எழுத்தும் வாழ்க்கையும் ( இரண்டாம் பாகம் ) அங்கம் – 22 தமிழகப் பயணத்தில் சந்தித்த கலை, இலக்கிய ஆளுமைகள் ! தொடர்பாடல் உருவாக்கிய இலக்கியப் பெருவட்டம் ! ! முருகபூபதி


தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தையும் ஆரம்பித்து  தாமரை இதழையும்   தொடக்கியவர்  தோழர் ஜீவானந்தம்.  ஒரு காலத்தில் தலைமறைவாக இலங்கை வந்து தங்கியிருந்தவர். இவரது அறிமுகத்தின் பின்னர்தான் யாழ்ப்பாணத்தில்  டொமினிக் என்பவர் டொமினிக்ஜீவா என்று தனது பெயரை மாற்றினார்.  காலப்போக்கில் தாமரை இதழின் சாயலில் மல்லிகை இதழையும் ஆரம்பித்து, மல்லிகை ஜீவா எனவும் அறியப்பட்டார்.

மகாகவி பாரதியின் புகழை இலங்கையில் பரப்பிய முன்னோடியாகவும் திகழ்ந்தவர்தான் ஜீவானந்தம்.  

1990 ஆம் ஆண்டு ஏப்ரில் மாதம் கலை இலக்கியப் பெருமன்றத்தின்


மாநாடு சென்னையில் சோவியத் கலாசார நிலையத்தில் ஏற்பாடாகியிருந்தது.

எமது இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சர்வதேச செயலாளர், நண்பர் ராஜஶ்ரீகாந்தன் அம்மாநாட்டுக்கு செல்லுமாறு எனக்கு அழைப்பு அனுப்பியிருந்தார்.

இலங்கையிலிருந்து மல்லிகை ஜீவாவும் வரவிருப்பதாக தொலைபேசி ஊடாகவும் சொன்னார். அவ்வேளையில் மல்லிகை 25 ஆவது ஆண்டு மலர் வெளியாகியிருந்தது. அந்த மலரை தமிழகத்தில் அறிமுகப்படுத்தவேண்டிய தேவையும் இருந்தது.


நான் அந்த ஆண்டு மார்ச் மாதமே சென்னைக்கு சிங்கப்பூர் வழியாக புறப்பட்டேன்.  சட்டத்தரணி ரவீந்திரன் அண்ணன், குடிவரவுத் திணைக்களத்திடம்  ஒரு மாத காலம்
Re-entry visa  அனுமதி பெற்றுத்தந்தார்.

சிங்கப்பூரில் பொறியிலாளர் சற்குணராஜா தம்பதியர்  வீட்டில் தங்கினேன்.  இவர்கள் பிற்காலத்தில் எனது உறவினர்களானது தனிக்கதை. விதி யாரையும் கைவிடாது. உடன்வரும். அல்லது வீட்டுத்துரத்தும். அதுதான் விதி.

திருமதி பத்மினி சற்குணராஜாவின் தம்பி விக்னேஸ்வரன் அப்போது சென்னை பச்சையப்பன் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தார்.  அத்துடன் தி.நகரில் கண்ணதாசன் பதிப்பகத்தில் பகுதி நேரமாக பணியாற்றினார்.  1984 ஆம் ஆண்டும் நான் சென்னை சென்றபோது விக்னேஸ்வரனுடைய தொடர்பினால்தான் கவியரசு கண்ணதாசனின் குடும்பத்தினருடன் எனக்கு நட்புறவு ஏற்பட்டது.


எனது சென்னை வருகைபற்றி மெல்பனிலிருந்து விக்னேஸ்வரனுக்கு கடிதம் எழுதியிருந்தேன்.  அவர் ஏற்கனவே தென்றல் விடு தூது ( கவிதை ) பலரது பார்வையில் கண்ணதாசன் ( கட்டுரைத் தொகுப்பு ) என்பனவற்றை எழுதியவர்.  அத்துடன்  தமிழமுது என்ற இலக்கிய இதழின் ஆசிரியர் குழுவிலும் அங்கம் வகித்திருந்தார்.

