நிறைவேற்று அதிகாரத்தின் நிறவேறாத ஆசை ! அவதானி

“ கோத்தா கோ    என்ற கோஷம்  “ கோத்தா பிஸ்ஸா    என மாறிய


காட்சியை கடந்த ஒன்பதாம் திகதி பார்த்தோம்.

 “ கோ  “ என்று சொல்லப்பட்ட ஆங்கிலச் சொல்லின் அர்த்தம்               “ போ  “ !    “ பிஸ்ஸா  “ என்ற  சிங்களச் சொல்லின் அர்த்தம் பைத்தியக்காரன்.

இந்த அவலத்தை  இதுவரையில் இலங்கை வரலாற்றில் சந்தித்த ஒரே ஒரு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்‌ஷதான் என்பதற்கு இருவேறு அபிப்பிராயங்கள் இல்லை.

இறுதியாக அவர் நாடாளுமன்றத்திற்கு அழையா விருந்தாளியாகச் சென்றபோதே ,  அங்கிருந்த எதிர்க்கட்சியினர்  கோத்தா கோ என்று தொடர்ந்து கோஷம் எழுப்பியதையடுத்து, எழுந்து சென்றவர், அச்சமயத்திலாவது,  தனது எதிர்காலம் குறித்து சிந்தித்திருக்கவேண்டும்.

காலிமுகத்திடலில் அமைதியாகத்தான் எழுச்சிகொண்ட மக்கள்


போராட்டம் நடத்தினார்கள்.  அத்துடன் நாட்டின் ஏனைய பிரதேசங்களிலும் அத்தகைய போராட்டங்களை மக்கள் ஒருங்கிணைத்திருந்தார்கள்.   அவற்றையெல்லாம் கிஞ்சித்தேனும் கவனத்தில் கொள்ளாமல், தனது வசம் நிறைவேற்று அதிகாரமும் பொலிஸ் உட்பட முப்படைகளும் இருக்கிறது எனவும் நினைத்தவாறு, துப்பாக்கியையும், பெட்டன் பொல்லுகளையும்  கண்ணீர்ப் புகையையும் தண்ணீர்த் தாரையையும் வைத்துக்கொண்டு மக்களை அடக்கிவிடலாம் எனவும்  நம்பிக்கொண்டிருந்தவர்,  துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓடி ஒளித்துக்கொண்டு,  “ தான் பதவி விலகத்தயார்  “ என்றார்.  மிகவும் தாமதமாகவே தனது பதவி விலகல் கடிதத்தையும் வெளிநாடு ஒன்றிலிருந்து, அங்குள்ள இலங்கைத் தூதரகம் ஊடாக சபாநாயகருக்கு அனுப்பினார்.  

குறிப்பிட்ட தாமதம் கூட பல சந்தேகங்களை எழுப்புகிறது.  தனது சகோதரர்களை காப்பாற்றுவதற்காக சட்டத்தின் ஓட்டைகளை தனது நம்பிக்கைக்குரிய சட்டத்தரணிகள் மூலம் ஆராய்ந்திருக்கவேண்டும்.  இரத்தபாசம் எதனையும் செய்யும்.

ஜனாதிபதி மாளிகையை ஆக்கிரமித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் அவரை    “ பிஸ்ஸா  “ எனச்சொல்லியிருக்கிறார்கள்.  அப்படியாயின் அவர் தனக்கு 69 இலட்சம் மக்கள் ஆணையைத் தந்திருக்கிறார்கள் என்று இறுமாப்புடன் சொன்னாரே….?! அம்மக்கள்  “ பிஸ்ஸா  “ வா…?

இல்லை,  இல்லை நாம் தெளிவுடன்தான் இருக்கின்றோம் என்று நிரூபித்துவிட்டனர் போராட்டத்தில் எழுச்சிகொண்டு ஈடுபட்ட மக்கள்.

இற்றைக்கு 39 வருடங்களுக்கு முன்னர் 1983 ஆம் ஆண்டு இதே ஜூலை மாதம் தலைநகரத்தில் நடந்த எரியூட்டல், சூறையாடல், படுகொலை செய்தல் முதலான காட்சிகள் அரங்கேறின.

அதனால் பாதிக்கப்பட்டு  தமது இன்னுயிர்களை  காப்பாற்றுவதற்காக தங்களது வாழ்விடங்களை விட்டு ஏதிலிகளாக வெளியூர்களுக்கு மட்டுமன்றி வெளிநாடுகளுக்கும் தமிழ் மக்கள் தப்பி ஓடினர்.

இன்று 39 வருடங்களுக்குப் பின்னர், அதிகார மமதையுடன் பதவியில் ஒட்டிக்கொண்டிருந்த சிங்கள பேரினவாதி ஒருவர், தனக்கு ஆளும் அதிகாரத்தை   அதே சிங்கள பெரும்பான்மை இனமே தந்திருக்கிறது என்று கடந்த 09 ஆம் திகதிக்கு முன்புவரையில் சொல்லிக்கொண்டிருந்தவர், நிறைவேறாத ஆசைகளுடன் புறமுதுகிட்டு ஓடியிருக்கிறார்.

இலங்கைக்கு நேர்ந்துள்ள இந்த அவலத்தை அயல்நாடுகள் உட்பட மேற்குலக நாடுகளும் மிகுந்த கவலையுடனும் ஏமாற்றத்துடனும் அவதானிக்கின்றன.

அன்று 1977 ஆம் ஆண்டு பதவிக்கு வந்த ஜே.ஆர். ஜெயவர்தனா தனது ஐக்கிய தேசியக்கட்சிக்கு கிடைத்த அறுதிப்பெரும்பான்மை பலத்தை வைத்துக்கொண்டு, நிறைவேற்று ஜனாதிபதியாக தன்னைப் பிரகடனப்படுத்துவதற்கு புதிய அரசியலமைப்பினை வரைந்தார்.

பதவிப்பிரமாணம் செய்த பின்னர், தனக்கிருக்கும் அதிகாரத்தினால், ஆணைப் பெண்ணாக்கவும், பெண்ணை ஆணாக்கவும் மாத்திரமே முடியாது. மற்றவை எல்லாம் முடியும் என்றார்.

ஜே.ஆருக்குப்பின்னர் எத்தனை ஜனாதிபதிகளை இலங்கை மக்கள் கண்டுவிட்டனர்..? அவருடைய காலத்தில்தான் 1977 – 1981 – 1983 இனக்கலவரங்கள் வந்தன.  யாழ். பொது நூலகம் எரிக்கப்பட்டது.

இனப்பிரச்சினை கூர்மையடைந்து தமிழ் இன விடுதலைப் போராட்டம் எழுச்சிகொண்டது. ஆயினும், தமிழ் மக்கள் தங்களுக்கான சுயநிர்ணய உரிமையைத்தான் கோரி நின்றார்களே தவிர, அதிகாரம் நிரம்பிய ஜனாதிபதிகளை போ (Go)  எனச்சொல்லவில்லை.

அவ்வாறிருக்க,  இறுதியாக நடந்த ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள பெரும்பான்மை இனமக்கள்தான் தனக்கு வாக்களித்து ஆளும் ஆணையைத் தந்தனர் எனச்சொல்லி வந்த கோத்தபாய ராஜபக்‌ஷ, தனது சகோதரர்கள் மூவருடனும் அண்ணன் மகிந்த ராஜபக்‌ஷவின் புதல்வன் நாமல் ராஜபக்‌ஷவுடனும் சேர்ந்து  நடத்திய அரசை ஆட்டம் காணச்செய்துவிட்டு,  பிரதமர் பதவி ஏற்கவும் நிதியமைச்சர் பதவி ஏற்கவும் ஆட்களைத்  தேடவேண்டிய பரிதாபத்திற்குள்ளானது மாத்திரமின்றி, இறுதியாக அமைத்த அமைச்சரவையிலும் ராஜபக்‌ஷ குடும்பத்திலிருந்து எவரையும் இணைத்துக்கொள்ள முடியாத அளவுக்கு அழுத்தங்களை சந்தித்தார்.

இறுதியில் தன்னையும் தமது முழுக்குடும்ப அங்கத்தவர்களையும் பாதுகாக்கத்தக்க ஒருவரான ரணில் விக்கிரமசிங்காவை பிரதமராக பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.

இறுதியில், ரணிலால் மாத்திரமல்ல, நம்பியிருந்த நிறைவேற்று அதிகாரத்தினாலோ,  பொலிஸ் உட்பட முப்படைகளினாலோ தன்னைக் காப்பாற்றிக்கொள்ள முடியாமல், பிஸ்ஸா என்ற பெயருடன் வெளியேறியிருக்கிறார்.

அவதந்திரம் தனக்கு அந்தரம் என்பார்கள். அரசியலில் இராஜதந்திரம் அவசியம்.  ஒவ்வொரு நாட்டிலும் செயல்படும் வெளிநாட்டு தூதுவர்கள்   இராஜதந்திரிகள்  ( Diplomats )  எனத்தான் அழைக்கப்படுகிறார்கள்.

மகா பாரதத்தில் முக்கிய பாத்திரமாக வரும் கிருஷ்ண பரமாத்மாவும் இராஜதந்திரிதான்.  அவர் பஞ்சபாண்டவர்களுக்கு கிடைக்கவேண்டிய பாகத்தைக்கேட்டு கௌரவர்களிடம் தூது சென்றார்.  துரியோதனன், பாண்டவரின் எந்தவொரு கோரிக்கையையும் ஏற்றுக்கொள்ள முடியாது எனச்சொன்னதும், கிருஷ்ணர் தனது இராஜதந்திரத்தை பயன்படுத்தினார்.

இறுதியில் தர்மம் வென்றது.

அதனால்தான் மகாகவி பாரதியும் பாஞ்சலி சபதத்தில்                         “ தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், இறுதியில் தருமமே வெல்லும்  “ என்றார்.

காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில்  பெரும்பாலானோர், 1977 – 1981 – 1983 கலவரங்களை நேரில் பார்க்காதவர்கள். அக்காலப்பகுதியில் பிறக்காதவர்கள்.  அந்த இளம் தலைமுறை,  தேசத்தின் மக்களின் வயிற்றில் அடிவிழுந்ததையடுத்து, பொறுத்தது போதும் இனி, பொங்கி எழுவோம்  என்றுதான் எழுச்சிகொண்டனர். அவர்களை வெகு சாதாரணமாக எடுத்துக்கொண்டவர்தான் இதற்கு முன்னர் வெறும் துப்பாக்கியை மாத்திரம் நம்பி இராணுவ கேர்ணலாக செயல்பட்ட கோத்தபாய ராஜபக்‌ஷ.  எனினும் தொடர்ந்தும் போர்க்களத்தில் நிற்க முடியாமல் நாட்டை விட்டு வெளியேறி அமெரிக்காவில் குடியேறியவர்.

ஆனால், ஐம்பது ஆண்டுகாலத்திற்கும் மேற்பட்ட அரசியல் தெரிந்தவரும் சட்டம் படித்தவரும் நாடாளுமன்றத்திற்குள் முதலில் எம்.பி. ஆகவும் பின்னர்  அமைச்சராகவும் அதன்பிறகு பிரதமர், ஜனாதிபதி பதவிகளை வகித்தவருமான மகிந்த ராஜபக்‌ஷவுக்கு நாட்டு மக்களின் நாடித்துடிப்பை கணிக்கத் தெரியாமல் போய்விட்டதே….!?

இவரால் அழைத்துவரப்பட்ட சகோதரர் இறுதியில் நாட்டை மாத்திரமல்ல ராஜபக்‌ஷ குடும்பத்தினரையும் நட்டாற்றில் கைவிட்டுள்ளார்.

தடியடிப்பிரயோகங்களையும் கண்ணீர்ப்புகையையும் நீர்த்தாரை வீச்சையும் சகித்துக்கொண்டு முன்னேறிய மக்கள், இறுதியில் ஜனாதிபதியின் வாசஸ்தலத்தையே கைப்பற்றிவிட்டனர்.

அத்துடன் அங்கே ஜனாதிபதி பதுக்கி வைத்திருந்த பெருந்தொகைப்பணத்தையும் அங்கிருந்த பதுங்கு அறையையும் வெளியுலகிற்கு காண்பித்துவிட்டனர்.

அந்த மாளிகை நூறாண்டுகள் பழமை வாய்ந்தது. அது மக்களின் சொத்து. அதனால், அங்கே சேதம் விளைவிக்கவேண்டாம் என்ற குரலும் ஆர்ப்பாட்டக்காரர்களிடமிருந்து எழுந்தது. இதன்மூலம் அவர்கள்  தெளிவோடுதான் இருக்கிறார்கள்.

இந்த இளம் தலைமுறை இனிவரவிருக்கும் அரசியல் தலைவர்களுக்கு பாட நூலாக திகழுவார்கள் என்பது மாத்திரம் நிச்சயம்.

---0---

 

No comments: