அகத்தியர் - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச சுந்தரதாஸ்

 தமிழில் பக்திப் படங்கள் என்றால் நினைவுக்கு வருபவர் ஏ பி


நாகராஜன்.நடிகர் திலகம் சிவனை கணேசன் நடிப்பில் இவர் உருவாக்கிய திருவிளையாடல்,திருவருட் செல்வர்,திருமால் பெருமை,சரஸ்வதி சபதம்,கந்தன் கருணை ஆகிய படங்கள் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன.ஆனால் சிவாஜிக்கும் ஏ பி என்னுக்கும் இடையில் ஏற்றப்பட்ட மன வருத்தம் காரணமாக சிவாஜியை தவிர்த்து ஏனைய நடிகர்களை வைத்து படங்களை எடுக்க தொடங்கினார் ஏ பி என்.அவ்வாறு அவர் உருவாக்கிய படங்களில் ஒன்றுதான் அகத்தியர்.ஐம்பது ஆண்டுகளுக்கு முன் 1972ம் வருடம் இந்தப் படம் வண்ணத்தில் தயாரானது.


தமிழுக்கு இலக்கணம் வகுத்த அகத்திய மாமுனியின் கதையை

படமாக்க தீர்மானித்ததும் அதற்கான ஆலோசனையை தமிழ் கூறும் நல்லுலகில் புகழ் பெற்ற அறிஞர்கலான திருமுருக கிருபானந்த வாரியார்,நாடகத் தந்தை டி கே சண்முகம்,சிலம்புச் செல்வர் மா பொ சிவஞானம் ஆகியோரிடம் பெற்றுக் கொண்டார் நாகராஜன்.அவர்களின் ஆலோசனைக்கு அமையவே படத்தின் கதை அமைக்கப் பட்டது.இந்த மூன்று தமிழ் மேதைகளும் ஒன்று சேர்ந்து ஆலோசனை வழங்கிய ஒரே படம் அநேகமாக இந்த அகத்தியர் படமாகவே இருக்க வேண்டும்.

அகத்தியராக நடிக்க பொருத்தமான நபரையே நாகராஜன் தேர்வு செய்தார்.பிரபல பின்னணிப் பாடகர் சீர்காழி கோவிந்தராஜன் தான் அவர்.உருவம்,பேசும் பாணி,பாடும் வெண்கலக் குரல்,என்று அகத்தியர் பாத்திரத்துக்கு கச்சிதமாகப் பொருந்தினார் சீர்காழி.அவருடன் போட்டி போடுபவராக நாரதராக வருபவர் டீ ஆர் மகாலிங்கம்.இவர்கள் இருவரும் இணைந்தால் நாதத்துக்கு என்ன குறை!படம் முழுவதும் இனிமையான பாடல்களினால் நிறைந்து பரவசமூட்டின.படத்திற்கு இசை அமைத்தவர் குன்னக்குடி வைத்தியநாதன்.படத்தில் எல்லாமாக பதின்னொரு பாடல்கள்.ஆனால் கேட்கக் கூடியவை.


சிவன்,பார்வதி திருமணத்தின் போது எல்லோரும் வட பகுதியில் கூட வட பகுதி பாரம் தாங்காமல் தாழ்ந்து, தென் பகுதி உயருகிறது.இதனை சரி செய்ய,நிலப்பரப்பை சமாந்தரமாக்கவும், தமிழை மேன்மை படுத்தவும் சிவபெருமானால் அகத்தியர் தென் பகுதிக்கு அனுப்பி வைக்கப் படுகிறார்.வழியில் அவருக்கு ஏற்படும் அனுபவங்கள்,நாரதரால் ஏற்படும் கலகங்கள்,பொன்னி நதியுடன் உருவாகும் பிணக்கு, அசுரன் வாதாபி வதம்,ராவணனுடன் யாழ் மீட்டி அவனை வெல்வது,அகத்திய தமிழ் இலக்கணத்தை மதுரையம்பதியில் அரங்கேற்றுவது,தொல்காப்பியனை சீடனாக ஏற்று அவரின் இலக்கணத்தை அங்கீகரிப்பது என்று பல சம்பவங்களை தொகுத்து படமாக்கி இருந்தார் ஏ பி என்.பல காட்சிகளில் அவரின் வசனங்கள் சுவையாகவும் கருத்தாகவும் அமைந்தன.

படத்தில் ஏவி எம் ராஜன்,குமாரி பத்மினி,சிவதாணு,டைப்பிஸ்ட்
கோபு,விஜயகுமாரி,ஓ ஏ கே தேவர்,லட்சுமி,கே டி சந்தானம் ஆகியோரும் நடித்திருந்தனர்.பால முருகனாக வருபவர் பேபி ஸ்ரீதேவி.

இலங்கேஸ்வரன் மேடை நாடகத்தின் மூலம் ராவணனாக நடித்து புகழ் பெற்றவர் ஆர் எஸ் மனோகர்.ஆனால் திரைப் படத்தில் அவர் ராவணனாக நடிக்கவில்லை.அந்தக் குறை இந்தப் படத்தில் தீர்ந்தது.ராவணனாக

வந்து அகதியருடன் போட்டி போட்டு வென்றிடுவேன் நாதத்தால் வென்றிடுவேன் என்ற பாடலுக்கும் நடித்தார் மனோகர்.டீ ஆர் மகாலிங்கம் நாரதராக வந்து அலட்டலில்லாமல் நடித்தார்,கஷ்டமில்லாமல் பாடினார்!

படத்தின் அரங்க அமைப்பு கங்கா.ஒளிப்பதிவு டபிள்யு ஆர் சுப்பாராவ்.இருவருக்கும் சபாஷ்.நட்சத்திர நடிகர்களின் தயவில்லாமலும் தன்னால் தரமான படத்தை தர முடியும் என்று நிரூபித்திருந்தார் ஏ பி நாகராஜன்.

No comments: