வரலாற்றுத் தொன்மைமிகு திருக்கேதீச்சரநாதர் ஆலய மஹாகும்பாபிஷேக விழா

 Thursday, June 30, 2022 - 9:30am

கம்பர் இராமாயணத்தில் இலங்கையை 'பொன் கொண்டு இழைத்த பூமி' என்று வர்ணிக்கின்றார். இலங்கை சிவபூமி என்பது திருமூல நாயனாரின் கருத்தாகும்.இலங்கைக்கும், பாரத நாட்டின் மேருமலைக்கும் இடைப்பட்ட பூமி பிரதேசம் முழுவதையும் 'சிவபூமி' என்று இன்றைக்கு 8000ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த திருமூலநாயனார் திருமந்திரத்தில் குறிப்பிடுகின்றார். இலங்கையையும், மேருமலையையும் இணைத்து செல்லும் நடுக்கோடு தில்லைச்சிற்றம்பலத்துக்கும், பொதிமலைக்கூடாகவும் செல்கின்றது. இதனாலேயே மேருவுக்கும், இலங்கைக்கும் இடைப்பட்ட பூமியை சிவபூமி என்றார் திருமூலர்.

இலங்கை தொண்டீஸ்வரம், நகுலேஸ்வரம், முன்னேஸ்வரம், திருக்கோணேஸ்வரம், திருக்கேதீச்சரம் என பஞ்சசிவ ஈஸ்வரங்களைக் கொண்ட திவ்விய பூமியாகும். இலங்கைக்கூடாக விராட்புருடனின் நாடி செல்வதாக ஞானிகள் இயம்பியுள்ளார்கள்.  

சிவபெருமானை 'ஈஸ்வரதெய்யோ' என தென்னிலங்கைவாசிகளும் வணங்குகின்றனர். ஈஸ்வரனை வட இலங்கையில் சிறப்பாகவும், தென்னிலங்கையில் பொதுவாகவும் வழிபாடு செய்கின்றனர். தென்னிலங்கையில் ஈஸ்வரங்கள் மலிந்திருந்தன என்று மகாவம்சம் குறிப்பிடுகின்றது. சிங்கள மன்னர்களில் பலர் சிவநெறியை சிந்தையிற் கொண்டு, அரசு செய்ததோடு தமக்கு சிவன் என்ற பெயரையும் (மூத்தசிவன்) சூடிக் கொண்டனர்.

இலங்கையின் வரலாற்றைக் கூறும் பெரும்பான்மை இனத்தவரின் மகாவம்சம் கூறும் செய்திகள், விஜயன் காலத்திற்கு முன்னே ஈழத்தில் சிவாலய வழிபாடு இருந்தமைக்கு பல எடுத்துக்காட்டுகளை உள்ளடக்கியுள்ளமை நோக்கத்தக்கது. உலகிலுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க சிவாலயங்களில் கௌரியம்பாள் சமேத திருக்கேதீச்சரநாதர் ஆலயம் தலைசிறந்ததாகும். இவ்வாலயம் பாடல் பெற்ற தலமாகும். திருஞானசம்பந்தர், சுந்தரர் உட்பட சேக்கிழாரின் பெரியபுராணத்திலும் இவ்வாலயச் சிறப்பினை பாடலாக பாடியிருப்பதை அறிகின்றோம்.  

சோழ, பாண்டிய மன்னர்கள் உட்பட இலங்கையின் கடைசித் தமிழ் மன்னன் சங்கிலியன் வரை இவ்வாலயத்திற்கு  திருப்பணிகள் செய்துள்ளார்கள். கி.பி.1505இல் காலியில் வந்திறங்கிய போர்த்துக்கேயர் பின்னர், பெரும் வணிகத்துறையாகவும், பட்டினமாகவும் விளங்கிய மாதோட்டத்திற்கும் வந்து பிரம்மாண்டமான திருக்கோயிலாக விளங்கிய திருக்கேதீச்சர சிவாலயத்தைப் பார்த்து அதிசயித்து வியந்தது  

மட்டுமல்ல, அவ்வாலயத்திலிருந்த விக்கிரகங்கள், இரத்தினங்கள், பொன், பவளங்கள், பொருள்  

ஆபரணங்களையெல்லாம் கொள்ளையடித்ததுடன், ஆலயத்தையும் இடித்து தரைமட்டமாக்கினர். இப்பெரும் கோயில் மண்ணுள் புதைந்து, காடுகள் அடர்ந்து, தன்பொலிவை இழந்து, கண்ணுக்குப் புலப்படாமல் மறைந்து போனது. இப்பகுதியில் பல வருடங்களின் பின்னர் விவசாயம் செய்ய முனைந்த விவசாயிகளின் கலப்பையில் சில விக்கிரகங்கள் கிடைக்கப் பெற்றன. சைவமக்கள் முந்நூறு வருடங்களுக்கு மேலாக மனதிலே வைத்து பூஜித்த ஆலயத்தை மீண்டும் பெற வழிபிறந்தது.  

இச்செய்தியை அறிந்த நல்லைநகர் ஆறுமுகநாவலர் பெருமான், கல்லுக்குவியலாகவும், மணல், மண் மேடையாகவும் புதர் மண்டிக் கிடந்த இவ்விடம்தான் மாதோட்டம் என்ற வாணிபத்துறைக்கருகில் அமைந்திருந்த திருக்கேதீச்சரமே என்பதை உணர்ந்து முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் நாம் இழந்த பழைமையும் பெருமையும் மிக்க திருக்கேதீச்சரம் ஆலயம் என அறிந்து 'சைவ மக்களே தேன்பொந்து ஒன்று கிடைத்து விட்டது. அதைக் காப்பாற்ற புறப்படுங்கள்' என்று சைவ மக்களுக்கு அறைகூவல் விடுத்தார். அப்போது அரசாங்க அதிபராக இருந்த துவையினர் துரையிடம் கோயிலையும் காணியையும் சைவ மக்களிடம் ஒப்படைக்கும்படி வேண்டுகோள் விடுத்தார்.

அக்கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படவில்லை. நாவலர் அவர்கள் இறைவனடி சேர்ந்த பின்னர் அவருடைய எண்ணம் நிறைவேறியது. சைவமக்கள் 46ஏக்கர் நிலத்தை பிரித்தானிய அரசிடம் இருந்து ஏலத்தில் வாங்கி நாட்டுக்கோட்டை நகரத்தாரின் உதவியோடும் காரைக்குடி வம்சத்தாரின் அனுசரணையோடும் நிலத்தை கோயில்  

சொத்தாக்கினர். பின்னர் யாழ்ப்பாணத்து சைவமக்களும் இலங்கை சைவமக்களும் மலேசியா உட்பட்ட நாட்டவர்களும் கொடுத்த நிதி இவர்களுடைய பணிகளுக்கு ஊக்கமளிப்பதாக விளங்கியது.  பின்னர் 1894ஆம் ஆண்டு நடைபெற்ற அகழ்வாராய்ச்சியின் பயனாக இவ்வாலயம் கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வாலயத்தின் இடப்பரப்பை சைவமக்கள் மீண்டும் பெறும் வகையில் நாவலர் அவர்களின் கனவை நனவாக்க அப்புக்காந்து நாகலிங்கம், பசுபதி செட்டியார் முதலானோர் யாழ்ப்பாணத்திலும், கொழும்பிலும் சைவமக்களிடம் நிதி திரட்டி நாற்பத்தாறு ஏக்கர் நிலத்தை மீட்டெடுத்தனர். கொழும்பு நகரத்தார் எனப்படும் வர்த்தகப்பெருமக்களும், பழனியப்பன் செட்டியார் உட்பட யாழ்ப்பாண சைவமக்களும் இத்திருப்பணிக்கெல்லாம் துணை நின்று பெரும் தொண்டாற்றினர்.  

இத்திருப்பணிகளைத் தொடர்ந்து 1903.06.28முதலாவது கும்பாபிஷேகம் நடைபெற்றதாக அறியக் கிடைக்கின்றது. இவ்வாலய பரிபாலனத்திற்காக கொழும்பில் திருப்பணிச்சபை அமைக்கப்பட்டது. அதன் அயரா முயற்சியினாலும், தன்னலமற்ற சேவையினாலும் இவ்வாலயம் பரிணாம வளர்ச்சி கண்டு சிறப்புற்று விளங்க பல கும்பாபிஷேகங்கள் காலத்துக்கு காலம் நடைபெற்றன.  

இவ்வாலயத்தில் தற்போது நடைபெற்று வரும் திருப்பணியில் இந்திய அரசின் பங்கும், பணியும் மகத்தானவை. முழுக்க முழுக்க கற்கோயிலாகவும், கலைப்பொக்கிஷமாகவும் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஆலயத்திற்கான கற்தூண்கள் வரலாற்றையும், சிற்பக்கலையின் சிறப்பையும் உணர்த்தும் வண்ணம் இந்தியாவிலே வடிவமைத்து பொலியப்பட்டு, அவை கப்பலில் ஏற்றிக் கொண்டு இங்கு கொண்டு வந்து ஆலயத்தில் அமைத்துள்ளார்கள். இலங்கைக்கும் இந்தியாவுக்குமான கலாசார உறவுகள் தொன்மையானவை. இந்திய அரசினால் 310மில்லியன்  

செலவு செய்யப்பட்டுள்ளது. உலக பிரசித்தி பெற்ற கணபதி ஸ்தபதியும் அவரது பிள்ளைகளும் இப்பணியில் தம்மை அர்ப்பணித்து சேவையாற்றியுள்ளனர். மாமல்லபுரத்திலிருந்து அழைத்து வரப்பட்ட சிற்பிகளும் இலங்கை சிற்பிகளும் இணைந்து தம் கைவண்ணத்தை காட்டியுள்ளார்கள்.  

ஆலயத்தின் கருவறை விமானமும், ஏனைய சந்நிதிகளின் விமானங்களும் தனிக்கருங்கல்லினால் அமைக்கப்பட்டிருப்பது தனிச்சிறப்பாகும். உட்பிரவாகமும் கருங்கல்லினால் புனரமைக்கப்பட்டுள்ளது.  

இவ்வாலயத் திருப்பணியில் காலத்திற்குக் காலம் பல சைவத்தொண்டர்களும், மெய்யடியார்களும் பங்குபற்றி திருப்பணிச்சபைக்கூடாக சேவையாற்றுகின்றனர். இவர்களில் பழனியப்பச் செட்டியார், பெரியார் நமசிவாயம், கைலாசபிள்ளை. கந்தையா நீலகண்டன், சோமசுந்தரம், சிவபாதசுந்தரம், கைலாசபிள்ளை, ஆறு திருமுகன், தற்போதைய திருப்பணிச்சபையின் தலைவர் செல்வரத்தினம் இராகவன், இணைச்செயலாளர் சிவசம்பு  

இராமகிருஷ்ணன் ஆகியோர் உட்பட பல சமயப் பெரியார்கள் அருஞ்சேவையாற்றியுள்ளனர்.  

எதிர்வரும் 6ஆம் திகதி புதன்கிழமை காலை 9.00மணிமுதல் 10.30மணி வரையான உத்தர நட்சத்திரம் சிம்மலக்கின நன்முகூர்த்தத்தில் கும்பாபிஷேகம் நடைபெற திருவருள் கூடியுள்ளது. இவ்வாலயத்தின் கும்பாபிஷேகத்தை சிறப்பிக்க மதுரை ஆதீனம், தருமபுர ஆதீனம், திருவாவடுதுரை ஆதீனம், நல்லை ஆதீனம் உட்பட பல ஆதீனங்களின் இளைய பட்டங்கள் வருகை தந்து வரவேற்கும் பணிகளிலும், சமய பணிகளிலும் முன்னிற்பது பெருமைக்குரியது.

இராமநாதன் சியாமளாதேவி...?   நன்றி தினகரன் 

No comments: