இலங்கைச் செய்திகள்

ஜப்பான் தூதுவர் வடக்கில் பல்வேறு தரப்பினருடனும் கலந்துரையாடல்

அரசியலமைப்புக்கான 22ஆம் திருத்தம்; வர்த்தமானி வெளியீடு

20 மில்.டொலர் வழங்கிய அமெரிக்கா: அமெரிக்க ஜனாதிபதிக்கு கோட்டாபய நன்றி தெரிவிப்பு

3 ஆண்டுகளின் பின் யாழ். நல்லைக் கந்தன் மஹோற்சவம்

மேலும் 3 மாவட்டங்களில் ஒருநாள் கடவுச்சீட்டு சேவை

21ஆவது திருத்தம் தோல்வி 22ஆவது திருத்தம் சமர்ப்பிப்பு

முற்பதிவின் அடிப்படையில் வாரத்தில் 3 நாட்கள் இந்திய வீசா சேவை


ஜப்பான் தூதுவர் வடக்கில் பல்வேறு தரப்பினருடனும் கலந்துரையாடல்

வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மிசுகோஷி ஹிடேகி சமகால நிலைமைகள் தொடர்பில் பல்வேறுபட்ட தரப்புக்களுடனும் சந்திப்புக்களை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  

நேற்றைய தினம் புதன்கிழமை யாழ் மாநகர முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனை யாழ் மாநகர சபையில் வைத்து சந்தித்து கலந்துரையாடினார். இச்சந்திப்பில் யாழ்.மாநகர ஆணையாளர் இ.த.ஜெயசீலனும் உடனிருந்தார். இதன்போது மாநகர முதல்வரால் ஜப்பான் தூதுவருக்கு நினைவுப்பரிசும் வழங்கப்பட்டது.

இச்சந்திப்பின்போது பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டன, ஜப்பான் கடந்த காலங்களில் யாழ் மாநகர சபையின் எல்லைக்குள் செய்துவந்த பொருளாதார மற்றும் அபிவிருத்தி பணிகளுக்கு யாழ் மாநகர முதல்வர் என்ற வகையிலும் மாநகர மக்கள் சார்பிலும் நன்றி தெரிவிக்கப்பட்டது. அத்துடன் இலங்கையில் சமாதானம் நிலவிய காலத்தில் ஜப்பானால் சமாதான பேச்சுவார்த்தைக்கு காத்திரமான பங்களிப்பு செய்யப்பட்டது குறிப்பாக இலங்கைக்கான விசேட தூதுவர் யசுசி அகாஷி அந்த பணிகளிலேயே ஈடுபட்டிருந்தார். அதேபோன்று நிரந்தர அரசியல் தீர்வுக்கு ஜப்பானிய அரசு பங்களிப்பு செய்ய வேண்டும் என்றும் சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் ஜப்பான் தூதுவரிடம் யாழ்.மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் ஜப்பானிய தூதுவரிடம் கேட்டுக்கொண்டார்.

இலங்கைக்கான ஐப்பானிய தூதுவர் H.E. Mr.MIZUKOSHI Hideaki  முல்லைத்தீவு விசுவமடுக்குளம் பனை தென்னைவள அபிவிருத்தி கூட்டுறவு சங்கத்திற்கு விஜயம் மேற்கொண்டு அங்கிருந்து ஐப்பானிய உதவியில் இயங்கிவரும் தேங்காய் எண்ணெய் உற்பத்தி செயற்பாடுகளை பார்வையிட்டுள்ளார்.

நேற்று ஐப்பான் நாட்டின் நிதியுதவியில் 2மில்லியன் ரூபா செலவிலான நவீன இயந்திரங்கள் தேங்காய் எண்ணை உற்பத்திக்காக வழங்கிவைக்கப்பட்டுள்ளன.

இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மிசுகோஷி ஹிடேகி நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு  தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை கொக்குவிலிலுள்ள தனியார் விருந்தினர் விடுதியில் சந்தித்தனர்.

