சீனாவின் திட்டத்திற்கு போட்டியாக ஜி7 நாடுகளின் திட்டம் அறிமுகம்
ஜோர்தானில் நச்சு வாயு கசிவு: 13 பேர் பலி
உக்ரைனிய கடைத்தொகுதியில் ரஷ்யா தாக்குதல்: 16 பேர் பலி
சுவீடன், பின்லாந்தின் நேட்டோ விண்ணப்பத்திற்கு துருக்கி ஆதரவு
அமைதிக்கான நோபல் வென்ற ரெசாவின் ஊடகத்துக்கு பூட்டு
பின்லாந்து, சுவீடனை எச்சரிக்கிறார் புட்டின்
ஐரோப்பாவில் படைகளை அதிகரிக்கிறது அமெரிக்கா
ஹொங்கொங்கின் ஆட்சி முறையை தொடர்வதற்கு சீன ஜனாதிபதி உறுதி
சீனாவின் திட்டத்திற்கு போட்டியாக ஜி7 நாடுகளின் திட்டம் அறிமுகம்
சீனாவின் “பெல்ட் அன்ட் ரோட்” திட்டத்துடன் போட்டியிடும் வகையில் சர்வதேச உட்கட்டமைப்புத் திட்டம் ஒன்றை ஜி7 உறுப்பு நாடுகள் அறிமுகம் செய்துள்ளன.
ஏழ்மையான நாடுகளில் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு 600 பில்லியன் டொலர் நிதியைத் திரட்ட நாடுகள் இலக்கு கொண்டுள்ளன.
திட்டத்திற்கு அமெரிக்கா 200 பில்லியன் டொலரும், எஞ்சிய உறுப்பு நாடுகள் 400 பில்லியன் டொலரும் கொடுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதனை 2027ஆம் ஆண்டுக்குள் திரட்டுவதற்கு நாடுகள் திட்டமிட்டுள்ளன.
திட்டத்தில் முதலீடு செய்வதன் வழி, பொருளாதாரத்தை மேம்படுத்துவதோடு அனைத்து நாடுகளின் மக்களும் பலனடையலாம் என்று அதிகாரிகள் கூறினர்.
சீனாவுக்குப் போட்டிகொடுக்கும் நாடுகளைப் பொறுத்தவரை எதிர்காலத்திற்குரிய நேர்மறையான தொலைநோக்கைப் பகிர்ந்துகொள்வதற்கு இது ஒரு வாய்ப்பு என்று தெரிவிக்கப்பட்டது. நன்றி தினகரன்
ஜோர்தானில் நச்சு வாயு கசிவு: 13 பேர் பலி
ஜோர்தானின் செங்கடல் துறைமுகமான அகாபாவில் குளோரின் நச்சு வாயு கசிந்து 13 பேர் கொல்லப்பட்டிருப்பதோடு 250 இற்கும் அதிகமானவர்கள் காயமடைந்திருப்பதாக அரச ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
இரசாயன சேமிப்பு கொள்கலனை கொண்டு செல்லும்போது கிரேனில் ஏற்பட்ட கோளாறினால் அது கீழே விழுந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலே உயர்த்தப்பட்ட கொள்கலன் பின்னர் திடீரென்று கப்பல் ஒன்றின் மீது விழுந்து வெடிப்பது சி.சி.ரீ.வி கெமராவில் பதிவாகியுள்ளது. மஞ்சள் நிற வாயு அந்தப் பகுதி எங்கும் பரவுவதும் மக்கள் பாதுகாப்பான இடத்தை நோக்கி தப்பி ஒடுவதும் அதில் தெரிகிறது. காயமடைந்த 199 பேர் உள்ளுர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அரச ஊடகம் தெரிவித்துள்ளது.
தொழில்துறை இரசாயனமாக பயன்படுத்தப்படும் குளோரின் வாயு, அதிக அளவில் வெளிப்படுவது நுரையீரலை பாதிக்கும்.
நன்றி தினகரன்
உக்ரைனிய கடைத்தொகுதியில் ரஷ்யா தாக்குதல்: 16 பேர் பலி
உக்ரைனின் கிரமென்சோக் நகரில் ஒரு நெரிசல்மிக்க கடைத்தொகுதியில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் 16 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
கடைத்தொகுதி மிகக் கூட்டமாக இருந்தபோது வேண்டுமென்றே தாக்குதல் நடத்தி இருப்பதாக உக்ரைனிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்தது. அப்போது கடைத்தொகுதியில் 1,000க்கும் அதிகமானோர் இருந்ததாகக் கூறப்பட்டது.
ஐரோப்பிய வரலாற்றிலேயே மிகத் துணிச்சலாக நடத்தப்பட்ட பயங்கரவாதச் செயல் இது என்று உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கி வர்ணித்தார். 59 பேர் காயமுற்றதாகவும் அவர்களில் 25 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.உலகத் தலைவர்கள் ஜி7, நேட்டோ உச்சநிலைச் சந்திப்புகளுக்குத் தயாராகும் வேளையில் ரஷ்யா இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது. உக்ரைனுக்குத் துணைநிற்பதாக ஜி7 தலைவர்கள் வெளியிட்ட கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டது.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினும் ஏனையோரும் தாக்குதலுக்குப் பொறுப்பேற்க வேண்டும் என்று ஜி7 தலைவர்கள் கூறியுள்ளனர். நன்றி தினகரன்
சுவீடன், பின்லாந்தின் நேட்டோ விண்ணப்பத்திற்கு துருக்கி ஆதரவு
பின்லாந்தும் சுவீடனும் நேட்டோ கூட்டணியில் இணைவதை இரத்து அதிகாரத்தால் தடுக்கப் போவதில்லை என்று துருக்கி தெரிவித்துள்ளது.
4 மணி நேரப் பேச்சுவார்த்தைக்குப் பின், 3 நாடுகளும் ஒன்று மற்றதன் பாதுகாப்பை உறுதிசெய்ய ஒப்புக்கொண்டன.
அதை அடுத்து, பின்லாந்தும் சுவீடனும் நேட்டோவில் சேருவதற்கான தங்கள் விண்ணப்பத்தைத் தொடரலாம்.
அவை நேட்டோவில் இணைவதற்குத் துருக்கியின் ஆதரவை உறுதிப்படுத்தும் இணக்கக் குறிப்பில் 3 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களும் கையெழுத்திட்டனர்.
அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து இரு நாளும் முடிவெடுக்கும் என்று பின்லாந்து ஜனாதிபதி கூறினார்.
துருக்கி தீவிரவாதிகளாகக் கருதும் குர்திஷ் போராளிகளுக்கு பின்லாந்து மற்றும் சுவீடன் அடைக்கலம் வழங்கி வருவது தொடர்பிலேயே இந்த இரு நாடுகளுக்கும் துருக்கி எதிர்ப்பை வெளியிட்டு வந்தது. துருக்கியின் ஆதரவு இன்றி இந்த இரு நாடுகளாலும் நேட்டோவில் இணைய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
சுவீடன் மற்றும் பின்லாந்திடம் தமக்குத் தேவையானது கிடைத்துவிட்டது என்று துருக்கிய ஜனாதிபதி ரிசப் தையிப் எர்துவானின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
நேட்டோக் கூட்டணி ரஷ்யாவைப் பாதுகாப்பு அச்சுறுத்தலாகக் கருதுகிறது. உக்ரைன் மீதான ரஷ்யப் படையெடுப்புக்குப் பின் பின்லாந்தும் சுவீடனும் நேட்டோவில் சேருவதற்கான தங்கள் விருப்பத்தை அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தன.
இதன்படி சந்தேகத்திற்குரிய குர்திஸ் தீவிரவாதிகளை துருக்கியிடம் ஒப்படைக்க சுவீடன் ஒப்புக்கொண்டுள்ளது. இரண்டு நோர்டிக் நாடுகளும் துருக்கிக்கு ஆயுதங்களை விற்பதற்கான தங்கள் கட்டுப்பாடுகளை நீக்கும். நன்றி தினகரன்
அமைதிக்கான நோபல் வென்ற ரெசாவின் ஊடகத்துக்கு பூட்டு
அமைதிக்கான நோபல் பரிசு வென்ற மெரியா ரெசாவினால் நிறுவப்பட்ட புலனாய்வு செய்தித் தளம் ஒன்றை மூடும்படி பிலிப்பைன்ஸ் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
ரப்லெர் என்ற அந்த தளம் பிலிப்பைன்ஸின் ரொட்ரிகோ டுடெர்டேவின் அரசை விமர்சிக்கும் ஒருசில ஊடக நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது.
டுடெர்டே பதவியில் இருந்து வெளியேறி அவரது கூட்டாளியான பெர்டினன்ட் மார்கோஸ் ஜூனியர் ஜனாதிபதியாக பதவி ஏற்கவுள்ள நிலையிலேயே நிர்வாகம் இந்த உத்தரவை வெளியிட்டுள்ளது.
அமெரிக்க பிரஜையாகவும் இருக்கும் ரெசா கருத்துச் சுதந்திரத்தை பாதுகாப்பதற்கு எடுத்த முயற்சிக்காக ரஷ்ய ஊடகவியலாளர் டிமிட்ரி முரடோவ் உடன் சேர்ந்து 2021 ஆம் ஆண்டு நோபல் பரிசை வென்றார். நன்றி தினகரன்
பின்லாந்து, சுவீடனை எச்சரிக்கிறார் புட்டின்
நேட்டோ கூட்டணி பின்லாந்திலும் சுவீடனிலும் துருப்புகளை இறக்கினால், ரஷ்யா கனிவான விதத்தில் பதிலடி கொடுக்கும் என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் கூறியுள்ளார்.
உக்ரைனுடன் இருக்கும் பிரச்சினை, சுவீடனும் பின்லாந்துடனும் இல்லை என்று அவர் குறிப்பிட்டார். அதனால் அந்த இரு நாடுகளும் தாராளமாக நேட்டோ கூட்டணியில் சேரலாம் என்று அவர் கூறினார். ஆனால் அங்கு இராணுவத் துருப்புகள் இறக்கப்பட்டால், இரு நாடுகளால் ரஷ்யாவிற்கு ஏற்படும் மிரட்டலுக்கு ஏற்ப அவையும் அச்சுறுத்தப்படும் என்றார் ஜனாதிபதி புட்டின்.
நேட்டோ கூட்டணியில் இணைவதால் பின்லாந்துடனும் சுவீடனுடனும் ரஷ்யா கொண்டுள்ள உறவு பாதிக்கப்படுவதைத் தவிர்க்க முடியாது என்று அவர் தெரிவித்தார்.உக்ரைனில் ரஷ்ய இராணுவத்தின் படையெடுப்பு, திட்டமிட்டபடி செல்வதாக அவர் சொன்னார்.
அதை முடிவுக்குக் கொண்டுவரக் காலக்கெடு எதுவும் தேவையில்லை என்றார் புட்டின்.
ஐரோப்பாவில் படைகளை அதிகரிக்கிறது அமெரிக்கா
உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்புக்கு பதில் நடவடிக்கையாக ‘அடிப்படை மாற்றம்’ ஒன்றுக்கு நேட்டோ இணங்கிய நிலையில், ஐரோப்பா எங்கும் அமெரிக்கா தனது படைகளை அதிகரிக்கவுள்ளது.
போலந்தில் நிரந்தர இராணுவ தலைமையகம் ஒன்று உருவாக்கப்படவிருப்பதோடு, அமெரிக்காவின் புதிய போர் கப்பல் ஸ்பெயினுக்கும் போர் விமானங்கள் பிரிட்டனுக்கும் தரைப் படையினர் ருமோனியாவுக்கும் அனுப்பப்படவுள்ளனர்.
எப்போதும் இல்லாத அளவுக்கு நேட்டோவின் தேவை இப்போது இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இந்தக் கூட்டணி பனிப்போருக்குப் பின்னர் மிகப்பெரிய மாற்றத்தை பெற்றுள்ளதாக நேட்டோவின் தலைவர் ஜேன்ஸ் ஸ்டொல்டன்பெர்க் தெரிவித்துள்ளார்.ரஷ்ய படையெடுப்புக்கு பதிலடி கொடுக்கும் புதிய திட்டத்தின்படி அடுத்த ஆண்டு 300,000க்கும் அதிகமான படையினர் உச்ச தயார் நிலையில் வைக்கப்படவுள்ளனர். அந்த எண்ணிக்கை தற்போது 40,000 ஆக உள்ளது.
மட்ரிட்டில் இடம்பெற்ற மாநாடு ஒன்றில் கடந்த புதனன்று உரையாற்றிய பைடன், ‘களம் - நிலம், வான் மற்றும் கடல் ஆகிய அனைத்து திசைகளிலும் நேட்டோ தம்மை பலப்படுத்தும்’ என்றார். நன்றி தினகரன்
ஹொங்கொங்கின் ஆட்சி முறையை தொடர்வதற்கு சீன ஜனாதிபதி உறுதி
ஹொங்கொங்கில் ஆட்சி புரியும் சீனாவின் “ஒரு நாடு இரு ஆட்சிமுறை” அந்த நகரை பாதுகாப்பதில் வெற்றி கண்டிருப்பதாகவும் நீண்ட காலத்துக்கு அது தொடரும் என்றும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.
ஹொங்கொங் பிரிட்டனிடமிருந்து சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டு 25 ஆண்டு நிறைவை அனுசரிக்க அவர் ஹொங்கொங்கிற்குச் சென்றுள்ளார்.
ஹொங்கொங் பிரிட்டனிடமிருந்து சீனாவிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னரே, நகரின் உண்மையான ஜனநாயகம் ஆரம்பித்தது என்று ஷி குறிப்பிட்டார்.
“தாயகத்துடன் இணைந்த பின்னரே ஹொங்கொங்வாசிகள் சொந்த நகரின் ஆட்சியாளர்களாக மாறினர். நகரின் உண்மையான ஜனநாயகம் இங்கிருந்து ஆரம்பித்தது,” என்று அவர் கூறினார்.
ஹொங்கொங்கின் நன்மைக்காகச் சீனா செயல்பட்டுள்ளதாகச் சொன்ன அவர் ஹொங்கொங்கின் திறந்த வர்த்தகச் சூழலுக்கு ஏதுவாக மத்திய அரசாங்கம் செயல்படும் என்று அவர் தெரிவித்தார்.
சீன ஜனாதிபதி ஷி தலை நிலத்தில் இருந்து கடந்த இரண்டு ஆண்டுகளில் முதல் முறை வெளியே பயணித்திருக்கும் இந்த விஜயத்தை ஒட்டி ஹொங்கொங்கில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அண்மைய ஆண்டுகளில் ஹொங்கொங்கில் சீனா தனது கட்டுப்பாடுகளை பலப்படுத்தி சட்டங்களை இறுக்கி இருப்பது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. நன்றி தினகரன்
No comments:
Post a Comment