ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இராஜினாமா; சபாநாயகர் உத்தியோகபூர்வ அறிவிப்பு
ரணில் விக்ரமசிங்க பதில் ஜனாதிபதியாக பிரதம நீதியரசர் முன்னிலையில் பதவிப்பிரமாணம்
புதன்கிழமை புதிய ஜனாதிபதி தெரிவு; இன்று விசேட பாராளுமன்ற அமர்வு
கோட்டாபய ராஜபக்ஷ வெளியேறியதில் இந்தியாவுக்கு எந்த பங்கும் இல்லை
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இராஜினாமா; சபாநாயகர் உத்தியோகபூர்வ அறிவிப்பு
- பாராளுமன்றம் நாளை கூடும்; 7 நாட்களுக்குள் புதிய ஜனாதிபதி
- ஒத்துழைப்பு வழங்குமாறு அனைத்து தரப்பினரிடம் கோரிக்கை
- அதுவரை பதில் ஜனாதிபதியாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க செயற்படுவார்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
நேற்றையதினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இராஜினாமா கடிதம் தமக்கு கிடைத்துள்ளதாகவும் அதற்கமைய, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று (14) முதல் அமுலாகும் வகையில் சட்ட ரீதியாக தனது பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளதாக சபாநாயகர் உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.
இலங்கையின் அரசியலமைப்பின் 38 (1) (ஆ) பிரிவிற்கு அமைய, ஜனாதிபதி தனது இராஜினாமா கடிதத்தை கையளித்ததன் மூலம் தனது பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.
அதற்கமைய அரசியலமைப்பிற்கு அமைய, புதிய ஜனாதிபதியை தெரிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதுவரை பதில் ஜனாதிபதியாக பிரதமர் செயற்படுவார் எனவும் அறிவித்தார்.
1981ஆம் ஆண்டின் (2)ஆம் பிரிவின் ஜனாதிபதியை தெரிவு செய்யும் விசேட விதிமுறைகள் சட்டம் மற்றும் அரசியலமைப்பின் 40ஆவது பிரிவின் கீழ் புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்படுவார் எனவும், இச்செயன்முறையை மிக விரைவாகவும் மிகவும் வெற்றிகராமாகவும் முடிப்பது தனது நோக்கம் என அவர் தெரிவித்தார்.
இச்செயன்முறையை உச்ச ஜனநாயக ரீதியாகவும், வெளிப்படைத்தன்மையாகவும் மேற்கொள்ள உள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்த ஜனநாயக செயன்முறைக்கு உச்ச ஒத்துழைப்பை வழங்குமாறு, அனைத்து கட்சித் தலைவர்கள், அரச அதிகாரிகள், பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுப்பதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
உரிய பாராளுமன்ற விதிமுறைகளை பேணுவதற்காக, பாராளுமன்றத்திலுள்ள அனைத்து பிரதிநிதிகளும் சுதந்திரமாக தமது மனச்சாட்சிக்கு அமைய நடந்து கொள்வதற்காகவும், அதில் கலந்து கொள்வதற்கும் உரிய அமைதியான சூழ்நிலையை உருவாக்கித் தருமாறும், அவ்வாறான அமைதியான சூழ்நிலையில் அனைத்து பொறுப்புதாரிகளின் ஒத்துழைப்புடன், 7 நாட்கள் எனும் குறைந்த காலப் பகுதிக்குள், அதைன்து பொறுப்புதாரிகளின் பங்குபற்றுதலுடன் இச்செயன்முறையை நிறைவு செய்ய தாம் எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்தார்.
அந்த வகையில், நாளையதினம் (16) சனிக்கிழமை, பாராளுமன்றத்தை கூட்டவுள்ளதாகவும் அதில் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களையும் கலந்து கொள்ளுமாறும் அவர் இதன்போது வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சபாநாயகர் தலைமையில் விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம்
சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தலைமையில் விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் தற்போது நடைபெறுகின்றது.
இன்று மு.ப. 10 மணி முதல் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட கட்சித் தலைவர்களின் கூட்டம் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெறுவதாக பாராளுமன்ற தகவல் தொடர்பு திணைக்களம் அறிவித்துள்ளது.
புதிய ஜனாதிபதி தெரிவு, பிரதமர் பதவி, தொடர்பில் ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நன்றி தினகரன்
ரணில் விக்ரமசிங்க பதில் ஜனாதிபதியாக பிரதம நீதியரசர் முன்னிலையில் பதவிப்பிரமாணம்
பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பதில் ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
இன்று (14) பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் அவர் பதவிப்பிரமாணம் செய்து கொண்டதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்றைய தினம் (14) முதல் அமுலுக்கு வரும் வகையில் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக சபாநாயகர் இன்றைய தினம் (15) உத்தியோகபூர்வமாக அறிவித்ததைத் தொடர்ந்து குறித்த பதவிப்பிரமாணம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி தினகரன்
புதன்கிழமை புதிய ஜனாதிபதி தெரிவு; இன்று விசேட பாராளுமன்ற அமர்வு
ஜனாதிபதி பதவிக்கான வெற்றிடம் ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து புதிய ஜனாதிபதியை தெரிவு செய்யும் வாக்கெடுப்பினை எதிர்வரும் 20ஆம் திகதி புதன்கிழமை நடத்த கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்பு மற்றும் 1981ஆம் 2ஆவது இலக்கத்திற்கமைய ஜனாதிபதி தெரிவு செய்யும் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 4ஆவது உறுப்புரையின் பிரகாரம் பாராளுமன்றம் இன்று (16) காலை 10 மணிக்கு கூடவுள்ளது.
1981 ஆம் 2ஆவது இலக்க ஜனாதிபதி தெரிவு (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 4ஆவது உறுப்புரையின் பிரகாரம் ஜனாதிபதி பதவி வெற்றிடமாகியதை தொடர்ந்து மூன்று நாட்களுக்குள் பாராளுமன்றம் கூட்டப்பட வேண்டும்.
அதற்கமைய 5ஆவது உறுப்புரையின் பிரகாரம் ஜனாதிபதி பதவி வெற்றிடமாகியுள்ளது என்பதை பாராளுமன்ற செயலாளர் நாயகம் பாராளுமன்றத்திற்கு உத்தியோகப்பூர்வமாக அறிவிப்பார். நேற்று இடம்பெற்ற கட்சி தலைவர் கூட்டத்தில் முன்னர் தீர்மானித்ததற்கமைய எதிர்வரும் 20ஆம் திகதி வாக்கெடுப்பின் ஊடாக புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்படுவார் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன குறிப்பிட்டுள்ளார். அதற்கமைய எதிர்வரும் 19ஆம் திகதி வேட்பு மனுக்கல் கோரப்பட்டு,எதிர்வரும் 20ஆம் திகதி (செவ்வாய்க்கிழமை) வாக்கெடுப்பின் ஊடாக புதிய ஜனாதிபதி தெரிவு இடம்பெறும். ஜனநாயக வரைபிற்குள் சபை நடவடிக்கைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படுத்தாத வகையில் சகல உறுப்பினர்களும் செயற்பட வேண்டும் என சபாநாயகர் கட்சி தலைவர்களிடம் வலியுறுத்தியுள்ளார். நன்றி தினகரன்
கோட்டாபய ராஜபக்ஷ வெளியேறியதில் இந்தியாவுக்கு எந்த பங்கும் இல்லை
இந்திய வெளியுறவு பேச்சாளர் அரிந்தம் பாக்சி வலியுறுத்து
கோட்டாபய ராஜபக்சவின் தலைமைக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி செய்த பின்னர் நாட்டிலிருந்து அவர் வெளியேறியதில் இந்தியாவுக்கு எந்தப் பங்கும் இல்லை என இந்திய வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் அரிந்தம் பாக்சி மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
புதுடில்லியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவிக்கையில், இலங்கை மக்கள், ஜனநாயக வழிமுறைகள் மற்றும் அரசியலமைப்பு மூலம் முன்னேற்றத்திற்கான அபிலாஷைகளை நனவாக்க முற்படும்போது இந்தியா அவர்களுடன் தொடர்ந்திருக்கும் என்றும் இதன்போது தெளிவுப்படுத்தியுள்ளார்.
இந்த ஆண்டு மட்டும் 3.8 பில்லியன் டொலர் உதவியை, இந்தியா, இலங்கைக்கு வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை ஒரு முக்கியமான அண்டை நாடு என்றும், அங்கு உருவாகி வரும் சூழ்நிலையை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் தெரிவித்த அவர், இலங்கையில் தொடர்புடைய அனைத்து பங்குதாரர்களுடனும் புதுடெல்லி தொடர்ந்து தொடர்பில் இருந்து வருவதாகவும் தெரிவித்தார். நன்றி தினகரன்
No comments:
Post a Comment