இச்சந்திப்பில் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, புளொட்டின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் பங்கேற்றனர். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள ஜப்பான் தூதுவர் சமகால நிலைமைகள் தொடர்பில் பல்வேறுபட்ட தரப்புக்களுடனும் சந்திப்புக்களை மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பருத்தித்துறை விசேட, யாழ். விசேட நிருபர்கள்  - நன்றி தினகரன் 
அரசியலமைப்புக்கான 22ஆம் திருத்தம்; வர்த்தமானி வெளியீடு

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அரசியலமைப்பை திருத்துவது தொடர்பான சட்டமூலம் உள்ளடங்கிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

நேற்றைய திகதியில் (29) வெளியிடப்பட்டுள்ள, அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம்,  நீதி, சிறைச்சாலை அலுவல்கள் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவினால் வெளியிடப்பட்டுள்ளது.

இருபத்திரண்டாவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான அடிப்படைச் சட்டமூலத்திற்கு கடந்த ஜூன் 20ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கொள்கை ரீதியான அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது.

அதற்கமைய, சட்டவரைஞரால் இருபத்திரண்டாவது அரசியலமைப்பு திருத்தம் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த சட்டமூலம் அரசியலமைப்புக்கு எதிரானது அல்ல என்பது சட்டமா அதிபரால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய, இருபத்திரண்டாவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கும் நீதி, சிறைச்சாலைகள் விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் இவ்வாரம் (28) சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.   நன்றி தினகரன் 
20 மில்.டொலர் வழங்கிய அமெரிக்கா: அமெரிக்க ஜனாதிபதிக்கு கோட்டாபய நன்றி தெரிவிப்பு

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நன்றி தெரிவித்துள்ளார்.  

800,000இற்கு மேற்பட்ட இலங்கை சிறார்களுக்கும், 27,000க்கும் மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு உணவளிப்பதற்காக 20மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்திருந்தார்.   நேற்று முன்தினம்(28) இடம்பெற்ற ஜி7உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இவ்விடயத்தை தெரிவித்தார்.  

இது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஜோ பைடனுக்கு நன்றி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இது குறித்து பதிவிட்டுள்ள ட்விட்டர் குறிப்பில், 800,000 க்கும் மேற்பட்ட இலங்கை சிறார்களுக்கும், 27,000 க்கும் மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு உணவளிப்பதற்காக 20 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளமைக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த நெருக்கடியான நேரத்தில் அமெரிக்கா வழங்கிய உதவிகளுக்கு இலங்கை மக்கள் நன்றியுள்ளவர்களாக இருப்பர் என தெரிவித்துள்ளார்.  நன்றி தினகரன் 
3 ஆண்டுகளின் பின் யாழ். நல்லைக் கந்தன் மஹோற்சவம்

- இம்முறை சிறப்பாக நடத்த ஏற்பாடு

யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவத்தை மூன்று வருடங்களின் பின்னர் இம்முறை மிகச் சிறப்பாக நடத்த திட்டமிட்டுள்ளதாக யாழ் மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்தார்.

திருவிழா ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் நேற்று புதன்கிழமை யாழ் மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் நடைபெற்றது.

உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பு, கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த மூன்று வருடங்களாக மட்டுப்படுத்தப்பட்டளவில் நடைபெற்ற நல்லூர் ஆலய மஹோற்சவம் 2018 ஆம் ஆண்டுக்கு முன்பு எவ்வாறு நடந்தப்பட்டதோ அதேபோன்று இம்முறையும் நடைபெறுமென யாழ் மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

எதிர்வரும் ஒகஸ்ட் 01ஆம் திகதி காலையிலிருந்து நல்லூர் ஆலய சுற்று வீதிகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு ஒகஸ்ட் 29 ஆம் திகதி வைரவர் சாந்தி நிறைவடைந்த பின்னரே திறந்து விடப்படும்.

ஆலய வெளி வீதியைச் சூழ ஆலய நிர்வாகத்தினரால் சிவப்பு, வெள்ளை வர்ணக் கொடிகளால் எல்லையிடப்படும் வீதித்தடை பகுதிகளினுள் மாநகர சபையின் நீர் விநியோக வண்டி மற்றும் கழிவகற்றும் வண்டியை தவிர எக்காரணம் கொண்டும் வாகனங்கள் உட் செல்ல முடியாது.

அதேபோன்று வெள்ளை வர்ணக் கொடிகளால் எல்லையிடப்படும் வீதித்தடை பகுதிகளினுள் எந்தவிதமான வியாபார நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியாது. ட்ரோன் கமராக்களை பயன்படுத்தி காணொளி பதிவுசெய்ய முடியாது. காலணிகளுடன் ஆலய வளாகத்துக்குள் பிரவேசிக்க முடியாது. ஆலயத்துக்கு நேர்த்திக்கடன்களைக் கழிப்பதற்காக வருகின்ற தூக்குகாவடிகள் அனைத்தும் ஆலயத்தின் முன்பக்க பருத்தித்துறை வீதி வழியாக மட்டுமே உள்நுழைய முடியும். அவ்வாறு வருகின்ற காவடிகள் இறக்கப்பட்டதும், வாகனங்கள் அனைத்தும், செட்டித்தெரு வீதி வழியாக வெளியேறுவதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.

வீதி மூடப்பட்டிருக்கும் சமயங்களில் பருத்தித்துறை வீதி வழியாக வரும் வாகனங்கள் யாழ் மாநகர சபைக்கு முன்பாக உள்ள வீதியால் பயணித்து யாழ் நகரை அடைய முடியும். ஆனால் இரதோற்சவம் மற்றும் சப்பர திருவிழாக்களின் போது கச்சேரி நல்லூர் வீதியாலேயே பயணிக்க முடியும். இம்முறை திருவிழாவின் போது ஒவ்வொரு தனி மனிதனும் தங்களது சுகாதாரத்தில் கவனம் எடுத்து செயல்பட வேண்டும். இவை தவிர எதிர்வரும் காலங்களில் தேவைப்படும்போது கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவிப்புகளை வெளியிடுவோம் என்றார். இந்தக் கலந்துரையாடலில் யாழ். மாநகர முதல்வர், மாநகர ஆணையாளர், மாநகர பிரதிமுதல்வர், நல்லூர் ஆலய பரிபாலகரின் பிரதிநிதிகள், மாநகர சபை உறுப்பினர்கள், மாநகர அதிகாரிகள், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் உட்பட சம்பந்தப்பட்ட துறைசார் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

யாழ். விசேட நிருபர் - நன்றி தினகரன் 
மேலும் 3 மாவட்டங்களில் ஒருநாள் கடவுச்சீட்டு சேவை

- யாழ். அலுவலகத்தை சொந்த நிதியில் மேம்படுத்தவும் முடிவு

வவுனியா/ யாழ்ப்பாணம், கண்டி, மாத்தறை ஆகிய குடிவரவு, குடியகல்வு பிராந்திய அலுவலகங்களிலும் ஒருநாள் சேவை ஆரம்பிக்கப்படும் என முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார். அந்த வகையில் எதிர்வரும் திங்கட்கிழமை (04) முதல் இதனை நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கடவுச்சீட்டு ஒருநாள் சேவை துரிதப்படுத்தப்படும். இதற்காக யாழ்ப்பாணம், கண்டி, மாத்தறை ஆகிய பிராந்திய அலுவலகங்களிலும் ஒருநாள் சேவை ஆரம்பிக்கப்படும்.

இதன்முதல் கட்டமாக, யாழ்ப்பாணத்தில் உள்ள குடிவரவு, குடியகல்வு அலுவலகத்தில் எனது பிரத்தியேக பணத்தை முதலீடு செய்து ஒருநாள் சேவை ஆரம்பிக்கப்படும் என்றார். தற்போது கடவுச் சீட்டைப் பெறுவதற்கு நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலைமை மாற்றியமைக்கப்படும். இதனைத் தவிர மேலும் ஐந்து இடங்களில் பிராந்திய அலுவலகங்களையும், ஒருநாள் சேவையையும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது எனவும் அமைச்சர் தம்மிக்க பெரேரா குறிப்பிட்டார்.

நன்றி தினகரன் 
21ஆவது திருத்தம் தோல்வி 22ஆவது திருத்தம் சமர்ப்பிப்பு

- அனைவரது ஒத்துழைப்புடனும் அரசு நிறைவேற்றும்

அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம் தோல்வியடைந்துள்ளதால் வெற்றியளிக்கக் கூடிய வகையில் 22 ஆவது திருத்தம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதனை அனைவரது ஒத்துழைப்புடனும் நிறைவேற்ற அரசாங்கம் எதிர்பார்ப்பதாக இணை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் குறிப்பிட்டதாவது, 21 ஆவது அரசியலமைப்பு திருத்த யோசனையை ஐக்கிய மக்கள் சக்தி முன்வைத்தது. அது நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டு நீதிமன்ற தீர்ப்பு வெளியாகியுள்ளது. சபாநாயகர் அதனை அறிவித்தார். அதனை செயற்படுத்த தடைகள் உள்ளன. அவற்றில் அநேகமானவற்றுக்கு சர்வஜன வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.அவ்வாறாயின் 21 ஆவது திருத்தம் வெற்றியளிக்காது. அதனால் தான் 22 ஆவது திருத்தமாக அதனை அரசாங்கம் முன்வைத்துள்ளது. தோல்வியடையும் யோசனையாக அன்றி வெற்றியளிக்கும் திருத்த யோசனையாக 22 ஆவது திருத்தம் முன்வைக்கப்பட்டுள்ளது. வெளிப்படைத்தன்மையுடன் இந்த திருத்தம் முன்வைக்கப்பட்டுள்ளது.20 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள அதிகாரங்கள் பற்றித் தற்போது நாட்டில் பெரும் சர்ச்சைக்குரிய நிலைமைகள் தோன்றியுள்ளமையால், 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தில் காணப்படுகின்ற நன்மைபயக்கும் பிரிவுகளை மீண்டும் அறிமுகப்படுத்துமாறு கோரிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இந்நிலைமையின் கீழ் தற்போது முகம்கொடுக்க நேர்ந்துள்ள நெருக்கடி நிலைமைகளைக் கருத்தில் கொண்டு நிறைவேற்று அதிகார ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத்திற்குமிடையில் அதிகாரச் சமநிலையை ஏற்படுத்தும் வகையில் பாராளுமன்றத்துக்கும் பொதுமக்களுக்கும் கூட்டாகப் பொறுப்புக் கூறும் அமைச்சரவைக்கும் மற்றும் அரசியலமைப்புப் பேரவைக்கும் ஒருசில அதிகாரங்களை ஒப்படைக்கும் வகையிலும் அரசியலமைப்பில் திருத்தம் மேற்கொள்வது பொருத்தமானதென அடையாளம் காணப்பட்டுள்ளது. அதற்கமைய, நீதி, சிறைச்சாலைகள் விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் சமர்ப்பித்துள்ள அடிப்படைச் சட்டமூலத்துக்கு அமைச்சரவை கொள்கை ரீதியான அங்கீகாரத்தை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளது.

ஷம்ஸ் பாஹிம்

நன்றி தினகரன் 
முற்பதிவின் அடிப்படையில் வாரத்தில் 3 நாட்கள் இந்திய வீசா சேவை

இந்திய வீசா விண்ணப்ப முகவர் நிலையமான IVS, வாரத்தில் 3 நாட்கள் மாத்திரமே வீசா விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளுமென, இந்திய உயர் ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.

இந்திய உயர் ஸ்தானிகராலயம் விடுத்துள்ள அறிவித்தலிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய எதிர்வரும் திங்கட்கிழமை, ஜூலை 04 ஆம் திகதி முதல் செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை ஆகிய நாட்களில் மாத்திரம் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஜூலை 04ஆம் திகதி திங்கட்கிழமையும் எந்த விதமான முன்பதிவுகளும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்பது குறிப்பிடத்தக்கவிடயமாகும்.

குறித்த தினங்கள் உயர் ஸ்தானிகராலயத்தினால் அறிவிக்கப்பட்டிருக்கும் விடுமுறை நாட்களாக இருந்தால் அத்தினங்களிலும் எதுவிதமான சேவைகளும் இடம்பெறமாட்டாது.

சகல வீசா விண்ணப்பதாரிகளும் முற்கூட்டியே பதிவுகளை மேற்கொள்ளும்படி வேண்டப்படுவதுடன் மறு அறிவித்தல் வரையில் வீசா விண்ணப்பங்களை மேலே கூறப்பட்ட தினங்களில் மாத்திரம் IVS நிலையத்தில் சமர்ப்பிக்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய சூழ்நிலையினை கவனத்தில்கொண்டு, வீசா சேவையினை பெற்றுக்கொள்ளும் இலங்கை மற்றும் ஏனைய நாடுகளைச் சேர்ந்த பிரஜைகளின் சௌகரியங்களுக்கு முக்கியத்துவமளித்து, தமது பணியாளர்களின் போக்குவரத்து தொடர்பிலும் கவனத்தில் கொண்டு குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, உயர் ஸ்தானிகராலயம் சுட்டிக்காட்டியுள்ளது.    நன்றி தினகரன் 


No comments: