திருவாதவூரரைச் சிந்தையில் இருத்துவோம் !


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்

மெல்பேண் .....அவுஸ்திரேலியா


 

     தேனை நாடி வண்டுகள் ஓடும்.தேனைச் சுவைப்பதில்


வண்டுகளுக்கு பேரானந்தம். இந்த வண்டு மற்றைய வண்டுகள் போன்றதன்று.இவ்வண்டு திருவாதவூரில் இருந்து வந்த வண்டு. ஏனைய வண்டுகள் பல மலர்களையும் நாடிநிற்க - வாதவூர் வண்டு
வேத உபநிடதங்களை நாடி அங்கு திருவாசகம் என்னும் உயரிய தேனைப் பருகி எமக்கெல்லாம் வழங்கி இருக்கிறது.அந்த வண்டு வழங்கிய தேனான திருவாசகம் - தொட்டாலும் இனிக்கும்.கேட்டாலும் இனிக்கும். படித்தாலும் இனிக்கும்.சொல்லச் சொல்ல இனிக்கும் சொற்களால்
  ஆனதுதான் அந்த வாசகம் " திருவாசகம் ".  இதனால்த்தான் "திருவாசகத்துக்கு உருகாதார் ஒருவாசகத்துக்கும் உருகார் " என்று பலரும் வியந்து போற்றும் நிலை அமைந்து விட்டது.

   திருவாதவூரில் பிறந்தபடியால் திருவாதவூரர்
என்றும் 
மணிமணியான வார்த்தைகளை வழங்கியதால் மணிவாசகர் என்றும் அவரின் ஒவ்வொரு வார்த்தைகளும் சைவத்துக்கும் தமிழுக்கும் மாணிக்கமாய் அமைந்தமையால் மாணிக்கவாசகர் என்றும் யாவராலும் பெருமதிப்புடன் அழைக்கப்பட்டர்.

  அந்தணகுலத்தில் பிறந்து பேராளுமை மிக்கவராய் விளங்கினார் மணிவாசகப் பெருமான் என்று அவரைப்பற்றி திருவாதவூரடிகள் புராணம் வாயிலாக அறிகின்றோம். மணிவாசகப் பெருமானின் ஆளுமையினை அவர் வாழ்ந்த பாண்டி நாட்டின் அரசன் - அரிமர்த்தன பாண்டியன் அகத்தில் இருத்தி அவரை தனது அரசாட்சியில் முதலமைச்சர் ஆக்கினான். அத்துடன் அவரின் ஆற்றல்களை மெச்சி " தென்னவன் பிரம்மராயன் " என்னும் பட்டத் தையும் வழங்கிப் பெருமைப்படுத்தினான்.மன்னவன் இவ்வாறு பெருமைப்படு த்தினான் என்பதை

 

தென்னவன் பிரமராயன் என்றருள் சிறந்த நாமம்

மன்னவர் மதிக்க நல்கி வையகம் உய்வதாக

மின்னவ மணிப்பூணாடை வெண்மதிக்கவிகை தண்டு

மொன்னவர் கவிரி வேழமளித்தனன் பொருநை நாடன் 

 

வாதவூராரினை தனது அகத்தில் ஏற்றிய மன்னவன் - மற்ற மன்னவர்களும் மதிக்கும் வண்ணம் ,அவருக்கு நன்மதிப்பினைக் கொடுத்தான். நவரெத்தினாலான ஆபரணங்கள்பட்டுப்பீதாபரங்கள் சந்திரன் போன்ற வெண் கொற்றக் குடைமுத்திலான சிவிகைபொன்னாலான காப்பு சாமரையானை என்று அளித்து ஆனந்தம் அடைந்தான். என்று வாதவூரடிகள் புராணம் சுட்டிக் காட்டி நிற்கிறது.

   அதிகாரம் மிக்க பதவி ! அரசனின் அன்பும் ஆதரவுமான நிலை! எதையும் செய்யும் இருப்பிடம் ! இவை எவையையும் வாதவூரர் உள்ளம் பெரிதாக ஏற்றுக் கொண்டதாகவே தெரியவில்லை.புகழும் ஆடம்பரங்களும் நிலையாய் இருக்க மாட்டா என்னும் நினைப்பால் நிலையாயிருக்கும்  அப்பரம் பொருளையே அவர் நாளும் பொழுது எண்ணியபடி அமைச்சர் என்னும் பெயரில் பாண்டியன் அவையில் இருந்தார் எனலாம். " ஓடும் செம்பொன்னும் ஒக்க நோக்கும் " எண்ணமே அவருள்ளத்தில் ஆழமாய் ஆணிவேராய் இருந்தது எனலாம்.

  திரும்பெருந்துறையில் நல்ல அரோபியக் குதிரைகள் வந்திருப்பதாயும் அதனைப் பார்த்து வாங்கிவரும்படியும் திரவியங்களை அரசன் அமைச்சரான வாதவூரரிடம் கொடுக்கிறான். அமைச்சரான வாதவூரரும் குதிரைகளை வாங்குவதற்கு செல்கிறார். அங்கு அவர் குருந்தமர நிழலில் ஒரு ஆனந்தப் பேரொளியினைக் காணுகிறார்.தன்னை மறக்கிறார். தான் வந்த பணியை மறக்கிறார். அந்த ஞான ஒளியுடை மகானின் திருவடியில் சங்கமம் ஆகிறார்.

  குதிரை வாங்கச் சென்ற அமைச்சர் நீண்டநாள் வராதபடியால் அரசன் தூதுவர்களை அனுப்பி நிலைமையினப் பார்த்துவருமாறு பணிக்கிறான் சென்ற தூதுவர்கள் வாதவூரரின் நிலையினை மன்னனிடம் தெரிவிக்கவே மன்னவன் அடங்காச் சினங்கொள்ளுகிறான்.சினத்தால் வாதவூரரை வதைக்கிறான். உலகினை மறந்த வாதவூரார் அந்தப் பரம்பொருளிடம் அடைக்கலமாகிறார்.

ஆண்டவனின் ஆணைப்படி - " ஆவணி மூலத்தில் ஏற்கனவே ஒழுங்கு செய்த குதிரைகள் வரும் என்று " அரசனால் துன்பப்பட்டுக் கொண்டிருக்கின்ற வாதவூரர் மொழிகின்றார். குதிரைகளும் குறிப்பிட்ட நாளில் வருகின்றன. அரசன் வாதவூரரிடம் மன்னிப்புக் கேட்கின்றான். ஆனால் வந்த குதிரைகள் அனைத்துமே அன்றிரவு நரிகளாய் மாறிவிட்டன. அரசன் ஆத்திரம் மேலோங்குகிறது. வாதவூரரை சிறையில் அடைக்கின்றான் . உயரிய பதவியைக் கொடுத்த அரசனே அவரை திரவியங்களை அபகரித்த குற்றவாளியாக்குகிறான். வாதவூரர் துன்பம் படைத்தவனுக்குப் பொறுக்கவில்லை . வைகை ஆறு பெருக்கெடுக்கிறது. அரசன் திகைக்கிறான். பெருகிவரும் நீரைத்தடுக்க நாட்டுமக்களுக்கு அரசன் ஆணையிடுகிறான்.

    பலரும் தமக்கான பங்கினை செய்கிறார்கள் . ஆனால் பிட்டவைத்து பிழைப்பு நடத்தும் செம்மனச் செல்வி என்னும் மூதாட்டிக்கு உதவிட யாருமே இல்லா திருந்தது. அவ்வேளை எம்பெருமானே வேலையாளாய் வருகிறார். ஒழுங்காய் வேலை பார்க்காத காரணத்தால் அரசனின் காவலர்கள் பிரம்படிக்கு ஆளாகிறார் ஆதி அந்தமில்ல அந்த அரும்பொரும் ஜோதி !

