கதிரவன் உதித்ததும்…. ……..பல்வைத்திய கலாநிதி பாரதி இளமுருகனார்

  

 

காலைக் கதிரவன் நீலவானிற் - செங்

கதிர்கள் பரப்பி உதித்ததுமே

கோல நிலவைப் பொழிந்தநிலா அந்தோ

கூனிக்; குறுகி மறைந்திடுமே !

 
சேலைக் குயில்களும் கூவிடுதே பேடை

சொக்கிட ஆண்மயில் ஆடிடுதே!

பாலைப் பொழிந்த பசுக்களுமே - கூடிப்

பசும்புல் மேய்ந்திடச் சென்றிடுதே! 

 

 
 

விட்டு விலகிடும் காரிருளே பூக்கள் 

மொட்டு விரிந்து மலர்ந்திடுதே

சிட்டுக ளோடுதே னீக்களுமே தேடித்

தேனினை மாந்தி மயங்கிடுதே!


 


 

கா-கா வெனப்பா டுங்காகமும் - தீனியைக்

கண்டதும் உடனதைத் தின்றிடாது 

ஏகாந் தமாயெங் கும்பார்த்;ததுச் -  சும்மா

இரைந்தே கரைந்து இனங்கூட்டுதே!


 


 

ஆகா சுகமெனத் தூங்குவோரைக் காலை

அன்புடன் எழுப்பிடக் கரைந்திடுதே!

பாகாய் உருகிப் பராவிநின்றே பக்தர்

பண்ணுடன் திருமுறை ஓதுவரே!


 


 

 

 

 

 

 

 

 


வட்டமிட் டுவானிற் சுற்றிவரும் - கள்ள

வண்ணப் பருந்துகள் மாறிமாறி  

எட்டுத் திசையெலாம் பார்த்தபடி   ஏற்ற 

இரையெனக் குஞ்சுகள்  தேடிடுதே!
 


 

 

 

 

 


வேலைத் தலங்களிற்; பணிபுரிவோர் காலை

விழுந்தடித்; தோடியே சென்றிடுவர்!

சாலை வழியாக வாகனங்கள் பெருஞ்

சத்தமும் போட்டு விரைந்திடுதே! 
 


 


 

 

 

 

 
வாலைக் குமரிகள் காதலரைக் - காண

வண்ண உடைகளைத் தேர்ந்துடுத்தி;ச்  

சோலைக ளைநாடிச் சென்றிடுவர் - அங்கு

சோபனம் பாடி மகிழ்ந்திடுவர்!

 

 

 

 

 
அத்தனை உயிரிலும்  புத்துணர்ச்சி -- பொங்கி

ஆரவா ரங்கொள வைத்திடுதே!

பித்தன் சிவனவன் படைத்திட்ட - இயற்கையின்

பெருமையைப் பகர்ந்திட வார்த்தையுண்டோ?.

 

 

 

 

No comments: