உலகச் செய்திகள்

இந்தியாவில் தொழில் தொடங்கும் பிரெஞ்சு விமான தயாரிப்பு நிறுவனம்

சூடுபிடிக்கிறது பிரிட்டனின் புதிய பிரதமருக்கான போட்டி

உலகளவில் விமானங்களின் கட்டணங்கள் அதிகரிக்கும்

ஈரானை சமாளிக்க இஸ்ரேலுடன் அமெரிக்கா பாதுகாப்பு ஒப்பந்தம்

பாகிஸ்தானில் அதிகரித்துவரும் பொருளாதார நெருக்கடி

உக்ரைன் மீதான ரஷ்ய போர்: உலக பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல்


இந்தியாவில் தொழில் தொடங்கும் பிரெஞ்சு விமான தயாரிப்பு நிறுவனம்

உயர் பிரெஞ்சு அதிகாரியுடன் ராஜ்நாத்சிங் பேச்சு

பிரெஞ்சு விமான இயந்திரம் தயாரிப்பு நிறுவனம் ஒன்று இந்தியாவில் விமான இயந்திர பராமரிப்பு பழுதுபார்ப்பு தொழிற்சாலைகளை நிறுவும் வகையில் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளது.

பிரான்சின் புகழ்பெற்ற விமான இயந்திர தயாரிப்பாளரான சப்ரான் குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான ஒலிவியர் அன்றீஸ் புதுடில்லியில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கை அவரது அலுவலகத்தில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இதன்போது ஹைதராபாத் மற்றும் பெங்களுருவில் இரண்டு தொழிற்சாலைகளை நிறுவுவது தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டது. ஹைதராபாத் தொழிற்சாலையில் நவீன விமான பயிற்சி பெற்றவர்களுக்கு இங்கே வேலை வாய்ப்புகள் கிட்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'இந்தியாவில் தயாரிப்பு, வெளிநாடுகளுக்குமான தயாரிப்பு' என்ற இந்திய அரசின் கொள்கைக்கு அமைவாக இந்தியாவுடன் மேலும் கூட்டுத் தயாரிப்பு முயற்சிகளில் ஈடுபடுமாறு இப்பேச்சுவார்த்தையின் போது பிரெஞ்சு நிறுவனத்துக்கு இந்திய பாதுகாப்பு அமைச்சர் அழைப்பு விடுத்தார்.   நன்றி தினகரன் 






சூடுபிடிக்கிறது பிரிட்டனின் புதிய பிரதமருக்கான போட்டி

வேட்பாளர்கள் 8 ஆக குறைந்தது

பிரிட்டனில்  புதிய பிரதமரைத் தேடும் வேட்டை சூடுபிடித்துள்ளது. எட்டுப் பேர் முதல் சுற்றைக் கடந்து வந்துள்ளனர்.

முக்கிய வேட்பாளராகக் கருதப்பட்ட கிரான்ட் ஷாப்ஸ் ஒதுங்கிக்கொண்டார். முன்னாள் சுகாதார அமைச்சர் சாஜித் ஜாவித், ரெஹ்மான் கிஸ்தி ஆகியோரும் போட்டியில் இருந்து விலகிக்கொண்டனர்.

போட்டியில் உள்ள அனைவரும் கன்சர்வேடிவ் கட்சியின் 20 உறுப்பினர்களின் ஆதரவை பெற்றுள்ளனர். இதனை தொடர்ந்து அவர்கள் முதல் சுற்று வாக்கெடுப்பில் போட்டியிடுவார்கள்.ளியேற்றப்படுவார்.

முன்னாள் நிதி அமைச்சர் ரிஷி சுனாக் அதிகச் செல்வாக்கோடு உள்ளார். பிரதமர் போரிஸ் ஜோன்சன், பதவி விலகுவதில் முக்கியப் பங்கு வகித்தவர் அவர். ரிஷி சுனாக் சர்ச்சைக்குரிய தலைவர். வரியை உயர்த்தியவர் என்று குறைகூறப்பட்டவராவார்.

ஆனால் பதவிக்கு வந்தால் புதிய கொள்கைகளை அறிவிக்கும் முன்னர், மக்களோடு பேசப்போவதாக இப்போது அவர் கூறுகிறார்.   நன்றி தினகரன் 

 




உலகளவில் விமானங்களின் கட்டணங்கள் அதிகரிக்கும்

சர்வதேச விமான போக்குவரத்து சங்கம்

சர்வதேச அளவில் எரிபொருள் விலை உயர்வால், விமான டிக்கெட் விலை கணிசமாக உயரும் என சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கம் எச்சரித்துள்ளது.

சங்கத்தின் தலைமை இயக்குனர் வில்லி வால்ஷ், உக்ரைன்- ரஷ்யா நெருக்கடி இன்னும் முடிவுக்கு வராததும் இதற்கு ஒரு காரணம் எனச் சுட்டிக்காட்டுகிறார்.

சில மாதங்களில் வடக்கு அரைக்கோளத்தில் குளிர்காலம் வருவதால், விமான டிக்கெட் விலை கணிசமாக அதிகரிக்கும் என்று அவர் குறிப்பிடுகிறார்.

இதனிடையே, உலகின் பல நாடுகளிலுள்ள விமான நிலையங்களில் விமானங்கள் இரத்துசெய்யப்படுவது அதிகரிக்கும் என்று வில்லி வால்ஷ் கணித்துள்ளார். போதிய எரிபொருளைக் கொள்வனவு செய்ய முடியாமையே இதற்கான காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.   நன்றி தினகரன் 






ஈரானை சமாளிக்க இஸ்ரேலுடன் அமெரிக்கா பாதுகாப்பு ஒப்பந்தம்

அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவை விரிவுபடுத்த கூட்டு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும் இஸ்ரேலின் தற்காலிகப் பிரதமர் யாயர் லிப்பிட்டும் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

மத்திய கிழக்கின் நிலைத்தன்மையில் பாதிப்பை ஏற்படுத்த ஈரான் எடுக்கும் முயற்சிகளை முறியடிப்பது இந்த ஏற்பாட்டின் இலக்குகளில் ஒன்று. ஈரானை என்றுமே அணுவாயுதங்களை வைத்திருக்காமல் பார்த்துக்கொள்வதற்கான குறிப்பு ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ளதாகவும் பைடன் தரப்பு அதிகாரி ஒருவர் கூறினார்.

பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் ஈரானைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு பைடன் மீது நெருக்குதல் இருந்து வருகிறது. அதைத் தொடர்ந்து தற்காப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது.

மேலும், தேசிய அளவில் தனது ஆற்றலை முழுமையாகப் பயன்படுத்தி ஈரான் அணுவாயுதங்கள் வைத்திருப்பதைத் தவிர்க்க அமெரிக்கா தயாராய் இருப்பதாக பைடன் குறிப்பிட்டார்.

இஸ்ரேலுக்குத் தாம் மேற்கொண்ட அதிகாரத்துவப் பயணத்தின் இரண்டாம் நாளான கடந்த வியாழனன்று அவர் லிப்பிட்டுடன் இணைந்து இந்த வாக்குறுதியை அளித்தார்.

ஈரானின் அணுவாயுதத் திட்டத்தை மிகப் பெரிய மிரட்டலாக இஸ்ரேல் கருதுகிறது.

தமது மத்திய கிழக்குப் பயணத்தின் அடுத்த அங்கமாக பைடன் நேற்று சவூதி அரேபியா பயணித்தார்.

அவர், இஸ்ரேலிலிருந்து நேரடியாக சவூதி அரேபியாவுக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்ட முதல் அமெரிக்க ஜனாதிபதியாக பதிவானார்.   நன்றி தினகரன் 






பாகிஸ்தானில் அதிகரித்துவரும் பொருளாதார நெருக்கடி

பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசமடைந்து வருவதால் அது சமூக அமைதியை குலைக்கக் கூடுமெனவும் அரசின் முன்னுக்குப் பின் முரணான கொள்கைகள் காரணமாக முதலீட்டாளர்கள் அதை தமக்கு சாதகமற்றதாகக் கொள்ள முடியுமெனவும் வர்த்தக சமூகம் கருத்து தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானுக்கென தொடர்ச்சியான பொருளாதாரக் கொள்கைகள் கிடையாது. அரசிடம் அரசியலுக்கென தனியான கொள்கைகளும் பொருளாதாரத்துக்கென தனியான கொள்கைகளும் இருக்க வேண்டும். அவ்வாறு அமையாவிட்டால் உள்ளுர் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களை அது பாதிக்கவே செய்யும் என்று பாகிஸ்தான் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்தின் முன்னாள் உப தலைவர் சாதிக் ஃபையாஸ் மாகூன் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் அரசு வங்கியின் வைப்புகளின் மீதான வட்டி 7.5 சதவீதமாக 2021இல் காணப்பட்டதாகவும் இது பத்து மாதங்களுக்கும் குறைவான காலப்பகுதியில் 15 சதவீதமான அதிகரிப்பைக் காட்டியிருப்பதாகவும் 'டோன்' பத்திரிகை தகவல் வெளியிட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் எப்போதுமே உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வட்டி மற்றும் நாணயமாற்று வீதங்களிலேயே கரிசனையாக இருப்பார்கள். கட்டுப்பாடின்றி அவை ஏற்ற இறக்கம் காணுமானால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பாகிஸ்தானைத் தவிர்க்கவே செய்வார்கள் என மாகூன் குறிப்பிட்டிருப்பதாக அப்பத்திரிகை மேலும் சுட்டிக்காட்டியிருந்தது.

'முதலீட்டாளர்கள் டொலர்களில் முதலீடு செய்து பாக். ரூபா வழியாக வருமானம் ஈட்டுபவர்கள். ரூபா மதிப்பு இறக்கம் காணும் நிலையில் இங்கே முதலீடு செய்ய தயக்கம் காட்டவே செய்வார்கள்' என்று அவர் தெரிவித்துள்ளதோடு ஜூன் மாத பணவீக்கம் 21.32 சதவீதமாக அதிகரித்து இருப்பதாகவும் கடந்த 13 வருடங்களில் இதுவே உயர்பட்ச அதிகரிப்பு என்பதையும் கோடிட்டு காட்டியுள்ளார்.   நன்றி தினகரன் 






உக்ரைன் மீதான ரஷ்ய போர்: உலக பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல்

உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர் உலகப் பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக அமெரிக்க நிதியமைச்சர் ஜேனட் யெல்லன் தெரிவித்துள்ளார்.

இந்தோனேசியாவில் ஜி20 நாடுகளின் நிதியமைச்சர்களும் மத்திய வங்கி ஆளுநர்களும் சந்தித்துப் பேச தயாராகி வரும் நிலையில் அவர் இதனைத் தெரிவித்தார். 

கொரோனா வைரஸ் பரவலின் பாதிப்பிலிருந்து மீண்டுவர உலகம் போராடிவரும் நிலையில் ரஷ்யாவின் ஊடுருவல் பணவீக்கத்தை அதிகரிக்கச் செய்வதாக யெல்லன் கூறினார். 

உக்ரைனியப் போரால் உலகின் ஒவ்வொரு மூலையிலும் பாதகமான விளைவுகள் நேர்வதாக அவர் குறிப்பிட்டார். 

எரிபொருள் விலை உயர்வு, உணவுப் பாதுகாப்பு மீதான அச்சுறுத்தல் ஆகியவற்றை அவர் சுட்டிக்காட்டினார்.

இந்தப் போரால் உலகளாவிய வகையில் ஏற்படும் பொருளாதார சீரழிவுக்கும் மனிதாபிமான விளைவுகளுக்கும் சர்வதேச சமூகம் ரஷ்ய ஜனாதிபதி புட்டினைப் பொறுப்பாக்க வேண்டுமென அமெரிக்க நிதியமைச்சர் வலியுறுத்தினார்.    நன்றி தினகரன் 





No comments: