எழுத்தும் வாழ்க்கையும் ( இரண்டாம் பாகம் ) அங்கம் – 20 அவலமான செய்திகளை தமிழரிடம் விட்டுச்சென்ற ஆயுததாரிகள் ! கருங்கல்லில் செதுக்கமுடிந்த சிலையும் அம்மியும் ! முருகபூபதி


தொடர்பாடல் அற்ற சமூகம் உருப்படாது என்பார்கள். ஒரு காலத்தில் பேனா நண்பர்கள் இருந்தார்கள்.  ஆனால், தற்போது, முகநூல் நண்பர்கள் பெருகியிருக்கிறார்கள்.

இதனால், பலனும் உண்டு.  பயமும் உண்டு.  அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும்.

எனக்கு பேனா நண்பர்கள் இருந்ததில்லை. முகநூலிலும் கணக்கு இல்லை. வழக்கம்போன்று முன்னர் எனது நண்பர்களுக்கு கடிதங்கள்தான் எழுதிவந்தேன்.  மின்னஞ்சல் அறிமுகமானதும் அதன் ஊடாக தொடர்பாடல்களை வளர்த்து வருகின்றேன்.

காலை எழுந்தவுடன் முதலில் நான் விழிப்பது, எனக்கு வரும்


மின்னஞ்சல்களில்தான். ஒதுக்கவேண்டியவற்றை ஒதுக்கி, பதில் எழுதவேண்டியவர்களுக்கு சுருக்கமாகவேனும் எழுதிவிட்டுத்தான் அடுத்த வேலையை கவனிப்பேன்.

நான் அவுஸ்திரேலியாவுக்கு வந்த புதிதில் தினமும் ஒரு கடிதம் அல்லது இரண்டு கடிதம் என்ற வீதத்தில் மாதத்தில் முப்பதிற்கும் மேற்பட்ட கடிதங்கள் எழுதி தபாலில் சேர்த்துவிடுவேன், என்று இதற்கு முன்னரும் இந்தத் தொடரில் எழுதியிருக்கின்றேன்.

1988 ஆம் ஆண்டு இலங்கை மாணவர் கல்வி நிதியத்தை ஆரம்பித்தவுடன், பலருக்கும்  கடிதம் எழுதநேர்ந்தது.  முக்கியமாக வடக்கில் எனக்கு நன்கு தெரிந்த எழுத்தாளர்களான ஆசிரியர்கள் தெணியான், கோகிலா மகேந்திரன் ஆகியோருக்கு எமது கல்வி நிதியத்தின் நோக்கம் பற்றி தெரிவித்து,  போரிலே தந்தையை அல்லது குடும்பத்தின் மூல  உழைப்பாளியை இழந்த  மாணவரின் விபரங்களை அனுப்பிவைக்குமாறு கேட்டு எழுதியிருந்தேன்.

தெணியான் வடமராட்சி தேவரையாளி இந்துக் கல்லூரியிலும் கோகிலா மகேந்திரன் தெல்லிப்பழை மகாஜனா கல்லுரியிலும் பணியாற்றிக் கொண்டிருந்தனர்.

வீரகேசரியில் பணியாற்றிய காலத்தில் எனக்கு நன்கு அறிமுகமான சட்டத்தரணியும் மருத்துவருமான சண்முகம் ஞானசேகரன் ( ஞானி ) திருகோணமலை மாவட்டம் இந்து இளைஞர் போரவையின் துணைப் பொதுச் செயலாளராகவும் கிழக்கிலங்கை புனர் வாழ்வுக்கழகத்தின் திருகோணமலைப்பிரிவின் பொதுச் செயலாளராகவும் தீவிரமாக இயங்கிக்கொண்டிருந்தார். இவருக்கும் கடிதங்கள் எழுதியிருந்தேன்.


அவர்கள் அனுப்பிய  பாதிக்கப்பட்ட மாணவர்களுடைய விபரங்களை கவனித்து, அவர்கள் ஊடாகவே நிதியுதவியையும் அனுப்பிவைத்தேன். அம்மாணவர்களுக்கு உதவும் அன்பர்களை மெல்பனில் தெரிவுசெய்திருந்தேன். வவுனியாவில் வேப்பங்குளத்தில் தனது தந்தையை இராணுவத்தின் துப்பாக்கிச்சூட்டில் இழந்த ஒரு மாணவியை நான் பொறுப்பெடுத்தேன்.

தினமும் எனது குடியிருப்பு தபால் பெட்டிக்கு வரும் கடிதங்களை பார்த்து,  பதில் எழுதுவதும் நாளாந்த பணியாகியது.

கல்வி நிதியத்திற்கு அப்போது தபால் பெட்டி இருக்கவில்லை. நண்பர் இராஜரட்ணம் சிவநாதன்,  West Foots Cray பிரதேசத்தில் தபால் நிலையத்தில்  தான் வைத்திருந்த அஞ்சல் பெட்டியின் இலக்கம் தந்திருந்தார்.  அதற்கும் மாணவர்களுக்காக உதவி கோரும் கடிதங்கள் வந்தன. பின்னாளில் சட்டத்தரணி ரவீந்திரன் அண்ணர் கல்வி நிதியத்திற்கென அமைப்பு விதிகள் எழுதித்தந்து மெல்பனில் Consumer Affairs   இல் பதிவுசெய்யப்பட்ட தன்னார்வத்தொண்டு நிறுவனமாக உருவாக்கப்பட்ட பின்னர்,  நான் வசித்த Brunswick பிரதேசத்திலிருந்த தபால் அலுவலகத்தில் அஞ்சல் பெட்டி தெரிவானது.

கிழக்கில் திருகோணமலை மாவட்டத்திலும் வடக்கில் யாழ்ப்பாணம்


மற்றும் வவுனியா மாவட்டத்திலும் நாம் உதவத் தொடங்கிய மாணவர்களின் விபரங்களை அவரவர் படத்துடன் வெளியிட்டு ஒரு அறிக்கையை தயாரித்து வெளியிட்டேன். அதன் பிரதிகள் வடக்கு – கிழக்கு மாணவர் கண்காணிப்பாளர்களுக்கும் தபாலில் சென்றன.

அக்காலப்பகுதியில் பத்திரிகையாளர் எஸ். திருச்செல்வம் யாழ்ப்பாணத்தில் முரசொலி பத்திரிகையை வெளியிட்டு வந்தார். இவர் முன்னர் யாழ். ஈழநாடு , கொழும்பு தினகரன் ஆகிய பத்திரிகைகளிலும் பணியாற்றியவர். 1983 கலவரத்தையடுத்து தனது ஏக புதல்வன் அகிலனுடனும் மனைவியாருடனும் யாழ்ப்பாணத்திற்கு இடம்பெயர்ந்து, தொடர்ந்தும் தினகரனுக்கு செய்திகளை எழுதிக்கொண்டிருந்தவர். பின்னர் யாழ்ப்பாணத்தில் ஈழமுரசு பத்திரிகையிலும் பணியாற்றிவிட்டு, முரசொலி பத்திரிகையை ஆரம்பித்திருந்தார்.

இந்த பத்திரிகையில்தான் தெணியானின் பொற்சிறையில் வாடும் புனிதர்கள் தொடர்கதையும் வெளியானது.


நண்பர் தெணியான்,  நான் அவருக்கு அனுப்பிய  உதவி பெறும் மாணவர்கள் பற்றிய அறிக்கையை நண்பர் திருச்செல்வத்திடம் காண்பித்திருக்கின்றார்.  சமூகப்பயன்பாடு மிக்க செய்தியறிக்கையாக அது அமைந்திருப்பதை அவதானித்த திருச்செல்வம் தாமதமின்றி அதனை தமது முரசொலி பத்திரிகையில் வெளியிட்டார். குறிப்பிட்ட செய்தியறிக்கை முரசொலியில் 25 - 04 – 1989 ஆம் திகதியன்று வௌியானது.

அதன் நறுக்கை தெணியான் எனக்கு அனுப்பியிருந்தார். அதனைப்படித்த போரில் பாதிக்கப்பட்டு தமது கணவர்மாரை இழந்த பல பெண்கள் தங்கள் விபரங்களை அனுப்பினார்கள்.

வலிகாமம் வடக்கு பிரஜைகள் குழுக்கள் ஒன்றியத்தின் பொதுச்செயலாரும் சமூகப்பணியாளருமான கே. சி. சிவமகாராஜாவும் தாங்கள் நடத்தும் வாழ்வகம் அமைப்பின் அறிக்கையுடன் விரிவான கடிதம் எழுதியிருந்தார்.

சிவமகாராஜா பின்னாளில் நாடாளுமன்ற உறுப்பினராகவும் தெரிவாகியிருந்தவர்.  அத்துடன் ஊடகவியலாளர். 

இலங்கையில் இந்திய அமைதிப்படை பிரவேசித்த காலப்பகுதியில்


அவுஸ்திரேலியாவுக்கு வருகை தந்திருந்த இந்திய வெளியுறவு அமைச்சர் பி. வி. நரசிம்மா ராவ் பற்றிய செய்தியை கடந்த அங்கத்தில் எழுதியிருந்தேன்.

இந்தியப்படைக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் மோதல் எவ்வாறு ஆரம்பித்தது என்பது பற்றி பலரும் பலவிதமாக பேசியும் எழுதியும் வருகிறார்கள். அந்த எதிர்பாராத மோதல் தொடர்ச்சியாக பக்கவிளைவுகளை ஏற்படுத்தி, இறுதியில் 2009 ஆண்டு மே மாதத்துடன் முடிவுக்கு வந்தது.

எனினும் அந்த மோதலின் நதிமூலம் – ரிஷிமூலம் தெரியாமல், கோழி முதலில் வந்ததா..? முட்டை முதலில் வந்ததா …? என்ற ரீதியில் இப்போதும் பட்டிமன்றங்கள் நடக்கின்றன.

அந்த மோதல் எத்தனை இன்னுயிர்களை – அதிலும் நிராயுத பாணிகளான அப்பாவி மனித உயிர்களை பலிகொண்டது என்பதற்கு இதுவரையில் சரியான புள்ளி விபரங்கள் இல்லை.


ஆனால், இன்றும் உண்ணாவிரதம் இருந்து உயிர்த்தியாகம் செய்த திலீபனுக்கு நினைவேந்தல் நிகழ்ச்சிகள் இலங்கை உட்பட தமிழர் புலம் பெயர்ந்த நாடுகள் எங்கும் வருடாந்தம் நடக்கின்றன.

இந்திய அமைதிப்படை இலங்கையில் நிலைகொண்டிருந்தபோது வடக்கு – கிழக்கு இணைந்த மாகாண சபைக்கான தேர்தல் நடந்தது.  திரு. அ. வரதராஜப்பெருமாள் முதல்வரானார். இவரும் எழுத்தாளராவார். இவரது எழுத்துக்களை முன்னர் செ. கணேசலிங்கன் வெளியிட்ட குமரன் இதழில் படித்திருக்கின்றேன்.

அந்த மாகாண சபையில் மேலும் இரண்டு எழுத்தாளர்கள் அங்கம் வகித்தனர். அதில் ஒருவர் இஸ்லாமியாரான எஸ். எல். எம். ஹனீஃபா.  மற்றவர் ஊடகவியலாளர் தயான் ஜெயதிலக்க.  

திருகோணமலையில் வடக்கு – கிழக்கு மாகாணசபை அமைந்திருந்தது.

அதனை பாதுகாத்துக்கொண்டிருந்தவர்கள் இந்திய


அமைதிப்படையினர்.  இலங்கை இராணுவம் அதனதன் முகாம்களில் முடக்கப்பட்டிருந்தபோது, இந்திய அமைதிப்படைதான் வடக்கையும் கிழக்கையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.

எமது கல்வி நிதியத்தின் திருகோணமலை மாவட்ட தொடர்பாளர் மருத்துவர் ஞானி – ஞானசேகரன் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டுவிட்டார் என்ற செய்தி கசிந்தது.

விசாரித்து பார்த்தவிடத்தில், இறுதியாக நாம் அனுப்பிய மாணவர்களுக்கான பணத்தை அவர் அங்கிருந்த வங்கியில் வைப்புச்செய்திருந்தார். அதன் பின்னர் அவரைக்காணவில்லை.

ஏற்கனவே யாழ்ப்பாணத்தில்  தமிழ் அகதிகள் புனர்வாழ்வுக் கழகத்தின் நிறுவனர் சட்டத்தரணி கே. கந்தசாமியும் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டிருந்தார்.

பின்னர்  மருத்துவர் ஞானசேகரன். அப்போது மெல்பனில் வசித்த எமது நண்பர் பல்மருத்துவர் ரவீந்திரராஜாவுக்கும் ஞானியை நன்கு தெரியும்.  அவருக்கு தகவல் அனுப்பி எனது வீட்டுக்கு வரவழைத்தேன். அவருக்குத் தெரிந்த பல்கலைக்கழக மருத்துவ பீட  மாணவர் ஒன்றியத்தின் செயலாளரான ஒரு சிங்கள நண்பருக்கு அவர் தகவல் தெரிவித்தார். பல முனைகளிலும் ஞானியை தேடினோம். கிடைக்கவில்லை.


இறுதியில் 08-11- 1989 ஆம் திகதி வடக்கு – கிழக்கு முதல்வர் திரு. அ. வரதராஜப்பெருமாளுக்கு கடிதம் எழுதினேன். அத்துடன் நின்றுவிடாமல் வீரகேசரியில் நிருபர் அன்டன் எட்வேர்ட்டை தொடர்புகொண்டு குறிப்பிட்ட மாகாணசபை முதல்வரின் தொலைபேசி இலக்கம் பெற்றேன்.

நண்பர் ரவீந்திரராஜாவையும் அருகில் வைத்துக்கொண்டு முதல் அமைச்சருடன் பேசுவதற்கு தொலைபேசி தொடர்பை இணைத்தேன். மறுமுனையில் அவர் இல்லை. அழைப்பினை பீட்டர் என்பவர்தான் எடுத்தார்.

அவரிடம் மருத்துவர் ஞானி பற்றிச்சொன்னதும்,  “ எமது கல்வி நிதியத்தின் தொடர்பாளர் பணிக்கு அவரை விட்டால் வேறு ஒருவர் கிடைக்கமாட்டாரா..?   “ என்று கேட்டார்.

எனக்குப் புரிந்துவிட்டது !?

 “ உங்களது ஆளுகைக்குள் இருக்கும் பிரதேசத்தில் ஒரு சமூகத் தொண்டர் காணாமல் போயிருக்கிறார்.  உங்கள் மாகாண சபை இதுதொடர்பாக என்ன நடவடிக்கை எடுத்துள்ளது.  ஞானி இல்லையென்பது உறுதியாகத் தெரியவேண்டும்.  அதன்  பிறகு நாம் மாற்று ஏற்பாடு செய்யவேண்டும்.  அதனை நாங்கள் பார்த்துக்கொள்வோம்.  உடனடியாக உங்கள் முதல்வருடன் பேச வேண்டும்  “ என்றேன்.

அதற்கு அந்த பீட்டர்,  “ முதல்வரின் மாமா, அதாவது முதல்வரின் மனைவியின் தந்தையார் இருக்கிறார். அவரிடம் பேசுங்கள்  “ எனச்சொல்லி ரிசீவரை அவரிடம் கொடுத்தார்.

அவரை  “ அய்யா  “ என விளித்து ஞானி பற்றிச்சொன்னேன்.

 “ இங்கே மோதல்கள் ஆங்காங்கே நடக்கின்றன. அதில் உங்கள் ஞானியும் சிக்கியிருக்கலாம். எதற்கும் முதல்வர் வந்தபின்னர் சொல்கின்றேன்  “ என்றார்.

ஞானி காணாமலே போனார். பின்னாளில் சிலரது சடலங்கள் புதைகுழியொன்றிலிருந்து மீட்கப்பட்டதாக அறிந்தேன். அதில் ஒன்றில் ஞானி இறுதியாக அணிந்திருந்த சேர்ட்டும் அதன் பொக்கட்டில் அவரது தேசிய அடையாள அட்டையும் இருந்ததாக திருகோணமலையிலிருந்து தகவல் கிடைத்தது.

அதன்பின்னர் திருகோணமலை மாவட்ட இந்து இளைஞர் பேரவை ஊடாக அந்த மாவட்ட மாணவர்களுக்கு தொடர்ந்து உதவினோம்.

எமது கல்வி நிதியத்தின் செய்தியறிக்கையை தனது முரசொலி பத்திரிகையில் வெளியிட்ட எஸ். திருச்செல்வத்தின் ஏக புதல்வன் அகிலனும் அக்காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.  யாழ். கோட்டையில் தங்கியிருந்த இந்திய அமைதிப்படையினால் எண்பது நாட்களுக்கு மேல் தடுத்துவைக்கப்பட்டிருந்தவர்தான் திருச்செல்வம்.

அதன் பின்னர்,  அவரது ஏக புதல்வன் அகிலன் சுடப்பட்டு, அந்த இளம் குருத்தின் சடலம் வீதியோரத்தில் கிடந்தது.

எம்முடன் தொடர்பிலிருந்த சமூகப்பணியாளர் சிவமகாராஜாவும் பிறிதொரு சந்தர்ப்பத்தில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

முரசொலி பத்திரிகையில் எமது கல்வி நிதியத்தின் செய்தி வெளியான காலப்பகுதியில், அச்சுவேலியில் ஒரு பூசகர் குடும்பத்திலும் பெரும் துயரம் நிகழ்ந்தது.

அவர்கள் இந்திய அமைதிப்படையிலிருந்த சில  மச்சம் மாமிசம் உண்ணாத சிப்பாய்களுக்கு அவர்கள் அன்றாடம் சாப்பிடும் சப்பாத்திக்காக மரக்கறி உணவு வழங்கியிருக்கிறார்கள்.

அவர்கள் செய்த குற்றம் அதுதான். இந்து மதத்தைச்  சேர்ந்த  இந்திய இராணுவ சிப்பாய்கள்  கேட்டபோது, தட்டிக்கழிக்காமல் செய்து கொடுத்தார்கள். அதன் பலன் அந்த குடும்பத்திலிருந்த மூன்று பிள்ளைகளின் தாயும் தந்தையும் புலிகளினால் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். 

அந்தப்பிள்ளைகளின் சிறிய தாயாருடன் பிள்ளைகள்  இந்திய அமைதிப்படையின் பாதுகாப்புடன் கப்பலில் இராமேஸ்வரம் மண்டபம் முகாமுக்கு அனுப்பிவைக்கப்பட்டார்கள். அந்த சிற்றன்னை முரசொலி  பத்திரிகை நறுக்கையும் தன் வசம் எடுத்துச்சென்று, மண்டபம் அகதி முகாமிலிருந்து கடிதம் எழுதி, கொல்லப்பட்ட தனது சகோதரியின் பிள்ளைகளுக்கு உதவுமாறு கேட்டிருந்தார். அதில் ஒரு பிள்ளையை நான் பொறுப்பெடுத்து தொடர்ந்து உதவினேன். அத்துடன் தமிழகம் சென்ற ஒரு குடும்ப நண்பர் மூலம் மேலும் உதவிகள் செய்து, ஒரு தையல் இயந்திரமும் வாங்கிக்கொடுத்தேன்.

அந்தக்குடும்பம் பின்னர்  சென்னை பெங்களுர் நெடுஞ்சாலையில்  ஶ்ரீபெரும்புதூர்  பிரதேசத்திற்கு இடம்பெயர்ந்தது.  அந்த மாணவி கல்வியை நிறைவுசெய்யும் வரையில் உதவினேன்.

அங்கும் ஒரு கதையிருக்கிறது. இதுபற்றி எனது சொல்ல மறந்த கதைகள் நூலில் ஒரு அங்கம்  “ மனமாற்றமும் மத மாற்றமும்  என்ற தலைப்பில் இடம்பெற்றுள்ளது.

ஒரு பிராமணக் குடும்பத்தில் பிறந்து, தனது குழந்தைகளையும் தனது சகோதரியின் குழந்தைகளையும் பராமரித்த அந்தஇளம்பெண், எனக்கு எழுதிய கடிதங்களில் என்னை அண்ணா என விளித்து எழுதுவார். தொடக்கத்தில்  கடிதத்தின் ஆரம்பத்தில் முருகன் துணை - ஶ்ரீ சித்தி விநாயகர் துணை அல்லது சிவமயம் என்று எழுதியிருப்பார்.

காலப்போக்கில் அந்த வரிகள் மாறிவிட்டன. யேசு இரட்சிப்பார் என்று இருந்தது. நான் திகைத்துவிட்டேன்.

 “ உங்களுக்கு என்னம்மா நடந்தது….?   சிவனையும் பிள்ளையாரையும் முருகனையும் வணங்கிவந்த உங்களுக்கு என்ன நடந்தது..?  “ எனக்கேட்டிருந்தேன்.

அதற்கு வந்த பதில் என்னை பெரும் திகைப்பில் ஆழ்த்தியது:

 “ கருங்கல்லில் பிள்ளையாரையும் செதுக்கலாம்.  அம்மிக்கல்லும் செய்யலாம் 

எனக்குப்  புரிந்துவிட்டது. அந்தப்பெண்மணியையும் குடும்பத்தினரையும் யார் மூளைச்சலவை செய்திருப்பார்கள் என்பதை இதனை வாசிக்கும் வாசகர்கள் புரிந்துகொள்வார்கள்.

இது இவ்விதமிருக்க,  தமிழ் ஈழபோராட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து விடுதலை இயக்கங்களும் தம்மிடம் நீடிக்கும் வேறுபாடுகளை மறந்து ஒற்றுமையாக ஓரணியில் திரளவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வெளியிட்ட அறிக்கையை மெல்பன் 3 E A வானொலியில் ஒலிபரப்புவதற்கு தயங்கிய சோமா சோமசுந்தரம் அண்ணர், திருகோணமலை,  வடக்கு – கிழக்கு மாகாண சபையின் கட்டுப்பாட்டில் இருந்தபோது அங்கே  கடத்தி காணாமலாக்கப்பட்ட மருத்துவர்  ‘ ஞானி  ‘ ஞனசேகரனை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க வேண்டும் என்ற எமது வேண்டுகோள் செய்தியறிக்கையை மாத்திரம் வாசித்து ஒலிபரப்பினார்

தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுடனும் இங்கே வானொலி ஒலிபரப்புகள் இயங்கின. 

இந்த வேடிக்கைகளை தொடர்ந்து  அவதானித்தவாறே இந்த கடல் சூழ்ந்த கண்டத்தில் மூழ்கியிருக்கின்றேன்.

சுமார் 34 ஆண்டுகளை  ( 1988 – 2022 ) நிறைவுசெய்துள்ள எமது கல்வி நிதியம்,  ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கும் முன்னாள் போராளிகளாக இருந்த மாணவர்களுக்கும் சுனாமி கடற்கோள் அநர்த்தத்தில் பாதிப்புற்ற மாணவர்களுக்கும் வறுமைக்கோட்டின் கீழும் மண் சரிவு பாதிப்புகளுக்குமுள்ளான மலையக மாணவர்களுக்கும்  தொடர்ந்து உதவி வருகிறது.

சுநாமி கடற்கோளில் பாதிக்கப்பட்ட கிழக்கிலங்கையைச்சேர்ந்த சுமார் 25 மாணவர்களுக்கும் உதவினோம். அவர்கள் அனைவரும் பல்கலைக்கழகம் பிரவேசித்து பட்டதாரிகளாகி, தற்போது ஆசிரிய பணிகளிலும் மற்றும் அரச – தனியார் துறைகளிலும் பணியாற்றுகின்றனர். சிலர் திருமணமாகி குடும்பஸ்தர்களாகிவிட்டனர்.

இவர்களின் கண்காணிப்பாளராகவிருந்த கிழக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ரவீந்திரநாத் அவர்களும் பின்னாட்களில் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டுவிட்டார்.

தமிழ் மக்களுக்கு விடுதலையை பெற்றுக்கொடுத்து, தமிழ் ஈழம் காண விரும்பிய ஆயுத தாரிகள் எம்மிடம் விட்டுச்சென்றிருப்பது இந்த அவலமான செய்திகளைத்தான்.

( தொடரும் )

 

 

No comments: