசனும் உதவினர்.

அடுத்துவந்த சில வருடங்களில் கவிஞர் மேத்தாதாசன் வாகன விபத்தில் கொல்லப்பட்டார். அவரது அந்த மோட்டார் சைக்கிளில் என்னை ஏற்றிக்கொண்டு சென்னையை சுற்றிக்காண்பித்தார்.  அவரது அகால மரணச்செய்தி அறிந்து அவரது பெற்றோருக்கு தேறுதல் கடிதம்தான் என்னால் எழுத முடிந்தது.

இதே போன்று  எழுத்தாளர் சு. சமுத்திரமும் ஒரு வாகன விபத்தில் கொல்லப்பட்டார்.

இந்தப்பதிவில் வரும் சில எழுத்தாளர்கள் தற்பொழுது உயிரோடு இல்லை. அவர்கள் மறைந்தவேளைகளில் தொலைவிலிருந்து அஞ்சலிக்குறிப்புகள்தான் எழுத முடிந்தது.

அவர்கள் பற்றிய நீங்காத நினைவுகள் இன்னமும் எனது மனக்குகையில் அழியாத ஓவியங்களாகியிருக்கின்றன.

அவர்கள் பற்றிய விரிவான தொகுப்பு பாலம் என்ற நூலை விரைவில் வெளியிடவிருக்கின்றேன்.   அவர்களிடம் கற்றதும் பெற்றதும் ஏராளம்.

( தொடரும் )

 

 

 

 

No comments: