அமரர் சின்னையா சிவபாதசிங்கம்
தோற்றம்:
12-11-1932 மறைவு: 2-7-2022
1987 நவம்பர்
மாதம் என்று நினைக்கிறேன். IPKF - புலிகள் மோதல் நிகழ்ந்து கொண்டிருந்த காலம். இந்திய அமைதிப்படை நவாலியூரில் ரோந்து சென்ற போது புலிகளின் கைக்குண்டு
தாக்குதலில் ஒரு அதிகாரி கொல்லப்பட்டதும்
அந்தப் பகுதி முழுவதிலுமே கண்ணில் பட்டவர்களையெல்லாம் சுட்டுக் கொலை செய்தது கூர்க்காப்
படைகள். மக்கள் கோயில்களிலும், தேவாலயங்களிலும் தஞ்சமடைந்திருந்த அந்தப் பகற் பொழுதில் நானும்
ஆலயமொன்றில் தஞ்சமடைந்திருந்தேன்.
நவாலியின் பிரதான சாலையான ஆனைக்கோட்டை , சங்கரத்தை வீதி வெறிச்கோடியிருந்த வேளையில் , சண்டிலிப்பாய்-கட்டுடை ஊடாக காயமடைந்தவர்களை ஏற்றிக் கொண்டு ஒரு கார் யாழ் வைத்தியசாலைக்கு விரைந்து கொண்டிருக்கிறது. காரில் வந்தவர்களுக்கு நவாலியூரில் நிகழ்ந்தது தெரிந்திருந்ததால் காரில் வெள்ளைக் கொடியொன்று கட்டிடப்பட்டிருந்தது. இராணுவ அதிகாரிகள் காரை நிறுத்தினால் நிலைமையை புரிய வைக்கலாம் என்ற அசாத்தியத் துணிச்சலுடனேயே அந்த கார் விரைந்து கொண்டிருந்தது.
பதுங்கியிருந்த
கூர்க்காக்கள் காரின் டயர்களுக்குக் குறிபார்த்துச் சுட்டு காரை நிறுத்தி பிறகு உள்ளிருந்த அனைவரையும்
கொன்றனர். அவர்களைப் பொறுத்தவரை காயப்பட்டவர்கள் அனைவரும் புலிகளே அல்லது அந்தக் கார் புலிகளுடன் வருகிறது என்பதே.
இந்த சம்பவத்தை
கன்பராவுக்கு நான் வந்த பிறகு பல தடவைகள் நினைவூட்டியர் அங்கிள் சிவபாதசிங்கம். காரணம்
அவரது உறவினரும் நண்பருமான பாடசாலை அதிபர் ஒருவரும் அந்த காரில் வந்து இறந்தவர்களில் ஒருவர். அவரது மனதை விட்டு அகலாத
சம்பவம் அது.
ஒளிந்திருந்த
ஆலயத்திலிருந்த நான் வெளியே வந்தபோது உறைந்திருந்த அச்சத்திலிருந்தது விடுபட்டு தெருவுக்கு வந்திருந்த வேறு சில
இளைஞர்களுடன் சேர்ந்து
இறந்த உடல்களை இன்னொரு வாகனத்தில் ஏற்றியது நினைவுக்கு வருகிறது. எனக்கும் மனதை விட்டு அகலாத
சம்பவம் அது.
சிவபாதசிங்கம்
அங்கிள் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த போது மஹாஜனக் கல்லூரியில் கற்றவர். தாயகத்தில் வாழ்ந்த தனது காலத்தில் வைத்தியசாலைகளில்
ஆண் தாதியராகக் கடமை புரிந்தவர். துணிச்சல் மிக்கவர். ஒரு சமூகக் கடமையாளர் என்றுதான் அவரை நான் காண்கிறேன்.
எங்கே முறை கேடு நடக்கிறதோ அங்கே குரல் கொடுக்கத் தயங்க மாட்டார். தமீழீழப் போராட்டத்தில்
பெரும் நம்பிக்கையுடனிருந்தவர். அவரது புதல்வனும் மாவீரனாக இறந்ததனால் அவரது தீவிரத்தை
என்னால் விளங்கிக் கொள்ள முடிந்தது. ஆனால்
2009 யுத்தம் முடிவுக்கு வந்தபோது மிகுந்த சோர்விலிருந்தார். ஆனாலும் அந்த சோர்விலிருந்து
விடுபட்டு இங்கே கன்பராவில் பல சமூக சேவை நிறுவனங்களுடன் தன்னை இணைத்துக் கொண்டு
வேலை செய்தவர்.
கன்பராவில்
மூத்தோர் சங்கத் கட்டடத்தை அமைத்த முன்னோடிகளில் ஒருவரான
அமரர் தாமோதரலிங்கம் அவர்கள் தனது கட்டுரையொன்றில்
குறிப்பிடும் போது தனது சகாவான
அமரர் மயில்வாகனம் அவர்கள் மறைந்தபோது சிவபாதசிங்கம் அவர்களே முன்
வந்து சங்கத்தின்
பல கடமைகளில் தாமாகவே
உற்சாகத்துடன் கடமையாற்றியது தனக்குப் பேருதவியாகவிருந்தது என்று எழுதுகிறார். அவுஸ்திரேலியாவிலேயே
முதன் முதலாக தமக்கென ஒரு சங்க கட்டிடத்தை அமைத்த கன்பராவின் மூத்தோர் சங்கத்தை பற்றி நான் பத்திரிகையொன்றுக்கு எழுதிய கட்டுரையொன்றுக்கும்
சிவபாதசிங்கம் அங்கிள் பல
குறிப்புகளை சேகரித்துத் தந்திருந்தார். மூத்தோர் சங்கக் கட்டிடத்தின் முன்னாலேயே வாழ்ந்து அதைத் தன் குழந்தையைப்போல
கருத்துடன் பார்த்துக் கொண்டவர். ஒவ்வொரு முறையும் வெவ்வேறு கூட்டங்களுக்கு கட்டிடத்தின் திறப்பை வாங்க செல்லும்போதும் அவரிடந்தான் போவோம்.
எந்தப் பத்திரிகையாயானாலும் தேடித்தேடி வாசிப்பார். அதைவிட வயதான காலத்திலும் இணையதளங்களுக்குச் சென்று செய்திகளை உடனுக்குடன் பார்த்துக் கொள்வார். கிரிக்கட் மீதும் பேரார்வம் இருந்ததனால் எங்கு மாட்ச் நடக்கிறதோ எல்லாம் அறிந்து ஸ்கோர் எல்லாம் விபரமாகச் சொல்லி விடுவார்.
இங்கே
மரண சடங்குகளில் தேவார திருவாசகங்களை இசைப்பதற்கு
எப்போதும் மனமுவந்து ஒரு சமூகக் கடமையாக
தனது முதிர்ந்த காலத்திலும் அதைச் செய்து வந்தவர். அவரது குரலில் திருவாசகத்தின் அர்த்தத்தை உணர்த்த
அசைவுகளை வைத்துப் பாடி அந்த சூழலின்
கனதியினின்றும் கேட்போர் மனதை இலேசாக்கி விட அவரால் முடிந்தது.
மேடை நாடகங்களில்
நடிக்கவும் அவருக்கிருந்த ஆர்வத்தை நான் புரிந்து கொண்டேன். மஹாஜனாக் கல்லூரி பல கலைஞர்களை கண்டெடுத்த கல்லூரி. ஒரு முறை
கன்பராவில் நிகழ்ந்த தமிழ்ச்சங்க விழாவொன்றில் மாவை நித்தியானந்தனின் ' ஒரு அவுஸ்திரேலியத் தமிழனின் கதை ' இசை நாடகத்தில் அவர் ஒரு வயதான தந்தையாக நடித்தார்.
பிறகு 2009 இல் இறுதி யுத்தத்தில் போது மக்கள் சிறைப்பிடிக்கப்பட்டு முட் கம்பி வேலிக்களுக்குள்
வாழ்ந்த அவலத்தை மேடையில் காட்ட ஒரு கவிதா நிகழ்வை அரங்கேற்றியபோது அதிலும் நடித்திருந்தார். மூத்தோர் சங்கத்தினர் நடாத்திய பல நிகழ்ச்சிகளிலும்,
திருமுறை விழா போன்ற பல நிகழ்வுகளிலும் தவறாது அவர் பங்கு பற்றியதை கண்டிருக்கிறேன்.
முன்னர் குறிப்பிட்டது
போல அவர் பாடிய திருவாசகத்தின் ஆற்றல் மிக்க
வரிகள் அவரது துணைவியாருக்கும், குடும்பத்தினருக்கும் இத்தருணத்தில் ஆறுதல் வழங்கட்டும்! அவர் ஆத்மா சாந்தியடையட்டும்!
Contacts: Thavendran (Son - 0403016389) Ramanan (Son-in-law
- 0413116758)
1 comment:
Siva is a good friend of mine. We worked in GH, Colombo in early sixties and DH, Teleppallai
in early seventies. He was actively involved in trade union activities while in Jaffna.
Very kind hearted person and involved in social and community service.
I have had very frequent contact with him.
My deepest sympathy to his grieved family.
May his soul rest in peace.
S.Logenthiran
Sydney.
Post a Comment