முருகபூபதி அண்ணனை நான் முதன் முதலாக சந்தித்த போது அவருக்கு வயது 35, எனது வயது 25. அச்சந்திப்பு நடந்தது 1986 ஆம் ஆண்டின் ஆரம்பப் பகுதி. வீரகேசரி பத்திரிகை அலுவலகத்தில் நான் இணைந்து கொண்ட போது, முதலில் பயிற்சி பெறுவதற்காக மூன்று மாத காலம் ஒப்புநோக்காளர் பிரிவுக்கு நியமிக்கப்பட்டேன். முருகபூபதி அண்ணன் அப்போது ஆசிரிய பீடத்தில் பணியிலிருந்தார். பின்னர் ஆசிரிய பீடத்துக்கு வந்து விட்டேன்.
ஆசிரிய பீடமும், ஒப்புநோக்காளர் பிரிவும் அருகருகே அமைந்திருந்தன.
அவையிரண்டும் மிக நெருக்கமான பிரிவுகள் மாத்திரமன்றி அவையிரண்டில் பணியாற்றியோரும்
கூட நெருக்கமான நட்புறவுடனேயே இருந்தனர்.
மட்டக்களப்பில் யுத்தசூழல் நிலவிய காலத்தில் சுமார் ஐந்து
வருடங்களாக எங்கும் வெளியேறாமல் உயிரச்சத்தில் வாழ்ந்த பின்னர், அவசரமாகக் கொழும்பு வந்து வீரகேசரியில் முதன் முதலாக பணியில் இணைந்து கொண்ட போது, என்னைக் கவர்ந்த முதலாவது மனிதராக அண்ணன் முருகபூபதி இருந்தார். அதற்கு இரு காரணங்கள் இருந்தன.
அவரது கனிவான பேச்சு
முதலாவது காரணம். அவரது வசீகரத் தோற்றம் இரண்டாவது காரணம். வெள்ளை வெளேரென்ற
தோற்றம், எப்போதும் நட்புறவான புன்னகை
கலந்த முகம்,
சுறுசுறுப்பாகவே
எந்நேரமும் இயங்கிக் கொண்டிருக்கும் தனித்துவம்.
இவ்வாறெல்லாம் அவரைப் பற்றிச்
சொல்வதற்கு நிறைய விடயங்கள் உள்ளன. அவர் எவருடனும் முரண்பட்டதாகவோ, கடுமையான சொல் பயன்படுத்தியதாகவோ
எனக்கு நினைவில்லை.
அன்றைய பிரபலமான பத்திரிகைக்குள் கடமைக்குச் சென்ற வேளையில், எனக்குள் சங்கோஜமும், தயக்கமும், அச்சமும் அதிகம் குடிகொண்டிருந்தன. 'இத்தனை பெரிய பத்திரிகைக்கு நான் தகுதியானவனா?' என்ற வினாவும் எனக்குள் இருந்தது.
அது ஒரு பிற்பகல் நேரம்...வீரகேசரியை மாத்திரமன்றி மித்திரன்
நாளிதழையும் அச்சுக்கு அனுப்ப வேண்டிய இறுதித் தருணத்தில் அலுவலகம் பரபரப்பாக இருந்தது.
ஒப்புநோக்காளர் பிரிவில்
நான் கடமையில் இருந்த போது முருகபூபதி அவர்கள் அங்கே ஓடோடி வந்தார். நாகத்தகட்டில்
இருந்து வெண்மைக் கடதாசியில் பதிக்கப்பட்ட படமொன்று அவரிடம் இருந்தது.
இளம்பெண்ணின் படம் அது. அடுத்த நாள் மித்திரனின் முன்பக்கத்தில் வரவேண்டிய
பெண்ணின் எழில் தோற்றம். அப்படத்தின் அடியில் கவிதைப் பாணியில் இரு வரிகள்
எழுதப்படுவதும் வழமை.
அவர் வந்த வேகத்தில்
என்னிடமே அப்படத்தை நீட்டினார். எனக்குள் ஒரு திகைப்பு!
நிமிர்ந்து அவரைப்
பார்த்தேன்.
"இப்படத்துக்கு இரு வரிகள்
எழுதித் தாருங்கள்" என்றார் முருகபூபதி.
முகத்துக்கு முக்காடு இடப்பட்ட அழகிய பெண்ணின் படம் அது.
எனக்குள் ஒரு வேகம் எவ்வாறு வந்ததென்று தெரியவில்லை. படத்தை ஒரு கணம் பார்த்து விட்டு, ஒரே கணத்தில் நான் எழுதிய வரி முப்பத்தாறு வருடங்கள் கடந்த பின்னரும் எனக்கு நினைவிருக்கின்றது.
'முக்காட்டு முகிலுக்குள்
மூழ்கி விட்ட முழுநிலவே!'
இதுதான் நான் எழுதிய வரி.
அவர் என்ன நினைத்தாரோ
தெரியவில்லை.
" உங்கள் பெயர் என்ன?" என்று கேட்டார்.
"பாண்டியன்" என்றேன்.
"கிண்ணையடி பாண்டியன் என்று
ஒருவர் எங்களுக்கு சிறுகதை எழுதுகின்றார். மட்டக்களப்பில் பாண்டியன் அதிகம்
உள்ளனரோ?"
என்றார் அண்ணன்
முருகபூபதி.
"கிண்ணையடி பாண்டியன்
நானேதான்" என்றேன்.
அவர் ஆச்சரியத்துள்
மூழ்கினார். அச்சந்தேகத்தை தெளிவுபடுத்த அவருக்கு சில நிமிட நேரம் சென்றது.
"நான் நினைத்தேன் கிண்ணையடி
பாண்டியனுக்கு 50
வயதாவது
இருக்குமென்று" என்றார் அவர்.
அந்த வார்த்தையை
எனக்குக் கிடைத்த அங்கீகாரமாகவே கருதினேன்.
நான் அங்கு இணைவதற்கு
முன்னரேயே வீரகேசரி வாரவெளியீட்டில் எனது சில சிறுகதைகள் பிரசுரமாகியிருந்தன.
சிறுகதைகளை தெரிவு செய்யும் பொறுப்பு அவரிடமே ஒப்படைக்கப்பட்டிருந்தது.
அன்றிலிருந்து என்னுடன்
நெருக்கமான நட்புறவுடன் முருகபூபதி பழகினார். சகோதரன் போன்று வாஞ்சையுடன்
நேசித்தார். சில காலம்தான் அவருடன் ஒன்றாகப் பணியாற்ற எனக்கு வாய்ப்புக்
கிடைத்தது. அவர் வெளிநாடு சென்ற பின்னர் வீரகேசரி ஆசிரிய பீடத்தில் ஒரு
வெற்றிடத்தை என்னால் உணர முடிந்தது.கலகலப்பும், நட்புறவும் கொண்ட ஒரு பத்திரிகையாளர்
இல்லாத வெற்றிடம் அது.
பல வருட கால இடைவெளியின்
பின்னர் நவீன தொடர்பாடலின் வாயிலாக அண்ணன் முருகபூபதியுடன் மீண்டும் தொடர்பு
ஏற்பட்டமை மகிழ்ச்சி தருகின்றது. அண்ணனுக்கு இம்மாதம் ஜூலை 13 இல்
அகவை 71. அவரது மகிழ்வான வாழ்வு என்றும் தொடரட்டும் என்று
வாழ்த்துகின்றேன். எனது இந்தப் படைப்பு அண்ணனுக்கான சமர்ப்பணம்!
vsabapandiyan@gmail.com
No comments:
Post a Comment