சென்னையில் பல தமிழ்த்தேசியப்பற்றாளர்களுடனும் நட்புறவுகொண்டிருந்தவர். கண்ணதாசனின் மகனும் நடிகரும் திரைப்பட இயக்குநருமான கலைவாணன் கண்ணதாசனுடனும் நெருக்கமான நட்புறவுகொண்டிருந்தார்.

கலைவாணன் கண்ணதாசன் கண்சிமிட்டும் நேரம், மிஸ்டர் கார்த்திக்


முதலான திரைப்படங்களை முன்னர் இயக்கியவர். அத்துடன் பின்னாளில் தற்கொலை செய்துகொண்ட ஷோபாவுடன் அன்புள்ள அத்தான் என்ற திரைப்படத்திலும் நடித்திருப்பவர்.

விக்னேஸ்வரன், கலைவாணன் கண்ணதாசனின் ஒரு சில படங்களில் துணை இயக்குநராகவும் பணியாற்றியிருந்தார். அவரை எங்கள் ஊரில் விக்கி என அழைப்போம்.


விக்கியின் அக்கா பத்மினி சற்குணராஜாவும் இலக்கிய ஆர்வம் மிக்கவர்.  இவரும் கவியரசர் மற்றும் ஓவியர் மணியம் செல்வன் ( ம.செ. ) ஆகியோரின் குடும்ப சிநேகிதி. இவர் எழுதிய சமையற்கலை தொடர்பான புத்தகம் ஒன்றையும் கண்ணதாசன் பதிப்பகம் முன்னர் வெளியிட்டுள்ளது.

சிங்கப்பூரில் வெளியான தமிழ்முரசு பத்திரிகையிலும் பணியாற்றச்சென்று பாதியில் அதனை கைவிட்டவர்.  நான் சிங்கப்பூரில் அவரது வீட்டுக்குச்சென்றதும் அங்கே நான் சந்திக்கவேண்டியவர்களைப்பற்றிச் சொன்னார்.

அங்கிருந்த சில எழுத்தாளர்களுக்கும் அறிமுகப்படுத்தினார்.


அவர்களில் கண்ணபிரான், ஜே. எம். சாலி , தமிழ் முரசு ஆசிரியர் திருநாவுக்கரசு ஆகியோர் குறிப்பிடத்தகுந்தவர்கள்.

பத்மினியின் கணவர் சற்குணராஜா, என்னை தமது காரில் சிங்கப்பூருக்கு பல இடங்களுக்கும் அழைத்துச்சென்றார்.

சிங்கப்பூர் பொது நூல் நிலையம் தென்கிழக்காசியாவிலேயே பிரபல்யமானது. பின்னாளில் எனது நண்பர்கள் புஷ்பலதா நாயுடு, ( கனடா ) மூர்த்தி ஆகியோரும் இங்கு பணியாற்றியவர்கள்.

1990 ஆம் ஆண்டு அந்த நூலகத்திற்கு எனது சமாந்தரங்கள் கதைத் தொகுதியையும் சோவியத் பயணக்கதை சமதர்மப் பூங்காவில் நூலையும் கொடுத்தேன்.


கதைத் தொகுதியை ஏற்றுக்கொண்ட அந்த நூலகம், சமதர்மப்பூங்காவை மாத்திரம் ஏற்கத் தயங்கியது. எனினும், அதனை வாங்கி, தாம் நூலகத்தின் பொறுப்பாளர்களுடைய பார்வைக்கும் மதிப்பீட்டுக்கும் காண்பித்து, அவர்கள் அனுமதித்தால் மாத்திரமே அங்கு வைக்க முடியும் என்றனர்.

அவர்களின் பதில் எனக்கு ஆச்சரியத்தை தந்தது.  சோஷலிஸம்,


கம்யூனிஸம், மார்க்ஸிஸம் சிங்கப்பூருக்கு அவசியமற்ற இஸங்கள்.

ஆனால், காலம் மாறியது. தற்போது அங்கே அந்த இஸங்கள் சார்ந்த நூல்கள் இடம்பெறுகின்றன. ஆனால், வெளியே படிக்க எடுத்துச்செல்ல முடியாது.  அரசியல் ஆய்வில் ஈடுபடும் மாணவர்கள் உசாத்துணைக்கு மாத்திரம் அங்கே வந்து அமர்ந்து படிக்கலாம்.

காலம் மாறியது. சோவியத் ஒன்றியமும் சிதறியது. இன்று உக்ரேய்ன் - -  ருஷ்யா மோதல் தணியாமல் தொடருகிறது. இதுவும் விதிதானா..? அங்கும் விதி விளையாடியதா..? விரட்டியதா..?

சென்னை விமான நிலையத்தில் குடிவரவு அதிகாரி ஒருவர், எனது


கடவுச்சீட்டையும் நான் பெற்றிருந்த விசாவையும் காண்பிக்க மேலதிகாரியிடம் சென்றார்.  எனது கடவுச்சீட்டு இலங்கைக்குரியது.  அதில் எனது தொழில் பத்திரிகையாளர் என இருந்தது. விசா, அவுஸ்திரேலியாவில் பெறப்பட்டிருந்தது. அதனால், என்னை வெளியே செல்ல  அனுமதிக்க அவர் சற்று தயக்கம் காண்பித்தார்.

என்னை  ஒரு எழுத்தாளன்  என்றும்  அறிமுகப்படுத்தவேண்டிய தேவையும் இருந்தது. சமாந்தரங்கள் நூலையும் காண்பித்தேன். அது தமிழ்நாடு தமிழ்ப்புத்தகாலயத்தின் வெளியீடு.

சென்னையில் யாரைப்பார்க்க வந்துள்ளீர்கள் என்ற கேள்வியும் எழுந்தது.  கவியரசர் கண்ணதாசன் குடும்பம் என்று விக்கி, வெளியே நிற்பார் என்ற தைரியத்தில் சொன்னேன்.  அந்த அதிகாரிக்கு அக்குடும்பத்தை சேர்ந்தவர்களை நன்கு தெரிந்திருந்தது. புன்சிரிப்புடன் வழியனுப்பிவைத்தார்.

சென்னை விமான நிலையத்திற்கு விக்னேஸ்ரன் வந்து என்னை அழைத்துச்சென்றார். 


நுங்கம்பாக்கத்தில் முத்தையப்பா வீதியில்  அவர் தங்கியிருந்த வீட்டில் நின்று, எனது குடும்பமும் மல்லிகை ஜீவாவும் வரும்போது அவர்களை தங்கவைப்பதற்கு இருப்பிடம் தேடினேன்.

கோடம்பாக்கம் உமாலொட்ஜில் மூன்று அறைகள் கிடைத்தன.  இங்குதான் சில  திரையுலகத்தினர் அடிக்கடி வந்து தங்கியிருந்தனர். அவ்வேளையில் தயாராகிக்கொண்டிருந்த அர்ஜுன் நடித்த ஆத்த நான் பாசாயிட்டேன் திரைப்பட தயாரிப்புக்குழுவினரும் அடுத்தடுத்த அறைகளில் தங்கியிருந்தனர்.

கலைவாணன் கண்ணதாசன் இயக்கத்தில் வா அருகில் வா என்ற திரைப்படத்திற்கான தயாரிப்பு வேலைகள் ஆரம்பமாகியிருந்தன. அதற்காக நுங்கம் பாக்கத்தில் ஒரு தற்காலிக அலுவலகமும் திறந்திருந்தனர். விக்கியும் அந்த திரைப்படத்தில்  ஓரு பாத்திரம் ஏற்று நடித்தார்.  பாடலும் இயற்றியிருந்தார்.  ரம்யா கிருஷ்ணன், எஸ். எஸ். சந்திரன், ராதா ரவி, ராஜா, வைஷ்ணவி ஆகியோர் நடித்த திகில் மர்மங்கள் நிறைந்த திரைப்படம்.  

விக்கி, நடிகர்களுக்கு வசனம் சொல்லிக்கொடுக்கும் வேலையையும் இந்தப்படத்தில் கவனித்தார். அவருக்கு மார்ச் மாதம் 24 ஆம் திகதி பிறந்த தினம்.  அதனை முன்னிட்டு தான் தங்கியிருந்த வீட்டில் பெரிய சமையலே செய்தார். நானும் அவருக்கு உதவினேன்.

அந்தத் திரைப்பட தயாரிப்புக்குழுவினருக்கு அவர்களின் அலுவலக கட்டிடத்திலேயே அந்த பிறந்த தின விருந்தை வழங்குவதற்கு ஏற்பாடு செய்திருந்தார். அவ்வேளையில் கவியரசரின் மனைவி பார்வதி அம்மா உடல்நலம் குன்றி சென்னை விஜயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.  அவரை நன்கு அறிவேன். 1984 ஆம் ஆண்டு சென்னை சென்ற சமயம் கண்ணதாசன் சாலையில் அவர்களின் வீட்டில் சந்தித்து விரிவான நேர்காணலையும் வீரகேசரி வாரவெளியீட்டில் எழுதியிருக்கின்றேன்.

அப்போது எனக்கு இரண்டு பெண் குழந்தைகள்.  அடுத்து எனக்கு ஆண்குழந்தைதான் பிறக்கும் என்று பார்வதி அம்மா ஆரூடம் கூறியிருந்தவாறு கவியரசர் பிறந்த ஜூன் 24 ஆம் திகதியே 1987 ஆம் ஆண்டு எனக்கு மகன் முகுந்தன் பிறந்தான். அவனையும் குடும்பத்தையும் அம்மாவையும் பார்க்கவேண்டும் என்பதற்காகவே அன்று  தமிழ்நாடு பயணத்தையும் மேற்கொண்டிருந்தேன்.

விஜயா மருத்துவமனையில் பார்வதி அம்மாவிடம்,  மகனும் வரவிருக்கும் செய்தி சொன்னேன்.  மலர்ந்த முகத்துடன், வந்ததும் அழைத்து வா தம்பி என்றார்கள்.

 வா அருகில் வா திரைப்பட குழுவினருக்கு விக்கியின் பிறந்த தின விருந்து வழங்கிக்கொண்டிருக்கும்போது, பார்வதி அம்மா இறந்துவிட்டார்கள் என்ற அதிர்ச்சியான செய்தி இடிபோல் வந்து இறங்கியது.

தாமதிக்காமல் கலைவாணனின் காரில் புறப்பட்டோம்.  அன்று   மதியம் முதல் கண்ணதாசன் இல்லத்திற்கு திரையுலக மற்றும் அரசியல் உலக பிரமுகர்கள் படையெடுத்துக்கொண்டிருந்தனர்.  அன்று இரவு எனது குடும்பத்தினரும் மல்லிகை ஜீவாவும் விமான நிலையம் வருகிறார்கள்.  நான் பதட்டத்தில் இருந்தேன்.

இயக்குநர் சந்தான பாரதி, விமானம் வரும் நேரத்தை அறிந்து சொன்னார். கவியரசரின் புதல்வர்கள்  காந்தியும்  கலைவாணனும்,  முதலில் குடும்பத்தைப் பார்க்கச் சொன்னார்கள். அவர்கள் ஏற்பாடு செய்து தந்த வாகனத்தில் விமான நிலையம் சென்றேன்.

பார்வதி அம்மா, எனது குழந்தைகளின் முகத்தைப் பார்க்காமலே விடைபெற்றது அப்பொழுது எனக்கு பெரிய சோகமாகவே இருந்தது. 

குடும்பத்தினரையும் மல்லிகை ஜீவாவையும் உமா லொட்ஜில் தங்கவைத்தேன். மறுநாள் அனைவரும் பார்வதி அம்மாவின் இறுதி நிகழ்வுக்கு புறப்படலாம் என்று அம்மாவிடம் சொன்னேன்.

அம்மா மறுத்தார்கள். அதற்கு  அம்மா சொன்ன காரணம். முதல் முதலில் மகனை பார்க்கிறாய்.  அவனுடன் முதலில் ஏதாவது ஒரு கோயிலுக்குப்போய்வந்த பின்னர், எங்கு வேண்டுமானாலும் அழைத்துச்செல் என்று கட்டளை இட்டார்கள்.

அதற்குக்  கட்டுப்பட்டு,  மறுநாள் காலையில்  நானும் மல்லிகை ஜீவாவும் மாத்திரம்  கண்ணதாசன் இல்லம் சென்றோம். 

அங்கே குமரி அனந்தன், பழ நெடுமாறன் உட்பட அரசியல் பிரமுகர்களும் பஞ்சு அருணாசலம் உட்பட பல திரையுலகப் பிரமுகர்களும் வந்திருந்தனர்.

அத்துடன் நடிகர் திலகம் சிவாஜிகணேசனும் தமது பாரியார் கமலாவுடன் வந்திருந்தார்.

அங்கிருந்து திரும்பிய பின்னர் அம்மாவிடம் அங்கே வந்திருந்தவர்களின் பெயர்களைச்சென்னேன்.

சிவாஜியும் வந்திருந்தார…? இப்படித் தெரிந்திருந்தால் தானும் வந்திருப்பேனே என்றார்.  சினிமா எத்தகைய வலிமையான ஊடகம் பாருங்கள்.

அதன்பின்னர் ஜீவாவை அடையாறில் இருந்த இலக்கிய ஆர்வலரும் எம்மிருவரதும் நண்பருமான ரங்கநாதன் வீட்டுக்கு அனுப்பிவிட்டு,  எனது குடும்பத்தினரை சென்னை கபாலீஸ்வரர் கோயிலுக்கு தரிசனத்திற்கு அழைத்துச்சென்றேன்.

சில நாட்களின் பின்னர் கண்ணதாசன் இல்லத்திற்கும் மற்றும் சில எழுத்தாளர்கள், கலைஞர்கள் இல்லத்திற்கும் அழைத்துச்சென்றேன்.

அந்த மாதம் தீபம் பார்த்தசாரதியின் பிரபல நாவல் குறிஞ்சி மலர் தொலைக்காட்சித் தொடராக தயாராகிக்கொண்டிருந்தது. அதில்  கதாநாயகனாக நடித்தவர்தான் தற்போதைய தமிழக முதல்வர் ஸ்டாலின். நடிகை தேவி ஶ்ரீ கதாநாயகியாக நடித்தார். அதன் படப்பிடிப்பு தமிழ்ப்புத்தகாலயத்திலும்  நடக்கவிருந்தது.

அதனை நடத்திக்கொண்டிருந்த அகிலன் கண்ணன்தான் எனது சமாந்தரங்கள் நூலையும் பதிப்பித்து வெளியிட்டவர்.  எனது குடும்பத்தினர் சென்னைக்கு வருமுன்னர் அகிலன் கண்ணன் இல்லத்திற்கும் சென்று,  குடும்பத்தினரை தங்க வைப்பதற்கு வீடு தேடினேன்.

மூத்த எழுத்தாளர் அகிலனின் புதல்வர் கண்ணன்,  மூத்த எழுத்தாளரும் பல பிரபல்யமான புத்தகங்களை வெளியிட்டவருமான கண. முத்தையாவின் புதல்வி மீனாவை மணம் முடித்திருக்கிறார்.

கண. முத்தையாதான் இராகுல சங்கிருத்தியானின் புகழ்பெற்ற  வால்கா முதல் கங்கை வரை நூலை மொழிபெயர்த்தவர்.  இந்தப்பதிவில் அவரையும் அகிலனின் பேரக்குழந்தைகளையும் கண்ணன் குடும்பத்தினரையும் பார்க்கலாம்.

(  தொடரும் )  

 

No comments: