நான் இலக்கிய உலகில் பிரவேசித்த ( 1971 ) காலப்பகுதியில்தான் தென்னிலங்கையில் மக்கள் விடுதலை முன்னணி கிளர்ச்சியை தொடங்கியது.
அவ்வேளையில்
அவசர கால சட்டமும் இரவில் ஊரடங்குச் சட்டமும் பிறப்பிக்கப்பட்டிருந்தது. என்னைப்போன்ற இளைஞர்கள் வெளியே நடமாட அஞ்சிய காலம். அதனால் வீட்டில் வளர்மதி நூலகம் அமைத்து நண்பர்களிடம்
நூல்களை பரிமாறி வாசித்தோம்.
அப்போது ஜெயகாந்தனின் எழுத்துக்கள் எம்மை பெரிதும்
கவர்ந்தன. அவர் மல்லிகை ஜீவாவின் நண்பராகவும் இருந்தார்.
ஜெயகாந்தனுடன்
கருத்து ரீதியாக முரண்பட்ட ஜீவா, மல்லிகையில் நீண்ட தொடரும் எழுதினார். ஜெயகாந்தனும் அவற்றை படித்திருந்தாலும், தனக்கு எதிராக முன்வைக்கப்படும் விமர்சனங்கள் குறித்து
அலட்டிக்கொள்ளாத பிறவி அவர்.
பின்னாளில்
ஜீவா சென்னை சென்றவேளையிலும் வீட்டுக்கு அழைத்து உபசரித்தவர்தான் ஜெயகாந்தன் என்ற ஜேகே.
அவரது பெரும்பாலான
நூல்களை 1970 –
1980 காலப்பகுதியிலேயே
படித்து முடித்துவிட்டேன். அவர் எப்படிப்பட்டவர் என்பதை அந்த நூல்களில் அவர் எழுதும்
முன்னுரைகளிலிருந்தே தெரிந்துகொள்ளலாம்.
1984 இல்
சென்னை சென்றவேளையிலும் அவரை சந்திக்கத் தயங்கிய நான், வெகு தொலைவில் கோவில்பட்டிக்கு
அருகாமையிலிருக்கும் இடைசெவல் கிராமத்திற்குச் சென்று எழுத்தாளர் கி. ராஜநாராயணனை சந்தித்துவிட்டு
வந்து வீரகேசரியிலும் எழுதியிருக்கின்றேன்.
கி.ரா. ,
நான் ஜேகே.யை சந்திக்காமல் செல்வது குறித்து கவலைப்பட்டார்.
“ நீங்கள் நினைப்பது போன்று ஜே. கே. கோபக்காரர் அல்ல. அடுத்த முறை வந்தால் அவசியம் சந்தித்து பேசுங்கள். அவரை எவரேனும் சீண்டினால்தான்
கோபப்படுவார் “ என்றார் கிரா.
1990 ஆம் ஆண்டு மீண்டும் நான் சென்னை சென்றபோது, குடும்பத்தினரும் இலங்கையிலிருந்து வந்தமையால்
ஜே.கே. யுடனான சந்திப்பு இறுதி நேரத்தில்தான் நடந்தது.
சோவியத்
கலாசார நிலையத்தில் நடந்த தமிழ் நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநாட்டுக்கும்
ஜேகே. வரவில்லை. திருநெல்வேலி, சாத்தூர், மதுரை,
திருச்செந்தூர் பயணங்களை முடித்துக்கொண்டு மீண்டும் சென்னைக்கு வந்தோம்.
சென்னை தினமணியில் பணியாற்றிய மூத்த பத்திரிகையாளர் கார்மேகமும் , இம்முறையாவது ஜேகே யை பார்த்துவிட்டு திரும்புங்கள் என்றார்.
அவரும் ஜேகேயை முன்னர் ஒருதடவை இலங்கைக்கு அழைத்தார்.
“ நான் எனது
எல்லையை விட்டு நகரமாட்டேன் “ என்று சொன்னதும்,
கார்மேகம், “ எல்லை என்று எதனைச்சொல்கிறீர்கள்..?
இதோ நீங்கள் அமர்ந்திருக்கும் இந்த அறையா… அல்லது உங்கள் இந்த அறை அமைந்துள்ள ஆழ்வார்பேட்டையா…?
அல்லது சென்னை மாநகரமா..? அல்லது தமிழ் நாடா..? இந்தியாவா..? சொல்லுங்கள் ! எது உங்கள்
எல்லை…? “ கார்மேகம் இவ்வாறு கேட்பார் என்று
ஜெயகாந்தன் எதிர்பார்த்திருக்கமாட்டார்.
சுதாரித்துக்கொண்டு, “ இந்தியாவை
விட்டு வேறு எங்கும் செல்லமாட்டேன் “ என்றாராம்.
அத்தகைய
ஜே.கே, பின்னர் ருஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் சிங்கப்பூருக்கும் சென்றது வேறு ஒரு
கதை !
சென்னையை
விட்டு புறப்படுவதற்கு முதல்நாள் மாலை, குடும்பத்தினரை
அழைத்துக்கொண்டு கவியரசு கண்ணதாசன் வீட்டுக்குச்சென்றேன். அவர்களிடமிருந்து விடைபெறும்போது,
ஜே.கே. அவர்களுடன் அங்கிருந்து தொலைபேசியில் உரையாடி வரப்போவதாகச் சொன்னேன்.
மல்லிகை ஜீவாவும் நான் வருவேன் என்று அவரிடம் ஏற்கனவே
சொல்லியிருந்தார்.
தனது ஆழ்வார்பேட்டை
குடிலுக்கு வரும் பாதையையும் ஜேகே சொன்னார்.
குடும்பத்தினரை
உமா லொட்ஜில் விட்டு விட்டு, கவிஞர் காவ்யன்
விக்னேஸ்வரனுடன் சென்றேன்.
இலங்கையில்
இந்தியப்படைகள் நிலைகொண்டிருந்த காலப்பகுதியில் ஜே.கேயின் கருத்துக்கள் சகிக்கமுடியாமல்
இருந்தன. அவர் இந்திய வானொலியில் இந்திய அமைதிப்படையினரை பாராட்டி பேசியதாக நான் அண்மையில்
படித்த ஷோபாசக்தியின் ஸலம் அலைக் நாவலிலும் தகவல் சொல்லப்பட்டுள்ளது.
இந்தியப்படையின்
அட்டுழியங்களை பின்னணியாகக் கொண்டு நானும் ஆண்மை என்ற சிறுகதையை எழுதியிருந்தேன். அதனை மல்லிகை உட்பட இலங்கை இந்திய ஊடகங்கள் வெளியிடத் தயங்கின.
ஆனால், சென்னை
தமிழ்ப்புத்தகாலயம் வெளியிட்ட எனது சமாந்தரங்கள் தொகுதியில் அச்சிறுகதை இடம்பெற்றது.
மதுரையிலிருக்கும் தமிழ்நாடு விடுதியில் நாம் தங்கியிருந்தபோது, அங்கே வரவேற்பு
உபசரணையாளராக பணியாற்றிய ஒரு இளம் பெண் என்னிடம் அக்கதைத் தொகுப்பினை வாங்கி முழுவதும்
படித்துவிட்டு, ஆண்மை கதையில் வரும் புனிதமலர் தற்போது எப்படி இருக்கிறாள்? எனக்கேட்டு
அந்த பாத்திரம் மீது அனுதாபம்கொண்டு உரையாடினார்.
ஆனால், தமிழ்நாடு மார்க்ஸிஸ்ட் கட்சியின் ஆதரவு இதழான தீக்கதிர், எனது நூலில் இடம்பெற்ற குறிப்பிட்ட ஆண்மை சிறுகதையை கடுமையாக விமர்சனம் செய்திருந்தது.
இந்திய எழுத்தாளர்களும் ஊடகங்களும் இலங்கையில் அன்றும் அதன் பின்னரும் என்ன நடந்தது..? என்ன நடக்கிறது..? என்ற தெளிவின்றி எழுந்தமானமாக கருத்துச் சொல்லிக்கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவர்தான் ஜேகே. என்ற ஜெயகாந்தன்.
தமிழ்நாடு , தென்னாற்காடு மாவட்டத்தில் கடலூரில் மஞ்சக்குப்பம் என்ற
ஊரில் பிறந்த ஜெயகாந்தன்,
மூன்றாம் வகுப்பு வரையுமே
கற்றவர். தமது 12 வயதில் வீட்டை விட்டு ஓடி,
டிக்கட் எடுக்காமல் ரயிலேறி சென்னைக்கு வந்து, கம்யூனிஸ்ட் கட்சியின் பாசறையில் வளர்ந்து
படைப்பாளியானவர்.
அலுவலகம் கலகலப்பாக இருந்தது. ஒரு பெரிய மேசையைச்சுற்றி சிலர் அமர்ந்திருக்க ஜே.கே. சதுரங்கம் ஆடிக்கொண்டிருந்தார்.
தமிழக கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து
ஜெயகாந்தன் ஒதுங்கிய அல்லது
புறக்கணிக்கப்பட்ட காலப்பகுதியில், ஆனந்த விகடனின்
முத்திரை எழுத்தாளராக உச்சத்திற்கு சென்றதும்
மல்லிகையில் டொமினிக்ஜீவா
எழுதிய ஒரு
படைப்பாளியைப்பற்றி ஒரு சிருஷ்டியாளனின்
பார்வை என்ற
தொடர்கட்டுரை எம்மத்தியில்
விவாதத்தை எழுப்பியிருந்தது.
கட்டுரை முடிவுற்றதும்
வெளியான எதிர்வினைகளையும் ஜீவா
மல்லிகையில் பிரசுரித்தார்.
இலக்கிய நண்பர்கள் வட்டத்தில் அக்காலப்பகுதியில்
ஜெயகாந்தன் ஒரு ஹீரோவாக
கொண்டாடப்பட்டார்.
ஜெயகாந்தனும் தடாலடியாக அறிவிப்புகளை
பிரகடனப்படுத்திக்கொண்டிருந்தார்.
எழுத்து எனது ஜீவன். ஜீவனம் அல்ல.
என்பன அவரது கம்பீரமான குறிப்பிடத்தகுந்த
வாசகங்கள்.
ஜெயகாந்தன் செல்லுமிடமெங்கும் சர்ச்சைக்குரிய
கருத்துக்களை விதைத்துவிட்டுவிடுவார். அதனை எதிர்க்கருத்துக்கள்
வளர்த்துவிட்டுவிடும்.
“எழுதுவதால்
மேன்மையுறுகிறேன். அதற்காக எழுதுகிறேன்.
எழுதுவதால் எனது மொழி வளம் பெறுகிறது.
அதற்காகவும் எழுதுகிறேன்.
எழுதுவதால் எனது மக்கள் இன்பமும்
பலனும் எய்துகிறார்கள். அதற்காகவும் எழுதுகிறேன்.
எழுதுவதால் சமூகப்புரட்சிகள் தோன்றுகின்றன.
அதற்காகவும் எழுதுகிறேன்.
எதிர்காலச்சமூகத்தை மிக உன்னத நிலைக்கு
உயர்த்திச்செல்ல இலக்கியம் ஒன்று தேவை
அதற்காகவும் எழுதுகிறேன்.
வாளினும் வலிமை பொருந்தியது
எழுதுகோல். வாழ்க்கைப் போராட்டத்தில்
நான் தேர்ந்தெடுத்துக்கொண்ட
ஆயுதம்எழுதுகோல். அதனால் எழுதுகிறேன்.
எழுதுகோல் என் தெய்வம் “ என்று அழுத்தம் திருத்தமாகச்
சொல்லியிருக்கிறார்.
அதுதான் ஜெயகாந்தன்.
எங்கள்
பிரியத்திற்குரிய ஜெயகாந்தன் தமது 81 வயதில் கடந்த 08-04 – 2015 ஆம் திகதி சென்னையில் மறைந்தார்.
அப்போது நான் எழுதிய கட்டுரையும் இடம்பெற்ற நூலை குமுதம் இதழ் வெளியிட்டது.
கடந்த 2021 ஆம் ஆண்டு, சென்னையில் இயங்கும் ரஷ்ய கலாசார மையமும்
இந்திய ரஷ்ய கலாச்சார நட்புறவுக்கழகமும் இணைந்து ஏப்ரில் 24 ஆம்
திகதி (
ஜெயகாந்தன் பிறந்த தினம் ) நடத்திய மெய்நிகர் அரங்கில் ஜெயகாந்தன் பற்றி உரையாற்றினேன்.
ஜெயகாந்தனின் பால்யகாலத் தோழர்
தமிழ்நாடு திராவிடர் கழகத்தலைவர் கி. வீரமணி , ஜே.கே. பற்றிய ஆவணப்படம் எடுத்த
நண்பர் கனடா மூர்த்தி ஆகியோர் உட்பட பலர் இந்நிகழ்வில் உரையாற்றினர்.
எனது எழுத்துலக வாழ்வில் ஜெயகாந்தனையும்
மறக்கமுடியாது.
எனது ஆண்மை சிறுகதை இடம்பெற்ற தொகுப்பினை
நூலகம் இணைப்பில் பார்க்கலாம்.
https://noolaham.net/project/117/11650/11650.pdf
சமாந்தரங்கள் கதைத் தொகுப்பு
(
தொடரும் )
---0---
No comments:
Post a Comment