    பரம்பொருளின் முதுகில் விழுந்த அடி அரசனின் முதுகில் விழுந்தது. அனைவரின் முதுகிலும் விழுந்தது. அரசன் விழித்தான். அஞ்ஞானம் அகன்றது. வாதவூரரை விடுவித்து விழுந்து விழுந்து வணங்கினான். என்ன நல்ல கதையாக இருக்கிறதா ! வாதவூரர் வரலாற்றில் இவற்றைக் காணுகிறோம்.

 

  கல்லால் ஒருவன் அடிக்க உடல் சிலிர்க்க

  காலில் செருப்பால் ஒரு வேடன் வந்தே உதைக்க

  வில்லால் ஒருவன் அடிக்க

  வீசி மதுரை மாறன் பிரம்பால் அடிக்க ...

அந்த வேளை யாரை நினைத்தீரோ ... அய்யா

பெற்ற தந்தை தாய் இருந்தால் உலகத்தில் உமக்கிந்த

தாழ்வெல்லாம் வருமே அய்யா  -  

என்று ஒரு இறையன்பர் பாடுவதில் பிரம்படி பட்ட செய்தி எப்படி வருகிறது பாருங்கள்.

  மனிதன் தெய்வத்தோடு வைக்கின்ற இணக்கமானது எப்படியாய் இருப்பினும் அது நல்லதையே நல்கும்.அடியுண்ட அரசனுக்கு நல்லறிவு பிறந்தது. வாதவூரருக்கு பலவகையில் உதவிட அரசன் முன்வந்தான். ஆனால் வாதவூரரோ தாம் துறவறத்தையே நாடுவதாகக் கூறினார். அரசனும் வாதவூரர் வழியினைப் பெருவழியென ஏற்றுக் கொண்டான்.

  மனிதன் என்பவன் ஏதேனும் ஒரு துறையில் சிறந்து விளங்கும் பொழுது அத்துறைக்கு ராஜன் ஆகிறான். பாண்டிய மன்னன் அவையில் அமைச்சர் ஆனதால் வாதவூரர் புவிராஜனாகிறார். தித்திக்கும் திருவாசகத்தை அளித்த தமையால் கவிஜாரன் ஆகிறார். அவரின் பக்தியுடை வாழ்வால் அவர் தவராஜனாகிறார். பல சிறப்புக்களைப் பெற்ற வாதவூரர் நிறைவில் நடராஜனுக்கே உரியவராய் திகழ்கிறார் எனலாம்.

  வாதவூரர் வண்டாய் பறந்தார். அந்த வண்டு " திருவாசகம் " என்னும் தேன் கூட்டையும் " திருக்கோவையார் " என்னும் தேன் கூட்டையும் கட்டி நாமனைவரும் நாளும் பொழுதும் வேண்டிய தேனைப்பெற்று சுவைத்திட வழி சமைத்திருக்கிறது எனலாம்.

 

உடையாள் உந்தன் நடு இருக்கும் உடையாள் நடுவுள் நீ இருத்தி

அடியேன் நடுவுள் இருவீரும் இருப்பதானால் அடியேன் உன்

அடியார் நடுவுள் இருக்கும் அருளைப் புரியாய் பொன்னம்பலத்து

முடியா முதலே என்கருத்து முடியும் வண்ணம் முன்னின்றே

 

என்னும் வேண்டுகளை வாதவூர் வண்டு இறைவனிடம் சொல்லுகிறது.இது தெவிட்டாத் தேனாகி இனிக்கிறதல்லவா !

   திருவாசகமென்னும் தேன் பருகினார் ஒரு அடியவர். அவரால் தனது உணர்வினை வெளிப்படுத்த சொற்களைத் தேடுகிறார்.அவர் தேடியதை அளிக்கிறார் பருகுவோம் வாருங்கள்....

 

வான்கலந்த மாணிக்கவாசக நின் வாசகத்தை

நான்கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே

தேன்கலந்து பால்கலந்து செழுங்கனித் தீஞ்சுவை கலந்துஎன்

ஊன்கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே -        இப்படிச் சுவைத்தவர்தான் வள்ளல் பெருமான்.

 

  வாதவூர் வண்டு மலர்கள்தோறும் எடுத்தவந்த தேனால் ஆக்கப்பட்ட திருவாசகத்தை தமிழர்களாகிய நாம் மட்டும் சுவைத்து மகிழ்வது பெருமைதான். ஆனால் தமிழ் அறியா ஒருவர் எங்கள் சைவம் சாரா ஒருவர்அதுவும் ஆசிய நாட்டைச் சேராத ஒருவர் ,ஆங்கில நாட்டை சேர்ந்த ஒருவர் கிறீத்தவ பாதிரியாரானவர் திருவாசகமென்னும் தேனைத் தொட்டதும் தன்னை மறந்தார். அந்தத் தேன்கூட்டுக்குள்ளேயே புகுந்து தேனை மாந்திக் கொண்டே இருந்தார் என்பது மனமிருத்த வேண்டிய கருத்தல்லவா !

  சிவனை முழுமுதற் கடவுளாகப் பாடி உருகிடும் திருவாசகம் என்னும் தேன் - ஒரு கிறீத்தவ  அருட் தந்தையை எப்படிக் கவரமுடியும் இது ஒரு முரண்பட்ட நிலையாகத் தெரிகிறது அல்லவா ! இறைவன் என்பவன் ஒருவனே. திருவாசகத்தில் " சிவனாக " காட்சியளிக்கும் ஆண்டவன்தான் - பரமண்டலத்தில் வீற்றிருக்கும் பிதாவாக கிறீத்தவ அருட்தந்தை ஜி.யூ போப் அவர்களின் உள்ளத்தில் பதிந்திருக்கலாம். இதனால் அவர் ஆங்கிலத்தில் திருவாசகத்தேனை மொழிபெயர்த்து அனைவருமே பயனுறச் செய்தார் எனலாம்.இலண்டன் மாநகரில் கிறீத்தவ தேவாலயத்தில் முழந்தாளிட்டு செபம் செய்யும் வேளை தன்னருகில் மாணிக்கவாசகரும் செபம் செய்வதாக தான் உணர்ந்ததை  - திருவாசக ஆங்கில மொழி பெயர்ப்பு நூலில் பதிவிட்டுள்ளார் என்பது மனங்கொள்ளத் தக்கதாகும்.இதுவே சமயங்கடந்த பக்தி நிலை எனலாம்.இதனை வாதவூர் வண்டின் திருவாசகம் என்னும் தேன் செய்திருக்கிறது.

 

நமச்சிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க

இமைப்பொழுதும் என்னெஞ்சில் நீங்காதான்தாள் வாழ்க

கோகழியாண்ட குருமணிதன் தாள்வாழ்க

ஆகமமாகி நின்று அண்ணிப்பான் தாள்வாழ்க

ஏகன் ஆனெகன் இறைவனடி வாழ்க

 

என்று இறைவனுக்கு வாழ்த்துக் கூறிய வாதவூர் வண்டினை நாமனைவரும் மனத்தினில் இருத்துவோம். இருத்தினால் ......

தொல்லை இரும்பிறவி சூழும் தளை நீங்கும் ! அல்லல் அறுபடும் ! ஆனந்தம் பெருகும் ! அத்துடன் மருவா நெறியும் அளிக்கும் !

 

      "  அருள்வாத வூரர்சொல  அம்பலவர் தாமெழுதும்

        திருவா சகத்தைத் தெளிந்தால் - கருவாம்

        பவகதியும் நீங்கிப் பரமரரு ளாலே

        சிவகதியும் உண்டாம் சிவம்  "

 


No comments: